Wednesday, August 31, 2022

THIRUVACHAKAM


 எல்லாமே  பொய் :   #நங்கநல்லூர்_J_K_SIVAN 


இன்று  மாணிக்கவாசகர்  படித்தேன்.  திருவாசகம் ஆஹா...  ஒரு  பக்தி பொக்கிஷம் அது. நாம்  யாருமே  சத்ய சந்தர்கள் இல்லை. சத்யமாகிய  சூர்யன் உதித் தவுடனே  அன்றைப் பொழுது  விடிந்ததும் ஏதாவது ஒரு  பொய்  சொல்லாமல் நம்மால் இருக்க முடியவில்லை.  ஏன்?  நாம் பொய்யிலே  பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்.  இப்படி பொய்யே வடிவாக உள்ள நாம் செய்யும் காரியங்கள், சொல்பவை எப்படி நிஜமாகும்?

அடே  ஸர்வேஸ்வரா , எனக்கு எல்லாம் கொடுத்த நீ ஏனடா இந்த பொய்யை  என்னுள் திணித்தாய்? அது இல்லாமல் நான் வாழ முடியாதா?
நான் முழுசாக ஒரு பொய்.  என் தேகம் நான்  நிஜம் ஸாஸ்வதம்  என்று என்ணுவதும் மஹா பெரிய பொய் . இதில் ஒரு வேடிக்கை பார்த்தாயா?  இந்த பொய்யான உடலுக்கு 'மெய்' என்று பெயர். 

என் உடம்புக்குள்ளே என் கண்ணுக்கே  தெரியாத நெஞ்சம், மனம், உள்ளம்  என்று ஒன்றை வைத்திருக் கிறாய். அது பொய்யில் ரொம்பி வழிகிறது.  வஞ்சம், லஞ்சம், பொய் , பொறாமை, கோபம், ஆத்திரம், மடமை, மதம், ஆங்காரம் என்று சகல விதமான  துர்க் குணங்களும் நிரம்பியுள்ளது.

இப்படிப்பட்ட  நான்  செலுத்தும் அன்பு நம்பக்கூடியதா? சுத்த  பொய் .  அழியும், நிலையற்ற வஸ்துக்களை, உறவுகளை, தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், சுற்றம் என்று பெருமையோடு சொல்கிறேன்.  என் வீட்டை பார்  எவ்வளவு பெரிய கோட்டை மாதிரி கட்டி இருக்கிறேன் என்று மார் தட்டுகிறேன். இதோ இந்த கருப்பு வஸ்து, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட  கார். 3  கோடி ரூபாய் விலை.

இதற்கிடையே  என் கண்களில் சில  நல்ல விஷயங் களும் கண்ணில் படுகிறது. சனாதன தர்மம் பற்றி நிறைய பேசுகிறேன், படிக்கிறேன், அதில் உள்ள உண்மை மனதில் பதியாமல் பொய்  அதை மறைத்து விடுகிறதே. ஞானிகள் சொல்வது காதில் ஏறவில்லை யே.தங்கள் கூறும் உண்மை! ஞானிகள் உணர்ந்த சத்தியம்! இதுவே நம் சனாதன தர்மம் உரைப்பது!பகவானே நான் திருந்த என்ன வழி?

முந்தைய ஜென்ம பாவங்கள் என்னை இப்படி  பொய்யனாக்கி விட்டதே. இதில் இருந்து விடுபட உன்னை நினைக்கவேண்டும், உன்னிடம் என் பாபங்களை சொல்லி அழவேண்டும். அழுதால்  சுமை, பாரம், குறையும், நெஞ்சு லேசாகும். நீ தெரிவாய்.  அழுத  பிள்ளை தான் பால் குடிக்கும்.

நான் உன்னையே நினைத்து நினைத்து என் பாபங்களை சொல்லி அழுகிறேன் அழுகிறேன். நீ ஒருவனே சத்யம்.   அழுதாள்  பாப பிராயச்சித்தம் பெற்று உன்னை அடையலாம்  என்று ஏற்கனவே அழுத  மாணிக்க வாசகர் சொல்கிறாரே.  உன்னை ''சிக்'' கென பிடிக்க முடியுமாம். சர்வேஸ்வரா, நீ  தான் அம்ரிதம்,   தேன் .தெள்ளிய  கரும்புச்சாறு. அடியார்களுக்கு இனிப்பவன். தெவிட்டாதவன். நெஞ்சார அழுது உன்னை தொழுகிறேன் என்மேல் இரக்கம் வையப்பா.

 இதோ  வள்ளலார் அழுது அனுபவித்த ஒரு வாக்கியம்;“

''நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே”

நான் படித்த  மாணிக்கவாசகரின் திருவாசக  பாடல்: 

''யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே''.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...