Saturday, February 12, 2022

SWAMI VIVEKANANDA

 


எத்தனை வருஷம் ஓடிவிட்டது.....!!    நங்கநல்லூர்   J K SIVAN

இன்றோ நேற்றோ அல்ல, 137 வருஷம் ஓடி விட்டது.  ஆனால்   அன்று நடந்தது இன்று கண் முன் நிற்கிறது.

1885ம் வருஷம். ராமகிருஷ்ண பரம ஹம்சர் தனது அந்திம  காலத்தில்  காசிபூர் தோட்டத்தில் இருந்தார். அவருக்கு துணையாக இருந்தது  நரேந்திரனும், மற்ற சில பக்தர்களும். நரேந்திரனின் ஆன்மீக கல்வி தொடர்ந்தது.   காசிப்பூரில் தான் நரேந்திரனுக்கு நிர்விகல்ப சமாதி சித்தி ஆயிற்று.   ராமகிருஷ்ண பரம ஹம்சர் அவருக்கும் மற்ற  சில  சீடர்களுக்கும்  காவி உடை அளித்து  சன்யாசம் தந்தார்.  ஜனசேவை தான் ஜனார்த்தன சேவை , மக்கள் சேவையே மஹேஸ்வர சேவை என  போதித்தார்.   இனி  நரேந்திரன்  உலகம் என்று மறக்க முடியாத  விவேகானந்தர்.   

'' விவேகானந்தா,  மற்ற சன்யாசிகளை  இனி ரக்ஷிக்க வேண்டிய பொறுப்பு உனது'' ஆசிர்வதித்தார்  குரு.  மற்ற  சீடர்களும்  விவேகானந்தரை குருவாக ஏற்றனர். .

ராமகிருஷ்ணர் மறைவதற்கு  ரெண்டு நாள் முன்பு,  விவேகானந்தர் அவரது  படுக்கை தலைமாட்டில்  நிற்கிறார்.  என்னவோ  தெரியவில்லை ஒரு எண்ணம்  மனதில்  தோன்றியது.  '
'இந்த மனிதர் கடவுளின் அவதாரமா?''  
விடை  தெரியாமல்  ராமகிருஷ்ணரையே  வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
குருவின்  உதடுகள் மெல்ல அசைந்தன.  சிறிதாக குரல் ஒலித்தது  
"முன்பு  யார்  ராமனாகவும் கிருஷ்ணனாகவும் பிறந்தவனோ, அவனே  இப்போது ராமகிருஷ்ணன் எனும் உடலில் வாழ்கிறான்'' .
மெதுவாக  குரு  முணுமுணுத்த  சொல்  விவேகானந்தர் செவியில்  கணீரென்று  ஆழமாக  உள்ளே  நுழைந்தது. 
1886  ஆகஸ்ட் 16 அன்று விடியற்காலையில்  காசிப்பூரில் ராமகிருஷ்ணர்  தேக வியோகம் அடைந்தார். கங்கைக்கரையில் உடல் தஹனம் செய்யப்பட்டு ஒருவாரம் ஆகியது.  காளி கோவில்  வெளியே  விவேகானந்தர்  தக்ஷிணேஸ்வரத்தில் தனியாக நடந்து கொண்டிருந்தார். எதிரே  ஒரு ஒளி வட்டம். அதில்  யாரோ நிற்பது தெரிந்தது. 
''ஆஹா  குரு ராமகிருஷ்ணர் முகம் நன்றாக தெரிகிறதே''.
 ஒரு பழைய  சம்பவம் நினைவில்  திரையிட்டது.
++
ப்ரம்ம  சமாஜ கோட்பாடுகளால்  மனம்  ஈடுபட்டிருந்த சமயம்  என்பதால்  விக்ரஹ  ஆராதனை,  இறை வழி பாட்டை  நரேந்திரனால்  ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா? கற்பனையா?   ராமகிருஷ்ணரை  அடைந்த பிறகு தான்  உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை    நரேந்திரனுக்கு   ராமகிருஷ்ணர்  உணர்த்தினார். ராமகிருஷ்ணரின் நட்பு   ஈர்ப்புக்குப்  பிறகு ,  பிற்காலத்தில்  விவேகானந்தராகி , பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆரம்பத்தில்  குடும்ப கஷ்டம் ஏழ்மை,  பணம் தேவை. அதற்கு ஏதாவது ஒரு வேலை தேட வேண்டும். எங்கே கிடைக்கும்?   -- இதுவே  நரேந்திரன் மனதை அரித்துக்கொண்டிருந்தது. யாரிடம் கேட்பது?. எவர் உதவுவார்?.  இந்த நிலையில் தான் ராமகிருஷ்ணரைச்  சந்தித்தான்.  அவரது அன்பு, பாசம், எளிமை, உண்மையான ஸ்வபாவம்  கொஞ்சம் கொஞ்சமாக அவனை  காந்தம் போல்  பிடித்துக் கொண்டது.   அவரைப்  பிடிக்க ஆரம்பித்தது.
ராமக்ரிஷ்ணருக்கு நரேந்திரன் மனக் கவலை புரிந்தது.  அவனைக் கூப்பிட்டார்.
 ‘நரேன், இன்று செவ்வாய்க் கிழமை. அன்னையிடம் எது வேண்டினாலும் அவள் அள்ளித் தருவாள். நீயே சென்று அவளிடம் உன் தேவையைக்  கேள். கொடுப்பாள் ''.

