Monday, February 28, 2022

MAHA SIVARATHRI

 மஹா சிவராத்ரி  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


சிவனுக்கு என்று ஒரு சிறப்பாக கொண்டாடப்படும் ராத்திரி இது. அன்று தான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் என்று சொல்வதுண்டு. இப்படித்தான் காஷ்மீரத்தில் கொண்டாடு கிறார்கள். சிவராத்ரிக்கு 3 நாள் முன்னாடி வைபவம் ஆரம்பித்து சிவராத்ரிக்கு பிறகும் 2 நாள் தொடரும். 
சிவன் அபிஷேகப் பிரியன். ருத்ரம் சமகம் ஆயிரக்கணக்கில் சொல்லி அபிஷேகம் நடக்கும்போது பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.அந்த மந்திர சப்தத்துக்கு தனி ஒரு சக்தி உண்டு. நான் ஸ்ரீ மஹா ருத்ர குழுவில் சேர்ந்து பல கோவில்களில் சிவன் முன்னால்  அமர்ந்து சொல்லியிருக்கிறேன். அந்த ஆனந்த அனுபவத்தை எப்படி  சொல்வேன்?  அனுபவித்திருக்கிறேன். த்ரியம்பகம் என்ற மஹா மிருத்யுஞ்சய ஜபத்தை விடாமல் சொல்லிக்  கொண்டும் இருப்பதும் என்  வழக்கம்.

ஓம்  ந ம சி வா ய என்பது பஞ்சாக்ஷர மந்த்ரம். ஐந்தெழுத்து மந்திரம் என்று தமிழ் மறை சொல்லும். ஹர ஹர மஹா தேவா, சம்போ மஹா தேவா என்று சிவனை உச்சரித்து வணங்குவது வழக்கம். சிவராத்ரியை  வடக்கே   சிவனின் ஆனந்த தாண்டவத்தை சம்பந்தப் படுத்தியும் கொண்டாடு கிறார்கள்.
இந்த வருஷம் 1ம் தேதி மார்ச், நாளை,  சிவராத்திரி எப்போதும்  மாசி மாத கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியில் வரும்.   இன்று  இரவெல்லாம் உபவாசம் இருந்து, கண் விழித்து, வில்வார்ச்சனை, நாம ஜபம், அபிஷேகம் நடக்கும்.

பெரியவாளின் வார்த்தையில் சில இத்தோடு  அளிக்கிறேன்: 

அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் கர்ப்பக் கிரஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். (சில கோயில்களில் மட்டும் இந்த இடத்தில் மஹா விஷ்ணு இருக்கிறார்) லிங்கோத்பவ மூர்த்தி என்பது பரமேசுவரனுடைய அறுபத்தி நான்கு மூர்த்திகளுக்குள் ஒன்று. விருஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரர், நடராஜர், காமாரி, பைரவர், தக்ஷிணாமூர்த்தி, ஸோமாஸ்கந்தர், பிக்ஷாடனர், ஊர்த்வதாண்டவர், ஜலந்தராசுர சம்ஹாரர், கால ஸம்ஹாரர், இப்படி அறுபத்து நான்கு மூர்த்திகள் பரமசிவனுக்கு உண்டு. அவைகளுக்குள் ஒன்று லிங்கோத்பவ மூர்த்தி.

அந்த மூர்த்திதான் சிவாலயத்திலுள்ள லிங்கத்துக்குப் பின்புறம் காணப்படுவது. அதில், லிங்கத்துக் குள் ஒரு திவ்விய மூர்த்தியிருக்கும். பார்த்திருப்பீர்கள். அதன் ஜடா மகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. கவனித்திருக்க மாட்டீர்கள். இந்த மூர்த்திக்குக் கீழே ஒரு வராக மூர்த்தி இருக்கும். மேலே ஹம்ஸ ரூபத்தில் ஒரு மூர்த்தி இருக்கும்.   
இந்த லிங்கோத்பவர் யார்?

