Thursday, August 4, 2022

VARALAKSHMI VRATHAM

 ''லக்ஷ்மி வாம்மா, வரம் கொடு ''

#நங்கநல்லூர்_J_K_SIVAN

இன்று '' வரலக்ஷ்மி விரதம்'' ஒரு பண்டிகை. ''வரலக்ஷ்மி'' யார்?  வேறு யாருமில்லை,  ஸாக்ஷாத் மஹா  லக்ஷ்மி தாயார்.

வரலக்ஷ்மி நோன்பு அனுஷ்டிக்கும் வீடுகளில் வரலக்ஷ்மி விரத பூஜைக்கு என்று ஒரு கலசம் (சொம்பு ) உண்டு. வெள்ளி, தாமிர, பித்தளை என்று அவரவர் வசதிக்கேற்ப தனியாக வைத்திருப்பார்கள் அந்த சொம்பில் வரலக்ஷ்மி முகம் ஒரு கொக்கியில் தொங்கவிட்டு, கலசத்தின் மேல் தேங்காய் வைத்து, அலங்கரித்து, நகைகள் அணிவித்து  பார்ப்பதற்கு  ரொம்ப அழகாக  இருக்கும்.

ஆந்திரா , மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களிலும்  வெளிநாடுகளில் உள்ள  ஹிந்துக்களும்  இதை  வருஷா வருஷம் கொண்டாடுகிறார்கள். வரலக்ஷ்மி விரதம் அன்று வழக்கம்போலவே  ஒரு முழம் பூ அறுபது எழுபது ரூபாய்???  வெற்றிலை தங்கம் விலைக்கு உயர்ந்து விடும். கண்ணுக்கு தெரியாத  மஞ்சள் வாழைப்பழம் ஒன்று பத்து ரூபாயைக் கூட தொடும். 

காலை ராகு காலத்துக்கு முன்போ அல்லது அன்று மாலையோ, ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலக்ஷ்மியை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பாடத்தெரிந்தால் பாடி, தெரியா விட்டால் , ''லக்ஷ்மி மா இண்டிகி ரா வம்மா '' என்ற ஒரு அடியை யாவது மனப்பூர்வமாக லக்ஷ்மி வாம்மா, என் வீட்டுக்குள் வா '' என்று பக்தியுடன் அழைக்கலாம். குரலைக் கேட்டு லக்ஷ்மி பயப்பட மாட்டாள். அவளுக்கு தெரியும். தாராளமாக காதைப் பொத்திக் கொண்டு உள்ளே வருவாள்.

எப்போதும் போல், முதலில் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். அஷ்ட லட்சுமிகளுக்கு பிடித்தமான அருகம் புல் தூவி பூஜை செய்யலாம். பிள்ளையார் பிடிக்க மஞ்சள் பொடி, நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தாம்பாளம் , பஞ்சபாத்திரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு எல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
புதிய வஸ்திரம் சாற்றி, நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் முக பிம்பத்தை வைத்து, பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும். விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களை நீக்கும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.
அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலக்ஷ்மி பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலக்ஷ்மியை வேண்டிக் கொண்டு, ஆவாஹனம் செய்ய வேண்டும். இந்த கலசத்தில் வரலக்ஷ்மி அம்மன் வந்து இருப்பதாக ஐதீகம் . மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாடி தேவியை வழிபட வேண்டும். சிலர் அபிராமி அந்தாதி படிப்பார்கள், சிலர் மஹா லக்ஷ்மி ஸ்தோத்ரம், அஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்ரம், கனக தாரா ஸ்தோத்ரம் கூட சொல்வார்கள். லலிதா சஹஸ்ரநாமம் கூட சொல்லலாம்.
பூஜை அறையில், கிழக்கே, / தென் கிழக்கில் சந்தனத்தால் அம்மன் முகம் அமைக்க வேண்டும். சுவராக இருந்தால் குத்துவிளக்கு நடுவே மஹாலக்ஷ்மி முகம் வரைய வேண்டும். சில வீடுகளில் சுவற்றில் நான் பார்த்திருக்கிறேன். என் இள வயதில் என் வீட்டு சுவற்றில் லக்ஷ்மி உருவம் வரைந்து கொடுத்திருக்
கிறேன். நிறைய பேர் அதைப் பார்த்து பயந்திருக்
கிறார்கள். பூசணிக்காய் உடைக்க மஞ்சள் சிவப்பில் பெயிண்ட் அடித்து உருவம் இருக்குமே அதன் தத்ரூபம் என் கை வண்ண ஓவியம்.

