Friday, February 25, 2022

KRISHNASHTAKAM

ஆதி சங்கரர்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 
ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம் 

இது  ஆதி சங்கரர்  நம் அனைவருக்கும்  வைத்து விட்டுப்  போன ஏராளமான ஐஸ்வர்யங்களில்  ஒரே  ஒரு சின்ன  துக்குணியூண்டு எடுத்து தருகிறேன். இது கிருஷ்ணாஷ்டகம் என்ற எட்டு   குட்டி ஸ்லோகங்கள். குட்டி கிருஷ்ணன் மீது அவர்  பாடிய ஸ்லோகங்களும் குட்டியாகத்  தான்  இருக்கிறது.
பழைய ஒரு  மலையாள  வீடு. அதில் இரு ஆசாரமான தம்பதியர். அவர் பெயர் சிவகுரு. அவர் மனைவி ஆர்யாம்பா.  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு ஏழைப் பிராமண குடும்பம். பல வருஷங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் ஒரு தீராத குறை, இருவர் மனத்திலும். பிள்ளை யில்லையே!  திரிச்சூர் சென்று வடக்குநாதனை வேண்டினால் கைமேல் பலன் கொடுப்பானல் லவா?. மகாதேவா, எங்களுக்கு ஒரு மகனைத் தருவாயா?

மகாதேவன் வேண்டியவர்க்கு வேண்டியதை வேண்டாமலேயே தருபவனாச்சே. திரிசூரில் ஒரு மண்டலம் தங்கி தினமும் புஷ்கரணியில் ஸ்நானம் செய்து விரதமிருந்தனர் இருவரும்.
ஆர்யாம்பா கனவில் ஈஸ்வரன் தோன்றினான்.

‘’உன் வயிற்றில் பிள்ளையாய் நானே வருவேன்’’ என்றான். எவனோ, பெயர் சொல்ல ஒரு மகன் வேண்டும் என்று வாடும்போது சிவனே நானே உன் மகன் என்றால் எப்படியிருக்கும் என்று இந்த சிவன் எழுதப்போவதில்லை. மனதில் நினைத்தால் இனிக்கும் அந்த இன்பம் எழுத்தில் வருமா?
ஈஸ்வரனைப்  பொருத்தவரை இது ஒரு தக்க தருணம் எனலாம். ஏனென்றால் இது நிகழ்ந்த காலத்தில் நிரீஸ்வரவாதிகள் பெருகி, கொஞ்சம் கொஞ்சமாக பௌத்தம் இந்து தார்மீகத்தை விழுங்கிக்  கொண்டு வந்த நேரம்.

''சனாதன தர்மத்தை பின்பற்றுவர்கள் தக்க துணையின்றி, சாய்ந்து கொள்ள ஒரு பக்க பலமின்றி திணறுகிறார்களே. உடனே நீங்கள் ஏதாவது செய்து இந்து தார்மீகத்தை புனருத்தாரணம் செய்யவேண்டும் என்று பிரம்மாதி தேவர்கள் சதா  சிவனை வேண்ட அந்த தக்ஷிணா மூர்த்தி  நானே அவதரிப்பேன் '' என்று வாக்களித்தார். எனவே ஆரியம்பா கனவில் கண்ட சிவன் பிள்ளையாய்ப்  பிறந்தான், சிவனின் பெயரான சங்கரன் (சம்: மங்களம், கரன்: தருபவன்) என  அவர்கள் வைத்த  பெயருக்குத் தகுந்தபடி சகல சந்தோஷத்தையும் தந்தான். சாஸ்திரம் சகலமும் கற்றான். இனி கற்க ஒன்றுமில்லை என்ற நிலை வந்ததோ என்னவோ அந்த அவதார புருஷனுக் கல்லவோ தெரியும். வந்த கார்யம் சடுதியில் நடக்க ஆயத்தமாகக் கூட இருக்கலாம். சன்யாசம் கொள்ள மிக்க விருப்பம் உண்டாயிற்று. பால் மணம் மாறாப் பாலகன் என்று கூட சொல்லும் ஏழு வயதில் இப்படி ஒரு ஆசையா?  ஒரு சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக்கொண்டு சந்நியாசியாகி சங்கரன் தனது குருவைத் தேடி புறப்பட்டுவிட்டான்.

பாதசாரியாக பல தேசங்கள், வனங்கள், எல்லாம் கடந்து நர்மதை நதிக்கரையில் தனது குரு கோவிந்த பாதரை தரிசித்து வணங்கினார் சங்கரர்.

அதன் பிறகு எத்தனையோ அனுபவங்கள், அத்வைத வேதாந்த பிரகடனம். எதிர்த்தோர்களுடன் வாத, விவாதங்கள். சகலத்திலும் வெற்றி. தோற்றவர்கள் சீடர்களாகவும் ஆனார்கள். ஷண்மத ஸ்தாபனம். நான்கு மடங்கள் உருவாயின.

எண்ணற்றோர் வியந்தனர். சைவம் துளிர்விட்டு வளர்ந்து விரைவில் நாடெங்கும் நான்கு திசை யிலும் பரவி மிகப்பெரிய விருக்ஷமாகியது. எத்தனையோ வேத, வேதாந்த, உபநிஷத்துக்கள், பாஷ்யங்கள் சங்கரரால் தோன்றின. காற்றில் ஸம்ஸ்க்ரிதம் மணத்தோடு நிறைந்தது.
எங்கோ பனிமலையில் சங்கரர் தம் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்க தனியே மலையாள தேசத்தில் ஒரு தாய் வயதான காலத்தில் தினமும் பூர்ணா நதியில் ஸ்நானம் செய்து தனது குடும்ப தெய்வமான கிருஷ்ணனை வழிபாட்டு, மகன் சங்கரனையும் இடைவிடாது நினைத்துவந்தாள். அவள் மனதில் கிருஷ்ணனும் சிவனும் ஒன்றாகவே இடம் பெற்றார்கள். பிரிக்க முடியாதவர்களல்லவா ஹரியும் ஹரனும்.  

