Thursday, February 13, 2020

LALITHA SAHASRANAMAM




ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - .(801-820)   - J.K. SIVAN


களானிதிஃ, காவ்யகளா, ரஸஜ்ஞா, ரஸஶேவதிஃ
புஷ்டா, புராதனா, பூஜ்யா, புஷ்கரா, புஷ்கரேக்ஷணா || 152 ||

பரஞ்ஜ்யோதி: பரந்தாம  பரமாணு: பராத்பரா |
பாஶஹஸ்தா  பாஶஹந்த்ரீ  பரமந்த்ர விபேதினீ || 153 ||

மூர்தா,‌உமூர்தா,‌உனித்யத்றுப்தா, முனி மானஸ ஹம்ஸிகா |
ஸத்யவ்ரதா, ஸத்யரூபா, ஸர்வாம்தர்யாமினீ, ஸதீ || 154 ||

                                       
   லலிதா ஸஹஸ்ரநாமம் - (801- 820 ) அர்த்தம்

*801*  புஷ்டா,   पुष्टा  வலிமையான  ஆரோக்ய  சரீரத்துடன் இருப்பதை புஷ்டியாக இருப்பது என்று சொல்கிறோம்.  அம்பாளின் ஆரோக்யம் அவளது உடல் 36 தத்துவங்களால் உண்டானது என்பது ஒரு காரணம். அவளுக்கு தனியாக சத்துணவு  .தேவையில்லையே.  இந்த பிரபஞ்சமே அவளால் தான், அவளுடைய  36 தத்துவங்களால் தான்  ஆரோக்கியமாக   இருக்கிறது.  அவளது ஆரோய்க்கியமே  பக்தர்களின் அன்பாலும் நேசத்தாலும் சிறக்கிறது .

*802* புராதனா, पुरातना      பழங்கால, பழமையான ஒன்று என்று  அம்பாளின் இந்த நாமம் குறிக்கிறது.  பிரபஞ்ச சிருஷ்டியில்  முதலில் தோன்றியவற்றில்   ஒருவள் அம்பாள்.    

*803* பூஜ்யா, पूज्या (803):   வழிபடுத்தற்குரிய என்று பொருள்.  நிறைந்தவள்.  அம்பாள் முழுமையாக  எல்லாம் தன்னுள் நிறைந்தவள். எல்லாமே அவள் தான். ஆக்க சக்திகள் அளிப்பவள்.  பிரபஞ்ச சக்தியே அவளானவள் . எல்லா ஜீவன்களையும் அன்போடு நேசிப்பது சர்வ சக்தியை அளிப்பது. அம்பாள்  பிரபஞ்சத்தின் தாய். அவளுடைய பாசத்துக்கு  இணையேது. 

*804* புஷ்கரா, पुष्करा   பக்தர்களுக்கு  புஷ்டியை அளிப்பவள் புஷ்கரா. புஷ்களம் என்று மஹா மேரு சிகரத்தை  சொல்வதுண்டு.  சிவனோடு சம்பந்தப்பட்டது. அம்பாள் அங்கே வாசம் செய்பவள். 

*805* புஷ்கரேக்ஷணா   पुष्करेक्षणा    புஷ்கர் என்ற வார்த்தைக்கு இன்னும் பல அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று  தாமரை போன்ற கண் பெற்றவள்  நீலத்தாமரை, ஆகாசம், விண் , பூமி,  யானை தும்பிக்கையின் நுனி.    பிரளயத்தின்   போது உண்டாகும் அபரிமிதமான  ஜலம்  போன்றவையும் கூட புஷ்கர் தான்.   முழு நிலா, திங்கள், செவ்வாய், சனி இரவுகளில் தோன்றினால்  அந்த இரவுகளும் கூட புஷ்கர் தான்.  நாட்டியம், போதைக்கும் கூட  அதே பெயர்.   சிவனுக்கும்  புஷ்கரன் என்று பெயர் உண்டு.  எந்த சந்தர்ப்பத்தில் உபயோகப்படுகிறதோ அதற்கேற்றாற் போல பொருள் கொள்ளவேண்டிய  வார்த்தை. .

*806* பரம்ஜ்யோதி परंज्योतिः   ''பர '' என்றால்  மிக  உயர்ந்த  என்று அர்த்தம்.   ஜோதி என்றால் ஒளிமயம்.  உன்னதமான சிறந்த ஒளி தான்  பரஞ்சோதி .  பிரம்மத்தின்  வெளிப்பாடு.  இதிலிருந்து தான் கொஞ்சம் ஒளி பெற்று சூரியன் உலகை ஒளிமயமாக்குகிறான்.  

*807* பரந்தாம   परंधाम (807)    பரமம்+ தாமம்  இரண்டும் சேர்ந்த சொல்.  பரம  என்றால்  அதி உன்னத, மிக உயர்ந்த,  தாமம்  என்றால்  தேஜஸ்,  அறிவு  சிறந்த  ஞானம்.  ஆகவே  பரந்தாமம்  என்பது  உயர்ந்த ஞானம் கொண்ட அம்பாளுக்கு சிறப்பான பெயராக அமைந்துள்ளது.  கிருஷ்ணனுக்கு அதனால் தான் பரந்தாமன் என்று நாமம்.  ஞான  ஒளி வீசுபவள், ஞானச்சுடர் அம்பாள். 

