Thursday, February 27, 2020

THIRUMOOLAR



திருமந்திரம்   J K  SIVAN 

திருமூலர்                                  
                                                                                     
                                             தத்துவத் தமிழ்

அவ்வப்போது,   திருமூலர்  கண்ணில் படுவார்.  அற்புத சித்தர். ஆழ்ந்த சிந்தனையாளர். அருமைத்  தமிழ். அழகிய  சந்தம்.  ஆனந்தமான தெளிவான உபதேசம்.  அதனால் தான் திருமூலர்  இன்னும்  கோடிக்கணக்கான தமிழ் இதயங்களில் குடி கொண்டிருக்கிறார். வருஷம் ஒன்றா இரண்டா  அவரே  மூவாயிரம் வருஷம் இருந்தவர். அவர் இருந்த காலமோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்போதோ?  ஆனாள்  ஒரு போட்டோ கூட இல்லாமல் எப்படி அவரால் இத்தனை தமிழ் நெஞ்சங்களை கட்டிப்போட முடிகிறது என்றால் அங்கே தான் மேலே சொன்ன  அற்புத தமிழ்.


இன்று நான் படித்ததில் ஒரு நான்கு மட்டும் சொல்கிறேன்.

கூகையும்  பாம்பும் கிளியோடு பூனையும் 
நாகையும் பூழு நடுவி லுறைபவன் 
நாகையைக்  கூகை நணுக லுறுதலும் 
கூகையைக்  கண்டெலி  கூப்பிடுமாறே''

ஒன்றுக்கொன்று ஒவ்வாத  சேர்ந்து இருக்கமுடியாத ஜீவன்கள் இந்த பூமியில் வாழ்கின்றன. எல்லாம் இறைவன் சித்தம்.  உதாரணமாக  ஒரு கோட்டானும், அதை விழுங்கும்  பாம்பும்,  அழகிய  பச்சைக் கிளியும்  அதை கொல்லும்  பூனையும், நாகணவாய் பறவையும்,  காடையும் ஒன்றால் ஒன்று பாதிக்காமல் மொத்தத்தில் உயிர் வாழ்கின்றன.    இது உதாரணம்.  நம் உடல் எனும் உலகத்தில் எத்தனை இப்படி ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக வாழ்கின்றன.  அறியாமை என்பது கோட்டான் என்றால், காமம் என்பது ஒரு பாம்பு.  தர்மம் சாத்வீகம்  கிளி என்றால்,  அதர்மம்  என்பது பூனை.   அதிகம் வளராத, சிற்றறிவுதான்  நம்மில் நாகணவாய் பறவை. அதை அறியாமை எனும் கோட்டான்  அணுகும்.  அந்த நேரத்தில் தான் அறியாமையாகிய  கோட்டானை, ஞானம் ஆகிய  எலி  ஓங்கார நாதமாகிய ஒலியை  எழுப்பி, சிற்றறிவை  சிதறாமல்   பாதுகாக்கும். 

அர்த்தம் புரியவில்லை என்றால் இப்போதைக்கு விட்டுவிடுங்கள். பிறகு கொஞ்சம் நிதானமாக  படியுங்கள் சிந்தியுங்கள். தானாகவே புரியும். 

''காடு புக்காரினி  காணார் கடுவெளி
 கூடு புக்கானது ஐந்து குதிரையும்
 மூடு புக்கானது ஆறு உள ஒட்டகம் 
 மூடு புகாவிடின்   மூவணையாமே''

 அஞ்ஞான இருளில் மூழ்கி, அறியாமையில் தவிப்போர் திக்கு தெரியாத காட்டில் உள்ளவர்கள். அவர்கள் அதிலே உழல்கின்றபோது எப்படி பரவெளியான  ஞான ஜோதியை காண்பார்கள். ஞான ஒளி எங்கே தெரியப்போகிறது/  இந்த  உடல் எனும் கூண்டு வண்டியை ஐந்து குதிரைகள் திசைக்கு ஒன்றாக இழுத்து செல்கிறது. இந்த ஐந்து குதிரைகள் நம் ஐம்புலன்கள்.  அவற்றின் வசம்  சிக்கி அங்குமிங்கும்  அலைகிறோம். இழுத்துச் செல்லப்படுகிறோம். இந்த உடலைசூழ்ந்துகொண்டிருக்கிற  மனம் எனும்  கூடாரத்தில்  ஏற்கனவே ஆறு ஒட்டகங்கள் உள்ளே தலை நீட்டி வந்துவிட்டன.  காம, க்ரோதம், மோகம், மதம், மாற்சர்யம், அகம்பாவம்  இவை தான் ஆறு  ஒட்டகங்கள். இவை வசம் அந்த மனம் மாட்டிக்கொண்டு தவிக்கிறது.  மனமேனும்  கூடாரத்தாய்  ஆறு ஒட்டகங்கள் புகாமல் திரை போட்டு மறைப்பது தான்  துரீய ஸக்தி . ஞானம் த்யானம் ஒன்றே அதை பெற்று தரும். 

