Friday, August 12, 2022

KAMBAR

 கம்பரின் கோபம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


ஒவ்வொரு மனிதனுக்கும் தன்மானம்,  சுய கௌரவம்  உண்டு.  அவனை யாராவது மற்றவன்  இழிவாக பேசினால் கோபம் பொங்கி வருகிறது. அவனை 
உதாசீனப்படுத்தினால்  ஆகாசத்துக்கும் பூமிக்கும்  தாவி  ஆங்காரப்படுகிறான்.  நாலு பேர் இருக்கும்போது  ஒருவனை அலட்சியப்படுத்தினால் அவன் மனம் வேதனைப் படுகிறது.   அவன் காது கேட்க  அவனைப்
பற்றி யாராவது விமர்சனம் பண்ணினால்  ஆத்திரம் வருகிறது.  அவனைப் பலரும் புகழ்ந்தால்  அவன்  ஆகாசத்தில் ஆனந்தமாக பறக்கிறான். இது மனித இயல்பு .

கம்பர் அமர கவிஞர். பெரிய  புலவர். ஈடு இணையற்ற  தமிழ் வித்தகர்.  அவரை   சோழர்குல ராஜாக்கள்  போற்றி ஆதரித்தனர். சடையப்ப வள்ளல் அவரைக்  கண் போல்  காத்து வளர்த்தார்.   அப்படிப்பட்ட ஒரு கவிஞன் மனது வாடும்படி, புண் படும்படி சோழ ராஜா குலோத்துங்கன்  ஒருமுறை நடந்து கொண்டான்.  அவரை ஏசவில்லை , இகழ வில்லை, அலட்சிய படுத்தினான். அதாவது, அவர் அவன் அரசவைக்கு வந்தபோது வரவேற்று உபசரிக்கவில்லை. அதுவே போதும். தொட்டால் சிணுங்கி கவிஞர் கம்பருக்கு.  அனைவர் எதிரிலும் ஒரு பாடல் பிறந்தது. கணீரென்று எழுந்து அனைவரும் கேட்க  அரசனை நோக்கிப்  பாடினார்.  அதன் பொருள்:

''என்னடா சோழா  நீ உன்மனதில் நினைத்துக் கொண்டி ருக்கிறாய் ?  நீ என்ன  உலக மஹா சக்ரவர்த்தியா?  ஒரு சிறிய நாட்டின் தலைவன் அவ்வளவு தானே?  நீ எல்லாம் ஒரு  மஹா ராஜாவா?  உலகத்திலேயே உன் சோழ நாடு ஒன்று தான் இருக்கிறது என்ற  பூகோள ஞானமா உனக்கு?   உன்னைப்  போன்ற ஒருவன் என்னை ஆதரிப்பான் என்று நம்பியா நான் சரஸ்வதி தேவி அருளிய  தமிழை ஓதி கற்றுக்கொண்டேன்?  நான் சென்றால் வா என்று வரவேற்று ஆதரித்து  என்னை ஒரு ஆபரணமாக போற்றி  அவர்கள் அரசவைக்கு பெருமை தேடிக்கொள்ளும்  அரசர்களுக்கா பஞ்சம்?   ஒரு குரங்கு   மரக்கிளை கொம்பை கண்டால் தாவி அதை பிடித்துக்கொண்டு சுகமாக தொங்காதா?  என்னை ஏற்றுக்கொள்ளாத அரசனும் உண்டா?  இதோ நான் உன்னையும் உன் ராஜ்யத்தையும் விட்டு வெளியேறுகிறேன்''

 என்று நாலு வரி பாடல் ஒன்றை பாடினார். அடேயப்பா,  எவ்வளவு சக்தி அந்த வார்த்தைகளுக்கு?  நாலு வரியில் ஒரு மனிதனின் சுய   கௌரவம், தன்னம்பிக்கை  பூரணமாக இதில்  த்வனி க்கிறது பாருங்கள்.  மிகப் பிரபலமான கம்பனின் பாடல்களில் இதுவும் ஒன்று.  நேரம் கிடைத்தபோதெல்லாம்  அவ்வப்போது கம்பனை ருசிப்போம்.

“மன்னவனும் நீயோ? வளநாடும் நின்னதுவோ?
உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன்-என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...