Tuesday, August 2, 2022

KABEER DAS

 ஞானி கபீர் தாஸர்  -  #நங்கநல்லூர்_J_K_SIVAN 



காசி அருகே  ஒரு குளம் அதன் பெயர் லஹர் தாலாப்.   அதில் ஒரு பெரிய தாமரை இலைமேல் ஒரு சின்ன குழந்தை.    அந்த ஊரில் ஒரு  ஏழை இஸ்லாமிய நெசவாளி   நீரு  என்பவருக்கு வெகுகாலம் குழந்தை இல்லை, அவர் கண்ணில் இந்த குழந்தை படுவானேன்!  

அளவிலா சந்தோஷத்தோடு இந்த குழந்தையை எடுத்துக்கொண்டு நீரு  வீட்டுக்கு ஓடி மனைவி நீராவிடம்  ''இந்தா ஒரு அழகிய குழந்தை. இன்று  எனக்கு கிடைத்தது. நாம் வணங்கும்  பகவான்  நம் மேல்  பரிவோடு தந்த பரிசு நமக்கு ''  என்று அவளிடம் கொடுத்தார்.  

நீருவின்  இஸ்லாமிய  குடும்பத்தினர் உறவினருக்கு  இப்படி ஒரு குழந்தையை அவர் எடுத்து வளர்ப்பது பிடிக்கவில்லை.  யாரோ  ஒருவர்  ''நீரு,  இந்த குழந்தை  சாதாரண குழந்தை இல்லை. சைத்தான். உடனே கொன்றுவிடு ''என்று கூட  நச்சரித்தார்.   நீரு  காதில் வாங்கவில்லை.  திடீரென்று பலர் முன்னிலையில் அந்த  இஸ்லாமிய வெறியர்  ஒரு கூரான கத்தியை அந்த சிறிய சிசுவின் நெஞ்சில் பாய்ச்சினார்.   குழந்தைக்கு ஒன்றுமே  ஆகவில்லை, ஒரு சொட்டு ரத்தமும் வெளியேறவில்லை. வலிக்கவில்லை. சிரித்தது.
 அப்போது அந்த குழந்தை ஒரு  ரெண்டடி ஸ்லோகம் வேறு சொல்லியது.  அந்த குழந்தை மானுட ரகம் அல்ல.  தெய்வீக சக்தி வாய்ந்தது என்று புரிந்தது. அதிசயித்தனர்.  

அந்த குழந்தைக்கு எல்லோரும் ''கபீர்'' என்று பெயர் வைத்தார்கள்.  அரேபிய மொழியில்  ''உன்னதமான'' என்று அர்த்தம்.

ஹிந்து மதத்தை சார்ந்தவராக   இருந்திருக்கலாம் என்றாலும் இஸ்லாமிய குடும்பத்தால் எடுத்து வளர்க்கப் பட்டதால் கபீர்  ஒரு  இஸ்லாமியர்  என்றே  அடையாளம் காணப்படுகிறார். ஒரு பாடலில் கபீர்  தான்  எந்த மனித தேகத்திலும் பிறவாதவன் என்கிறார். ஆகாரம் இல்லாமலேயே வளர்ந்த குழந்தை கபீர்.  அவரது வளர்ப்பு பெற்றோர்  கவலை  கொள்ளவே  ஒரு பசுவின் பாலில் வளர்ந்தார்.  

கபீர் யார், அவரது உண்மையான  பெற்றோர் யார், எந்த ஊர், எதுவுமே  தெரியாத ரகசியமாகவே இருக்
கிறது.சிக்கந்தர்  லோடி  ஆண்ட காலத்தில் காசியில் இருந்தவர் என்று மட்டும்  அறிகிறோம். அவர்  ஸ்ரீ ராமானந்தரின் பிரதம சீடர் என்பது தெரிந்த விஷயம்.

இளம் வயதில் தியானத்திலும் தனிமையிலும் அமைதியாக கழிந்தது.  சாதுக்களை பக்தியோடு  அணுகி அவர்களோடு சம்பாஷித்து ஞானம் பெற்றவர்.  அவர்களுக்கு சேவை செய்து  ஆசி பெற்றவர்.  பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள். ஆயினும்  குடும்பத்தில் பற்று ஏற்படவில்லை. காசியில் அவரை எங்கும் காணலாம். நெசவுத்தொழில் கற்று அதில் ஜீவனம் நடத்தியவர்.  மதத்திற்கு அப்பாற்பட்டவர் கபீர்.
அன்பு,  இறை நம்பிக்கை, மக்கள் சேவை,  தயை, சத்யம்,  எளிமை,  பக்தி,  எல்லாம் எந்த மதத்திற்கும் அடிப்படை ஆதாரம், பொதுவானது,  என்று உணர்ந்தவர். ஆகவே  ஹிந்து சனாதன தர்மம், இஸ்லாமிய நம்பிக் கைகள் இரண்டையும் வித்தியாசமின்றி சமமாக  ஏற்றவராக  விளங்கினார்.  கபீர் ஒரு வேதாந்தி, கவிஞன், ஆன்மீகவாதி.  கபீர் தாசர்   ஹிந்தியில் இயற்றிய    உயர்ந்த தத்துவ, எளிய, ஞானப்  பாடல்கள் இன்றும் பலரால் பாடப்பட்டு வருகிறது.
கபீரின்  ஞான வாக்கியங்களில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன்.

''தேசமுழுதும்  க்ஷேத்ர யாத்திரை போகிறேன் என்று மனதில் இறைவனைத்தவிர  மற்ற எண்ணங்கள் நிறைந்து சுற்றுவது வீணான செயல்.  ஆசை, பேராசை, பொறாமை எண்ணங்களோடு காசிக்கு போய் , விஸ்வநாதர் முன் நிற்பது தரிசனம் பெறுவதாகுமா, ஆசி பெறுவதாகுமா ?''

''வைர வியாபாரி நிபுணனுக்கு தான் ஒரு கல்லின் பெருமை மஹத்வம் தெரியும்? தூய்மையான பக்தி நிறைந்த உள்ளம் உள்ளவனுக்கு தான் பக்தியும் பகவானும் புரியும்''

''அழியும் உடலாய் மற்ற .  நம்பாதே.  உன் பஞ்சாபிராணனும் பகவானை நினைக்க உதவினாலுனக்கு பரகதி நிச்சயம்''

''இரக்கம், தயை உள்ள இதயத்தை  கொண்டவனிடம் தான் நற்குணம் நிலைக்கும்.  சுயநலம், பேராசை தீய குணங்கள் கெட்டவனின் சொத்து''

''பொறுமையே  பூஷணம்.  காலத்தில் நல்லது, நன்மை  தானே தேடிவரும்.  தோட்டக்காரன் பல நாள் பொறுமையாக  நீர், மண் ஆகியவற்றை  விடாமல்  அளித்தாலும் தக்க காலம் வந்தால்  தான் செடி மரமாகி கனி தரும்.''

''இன்றே  முடிந்ததை செய், நாளைக்கு என்று தள்ளிப்போடாதே.  நாளை நடப்பதை யார் அறிவார்?
ஐம்புலன்களை  வென்றவன் தான் ஜிதேந்திரியன்.  அவனால் தான் பகவானை நெருங்கமுடியும்.

சர்க்கரை பொம்மையில்  எங்கும், முழுதும், சர்க்கரையின் இனிமையே . அதுபோலவே இந்த பிரபஞ்சம் முழுதும்  பிரம்மம், ப்ரம்மம்,  பிரம்மம்  ஒன்றே தான்''.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...