''அண்டங்கள் ஏழும்,  அகண்டமும்  ஆவியும் 
கொண்ட சராசர  முற்றும்  குணங்களும் 
பண்டை மறையும் படைத்து அளிப்பு ஆதியும் 
கண்ட சிவனும்  என்கண் அன்றி இல்லையே ''

கீழே ஏழு உலகம், மேலே  ஏழுலகம்,  பதினான்கு உலகங்கள் என்று சொல்வார்கள்.  ஆகாசம் எனும் எல்லையற்ற பெருவெளியும், உயிர்கள் அனைத்தும்  ஆவி என்று அழைக்கப்டுகின்றனவே அவையும்,  இதெல்லாம் கொண்டது தான் சராசரம்.  அதாவது அசைவது அசையாதது எல்லாம் சேர்ந்த வஸ்துக்கள். தாவர ஜங்கமம்   என்பது.  அசைவது எல்லாமே முக்குணங்கள் நிரம்பியது.  தமோ, ரஜோ சத்வ குணங்கள் பொருந்தியது 
வேதங்களின் பிரமாணம் நிறைந்தது இந்த பிரபஞ்சம்.  இதில் இறைவனின் முத்தொழில் விடாமல் தொடர்கிறது. ஆக்கல் , காத்தல், அழித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது. இதை  பொறுப்பாக நடைபெற செய்வது பரமேஸ்வரன் எனும் ஆதி சிவன்.   அவன் என்னிடமும் உள்ளான் என்பதில் எத்தனை பெருமைப் பட வேண்டும், சிவன் என்னுள் இருக்கிறான் என்று ஆடுகிறார்  திருமூலர்.

''பெண் அல்ல ஆண் அல்ல  பேடு அல்ல மூடத்துள் 
உள்  நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஓணாக் 
கண் இன்றி காணும் செவி  இன்றி கேட்டிடும் 
அண்ணல் பெருமையை ஆய்ந்து மூப்பே ''

இந்த பாடல் கருத்தினை  ஆழ்வார் முதலில் எழுதினாரா  திருமூலரா என்றால் நிச்சயம்  திருமூலர் தான் சந்தேகத்துக்கு இடமில்லாமல். திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர் எத்தனையோ நூற்றாண்டுகள் முன் மறைந்தவர்  எனும்போது பழமை இங்கே தான் ஜொலிக்கிறது.

கடவுள் என்பவன்  ஒரு ஆண் உருவம் கொண்டவனோ, பெண் உருவம் கொண்டவளோ  அல்ல . இரண்டும் கெட்டானும்  இல்லை. எந்த வித்தியாசமும் அற்றவன்.  நமக்கு உள்ளே நிறைந்து நின்று ஒளி வீசும் அவனை  நமது மனதை மறைக்கும்  பஞ்ச கோஸங்கள் எனும் திரைகள் மறைத்துவிடுவதால் உள்ளிருந்து வீசும் ஒளி நமக்கு வெளியே  புலப்படுவதில்லை.  உள்நின்று ஒளிரும் அவனை உணர்ந்துவிட்டால்  உடலில் முகத்தில் ஒரு தனி ஒளி வீசும். அவனை உணர அனுபவிக்க  சாதாரண வஸ்துக்களை காட்டும் கண் வேண்டாம்.  அகக்கண்  மூலம் ஆனந்தமாக காணலாம்   உலக சமாச்சாரங்கள் கேட்டு மகிழும் செவிகள் இல்லாமலேயே அவன் நர்த்தனம், தாண்டவம் காதில் ஒலிக்கும்.  ஆஹா  அந்த பரமேஸ்வரன் புகழை எவன் நன்றாக உணர்ந்து அனுபவிக்கிறானோ அவனே  முதிர்ந்த ப்ரம்ம ஞானி.

  









No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...