Sunday, February 13, 2022

SUNDARAR

 ''தம்பிரான் தோழர்'' -  நங்கநல்லூர்  J K  SIVAN

சுந்தர மூர்த்தி நாயனார்

2.   பரவை தரிசனம்

நாம் கடும் வெயிலில் சுடும் தரையில் காலில் செருப்பின்றி நடப்பதில்லை. அந்த காலத்தில் நடந்தார்கள்.    சிலர்  பாத ரக்ஷை, பாத உருட்டுக்கட்டை  என்று  பேர் கொண்ட  மர செருப்பு,  ஒரு குமிழ்  இருக்கும் அதை கட்டை விறல் பெருவிரல் இடையே வைத்து நடப்பார்கள்.  கட்டையின் நடுவே  ஒரு தோல் வார் பட்டையாக  பிடிப்புக்காக  இருக்கும்.  

 திருக் கோவிலூரில் இருந்து பொடிநடையாக  தென்கிழக்கே 20 கி.மி. நடந்தால் பெண்ணை யாறு ஜிலுஜிலுவென்று காற்றை வீச, அதன் தென்கரையில் ஒரு கோவில் வரும். பத்து ஏக்கர் பரப்பில் பெரிய அழகிய இராஜகோபுரம், ரெண்டு ப்ராஹாரங்கள். அதனைத்தாண்டி உள்ளே சென்றால் சுந்தர ருடன் "வழக்கு தீர்த்த மண்டபம்". கவசமிட்ட கொடிமரம், விநாயகர், பலிபீடம். மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தரும் விமானம் . சுந்தரர் சந்நிதி.

சுந்தரர் கையில் ஓலையுடன் நிற்கிறார். ஹாலஹால விஷம் நெஞ்சில் திகு திகு என சிவனை எரிக்காமல் இருக்க பார்வதி பசு வெண்ணெ யால் கோட்டை கட்டி பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவே தவம் செய்ததால் இந்த க்ஷேத்ரம் ''வெண்ணெய் நல்லூர்'' .  பழைய பெயர் அருட்துறை.  இறைவன் கருணை அருளும் வெண்ணை அல்லவா. அது தான் மேலே தேவாரத்தில் சொல்லப்பட்ட பழம் பெயர்.  சிவன் பெயர்  க்ருபா புரீஸ்வரர்.  அம்பாள்  மங்களாம்பிகை. தடுத்தாட்கொண்ட தெய்வம்.
 
சுந்தரர் பல க்ஷேத்ரங்களில் சிவ ஆலயங்களுக்கு சென்றார். பாடினார். ஒரு தடவை அதிகை வீரட்டானம் வந்து சேர்ந்தார். அங்கே தான் திரு நாவுக்கரசர் எனும் அப்பர் பெருமானுக்கு இறைவன் பரமேஸ்வரன் அருள் செய்து சூலை நோய் தீர்ந்தது.   

  ''அடாடா,   என் அப்பர் பெருமான் திருவடிகள் பட்ட இடம் அல்லவா இது'' என்று சுந்தரர் அங்கே கால் வைக்க அஞ்சினார். ஊரின் வெளிப்புரத்திலே இருந்தவாறு இறைவனது ஆலயத்தை நோக்கி மனமார வணங்கினார்.

இரவு நெருங்கியது. ஒரு மடத்தின் திண்ணையில் அமர்ந்த சுந்தரர் கண்ணயர்ந்தார்.   ஒரு வயதான கிழவர் அப்போது மடத்தில் நுழைந் தார். அதுவோ ஒரு ஒட்டு திண்ணை. அதில் நெருக்கி அடித்த வாறு அந்த கிழவர் சுந்தரர் அருகே அவரை இடித்துக் கொண்டு படுத்தார். சுந்தரர் தலையில் கிழவரின் கால்கள்.
''ஐயா,   பெரியவரே என்ன இது ஒழுங்காக படுங்கள்'' சுந்தரர் கிழவரை கோபித்தார்.
''ஐயோ,   தெரியாமல் கால் பட்டுடுத்து அப்பனே''

சுந்தரர் சற்று நகர்ந்து இன்னொரு மூலையில் போய் படுத்தார். கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை. மீண்டும் கிழவனின் கால் சுந்தரர் தலைமீது. சுந்தரருக்கு கோபம் வரவில்லை.

'' பெரியவரே யார் நீங்கள், எந்த ஊர்? எதற்காக இப்படி செய்கிறீர்கள்?''
கிழவரும் சுந்தரரை உற்று பார்த்தார். 
''அடே, நண்பா, என்னை உனக்கு தெரியவில்லையா?''. 
சுந்தரர் அரை இருட்டில் அந்த கிழவரை நெருங்கி யார் என்று பார்க்க முயன்ற போது கிழவரைக்  காணோமே !  அதற்குள் எப்படி சிட்டாக மறைந்துவிட்டார்.
''ஆஹா,   நான் வீரட்டேஸ்வரரை தரிசிக்காமல் ஊர் கோடியில் நின்று விட்டு வந்துவிட்டேனல்லவா. சிவனே என்னை தேடிவந்துவிட்டாரே'' என்று அதிசயித்தார் சுந்தரர்.
''ஆஹா,  பரமேஸ்வரா, எத்தனையோ கோடி ரிஷிகளும் முனிவர்களும் வேதம் அறிந்த மகான்களும் தேடியும் பெறாத உன் திருவடிகளை இந்த நாயேன் மேல் பட கருணை கொண்டு என்னைத் தேடி இங்கே வந்து எனக்கு அளித்தாயே , என்னே உன் கருணை.'' என்கிறார் சுந்தரர்.

