Tuesday, February 1, 2022

TULSI DAS

 துளசி தாஸர் -   நங்கநல்லூர்  J K  SIVAN


3.  பயப்படாதே கண்ணா 

ரெண்டு பேரைப்  பற்றி சொல்லும் விஷயம் இது.  இருவரும் சம காலத்தவர்கள்.  அக்பர் நமது தேசத்தை ஆளும்  அவன் ஆட்சிக்குட்பட்டவர்கள்.   ஒருவர்  ராம பக்தர். இன்னொருவர்  கிருஷ்ண பக்தர். இருவரும்  ஒருவரை ஒருவர்  பற்றி அறிந்து சந்தித்து மகிழ்ந்தவர்கள் . இதில் ஒரு சௌகர்யம் என்னவென்றால் இருவருமே  வடநாட்டில்  ஹிந்தி பேசுபவர்கள்.  ஒருவர்  ஸூர் தாஸ். மற்றொருவர்  துளசி தாஸ்.  ஒருவர்  ராமனை  கண்ணால்  நேரில் கண்டவர்.  இன்னொருவர் கண்ணில்லாமலேயே மனதில் எப்போதும் கிருஷ்ணனை கண்டவர். 

சூர்தாஸ்  பற்றி எழுதும் போதெல்லாம்   அவர்  பார்வையின்றி கிருஷ்ணன் சரித்திரம்  பாடுவதை கிருஷ்ணனே சிறு குழந்தையாக அவர் எதிரே அமர்ந்து கேட்கும் படத்தோடு வெளியிடுகிறேன்.  நீங்களும் ஆர்வத்தோடு  படிக்கிறீர்கள். அற்புதமான மனத்தைக் கவரும் படம். கருத்தாழம் மிக்க  ஓவியனின்  வெளிப்பாடு.  

இன்றைய விஷயம்:    துளசிதாஸ்  ஸூர்தாஸ் சந்திப்பு 
 
ஒருநாள்  துளசி தாசர் எங்கோ செல்லும்போது வழியில்  ஆற்றங்கரையில்  ஸூர்தாஸ்  வழக்கமாக ஒரு மூலையில் அமர்ந்து  கிருஷ்ணன் பாடல்களை இயற்றி மனதில் சந்தோஷமாக ரசித்து பாடிக் கொண்டிருப்பதை  பார்க்கிறார்.  அருகே சென்றார்.   ஸூர்தாஸ்  பாடல் அவரை ஈர்க்கிறது.   வெகுநேரம் அருகே நின்று  அமைதியாக கேட்டு தன்னை மறக்கிறார். தன்னுடைய  பாடல்கள்  மூலம்  துளசிதாஸை  பிருந்தா
வனத்துக்கே  அழைத்துச் செல்கிறார்  ஸூர்தாஸ்.  பாட்டு முடியும் வரை சிலையாக நின்று  கண்களை மூடி ரசித்த துளசிதாசர்  ஸூர்தாஸை வணங்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

''ஓ  நீங்கள்  தான்   துளசிதாசரா.  உங்களை பற்றி  நிறைய  சொல்வார்கள். அற்புதமான ராம பக்தர். உங்களை தரிசிக்கும் பாக்யம் எனக்கு இல்லை. தொட்டு பார்த்து வணங்கலாமா?

''  ஸூர்தாஸ்,  மஹானுபாவா , நான் பாக்யசாலி. இனி தொடர்ந்து உங்களோடு நட்பு கொண்டு நான் உங்களோடு இருப்பேன்'

''ஆஹா அது என் அதிர்ஷ்டம்.   நாம்  இருவருமே  கிருஷ்ணன் மேல் கீர்த்தனைகள் நிறைய சேர்ந்தே பாடுவோம் '' என்கிறார் உற்சாகமாக ஸூர் தாஸ் .

ஒரு  நாள் ராஜாவின் பட்டத்து யானைக்கு மதம் பிடித்து தெருவில் ஓடிவருகிறது.   வழக்கமாக அவர் அமரும்  கோவில் அருகே  ஸூர்தாஸ்  துளசிதாஸோடு  நிற்கிறார்

''ஓடுங்கள் ஓடுங்கள்  யானை வருகிறது. எதிரே யார் இருந்தாலும் கொன்றுவிடும்'' சில பேர்  கத்திக்கொண்டு தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

''யானை என்பது பெரிய மிருகமாமே, எப்படி இருக்கும் என எனக்கு தெரியாதே'' என்கிறார்  ஸூர்தாஸ் 

