Friday, September 2, 2022

NOSTALGIA

 நினைவில் நிற்கும் ஒரு சினிமா பாட்டு 

நங்கநல்லூர்  J K  SIVAN 

என்னமோ  திடீரென்று பழைய ஞாபகம்.நாங்கள்  சூளைமேட்டில் குடியிருந்த காலம்.  எனக்கு பதினைந்து  பதினாறு வயது இருக்கலாம்.  என் தந்தையின் சின்ன அத்தை  வரலக்ஷ்மி ஒத்தை கட்டை.  புருஷன் ஒரே பிள்ளை இருவரையும் இழந்து வீடு வாசல் அற்றவள். இடுப்பில் உள்ள ஒரே ஒரு கம்பளி மடிசஞ்சி தான் அவள் சொத்து. மூன்று நார்மடி ஒன்று இடுப்பில், ரெண்டு கம்பளி பையில். அதில் முனைகள் கிழிந்திருக்கும். முடிச்சு போட்டு மேலே கிழியாமல் தடுத்திருப்பாள். 
குள்ள உருவம், தலை முண்டனம் , ஒரே துணி இடை, மார்பு தலை எல்லாம் மறைத்திருக்கும் முட்டாக்கு பாட்டி.

வரலக்ஷ்மி அத்தைக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அடிக்கடி எங்காவது சினிமா பார்க்க அழைத்துச் செல்வாள்.  சினிமா பார்க்க பிடிக்கும் அவளுக்கு.  எங்கும் நிலைத்து இருக்க மாட்டாள்.  கோவில்கள் குளம் என்று சுற்றிக்கொண்டே  இருப்பாள். இடதுகால் பாதம் எப்போதோ அடிபட்டு கவனிக்காமல் பாதமே கொஞ்சம் திரும்பி இருக்கும். விந்தி விந்தி நடந்து கொண்டே  எங்கும் செல்பவள்.  சூளைமேட்டிலிருந்து தி.நகர்  ராஜகுமாரி டாக்கீஸ் வரை நடப்போம். அவள் மடிசஞ்சியில் ஒரு சின்ன எவர்சில்வர் சம்படம்  இருக்கும். அதில் சீனா கல்கண்டு, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராக்ஷை கொஞ்சம் வைத்திருப்பாள். அந்த சம்படம்  அவள் மணி பர்ஸ்  என்பதால்  எட்டணா, ஒரு ரூபாய் காசுகள் சில இருக்கும். அவள் ரூபா நோட்டை வைத்திருந்ததாக எனக்கு நினைவில்லை.  என்னை அழைத்துக்கொண்டு அவள் போன ஒரு படம் போர்ட்டர் கந்தன்.  ஆறணா  டிக்கெட். பெஞ்சில் உட்கார்ந்து பார்த்தோம்.   துயர காட்சிகளில் அழுவாள். 
 
போர்ட்டர் கந்தன் ஒரு சமூக கருப்பு வெள்ளை படம்.  M K  ராதா, M K  முஸ்தபா  இருவரும் சகோதரர்கள். முஸ்தபா கெட்டவன். ராதா தான் போர்ட்டர் கந்தன்.   அதில் மருதகாசி எழுதி  SC  கிருஷ்ணன் பாடிய  பாடலைக்  கேட்கும்போதெல்லாம்  அத்தை ஞாபகம் வருகிறது.   அருமையான  அந்த பாடலுக்கு இசை அமைத்தது விஸ்வநாதன் -ராமமூர்த்தி. இந்த பாடலுக்கு அர்த்தம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஒரு நீதி பாடல். 

வருந்தாதே மனமே - நீயே
வருந்தாதே மனமே
ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே..
வருந்தாதே மனமே

இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பார்
இலைகள் உதிர்ந்து மீண்டும் தோன்றும் நிலையை எண்ணிப்பார்
நிலையை எண்ணிப்பார்... (ஒரு போதும்)

இன்பம் துன்பம் யாவும் ஈசன் செயலே ஆகுமே
இகழ்ந்த வாயே புகழ்ந்து பேச காலம் மாறுமே
காலம் மாறுமே...  (ஒரு போதும் )

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...