ஒருநாள் ஆற்றுக்குப் போகும் வழியில் கிழவி தடுக்கி விழுந்தாள். பிறகு அவளால் வழக்கமான ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடக்க முடியவில்லை.   ''என் நெஞ்சில் குடிகொண்ட கிருஷ்ணா, என் ஆருயிர் மகனே சங்கரா, என்னால் தினமும் ஸ்நானம் செய்ய போக முடியவில்லையே, எப்படி ஆசாரத்துடன்உன்னை வழிபடுவேன்?

பக்தியோடு வருத்தம் தோய்ந்த தாயின் தீனமான குரல் இருவருக்குமே கேட்டது.
சங்கரர் கிருஷ்ணனை நினைத்தார். கிருஷ்ணன் தோன்றினான். அம்மாவின் குறை சொல்லப் பட்டது.
''ஏற்கனவே தெரியுமே'' என்றான் கிருஷ்ணன்.
''என்ன செய்வது சொல் கிருஷ்ணா ''
''நீயே ஆற்றின் போக்கை மாற்றி தாயின் குறை போக்க வழியை உண்டாக்கு " என்றான் கிருஷ்ணன்.
''சரி, அப்படியென்றால் ஆற்றை இப்படி போகும்படியாக மாற்று'' - சங்கரரின் கால் கட்டைவிரல்  தரையில் ஒரு வரை படம் மண்ணில் வரைந்தது. வரைபடம் போலவே பூர்ணா நதி  தாயின் புழக்கடையில் ஓடினாள். அதிசயம் ஊரில் அடங்கவில்லை. நதி தனது போக்கை சங்கரர் வீட்டுப் பின் புறம் வரை மாற்றிக்கொண்டது சாதாரண விஷயமா?

சாசலம் என்ற பெயர் கொண்ட அந்த கிராமம் சங்கரர் காலடியில் உருப்பெற்ற நதியின் போக்கால் 'காலடி'' என்ற பெயர் பெற்ற. விவரம் இது தான். கிருஷ்ணனின் லீலையில் மகிழ்ந்து சங்கரர் மனம் பக்தியில் பொங்கியது.

நதி புறப்பட்டது போலவே கிருஷ்ணாஷ்டகம், அச்சுதாஷ்டகம்  கோவிந்தாஷ்டகம் எல்லாம் அற்புதமாக பக்தி ரசம் சொட்ட சொட்ட சங்கரர் நாவில் புறப்பட்டு நமக்குக் கிடைத்துவிட்டது. சங்கரரின் தாய் வணங்கிய கிருஷ்ணன் கோவில் அந்த வீட்டிலேயே சங்கரரால் ஸ்தாபனமாகியது. இன்றும் நாம் காலடியில் அந்த கோவிலை தரிசித்து கிருஷ்ணனை வணங்கலாம்.

அந்த புகழ் வாய்ந்த சங்கரர் போற்றிப்பாடிய கிருஷ்ணாஷ்டகம் எட்டு சிறிய எளிய ஸமஸ்க்ரித ஸ்லோகங்கள், ஏற்கனவே உங்கள் எல்லாருக்கும் தெரிந்தது, நீங்கள் அடிக்கடி கேட்டது, பாடியது, பாடப்போவது இது தான் :

वसुदॆव सुतं दॆवं कंस चाणूर मर्दनम् । 
 दॆवकी परमानन्दं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥१॥

 Vasudeva Sutham Devam Kamsa Chaanoora Mardhanam 
Devaki Paramaanandham Krishnam Vande’ Jagathgurum ||

'வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||  

 என்ன சொல்கிறார் ஆதி சங்கரர்? எல்லா லோகங்களிலும் கிருஷ்ணன் தான் ஜகத்குரு. ஏனென்றால் அவன்  தானே   ஜகத் காரணம்! ஹே! கிருஷ்ணா, தேவகி வசுதேவருக்கு மட்டுமே கண்ணுக்கு கண்ணாகப் பிறந்தவனா நீ? கண்ணா என்று உளம் மகிழ்ந்து உன்னை நெருங்கும் எண்ணற்ற கோடி உயிர்களுக்கும் அல்லவோ நீ  சொந்தம்!. தேவகிக்கு மட்டுமா நீ பரம ஆனந்தம் ? எங்கள் சந்தோஷத்தை எழுத யாராலும் முடியாது என்பதால் தேவகியின் சந்தோஷத்தோடு மட்டும் சங்கரர் நிறுத்திக்  கொண்டிருக்கிறார். கம்சன், சாணூரன் என்று வெளியே உலவிய அரக்கர்களை கொன்றது போதாது. அவர்களைக்  காட்டிலும் பலம் வாய்ந்த மல்லர்கள், ராக்ஷசர்கள், காமம், குரோதம், மோகம், மதம் என்றெல்லாம் பெயரோடு எங்களுக்குள்ளே மறைந்திருக்கிறார்களே. அவர்களையும் மர்த்தனம் செய்யேன்? 

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...