Monday, February 14, 2022

AVVAIYAR


 ஒளவையார்  -     நங்கநல்லூர்  J K   SIVAN 


பாட்டி சொல் தட்டாதே.

''நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். ''

அன்னம் என்று வாத்தை தான் நாம் அறிகிறோம்.   ஹம்சம் என்பதும் ஒரு வகை வாத்து.  அதை புராணத்தில் தான் நாம் இப்போது அறியமுடியும்.  அன்னம்  தாமரை பூக்கும் குளத்த்தைத்  தான் விரும்பி  சென்று அடையும். அது போலக் கற்றாரைக் கற்றார் மட்டுமே விரும்பி ஒன்றுசேர்வர்.  அது தான் நல்ல சகவாசம்,  சத்சங்கம் என்பது அதுபோலவே  நல்ல எண்ணங்களை கொண்டவர்கள் ஒன்று சேர்வது.
காக்கைகள்  நந்தவனத்தை விரும்பாமல், பிணத்தை எரிக்காமலும் புதைக்காமலும் போடும் சுடுகாடு , மயானத்திற்கு விரும்பிச் சென்று அவற்றை  உண்ணுவதற்கு  விரும்பும்.  கல்வி அறிவு இல்லாத மூர்க்கரை, முட்டாள்கள்  தான்  விரும்பி சென்று சேர்ந்து கொள்வார்கள். கல்வி அறிவு பெற்றவர்களால்  தான் கற்றவர்களின் பெருமையை அறிய முடியும். கல்வி அறிவு இல்லாதவர்களால் கற்றவர்களின் அறிவுத் திறனை அறிந்து கொள்ள இயலாது.

''நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்''. 

பார்ப்பதற்கும்  பேரில்  மட்டும்  தான் அது  ''நல்ல''  பாம்பு. மிகவும் கொடிய  விஷம்  உள்ளே மறைத்து வைத்திருக்கும் நாகம்.  ஆனால்  விஷமற்ற  தண்ணீர் பாம்பு  வெளிப்படையாக நமது கண்ணில் படும்.  மாட்டிக் கொள்ளும்.    விஷமிகள்,  கொடியவர்கள்,   வெளிப்படையாக,  வெகுளியாக நம்மோடு உறவாடமாட்டார்கள்.  பேசமாட்டார்கள்.  நெஞ்சில் வஞ்சகமில்லாதவர்கள்  அப்பாவிகள். படபடவென்று  வெளிப்படையாக  பேசுபவர்கள். 

''மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு. 

ஒரு ஊர்  என்றால் அந்தக்காலத்தில் அதற்கு ஒரு ராஜா இருப்பான். அவன் இட்டது தான் சட்டம்.  எல்லோரும் அவன் சொற்படி தான் கேட்டு வாழவேண்டும்.  அவனை எதிர்க்கவோ, மீறவோ இயலாதே.   அதே ஊரில்  நன்றாக  அப்பியாசம் செய்து  கசடற  கற்ற ஒரு பண்டிதன் இருந்தால் அவன் தான் உண்மையில் ராஜாவை விட  உயர்ந்தவன். அப்பனுக்கு பிள்ளை என்று வம்சம் வம்சமாக  ஆள்பவன் அறிவுடையவனாக  இருப்பது அதிசயம்.  அவனுடைய செல்வாக்கு அவன் ஊரில் மட்டும் தான்.  அவன் எல்லையைத் தாண்டி சென்றால் அவனை காலணாவுக்கு கூட எவரும் மதிக்க மாட்டார்கள்.  ஆனால்  கற்றுணர்ந்த பண்டிதன் எங்கு வேண்டுமானாலும் சென்று மற்றவர்களால்   வரவேற்கப்பட்டு  போற்றப்படுபவான். 

''கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். ''

எமன் பல ரூபங்களில் இருப்பவன் என்று இந்த பாடலில் பாட்டி  சொல்கிறாள்.  கல்லாத மூடனுக்கு,  படிப்பறிவு இல்லாதவர்களுக்குப் படித்தறிந்தவர் சொல்லும் வார்த்தைகள் தான் யமன். தர்ம ஞாய  நேர்மை  வழிகளை  பின்பற்றாதவர்களுக்கு பிறர் பின்பற்றும் நாள் வழிகள் தான் யமன்.  அது அவர்களை கூட்டமாக அழித்து விடும்.  வாழை மரத்துக்கு   அது குலை தள்ளிய  வாழைக்காய்  தான் யமன்.  குலை தள்ளிய  வாழைமரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிகிறது.   இத்தனை உதாரணங்களை சொல்லிய பாட்ட இன்னொன்றையும் சேர்த்து சொல்கிறாள்.  குடும்பத்தோடு ஒட்டாமல்  முரண்டு பிடித்து  அமைதியை கெடுக்கும்  பிடிவாதக்கார  முரட்டுப் பெண்  அந்த குடும்பத்தின் நல்வாழ்வுக்கே,  நிம்மதிக்கே  யமன்  என்கிறாள். கடைசி வரி மேலே இதைத்தான் சொல்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...