ஸ்ரீ ருத்ராபிஷகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு சுலோகம் சொல்லிவிட்டு, அப்புறம்தான் அபிஷகம் பண்ணுவது வழக்கம். அந்த சுலோகம்:

ஆபாதால நப: ஸ்தலாந்த புவன
ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்
ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத்
பூர்ணேந்து வாந்தாம்ருதை:
அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம்
ருத்ராநுவாகான் ஜபன்
த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம்
விப்ரோ (அ)பிஷிஞ்சேத் சிவம் ||

என்ன அர்த்தம்? பாதாளம் முதல் ஆகாச பரியந்தம் எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாகப் பிரகாசிக்கிற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணவேண்டும். ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் இல்லை. எந்த வஸ்துவை எதிரில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை பிரதி பலிக்கும். குண-தோஷம் இல்லாதது . ஞானம் எப்படிப் பரிசுத்தமாக  இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அதன் பின் பச்சை வில்வத்தை வைத்தால், லிங்கமே, பச்சையாகத் தோன்றும். சிவப்பான அரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். நிர்விகாரமானது.  பரப் பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும் என்பதற்குத் திருஷ்டாந்தம் ஸ்படிக லிங்கம். அது எதையும்  மறைக்காது. அதற்குப் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் வழியாகப் பார்க்கலாம். பரம சுத்தமாக நிஷ் களங்கமாக இருக்கும். நிர்குணமான பரமாத்மா வஸ்துவுக்கு அது திருஷ்டாந்தம். நினைக்கிற ரூபமாக அது  தெரியும்.

மேலே சொன்ன  ஸ்லோகப்படி, அதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. "பூர்ணேந்து" என்று சுலோகத்தில் வருவது, 'பூரண இந்து!';    இந்து என்றாலும் சந்திரன் என்றாலும் ஒன்றுதான். ஈசுவரன் ஜடையும், கங்கையும்,கண், காது, மூக்கு, கை, கால் முதலிய அவயவங்களும் கொண்ட "ஸகள" ரூபத்தில் வருகிறபோது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக்கொண்டு சந்திர மௌலியாக இருக்கிறார். ரூபமே இல்லாத பரமாத்மா 'நிஷ்கள'   தத்வமாயிருக்கிற போது, அங்கே சந்திரன், கங்கை எதுவும் இல்லை. அரூபமாயும் இல்லாமல், ஸ்வரூபமாயும் அவயவங்களோடு இல்லாமல், லிங்கமாக சகள - நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூர்ண சந்திரனை   உச்சியில் வைத்திருக் கிறார். அதிலிருந்து அம்ருதமே கங்கை மாதிரி கொட்டுகிறது.

யோகிகள் தமது சிரசுக்குள் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள சந்திர மண்டலத்தில், ஜ்யோதி ஸ்வ ரூபத்தைத் தியானம் பண்ணுவார்கள். அந்தச் சந்திர பிம்பத்திலிருந்து அம்ருதம் மிருத்தம் ஒழுகும். அதனால் அவர்களுக்குப் பரமானந்தம் உண்டாகிறது. ஸமஸ்த பிரபஞ்ச ஸ்வரூபமான ஜ்யோதிர் லிங்கம் குளிர்ந்தால், லோக மெல்லாம் குளிரும். இதனால்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் ருத்ர அபிஷேகம் செய்வது. ருத்ர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் ஸ்லோகம், இதை அறிவுறுத்துகிறது.

ஸகல பிரம்மாண்டமும் சிவலிங்கம் தான். ஸ்ரீ ருத்ரத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. ஸர்வ பதார்த்தங்களும், நல்லது கெட்டது எல்லாம் சிவ ஸ்வரூபம் என்று ஸ்ரீ ருத்ரம் சொல்லுகிறது.
லிங்கம் ஏன் வட்ட வடிவமாயிருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்துக்குத்தான் அடி முடியில்லை; ஆதியில்லை, அந்தமுமில்லை. மற்றவைகளுக்கு உண்டு. முக்கோணத்துக்கு சதுரத்திற்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை காட்டவே லிங்காகாரம்.

சரியான வட்டமான (circle) இல்லாமல், லிங்கம் நீள வட்டமாக (ellipse) இருக்கிறது. "பிரபஞ்சமே 'எல்லிப்டிக்' காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை (Solar System) எடுத்துக்கொண்டாலும் கிரஹங்களின் அயனம் நீள  வட்டமாகத்தான் இருக்கிறது" என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரம்மாண்டமும் "ஆவிஸ்புரத்" என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறது.

