Sunday, February 23, 2020

RAMANA MAHARSHI



               மஹரிஷியின் அந்திம  நேரம்......  2
                                   J K  SIVAN 



நாட்கள் நகர்ந்தன. ஒருநாள்  குளியலறை செல்ல மெதுவாக நடக்கிறார்.  உள்ளே நுழையும் முன்பு  கால் தடுமாறுகிறது. விழுகிறார்.  இடுப்பு, கால்களில் பலத்த அடி . துளியும் லக்ஷியம் செய்யாமல்  யார் உதவியும் தேடாமல் தானே  மெதுவாக எழுகிறார். நிற்கிறார்.  உடலில் ஆடையெல்லாம் சிகப்பாக ரத்த வெள்ளம்.  எலும்பு முறிந்துவிட்டது.  அவரிடம் எந்த  பாதிப்பும் இல்லை.  கொஞ்சமும் சத்தமே இல்லை. 
செயதி பரவியது.  அவர் விழுந்ததை எலும்பு முறிவை பிரகடனப்படுத்தவேண்டாம் என்று சொல்லிவிட்டார்.   விழுந்ததால்,  எலும்பு முறிவால் உண்டான வலியையும், ஏற்கனவே பலமுறை ஆபரேஷன் செயது வலிக்கும் புற்று நோய் கட்டியால் உண்டாகும் வலியையும்,   கொஞ்சமும் பொருட்படுத்தாமல் எல்லோருக்கும்  விடிகாலையிலிருந்தே  தரிசனம் கொடுக்கிறார்.   யாருக்கும் நடந்ததே தெரியாதபடி அவரிடம் எந்த வித்தியாசமும் இல்லை. 

இப்போதெல்லாம் அவரால்  படிகள் ஏறி நடக்கமுடியவில்லை.  தினமும்  கிழக்கு வாசல் வழியாக வருவது இப்போது முடியவில்லை. அங்கே  கொஞ்சம் படிகள் உண்டு. எனவே வடக்கு வாசல் வழியாக  மண்டபம்  வாருங்கள் என்று சொல்கிறார்கள்.  

''அதெல்லாம் வேண்டாம். வடக்கு வாசல் பெண்  பக்தர்கள்  உபயோகிக்கும் பிரத்யேக வழி. அதையெல்லாம் மாற்றவேண்டாம்.   தரிசன மண்டபம் வரமுடியாத போது  கிழக்கு வாசல் அருகே இருக்கும்  தன்னுடைய  சிறிய அறையில்  இருப்பார்.  அதை தான்  'நிர்வாண  அறை''  என்கிறார்கள்.  அங்கே தான் மகரிஷி தேக வியோகம் அடைந்தார். இன்றும் ரமணாஸ்ரமத்தில் அந்த அறையை பார்க்கும்போது  என்னை அறியாமல் கண்களில் நீர் வடிகிறது. 

காலம்  யாருக்கும் காத்திருக்க வில்லை. 1950ம் வருஷம்  ஏப்ரல் மாதம் ஆரம்பத்திலேயே  இனி பகவான் ரமண மகரிஷி அதிக காலம்  உடலில் காட்சி தரப்போவதில்லை என்று ஊர்ஜிதமாகி விட்டது.    ஆனால்  அவரோ தொடர்ந்து வழக்கம் போல  தரிசன மண்டபம் மெதுவாக வந்து கஷ்டப்பட்டு சாய்வு நாற்காலி சோபாவில் உட்காருவார்.  நமது அருமை குரு இன்னும் அதிக காலம் நமக்கு கிடைக்க மாட்டார் என்று பக்தர்கள் அறிந்து வாடினார்கள். கூட்டம் கூட்டமாக அவரது தரிசனம் பெற ஓடி வந்தார்கள். அவர் உடல்  கொஞ்சம் கொஞ்சமாக மரணித்துக் கொண்டிருந்தாலும்  அவர் உடலில் ஒரு அபூர்வ ஒளி வீசியது.  அவரது சிரமத்தை பார்த்து  யாராவது கண்ணீர் விட்டால்  அவர்  பொறுக்க மாட்டார். 

''ஏன் நான் இறப்பதை பற்றி  உங்களுக்கு வருத்தம்.  நான் எங்கே போய்விட்டேன்? எங்குமே போகவில்லையே.  எங்கே போவேன் நான்?  எப்போதும் இங்கேயே தான் இருக்கிறேன்'' என்று சமாதானம் சொல்வார்.