அன்று மாலை நரேன் காளிகோயில் சென்று   பவதாரிணியை வணங்கினான். திரும்பி வந்தான் .
''அன்னை என்ன சொன்னாள்?’ ‘
''ஓ.. நான் அவளிடம் எதையும்  கேட்க மறந்து விட்டேன்’ ''
''கேட்க மறந்து விட்டாயா ?   சரி  இப்போது  உடனே போ. சீக்கிரம்’
இம்முறையும் நரேன் காளியை எதுவும் கேட்க  மறந்தான்.
மூன்றாம் முறை நரேன் மிகவும் அமைதியான முகத்துடன் திரும்பி வந்து ராமக்ரிஷ்ணரிடம் நின்றான்.
''என்ன?''.
‘நான் எவ்வாறு அன்னையிடம்  எனக்கு பணம் வேண்டும் என்று கேட்பேன்? அது மிகப் பெரிய பேரரசன் ஒருவனிடம் சென்று பூசணிக்காயைப்  போய்  யாசிப்பது போலல்லவா ஆகிவிடும்''.
''ஓஹோ   பின் என்ன தான் கேட்டாய் ??'
''பக்தி, சுயநலமற்ற அன்பு,  உன்னைப்  புரிந்து கொள்ளும் ஆற்றல்-  இதைக்  கொடு ''  என்று  தான்  அவளிடம் என்னால்  பிரார்த்திக்க முடிந்தது’ '

'''அது தான் சரி.....நரேன்,  உன்  குடும்பம்  இனிமேல்   அடிப்படைத் தேவைகளுக்காக ஒருபோதும் வாடாது.  என் மனதில் பட்டதை சொன்னேன். நீ வேண்டுமானால்  பார்.''

நரேந்திரன்   விவேகானந்தராக செய்ய வேண்டிய  வேலை நிறைய  காளி மாதா வைத்திருந்த போது அவன் வேறு எவரிடமோ கைகட்டி  வேலை தேட விடுவாளா?  அவன்  எங்கும்  வேலை தேட வில்லை..

