Tuesday, August 30, 2022

BRINDHAVANAMUM NANDHAKUMARANUM

 ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்  5

#J_K_SIVAN


மெத்து  மெத்து  மண் 

மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம்.  நாம்  50 வருஷங்களுக்கு முன்  வாழ்ந்த ஒரு வீட்டை பார்க்க போனால் அந்த வீடு, தெரு, அடுத்தடுத்த கட்டிடங்கள்  எல்லாமே  மாறிப் போய் இருப்பதை பார்க்கிறோமே,  ஐந்தாயிரத் து முன்னூறு வருஷங்களுக்கு   முன் கிருஷ்ணன் வாழ்ந்த கோகுல  பிருந்தாவன ஸ்தலங்கள்  சிறிதே மற்றம் அடைந்து அப்படியே இருப்பது ஆச்சசர்யம்.

கோகுல பிருந்தாவன வனங்களில்  அருமையான ஒன்று ரமண் வனம்  அல்லது ரமண் ரேதி.   கோகுலத்திற்கும்  ப்ருந்தாவனத்துக்கும் இடையே  15 கி.மீ. தூரம்.  பாலகர்களாக  கிருஷ்ணன் பலராமனோடும் நண்பர்களோடும்  சேர்ந்து விளையாடிய ஊர்  கோகுலம்.   ரமண் ரேதி  அதில் ஒரு மனோஹரமான இடம்.  ரமண் ரேதி  என்றால் புனித மண்  என்று அர்த்தம்.   கிருஷ்ணனும்  நண்பர்களும்  ஓடி ஆடி, கீழே விழுந்து, புரண்டு  ஒருவர் மேல் மற்றவர்  மண் எடுத்து வீசி விளையாடிய இடம். 

5300 வருஷங்களுக்கு அப்புறமும் அந்த இடம் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது.  அங்கே  மண்ணில் படுத்து புரண்டேன்.  நெற்றியில் மண் பிரசாதம் பெற்று,  மெத்து மெத்து என்று  சில்க் மெத்தை மேல் படுப்பது போல் எனக்கு  இருந்தது.  இந்த இடத்திலும் கிருஷ்ணன் தனது கடமையை ஆற்றியிருக்கிறான். ஆம்.  சில  ராக்ஷஸர்களை இங்கே கொன்றான்.

இங்குள்ள  கிருஷ்ணன்  ரமண் விஹாரி அவன் பெயரில் ஒரு ஆலயம்.  அதை  ரமண்பிஹாரிஜி ஆலயம் என்கிறார்கள்.. பல ரிஷிகள் குடிசை  ஆசிரமங்களில் இங்கே வாழ்ந்தார்கள்.  சிறிய  ஆஸ்ரமங்களாக இன்றும் இருக்கிறது. கதம்ப மரம் நிச்சயம் இங்கே உண்டு.

ஒரு சின்ன கதை.  இருநூறு வருஷங்களுக்கு முன்பு ஞானதாஸ்ஜி  என்று ஒரு பண்டிதர்  தவம் செய்ய இடம் தேடி   ரமண் ரேதியை செலக்ட் பண்ணினார்.  உள்ளூர்  பக்தன் ஒருவன் தினமும்  சுவாமிஜிக்கு  ஆகாரம் கொண்டு தருவான். ஒருநாள் கனவில் கிருஷ்ணன், ''ஞானதாஸ்,  உனக்கு  அந்த ஆசாமி கொண்டு வரும் உணவை உண்ணாதே''  என்று கட்டளையிட அப்புறம் ஸ்வாமிஜி யாரிடமும் உணவு பெறவில்லை.  

இங்கிருந்து 25 கி.மீ. தூரத்தில்  ஒரு சாது  தியானம் பண்ணிக்கொண்டிருந்தார்.  அவர் கனவில் கிருஷ்ணன் ''நீ  ரமண் ரேதிக்கு போ. அங்கே ஒரு சாது இருப்பர்  அவருக்கு சேவை செய் '' என்று கட்டளையிட  அந்த சாது ரமண ரேதிக்கு  வந்து ஞானதாஸை  வணங்கி 

''ஸ்வாமிஜி,  என்னை கிருஷ்ணன் தங்களிடம் அனுப்பி இருக்கிறார்.  எனக்கு கட்டளையிடுங்கள்  சேவை புரிய'  என்று வேண்டினார்.

''வாரம் ஏழு நாளுக்கும் ஆகாரமாக  ஏழு பிடி கடலையை மட்டும் எடுத்துக்கொண்டு வா  அது போதும்''  என்கிறார்  ஞானதாஸ்.  ஒரு நாளைக்கு ஒருபிடி கடலை  பருப்பு  உணவாக 12 வருஷம்  தவம் இருந்தார் ஞானதாஸ்.  ஞானதாஸ் தவத்தை மெச்சி கிருஷ்ணன் அவருக்கு தரிசனம் கொடுத்த இடம் தான்  ரமண்  ரேதியில் உள்ள  ரமண்  விஹாரி  கிருஷ்ணன் ஆலயம்.  கோகுலத்தில் பார்க்கவேண்டிய  புண்ய ஸ்தலம் இது.  
5000 வருஷங்கள்  ஆனபோதிலும்  அந்த ஊர் தெருக்களில்  போகும்போது, காணும் பழைய கட்டிடங்கள், குறுகிய சந்துகள்,  ஒவ்வொன்றும்  ஆயிரமாயிரம்  கதை கிருஷ்ணன் பலராமன், தோழர்களுடன் சேஷ்டை பண்ணிய  விஷயங்களை  சொல்கிறது. அவற்றை புரிந்து கொள்ள  ஆத்ம சக்தி வேண்டும்.   
ரமண ரேதி மண்ணில் புரண்டு விளையாடிய பின்  அருகே இருக்கும்  ரமண சரோவர்  எனும்  குளத்தில்  இறங்கி  கிருஷ்ணன் நண்பர்களோடு நீந்தி விளையாடி குளிப்பான்.  
''இந்தாடா கிருஷ்ணா, கட்டுச்சோறு. போ  பசுக்களை, கன்றுக்குட்டிகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்''  என்று அம்மா யசோதை மூட்டை கட்டி கொடுத்ததை எடுத்துக்கொண்டு பசுக்களை கன்றுகளை மேய்க்க  கிருஷ்ணன் செல்வான். ஆனால்  அவளுக்கு தெரியாமல் ரமண ரேத்தியில் தான் வெகுநேரம் விளையாடுவார்கள். மான்களோடு  விளையாடுவார்கள்.  அதன் ஞாபகமாக இன்றும் ஒரு  பெரிய  மான் வனம்  இருப்பதை பார்த்தேன்.  இங்கே மண்ணில் புரளும்போது  5250  வருஷங்க ளுக்கு முன்பு கிருஷ்ணனோடு சேர்ந்து  மண்ணில் விளையாடி புரள்வது போன்ற அனுபவம் பெற்றேன்.
பிருந்தாவனம் போவதற்கு முன்பே  இங்கே ராதையுடனும் விளையாடி இருக்கிறான் கண்ணன்.
கிருஷ்ணன் வளர்ந்த நந்த பவன்   எனும்  நந்தகோபன் வீடு  அழகாக இருக்கிறது. அதை  சவ்ராஸி  கம்பா  ஆலயம் என்கிறார்கள். அதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...