1950  ஏப்ரல்  10   -   அதிகமான பக்தர்கள் கூட்டம் பெருகியது.   இப்படி தரிசனம் தருவது மகரிஷிக்கு  ரொம்ப கடினம், கஷ்டம் தான்.  உடல் ரீதியாக கொஞ்சம் கூட முடியவில்லை.  என்றாலும்  அளவற்ற இரக்கம் கருணை கொண்டவர் என்பதால்  முடியாத போதும்  முகத்தை பக்தர்கள் பக்கமே,   தரிசன நேரம் முழுதும்,   திருப்பி வைத்துக் கொள்வார். அதில் அவர்  அனுபவிக்கும் எந்த  உபாதையின் அடையாளமும் தெரியாது. அவரது  ஆசனம் கிழக்கு மேற்காக .  அந்த சின்ன அறையின் வாசல் தெற்கு பக்கம்.   அறையின் கதவு திறந்திருக்கும். அந்த பக்கத்தை  நோக்கியே  ஒருமணி நேரத்துக்கும்  மேலாக  அசையாமல்  முகத்தை திருப்பி வைத்துக் கொண்டு தரிசனம் தருவார். அதனால் கழுத்து வலி உண்டாகும். அவர் அதை லக்ஷியம் பண்ணுவதில்லை.  அவரது உடல் நிலைக்கு இதெல்லாம் ரொம்ப சித்ரவதை தான்.  அவர் தான் எதையுமே பொருட்படுத்து வதில்லையே.  தரிசனம் கொடுப்பதை நிறுத்தவில்லை. நேரத்தையும் குறைத்துக் கொள்ளவில்லை. 
கொஞ்சம்  பழச்சாறு,  இளநீர் க்ளுகோஸ் கலந்து, தக்காளி சாறு மட்டுமே கொடுத்து வந்தார்கள். 

1950  ஏப்ரல் 12   தனது சோபாவில்  sofa  முழு நீளமாக படுத்திருந்தார். குழி விழுந்த கண்கள்.  தொங்கிய கன்னங்கள், வெளிறிய முகம்,  ஒளி குன்றிய தேகம் ....  அவரது சக்தி குறைந்து கொண்டே வருவதை உணர்த்தியது.  தீபம்  அணையப்போகிறது . சுடர் பிரகாசம் இன்னும்  அடங்கவில்லை.  

மூன்று பக்தர்கள் கால்களை அமுக்கி விட்டார்கள்.  இடுப்புக்கு மேல் வலி ஜாஸ்தியாக இருக்கும் என்று
அவர்கள் அறிந்து அதை தொடுவதில்லை. அவரும் ஒன்றும் சொல்வதில்லை.  காலை ஒன்பது மணிக்கு   அரைமணி நேர தரிசனம் கொடுத்து வந்தார்.   சில சமயம் மட்டுமே  முகத்தை  தெற்கு பக்கம் வலியோடு திருப்ப முடிந்தது.  அவரது நினைவு அடிக்கடி தப்பியது.  டாக்டர்கள் பக்தர்களை அங்கிருந்து விலக்கினார்கள்  அவரை மேற்கொண்டு  மருத்துவ  சோதனைகளுக்கு ஆளாக்க வில்லை. 

உடல் கொஞ்சம் கொஞ்சமாக பயனற்றதாக  நிலைமை மோசமாகியது.  சாறுகள் நீர் கூட இப்போது உள்ளே செல்லவில்லை.  மலஜலம் நின்றுவிட்டது.  நாடி ரொம்ப ரொம்ப தளர்ந்து விட்டது. ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது.  இதயம் துவண்டது.  ஜுரம்  அதிகமாகியது.  விக்கல் அதிகரித்தது.  

சாயங்காலம் மகரிஷி  ''காலம்பற ரொம்ப பேர்  வரிசையாக காத்திருந்தார்களா?'' என்று கேட்டார். அவர் கவனம் அப்போதும் பக்தர்கள் மேல் தான். 

''இல்லை குருநாதா, நாங்கள் தரிசனத்தை நிறுத்திவிட்டோம்''

''பக்தர்கள் தரிசனம் காண வந்தபோது தடுத்தால்  நான் இனி ஒரு துளி ஜலமும் பருகமாட்டேன்'' என்று ஆணையிட்டார்..


தொடரும்   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...