யாராவது நமக்கு ஆப்த பந்துவை நினைக்கிறோம். சந்தோஷமாயிருக்கிறது; நேரில் அவருடைய உருவத்தையும் பார்த்தால் இன்னமும் சந்தோஷம் பூரணமாகிறது. அவ்வாறே உருவமற்ற சிவமும் ஒரு உருவத்தோடு வந்து அநுக்ரஹம் பண்ணினால் தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும். உருவத்தைப் பார்த்து பார்த்து ஆனந்தம் அநுபவிக்கிற நமக்கு உருவத்தோடு கண்டால் தான் ஆனந்தம் உண்டாகும். அதற்காகத்தான் உருவமற்ற பரமேசுவரன், அரு வுருவான லிங்கமான தோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குளேயே திவ்யரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாக இருக்கிறார். இப்படி ரூபத்தைக் காட்டினாலும், வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை, முடியும் இல்லை, அதாவது ஆதியும் அந்தமும் அற்ற ஆனந்த வஸ்துவே தான்  அவர் என்று உணர்த்துவதற்காக, மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே அந்த மாதிரித் தம் பாதம் அதற்குள் அடங்காமலும் இருப்பதாகக் காட்டுகிறார்.   
அடி  முடி எல்லை இல்லாமல், அவர் ஜ்யோதி ஸ்வரூபமாக நின்றார். ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்திரி யாகும்.

அப்படி ஜோதி ஸ்வரூபமாகப் பரமேசுவரன் நின்ற பொழுது, விஷ்ணு அவரது பாதத்தைப் பார்க்க பாதாளத்துக்குப் போனார். பூமியைக் கல்லி  தோண்டும்  ஸ்வபாவம் வராஹத்துக்கு உண்டு. எனவே, அந்த ரூபத்தை எடுத்துக் கொண்டார். பிரம்மா ஹம்ஸ ஸ்வரூபமானவர். பக்ஷிக்குப் பறப்பது ஸ்வபாவம். பக்ஷியாகப் பறந்து ஜோதிர்லிங்கத்தின் முடி தேடிப்போனார். இரண்டு பேருக்கும் தேடிப் போனவை அகப்படவில்லை. ஹம்ஸம்  திரும்பி வந்தது. 'நான் கண்டு விட்டேன்' எனப் பொய் சொல்லியது. அதனால் தான் பிரம்மாவுக்குப் பிரத்தியேகமாகப் பூஜை இல்லாமற் போய் விட்டது. பரிவாரமாக மட்டும் வைத்துப் பூஜை செய்வதுண்டு. புராண ஐதிஹ்யத்தில் இப்படிஇருக்கிறது.

பிரம்மா ஹம்ஸரூபமாகப் போய்ப் பார்த்தும் சிவ பெருமானின் சிரஸ் அகப்படவில்லை என்றும், விஷ்ணு வராஹ ரூபமாகப் போயும் பாதம் அகப்படவில்லை என்றும் சொல்வதன் தாத்பரியம் என்னவென்றால்,பரமாத்மா ஆதி அந்த ஹீனமான வஸ்து என்பதுதான்;   சிருஷ்டி, பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து அது என்பதுதான். இப்படி அடி முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாத   பரமேஸ்வரனை  'என்  சாமர்த்தியத்தால் அறிய முடியும்' என்கிற அகங்கார மில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால், வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டுவிடுவார். அன்பினாலே மிகமிக விரைவில் திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் சிவபெருமான் என்பதாலேயே, அவருக்கு 'ஆசுதோஷி' என்று ஒரு பெயர் இருக்கிறது. 'ஆஷுடோஷ் முகர்ஜி' என்று ஒரு சீர்திருத்த (Reformist) முக்கியஸ்தர்  வங்காளத்தில்  இருந்தது தெரியுமா?. ஆசுதோஷி  என்கிற வார்த்தை தான்' ஆஷுடோஷ்' என்றாயிற்று. 'ஆசுகவி' என்றால் கேட்டவுனேயே கவி பாடுகிறவர் அல்லவா? இப்படியே ஸ்மரித்த மாத்திரத்தில் சந்தோஷித்து அநுக்ரஹம் பண்ணுகிற வள்ளல்தான் ஆசுதோஷி.
சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம்  வேறில்லை.''

இனி  ஒரு சின்ன சிவராத்திரி மகிமை கதை சொல்லி முடிக்கிறேன்.   வாரணாசியில் ஒரு வேடன். தான் கொன்ற பறவைகளோடு காட்டிலிருந்து திரும்பினான். இரவு நேரம் நெருங்கவே களைத்து ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தான். கண் அயர்ந்தான். கண் விழித்த போது இரவு. இருட்டு. அன்று சிவராத்திரி என்பது அவனுக்கு எங்கே தெரியும்? மரத்தில் ஏறினான். கொன்ற பறவைகளை ஒரு மரக் கிளையில் கட்டினான். பொழுது விடிய காத்திருந்தான். அவன் ஏறியது ஒரு வில்வ மரம். கீழே ஒரு லிங்கம் இருந்தது  அவனுக்கு இருட்டில் தெரியாது.  தூக்கம் வரவில்லையே என்ன செய்வது? நேரம் போவதற்காக மரத்தில்  இருந்த  இலைகளைப் பறித்து கீழே வீசிக் கொண்டிருந்தான். எல்லாமே கீழே  லிங்கத்தின் மேல் விழுந்தது. பனி நீர் வேறு அதன் மேல் சொட்டியது.  அபிஷேகமும்  ஆயிற்று, வில்வார்ச்சனையும் ஆயிற்று!!   பொழுது விடிந்தது. வேடன் வீடு சென்றான். 