அன்று இரவு நரேனுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அன்னையைப் பற்றிய அற்புதமான பாடலொன்றைக் கற்பித்தார். அன்றிரவு முழுவதும் நரேன் அப்பாடலைப் பாடிக் கொண்டிருக்க, ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆழ்ந்த பரவசத்திலிருந்தார்.
அவதார காரியம் தொடங்கி விட்டது. அருள் புனலுக்கு  அறிவுக்கனல் கிடைத்துவிட்டது.
++  
நான்கு ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றிய விவேகானந்தர் இந்தியர்களின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை  அறிந்தார்.  மக்களின் அடிப்படை  வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக  வறுமையில்  வாடி  இருந்ததைக்கண்டு  வருந்தினார். இந்தியர் ஆங்கிலேய ரிடம் அடிமைப் படிருந்த காலம்.  பயண முடிவில் 24 டிசம்பர் 1892-ல் கன்னியாகுமரி சென்றவர்  கடல் நடுவில்  ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார்.

''அந்த மூன்று நாட்களும்  நமது தேசத்தின்   கடந்த,  நிகழ், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்தேன்''  என  அவர்  சொல்கிறார்.

விவேகானந்தர் பாறையை  லக்ஷக்கணக்கான இந்தியர்கள்  இன்றும் சென்று காண்கிறார்கள்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்ததும்  அமெரிக்காவின் 1893-ம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்ததை ஏற்று அமெரிக்கா சென்று,  சிகாகோவில்  உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள்  உலக பிரசித்தம். சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி  வேதாந்த கருத்து களை பரப்பினார்.  மேலை நாடுகள் இந்தியாவை ஆர்வமாக திரும்பிப்  பார்த்தன.  நியூயார்க், லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியதும்  கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய உரைகள்  எல்லோரையும் விழிப்புறச் செய்தது.  கல்கத்தாவில் இராமகிருஷ்ண மிஷன், தக்ஷிணேஸ்வரில் மடம் உருவானது. 
ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை  ரெண்டு  வருஷ காலம் மீண்டும் வெளிநாட்டு பயணம்.

ஒரு சமயம் லண்டனில்   நண்பர்  ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கினார். அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.  பண்ணை  மைதானத்தில்  விவேகானந்தர் வாக்கிங் சென்றார். அவரோடு நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து கொண்டிருந்தனர். திடீரென்று  ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து ஓடி வந்தது. பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார். மனைவியைத்  தூக்க  நண்பர் முயன்றார்.  ஆனால் மாடு அவர்களை  நெருங்கி விட்டது.  சில நொடிகளில்  மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என உணர்ந்த நண்பர், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர்  அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.பாய்ந்து  வந்த  மாடு, கீழே  விழுந்து  கிடந்த  நண்பரின் மனைவியையும்  விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.  உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடியவரை மாடும் விடாமல் துரத்தியது.  நல்லவேளை,  ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதற்குள்  பண்ணை ஆட்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். ''அப்பாடா''  என்று  நண்பர்  திரும்பி வந்தார். ஒரே ஆச்சரியம் அவருக்கு.  அவர் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

”கொஞ்சமும்  பயமே இல்லாமல் அந்த ஆபத்தான  வேளையிலும்  எப்படி  உறுதியாக  அசையாமல் உங்களால்  நிற்க முடிந்தது?”

”நான் வித்தியாசமாக எதுவும் செய்ய வில்லையே  வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற  மன உறுதியுடன் நின்றேன்.  ஓடுபவரைக்  கண்டால்  துரத்துவது மிருகங்களுக்கு உரிய குணம்.  மாடு அதனால் என்னை விட்டு விட்டு, ஓடிய உங்களைத் துரத்தியது,” என்றார் விவேகானந்தர்.
 அவரது  மன உறுதியை கண்டு  பெரிதும் வியந்தார் ஆங்கிலேய நண்பர்.
வாழ்வில்  நம்மை  எல்லோரும்  ஏன்  ஓட ஓட  விரட்டுகிறார்கள் என்று புரிகிறதா?  எதிர்க்க நமக்கு திட மனது இல்லை, பயம்  நம்மை ஆட்கொண்டுவிடுகிறது.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...