கண்களில் நீர் கசிந்தது. பக்தி பிரவாகமாக பெருகிப்  பதிகம் ஒன்று  பாடினார்.  
முதல் பதிகம் இது: 
''தம்மானை யறியாத சாதியா ருளரே
.. சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவி னுரியானைக் கரிகாட்டி லாட
.. லுடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
.. ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
.. துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.''

உலகில்  என்னைப்போல  அறிவிலிகள் யாரேனும் உண்டா? என் தலைவனை அறிந்து கொள்ளாமல் போய் விட்டேனே.  ரிஷபக்கொடியோனை,  கரிய  ஸ்மசாசனத்தில்  ஆடுபவனை, யானைத்தோல் அடுத்தவனை, கருநீல கழுத்தனை, ரிஷப வாஹனனை,  எத்தனையோ பக்தர்கள் காலம் காலமாக  அவனது பாதரவிந்தங்களில் சிரம்  வைத்து வணங்க தவம் செய்யும்போது,  அவனாகவே  வந்து அவனது திருவடிகளை என் சிரத்தில் வைத்தருளியபோது உதறித்தலிய  அறிவிலி என்போல் வேறெங்காவது பார்க்க முடியுமா.   கெடில நதிக்கரை  திருவதிகை வீரட்டானேஸ்வரா என்னை பொருத்தருள்வாய்.  

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் அவரது 18 வருஷ குறுகிய வாழ்வில். சிவ யாத்திரை விடாமல் தொடர்ந்தது. நடந்து தில்லை அடைந்தவர் சிதம்பரேசன் ஆலய கோபுரத்தை கண்டு மயங்கினார்.  ‘’ஆஹா!  என்ன அழகு அதிசயம், என் ஆண்டவன் ஆலயம்’’  என்று தரையில் மண்ணில் புரண்டார். கண்களில் பெருகிய ஆனந்த கண்ணீர் தரையை  நனைத்தது. நடராஜன் தோழன் சுந்தரனுக்கு தரிசனம் அளித்தான்.
''சுந்தரா,   இனி நீ திருவாரூர் செல் '' ஒரு அமானுஷ்ய அசரீரி அவருக்கு உத்தரவிட்டது.
 ''ஆஹா அப்படியே'' என சுந்தரர் பல ஊர்களை கடந்து சிவாலயங் களை தரிசித்தவாறு திருவாரூர் சென்றடைந்தார். ஆரூரர் சும்மா இருப்பாரா?    வேதியர்கள் பலருக்கு  '' நீவிர் சென்று எமது சுந்தரனை தக்க மரியாதையோடு அழைப்பீர்''   என கட்டளை இட்டார்.

ஆரூரர் தரிசனம் அருமையாக
க் கிடைத்தது சுந்தரருக்கு. மீண்டும் சிவன் குரல் ஒலித்தது.
''சுந்தரா,   உன்னை நான் நண்பனாக அடைந் தேன். உன் திருமணத்தை தடுத்து நிறுத்தினேன். இனி என்றும் நீ கல்யாண சுந்தரன், மாப்பிள்ளை கோலத்தில் பூமியில் போற்றப் படுவாய்.''     
இது கேட்ட சுந்தரர் தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டார். 
எப்போது அவருக்கு இவ்வளவு மாப்பிள்ளை முறுக்கு, மிடுக்கு,  ஆடை,  அணிகலன்கள் அலங்காரம் ஏற்பட்டது? 
எல்லோரும் அதைக் கண்டு அதிசயித்தனர். திருவாரூர் முழுதும் இந்த அதிசயச் செய்தி காற்றை விட வேகமாக பரவி சுந்தரர் ''தம்பிரான் தோழர்'' என்ற பெயர் பெற்றார்.

திருவாரூரில் ஒரு சிவ பக்தை வசித்தாள். பரவையார் என்று பெயர். உமா தேவியாரின் தோழி கமலினி என்ற தேவலோக மங்கை.   ஹால ஹால சுந்தரரை மணக்க விரும்பி பூலோகம் வந்தாளே அவள் தான் இப்போது திருவாருரில் பரவையார். தினமும் திருவாரூர் தியாக ராஜனை தரிசிக்க நிறைய பூக்களுடன் வருவாள். மாப்பிள்ளை கல்யாண சுந்தரர் நண்பர்களோடு,  சீடர்களோடு,  அப்போது ஆலயத்தில் நுழைந்தார். பரவை அவர் அழகில் மயங்கினாள். தேவ லோக தொடர்பு வெகுகால துண்டிப்புக்குப் பிறகு இணைந்தது. அப்புறம் ?

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...