சில காலத்தில்  அந்த வேடன்  இறந்தான். அவன் உயிர் யமலோகம் கொண்டு போகப் பட்டது. அதை தடுத்து சிவ கணங்கள் அவன் உயிரை  சிவலோகம் கொண்டு செல்ல விரும்பின. எம தூதர்கள் தோற்றனர். எமனுக்கு விஷயம் போயிற்று. சிவலோகம் வந்தான் யமன். நந்தி அவனிடம் சிவராத்ரி மகிமை பற்றியும் அந்த வேடன் ஆற்றிய சிவ பக்தியும் சொல்ல அந்த வேடன் கைலாச பதவி அடைந்தான். அன்றிலிருந்து சிவ பக்தர்களை சிவன் உத்தரவு இன்றி யமன் தொடுவதில்லை.

இதையே கொஞ்சம் முன் பிறவி சமாச்சாரம் சேர்த்து இன்னொரு  ஸ்வாரஸ்ய கதையாகவும் சொல்வதுண்டு. ராஜா சித்ரபானு இக்ஷ்வாகு வம்சம். மஹா சிவராத்திரியில்  மனைவியோடு சர்வேஸ்வர பக்தியோடு உபவாசம் இருந்து  சிவ பூஜை பண்ணினான். அன்று ரிஷி அஷ்டாவக்ரர் அவன் அரண்மனைக்கு வந்தார்.
''நீ எதை உத்தேசித்து சிவராத்திரி விரதம் இருக்கிறாய்?''
''எனக்கு முன் ஜென்ம நினைவுகள் வந்தது. வாரணாசியில் நான்   ஸுஸ்வரன் என்ற ஒரு வேடனாக இருந்தேன் என்று மேலே சொன்ன கதையை சொன்னான். உபரி விஷயம் என்னவென்றால் ஒரு மானைக் கொல்ல அம்பு குறி பார்த்தான். அதன் குடும்பம் அருகில் நின்றது. அவை அந்த மானின் மரணத்தால் அடையப் போகும் சோகம் கண்ணில் தெரிந்தது. எனவே மானைக் கொல்லவில்லை. அவன் வைத்திருந்த தோல் பையில் துளை. அதன் வழியாக அதில் இருந்த நீர் சொட்டிக் கொண்டிருந்தது. பொழுது போகாமல் பசியோடு விடியும் வரை அந்த மரக் (வில்வ) கிளையில் அமர்ந்து இலைகளைக் கிள்ளி  கீழே போட்டு பொழுது போக்கினான். கீழே ஒரு சிவலிங்கம். அதன் மேல் எல்லா வில்வ இலைகளும், நீர்ச் சொட்டுகளும் இரவெல்லாம் விழுந்தது. மறுநாள் காலை பசியோடு வீட்டுக்கு போகும் போது வழியில் உணவு கிடைத்து அதை சாப்பிடும்  முன்பு  யாரோ ஒரு முதியவன் ''எனக்கு ரொம்ப பசியா இருக்கிறதே, எதாவது இருந்தால் கொடேன் என்று சொன்ன போது தன் உணவை அவனுக்கு கொடுத்தான்''
இதனால்  அந்த  வேடனுக்கு சிவராத்திரி விரதம், வில்வ அர்ச்சனை, அபிஷேக பலன், அதிதி போஜன பலன் அனைத்தும் கிடைத்து மறுஜென்மத்தில் சித்ரபானு ராஜாவானான் என்று வரும்.

சிவ புராணத்தில் ஆறு விஷயங்கள் முக்கியம் என்று சொல்லப்பட்டுள்ளது.
சிவலிங்கத்துக்கு இடைவிடாது அபிஷேகம் , ஜலம் , பால், தேன், வில்வ தளம், விபுதி, பன்னீர், சந்தனம், தயிர்,இளநீர், இவற்றால் நைவேத்யம். பழங்கள், சாம்ப்ராணி, ஊது பத்திகள், தீபம், வெற்றிலை பாக்கு,  வஸ்த்ரம். மந்திர உச்சாடனம்  செய்வது  ஸம்ப்ரதாயம் ..


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...