''ஸூர்தாஸ்,   நாம் இருவரும் கவலைப்பட  வேண்டாம். நம்முள் கிருஷ்ணன் இருக்கிறான் அவன் பார்த்துக் கொள்வான்.   ஒரு ஓரமாக நிற்போம்''

கிருஷ்ணனை  தியானித்து கண்மூடி துளசிதாஸ்  சிலையாக அமர்ந்திருக்க  யானை அருகே வந்துவிட்டது.  அவர்களைப் பார்த்தது. ஒருகணம் நின்றது. மெதுவாக அவர் எதிரில் நின்றது தும்பிக்கையால் அவரை வணங்கியது அமைதியாக அவரை சுற்றி வந்து திரும்பியது. எல்லோரும்  ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது தான் துளசிதாஸ்  மெதுவாக தியானத்திலிருந்து கண் விழித்தார்.

துளசிதாஸுக்கு  அப்போது தான் ஸூர்தாஸ் பற்றி நினைப்பு வந்தது.  ''எங்கே ஸூர்தாஸ் ? காணோமே.''  

சற்று தூரத்தில்  மரத்தின் அருகே  இரு கைகளாலும் நெஞ்சை மறைத்துக் கட்டிக்கொண்டு ஸூர்தாஸ் நிற்பது தெரிந்து அவரை அழைத்துக்  கொண்டு வருகிறார்  துளசிதாஸ்.   கண் தெரியாத அவருக்கு எல்லோரும் விஷயம் சொல்கிறார்.

''ஸூர்தாஸ்,  எனக்கு ஒரு சந்தேகம் உங்களை நேரடியாக கேட்டு  விடுகிறேன்?''  ஏன் எல்லாரையும் போல்  நீங்களும் யானையை கண்டு பயப்பட்டு நடுங்கினீர்கள்?'' நான் தான் நம்முள் கிருஷ்ணன் இருக்கிறான் பார்த்துக் கொள்வான் என்றேனே ''  

''துளசிதாஸ்,  நீங்கள் ஒரு உன்னத கிருஷ்ண பக்தர்  என அறிவேன்.  உங்கள் மனதில் இருக்கும் கிருஷ்ணன்   நீங்கள்  கண்ணை மூடி  தியானத்தில் இருக்கும்  போது  வந்த அந்த பொல்லாத  கோபமான  யானையை கிருஷ்ணன்  விரட்டி விடுவான் என்று தைரியமாக  இருந்தீர்கள்.  
ஆனால்,  என் மனதில் இருக்கும் கிருஷ்ணன் ஒரு  குட்டிப்  பயல். இதுவரை எனது மனதில் அவனை குழந்தையாகவே நான் அறிவேன்.  அவனது சிரித்த விளையாட்டு முகம் ஒன்றே நான் அறிந்தது. பல பாடல்கள்  அப்படியே தான்  அவனைப் பற்றி பாடியுள்ளேன்.  நீங்கள் சொன்னது போல் யானை மிக பெரிய மிருகம்,  அதற்கு மதம் என்று ஏதோ சொன்னீர்களே அது பிடித்தால் ரொம்ப ஆத்திரமடைந்து எல்லோரையும் தாக்கிக்  கொன்று விடும் என்று சொன்னீர்களே..
ஒருவேளை என் மனதில் உள்ள குழந்தை கிருஷ்ணன் அந்த பெரிய  யானையை பார்த்து பயந்து அழுது விட்டால்??  நான் எப்படி  அவனுக்கு ஆறுதல் சொல்லமுடியும்? எனக்கு சிரிக்கும் கிருஷ்ணன் தான் பிடிக்கும். அழுபவர்களை கண்டாலே பிடிக்காது.   ஆகவே  என் இரு கைகளாலும் என் நெஞ்சை மூடி மறைத்து கொண்டேன்.  என் நெஞ்சின் உள்ளே இருக்கும்  அவனுக்கு யானை கண்ணில் படாது அல்லவா, பயம் தோன்றாது அல்லவா, அழுகை வராது அல்லவா? '' என்கிறார் ஸூர்தாஸ்

இதை கேட்டதும்  உங்களுக்கு  ஸூர்தாஸ்  மனநிலை எப்படி என்று புரிகிறதா ?  அப்புறம் துளசிதாசர் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்ததை , அவர்  ஸூர்தாஸின்  கிருஷ்ண பக்தியை உணர்ந்ததை, சிலையாக நின்று ரசித்து அவர் பாதங்களில் விழுந்ததைப்  பற்றி நினைப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...