Saturday, February 26, 2022

DHAKSHINAMURTHI

 

தக்ஷிணாமூர்த்தி  ஸ்தோத்ரம்  -    நங்கநல்லூர்   J K  SIVAN 


மௌன குருவே   -1  



குரு என்பவர் பேசுபவர். காலேஜ் ,பள்ளிக்கூடம், பாடசாலை என்றெல்லாம் சென்றால்  நமக்கு  பாடங்களை கற்பிப்பவர்.    நிறைய பேசுகிறார்.  லெக்சர் அடிக்கிறார்.    அதால் கற்பவர்கள் பயனுறுகிறார்கள்!!!! பாடசாலைகளில்   வேதம் சொல்லும் உபாத்யாயர் உரக்க மந்திரங்களை,  ஸ்லோகங்களை சொல்கிறார். சிஷ்யர்கள் மாணவர்கள் கேட்டு திருப்பித் திருப்பி அதை சொல்லி கற்றுக் கொள்கிறார்கள். அப்படித்தானே?

எனவே ஒரு உபதேசம் கற்றுக் கொள்ளும்போது பேச்சு அவசியம். இது எப்போது? ஆரம்ப நிலையில். ஒன்றைக் கற்றுக் கொள்ளும் நிலையில்.  உபதேசம் எப்போது ஆரம்பமாகிறது?  நீ ஒன்றை அறிந்துகொண்டு, தெரிந்து கொண்டு, பிறகு அதை உள்வாங்கி அலசி, அதன் பொருளை உணரும்போது உனக்கு சந்தேகங்கள் சில தோன்றுமே,  எது சரியானது. எதை எப்படி உணர வேண்டும் என ? தேடுவாயே  அப்போது.!

உன் மனதில் புகுந்து அதை சீர் படுத்தி, சலனம் அகற்றி, சந்தேகங்களை  அகலச் செய்யும்போது வார்த்தைக்கு எங்கே இடம்?  அங்கே இருப்பது ஒன்றே தான். மனம், மனம், மனம். வேறெதுவும் காணாமல் போன நிலை. அதை அப்படி அறியச் செய்யும் குரு ஒருவர் தான் மௌன குரு. தக்ஷிணாமூர்த்தி.

''சும்மா இரு'' என்று தனது குரு உபதேசித்த போது அதை சரியான முறையில் அறிந்த தாயுமானவர் ''சும்மா இருத்தல் சுகமே'' என்று பாடல்களில் அனுபவ பூர்வமாக உரைத்திருப்பது   ''சுப் சாப் ரஹோ'' ''பேசாம இருடா'' அல்ல.      சர்வமும் ஒடுங்கி மனம் ஒன்றே ஆத்மாவாக பரிமளிக்கும் நிலை.

ஆதி சங்கரர் மஹான்.  யுக புருஷன். அவர் எழுதியிருக்கிற தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகங்களை இப்போது பார்ப்போம்.

मौनव्याख्या प्रकटित परब्रह्मतत्त्वं युवानं
वर्षिष्ठांते वसद् ऋषिगणैः आवृतं ब्रह्मनिष्ठैः ।
आचार्येन्द्रं करकलित चिन्मुद्रमानंदमूर्तिं
स्वात्मारामं मुदितवदनं दक्षिणामूर्तिमीडे ॥१॥

Mauna-Vyaakhyaa Prakattita Para-Brahma-Tattvam Yuvaanam
Varssisstthaam-Te Vasad Rssigannaih Aavrtam Brahma-Nisstthaih |
Aacaarye[a-I]ndram Kara-Kalita Cin-Mudram-Aananda-Muurtim
Sva-[A]atmaaraamam Mudita-Vadanam Dakssinnaamuurti-Miidde ||1||

ஓம் மௌனவ்யாக்யா ப்ரகடிதபரப்ரஹ்மதத்வம்யுவானம்
வர்ஶிஷ்டாம்தேவஸத்றுஷிகணைராவ்றுதம் ப்ரஹ்மனிஷ்டைஃ |
ஆசார்யேம்த்ரம் கரகலித சின்முத்ரமானம்தமூர்திம்
ஸ்வாத்மராமம் முதிதவதனம் தக்ஷிணாமூர்திமீடே ||

மௌனம் ஒன்றே உலகில் மிகவும் விரிவான பிரசங்கம். மௌனம் ஸர்வார்த்த சாதகம். மௌனத்தில் எதை வேண்டுமானாலும் பெறலாம். மௌனம் ஒன்றே சம்மதத்திற்கு அறிகுறி என்றெல்லாம் சொல்கிறோம். அசையாது கல்லால மரத்தின் அடியில் சர்வஞர்களான ரிஷிகள் உன்னிடம் பெற்ற அந்த ஞானத்திற்கு வார்த்தை எது. மொழி ஏது? அருட்பார்வை ஒன்றே அறிவுக்கனலாக சுடர் விட்டதே. பரப்ரம்மத்திற்கு விளக்கம் சொல்ல  முடியுமா?. மௌனம், அதி மௌனம், ஆழ்ந்த மௌனம். இது ஒன்றே அதீத ஞானம். இதயத்தை தொடுவது மௌனம். வார்த்தைகள்  சுடக்கூடியவை.  சுடும். அதனால் தான் கண்டவர் விண்டிலரா?  தன்னிலே உன்னைக் கொண்ட, கண்ட நிலையா? அந்த சுகம் தாம் ப்ரம்மானந்தமா? நமஸ்காரம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சுவாமி.

