Friday, August 5, 2022

BADRAGIRIYAR

 

பத்ரகிரியார் புலம்பல்  -  #நங்கநல்லூர்_J_K_SIVAN

சிறந்த   வேதாந்தி  இந்த ராஜா  பர்த்ருஹரி.  எல்லாவற்றையும் அனுபவித்து துறந்த சந்நியாசி.  நம்முடைய அதிர்ஷ்டம் அவன்  தெற்கே வந்து தமிழ் கற்று, பட்டினத்தாரின் சிஷ்யனாகி இந்த  பாடல்களை தந்திருக்கிறான்.
''தண்டிகையும், சாவடியும், சாளிகையும், மாளிகையும் கண்டு களிக்கும் கருத்தொழிவது எக்காலம்?''
ஐயோ நான்  இந்த அவஸ்த்தையை அனுபவித்தவன். போதும் போதும்.எனக்கு  வேண்டாமய்யா , இந்த  பல்லக்கு, மேளதாளம், மாளிகை எதுவுமே.  இது தந்த வேதனையை ஒழித்துவிட்டல்லவோ, சிவனே,   உன்னைத்  தேடி  அலைந்து  மரத்தடி சுகம் வேண்டும் என்று வந்தேன். உன் அருள் கிடைத்து என் மனம் அமைதியடைவது எப்போ?  

''அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம்   செத்த சவம்போல் திரிவதினி எக்காலம்?''
என்னப்பனே , சிவனே, நீ எங்கே இருக்கிறாய்? உன் அருளை அடைய எவ்வளவு காலம் நான் காத்திருக் கவேண்டும்?  என்னைப்   பிடித்ததெல்லாம் என்னை விட்டு எப்போது விலகும்? உன்னைத்  தேடிப் பிடித்து ஆராய்ந்து ரசித்து இந்த மனித வாழ்க்கையை  செத்த பிணம் போல்  எந்த பற்றுமில்லாமல்  ஈடுபாடு இல்லாமல் நடத்துவது எப்போ?)

''அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து கர்ப்பத்தில் வீழிந்து கொண்ட கோளறுப்பது எக்காலம்?''

இந்த உலக சுகம் என்ற   மாயை துன்பத்தை விட்டு, நீ கொடுத்த அறிவால்  உன்னையே அறிந்து கொண்டு இந்த பிறவிப் பிணி பந்தத்திலிருந்து  நான் விடுபடுவது எப்போ?

 ''தூண்டு விளக்கணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தாற்போல் மாண்டு பிழைத்துவந்த வகை தெரிவது எக்காலம்?''

 விளக்கில்  எண்ணெய்  குறையக்  குறைய,  திரியைத் தூண்டி தூண்டி விட்டும்  இதோ இந்த தீபம் அணை கிறது . பழையபடி இருட்டு எங்கும் கவ்வுகிறது.  பிறந்து இறந்து மறுபடி பிறந்து... அதுவும்  இந்த மாதிரி அணையும் விளக்கு தானே!.  அடேடே  இந்த தொந்தரவு என்னை விட்டு  நீங்குவது எப்போ?

 ''எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத வீ டுபெற வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம்?''
 என் சிவனே,  அப்பப்பா  எவ்வளவோ வருஷங்கள்  யுகங்கள், மீண்டும் மீண்டும் பிறப்பு  இறப்பு.  அந்த பிறப்பு ஒன்றிலும்  மோக்ஷம் கிடைக்கவில்லையே. மேலும் மேலும் பாபங்கள் தான் கூடியது. . பேசாமல் வெள்ளை வெளேரென்று விபூதி குழைத்து உடலெங்கும் பூசி  உன்னையே நினைத்து  அதன்  பயனாக உன் அருள் பெற்று மோக்ஷமடைவது எப்போ? 
''அவவேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல்  சிவவேடம் பூண்டு சிறந்திருப்பது எக்காலம்?'' 

என்னப்பனே, ஆச்சு  ரொம்ப வருஷம்  என்னென்னவோ வேஷம். குழந்தை, பையன், வாலிபன் , உத்யோகஸ் தன், கணவன்,  அப்பன், தாத்தா, கலெக்டர் உத்யோகம்,  பணக்காரன் , படிச்சவன். பேச்சாளி, பாடகன், நான்  ராஜாவாக கூட  வேஷம் போட்டவன்.   இந்த வேஷம் எதுவும் நிரந்தரமாகவே இல்லையே,  பேசாமல் கழுத்தில் ருத்ராட்சம், தலையில் மொட்டை, பூசுவது வெண்ணீறு  என்று உன்னை நினைக்கும் சிவனடி யாராக சுகமாக இருப்பது எப்போ?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...