வெள்ளி முகம் வைத்திருப்பவர்கள் வெள்ளி, தாமிர, பித்தளை சொம்பை சந்தன குங்குமம் இட்டு, புனித ஜலம் கொஞ்சம் நிரப்பி, மாவிலை, தேங்காய், முகம் செருகி, கோலம்போட்ட பலகை மேல் வைத்து, தாழம்பூ மற்றும் புஷ்பமாலைகளால் அலங்கரித்து பூஜை செய்வார்கள். பலகை இல்லாவிட்டால் வாழை இலை மேல் பச்சரிசி பரப்பி, மாவிலை, தேங்காய், எலுமிச்சை, பொன், பழங்களோடு வைப்பது வழக்கம். ஐந்து வகையான ஆரத்தி தட்டு வைத்து பூஜை செய்வார்கள். அரிசி பரப்பி மஹாலக்ஷ்மி கலசம் வைப்பது

அன்னபூரணியாக அவள் அருளை வேண்டுவதாகும்.
வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் கொடுப்பார்கள். நெய்வேத்தியமாக வெல்ல கொழுக் கட்டை பண்ணுவார்கள். பொங்கல், பாயசம், அப்பம், வடை, ல ட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

இப்படியெல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் பிழையில்லை. மனதை நல்லெண்ணங்கள் மட்டும் நிறைந்ததாக வைத்துக்கொண்டால் போதும். உண்மையில் அது தான் இறைவன் அம்பாள், லக்ஷ்மி குடியிருக்கும் இடம். ஸ்ரீ நிவாஸம். இதய சுத்தியுடன் ஈடுபாட்டோடு, மகாலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடைக் கையில் கட்டிக் கொள்ளலாம். வீட்டில் உள்ள வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி, நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, இந்த விரத பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

வரலக்ஷ்மி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சுமங்கலி பெண்கள் இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.
வரலக்ஷ்மி விரதம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதற்காக  கதை இருக்கிறது.