2 वटविटपिसमीपेभूमिभागे निषण्णं
सकलमुनिजनानां ज्ञानदातारमारात् ।
त्रिभुवनगुरुमीशं दक्षिणामूर्तिदेवं
जननमरणदुःखच्छेद दक्षं नमामि ॥२॥

Vatta-Vittapi-Samiipe-Bhuumi-Bhaage Nissannnnam
Sakala-Muni-Janaanaam Jnyaana-Daataaram-Aaraat |
Tri-Bhuvana-Gurum-Iisham Dakssinnaamuurti-Devam
Janana-Maranna-Duhkhac-Cheda Dakssam Namaami ||2||

வடவிடபிஸமீபே பூமிபாகே னிஷண்ணம்
ஸகலமுனிஜனானாம் ஜ்ஞானதாதாரமாராத் |
த்ரிபுவனகுருமீஶம் தக்ஷிணாமூர்திதேவம்
ஜனனமரணதுஃகச்சேத தக்ஷம் னமாமி ||

எங்கும் நிசப்தம். காற்றே கூட பய பக்தியோடு மெதுவாக  பவ்யமாக  விடாமல் வீசுகிறது. எங்கும் எதுவும் அமைதியில் மூழ்கியுள்ளது.    எதிரே மிகப் பெரிய ஆலமரம். அதன் இலைகளும் அசையவில்லையே.  அதனால்  தான்  கல்லால மரமோ?  மரத்தின் அடியில் நீ. ஒரு காலை மடக்கி மற்றொரு கால் மீது போட்டுக்கொண்டு  உட்காரும் பழக்கம்  உன்னால் தானா? ஆஹா  அதில் தான் என்ன சுகம்?   நீ ஒருகால், இடது கால்.  தூக்கி ஆடுபவன். அது அழகாக ஆட காரணம் அது ஒரு அழகிய  பெண்ணின் கால்.  ஓஹோ  உன் இடது பாதி  உமாதேவி யல்லவா? அர்த்தனாரீஸ்வரன் தானே நீ. உன்னைத் சுற்றிலும் எண்ணற்ற ரிஷிகள். முனிவர்கள். ஞானம் தேடி வந்தவர்கள்.  உன்னை  விட்டால் வேறு எங்கே கிடைக்கும் அது?  திரிலோக குரு அல்லவா நீ,   தென் திசை   நோக்கி அமர்ந்ததால் தானே உன் பெயர்  தக்ஷிணா மூர்த்தி. பிறப்பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகா உன்னை நமஸ்கரிக்கிறேன்..

3. चित्रं वटतरोर्मूले वृद्धाः शिष्या गुरुर्युवा ।
गुरोस्तु मौनं व्याख्यानं शिष्यास्तुच्छिन्नसंशयाः ॥३॥

Citram Vatta-Taror-Muule Vrddhaah Shissyaa Gurur-Yuvaa |
Guros-Tu Maunam Vyaakhyaanam Shissyaas-Tuc-Chinna-Samshayaah ||3||

சித்ரம் வடதரோர்மூலே வ்றுத்தாஃ ஶிஷ்யாஃ குருர்யுவா |
குரோஸ்து மௌனவ்யாக்யானம் ஶிஷ்யாஸ்துச்சின்னஸம்ஶயாஃ ||

ஆஹா!   என்ன அபூர்வ காட்சி இது. கண் இமைக்க  மறந்து போய் விட்டதே!  ஆலமர வேர்கள் திண்டு திண்டாக  மலைப்பாம்பு போல்  பெரிதாக மேடை அமைத்திருக்கிறதே. அதன் மேல் கீழ் வேர் கட்டைகளில் உன் ''சிஷ்ய பிள்ளைகள்'' அதாவது மஹா  பெரிய ரிஷிகள், முனீஸ்வரர்கள், ஞானிகள். எல்லாருமே வெண் தாடி வேந்தர்கள். அவர்களோடு பார்க்கும்போது நீ இளையவன். ஆனால் கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் மூத்தோன்,  முந்தையவன். தாய் தந்தை அற்ற,  தான் தோன்றி. ஸ்வயம்பு.  சம்பு .மஹா தேவன்.வயதற்ற வயதானவன்.

குருவே,  நீ பேசவில்லை. சிஷ்யர்கள் நெஞ்சிலே தான்  புகுந்து விட்டாயே . உன் ஆத்மா அவர்கள் ஆத்மாவோடு இணைந்து விட்டது. மெஷின் வேலை செய்ய துவங்கி விட்டதே.....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...