சௌராஷ்டிர தேசத்தில் பத்ரஸ்ரவா என்று ஒரு ராஜா. ரொம்ப நல்ல ராஜா. கசந்திரிகா அவன் மனைவி. அவனுக்கேற்ற நல்ல மனைவி. மிருதுவாக, நல்ல வார்த்தைகளையே பேசுபவள். அவர்களுக்கு ஒரு அழகிய பெண். சியாமா. கசந்திரிகா மஹாலக்ஷ்மி பக்தை. நாள் தவறாமல் லக்ஷ்மிக்கு பூஜை செய்யாமல் சாப்பிடமாட்டாள். கணவன், மாமனார், மாமியார் உறவினர் எல்லோரிடமும் அன்பு, மரியாதை ஜாஸ்தி. மஹா லக்ஷ்மிக்கு கசந்திரிகாவை பிடித்துவிட்டது.
ஒரு ஆடி வெள்ளிக்கிழமை வயதான சுமங்கலி ஒருத்தி அரண்மனைக்கு வந்தாள். ராஜா ராணி எல்லோரும் பூஜை முடித்து, சாப்பிட்டு தாம்பூலம் தரித்த சமயம்.
''வாங்கோம்மா '' என்று அந்த வயதான சுமங்கலியை கசந்திரிகா வரவேற்று உபசரித்தாள். வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ்சள் முதலிய மங்கலப் பொருட்களைக் கொடுத்தாள்.
“தாயே, நீங்க யார்? என்ன விஷயமாக வந்தீர்கள்?
“அதை அப்புறம் சொல்கிறேன். என் கேள்விக்கு நீ முதலில் பதில் சொல்லு ராணியம்மா. லக்ஷ்மி தேவி அவதார தினமாச்சே இன்று , யாராவது ஒரு அதிதி க்கு போஜனம் இல்லாமல் நீ இப்படி வயிறார சாப்பிட்டு தாம்பூலம் தரித்துக் கொண்டது நியாயமா?” என்றாள் முதியவள். கோபமே வராத கசந்திரிகாவுக்கு ஏனோ ஆத்திரம் வந்து விட்டது
“நீ யாரோ ஒரு பிச்சைக்காரக் கிழவி, எனக்கு புத்தி சொல்வதா?” என்று கேட்டு கிழவியை கன்னத்தில் அறைந்தாள் . கிழவி கண்கள் அழுது சிவக்க வெளியேறும் போது இளவரசி சியாமா எதிரே வந்தாள் .
“யாரம்மா நீ ? ஏன் கண்கள் சிவந்திருக்கிறது . அழுகிறாய்? என்று கேட்டாள் .
“சியாமா, உன் அம்மாவுக்கு எப்படி லக்ஷ்மி பூஜை பண்ணனும்னு சொன்னேன். அடித்து அனுப்பினாள்''
” மன்னிக்கவேண்டும் எனக்கு அந்தப் பூஜை பண்ணும் முறை சொல்லி தாருங்கள்.முறைப்படி செய்கிறேன்” என்றது சியாமாவுக்கு முதியவள் பூஜை முறைகளை அருளிச் செய்தாள். வருஷாவருஷம் வரலக்ஷ்மி வ்ரதம் அனுஷ்டித்து பூஜை செய்தாள்.
முதியவளாக வந்த மகாலக்ஷ்மியை அடித்து விரட்டியதால் பத்ரஸ்ரவாவின் செல்வங்கள் வேகமாக குறைய ஆரம்பித்தன. பரம ஏழையாகு முன் மகள் ஸ்யாமாவுக்கு கல்யாணம் செய்துவைத்தான். சியாமா வருடந்தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்த பலனால் அவளை போற்றிப் பாதுகாக்கும் கணவனாக மாலாதரன் என்ற ராஜா வாய்த்தான். சியாமா கணவன் வீடு சென்றாள்.
பத்ரஸ்ரவாவின் எதிரிகள் அவனையும், அவனது மனைவியையும் நாட்டை விட்டுத் துரத்தி விட்டு சிம்மாசனத்தைப் பிடித்துக் கொண்டனர். ஒரு பிடி சோற்றுக்குக் கூட வழியின்றி காட்டில் அலைந்தனர் இருவரும்.
பெற்றோரின் இந்த அவல நிலையில் சியாமா வருந்தினாள். தன் நாட்டுக்கு அழைத்து உணவிட்டு பாதுகாத்தாள் . ஒரு குடம் நிறைய பொற்காசுகளைப் போட்டு ' 'இதை வைத்து பிழைத்துக் கொள்ளுங் கள்'' என தாய் கசந்திரிகாவிடம் கொடுத்தாள் . கசந்திரிகா தெட்டதும் பானையில் இருந்த பொற்காசுகள் எல்லாம் கரித் துண்டுகளாகி விட்டது.
''அம்மா நீ அடித்து விரட்டிய கிழவி தான் மஹாலக்ஷ்மி'' என்று உணர்த்தினாள் மகள். தனது தவறை உணர்ந்த கசந்திரிகாவும் அப்போதிலிருந்து வரலக்ஷ்மி பூஜை முறையை தனக்குக் கற்பிக்குமாறு மக்கள் ஸ்யாமாவிடம் கேட்டு அறிந்து நித்ய மகாலக்ஷ்மி பூஜை செய்தாள் . பலன் கைமேல் தெரிந்தது. பத்ரஸ்வரா மீண்டும் படை வீரர்களை சேர்த்துக் கொண்டு தனது நாட்டை ஆக்கிரமித்த எதிரி மன்னனை வீழ்த்தி மீண்டும் ராஜாவானான். இழந்த செல்வங்கள் வைபவங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றாள் கசந்திரிகா.
இதை சொல்வது எதற்காக வென்றால் வரலக்ஷ்மி விரத பூஜை எனும் மஹா லக்ஷ்மி பூஜை மஹாத்மியம் புரிய. யாரையும் அடிக்கணுமா வேண்டாமா என்பது அவரவர் சௌகர்யம்.
இன்னொரு  கதையில் சாருமதி  ஹீரோயின். 
மகத தேசத்தில் குண்டினபுரம் என்னும் ஊர்க்காரி சாருமதி, கற்புக்கரசி. தன் கணவன், மாமனார், மாமியாருக்கு குழந்தைகளுக்கு என்று வேண்டிய நற்பணிகளை, சேவையைச் செய்வதையே வாழ்நாள் பாக்கியமாகக் கொண்டவள். சாதாரண குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, மணந்த ஒரு பெண். அவள் பக்தியை மெச்சி மகாலக்ஷ்மி ஒருநாள் சாருமதி கனவில் வந்து வரலக்ஷ்மி விரதத்தைப் பற்றி எடுத்துக் கூறினாள். மறுநாள் எழுந்த சாருமதி தான் கண்ட கனவைப் பற்றிக் கூற அதைக் கேள்விப்பட்ட பலரும் அந்தப் பூஜையை செய்தனர். அதனால் நன்மக்கட் பேறுடன் என்றும் சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெற்றனர். சாருமதி மேற்கொண்ட விரதமே வரலக்ஷ்மி விரதம். அதன் பயனாக பதினாறு செல்வங்களையும் பெற்றாள் சாருமதி.
சித்திரநேமி என்றொரு தேவகுலப் பெண் நடுநிலை தவறாதவள் என்று பெயரெடுத்தவள். அதனால் தேவர்களிடையே எழும் சில சச்சரவுகளுக்கு அவளே நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவாள்.
ஒருமுறை அவள் நடுநிலை தவறி தீர்ப்பு சொல்லி விட்டாள். அதனால் அவளுக்கு தொழு நோய் பீடிக்கும்படி சாபம் கொடுத்தாள் அன்னை உமையவள். தன்னை மன்னிக்கும்படி வேண்டி கேட்டுக் கொள்ள, மனமிரங்கிய தேவி கங்கை நதிக்கரையில் வரலக்ஷ்மி விரதத்தை அனுஷ்டி. உன் தொழு நோய் நீங்கும்'' என்றாள் .
சித்ரநேமியும் அவ்வாறே கங்கைக் கரை வந்து வரலக்ஷ்மி பூஜை செய்து நோய் நீங்கி நல்லுருவம் பெற்றாள். “என்னைப் போல புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சிந்து, காவிரி, தாமிபரணி முதலிய நதிகளில் நீராடி இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு எல்லாம் நல்ல பலன் பல மடங்கு கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டாள். வரலக்ஷ்மியும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தாள் அதனால் இந்த பூஜையை நதிகளில் நீராடிய பின் செய்வது மிகவும் சிறப்பு என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...