*808* பரமாணு  परमाणुः    அணுவை சதகூறிட்ட  கூறிலும்  உள்ளவள்  அம்பாள்.   இதை தான் கடோபநிஷத் (I.ii.20)  அணோ ரணீயம்   என்று அற்புதமாக சொல்கிறது.   அணு  என்றால் மந்திரம் என்று ஒரு அர்த்தம்.  

*809* , பராத்பரா   परात्परा      ஏற்கனவே சொன்னது போல்  பரா  என்றால் மிக உன்னதமான, மிகச்சிறந்த என்று அர்த்தம்.  உன்னதத்திலும் அதி உன்னதம் தான் பராத்பரா.  அதைக்காட்டிலும் உயர்ந்தது சிறந்தது எதுவும் இல்லை. சாதாரண மனிதனால் சிந்தித்து கூட பார்க்கமுடியாத நிலை. விவரிக்கமுடியாதது.  அதிநுட்பமானது.  குண்டலினியை  விட நுண்ணியது.  லலிதா த்ரிசதி 236 வது  நாமம்   அவளை சமானாதிக வர்ஜிதா  என்கிறது. அதாவது  எண்ணிப்பார்க்கமுடியாத ப  ஒப்பிலாதவள்.  இணை கூற முடியாதவள்  . மாணிக்கவாசகர் கூறுவாரே '' ஓப்பிலா மணியே''  என்று,   அது போல.

*810* பாஶஹஸ்தா, पाश हस्ता     அம்பாள் கையில்  பாசக்கயிறு கொண்டவள்.  ஆத்மாவை  கட்டிப்போடும்  கயிறு. கர்ம பந்தங்களி லின் பலனில்  சிக்கி மூழ்கி  தவிக்கும் ஆத்மாவை  தூக்கி விடுவிக்கும் பாசக்கயிறு

*811* பாஶஹந்த்ரீ, पाश हन्त्री   பாசத்தை இருப்பவள் அம்பாள்.  பாசம் என்றால்  பந்தம், உலக  வஸ்துகள் மேல் இச்சை, விருப்பம், ஆசை,  நாட்டம்,  அதையெல்லாம் விலகச்செய்பவள் .  சிவனை அடைவதற்கு  இதெல்லாம்  இடையூறுகள்.  அம்பாள் அதெல்லாம் விலக்குபவள்.
*812* பரமந்த்ர விபேதினீ  परमन्त्र-विभेदिनी  -    சமஸ்க்ரிதத்தில்    ''பர''  என்பதற்கும்  'பரா'' என்பதற்கும்  நிறைய  வித்யாசங்கள் உண்டு. ''பர '' என்றால் விரோதத்தை வளர்க்கும்  மந்த்ரங்களை  குறிக்கும்  அர்த்தமும் உண்டு.  . இவற்றிற்கு  ''அரி ''மந்த்ரங்கள்  என பெயர்.  பில்லி  சூன்யம் என்று கெடுதல் செய்யும்  மந்திரவாதிகள் உபயோகிப்பது.  விபேதினி என்றால்  அவற்றை உடைத்து, தகர்த்து எறிபவள் என்று பொருள்.  தீங்கு செய்யும்  தீய  சக்திகளை அழிப்பவள்   ன் அம்பாள். அவற்றிலிருந்து  பக்தர்களை காப்பவள். ''பர''   என்றால் ஏற்கனவே சொன்னபடி  உன்னதமான, பிரதானமான  என்று ஒரு அர்த்தம்.   

*813* மூர்தா,‌मूर्ता     உருவங்கள் கொண்டவள் அம்பாள்.  எத்தனையோ ரூபங்கள். ப்ரஹதாரண்யக உபநிஷத்  (II.iii.1) சொல்வது போல்  ப்ரம்மத்துக்கு ரெண்டு உருவங்கள்.  ஒன்று  பூதாகரமான பெரிது. மற்றது நுண்ணிய சிறியது.   அம்பாள் ப்ரம்ம ஸ்வரூபம்  எப்படிவேண்டுமானாலும்  தோற்றமளிப்பாள் .
*814* அமூர்த்தா, ‌अ-मूर्ता    மேலே  சொன்னதுபோல்  அல்லாமல்  உருவற்றம்  அருவமாகவும் உணரப்படுபவள்.  சிறியது  என்று சொல்வது தவறு. சொல்லவே விவரிக்கவே முடியாத நுண்ணியது.  குண்டலினியை விட துக்கிணி யூண்டு .  அழியாத, எல்லையற்ற எண்ண வொண்ணா  உருவமானவள் என்கிறது  ப்ரஹதாரண்யக உபநிஷத் (II.iii.3)  

*815*  அனித்யத்ருப்தா  अनित्य-तृप्ता   -   அழியும் எல்லாமே  அநித்தியம் எனப்படும். சாஸ்வத மானவை அல்ல.  அம்பாளுக்கு ஒரு தனி குணம். அழிபவற்றை சமர்பித்தாலும்  திருப்தி அடைபவள்.  அவளுக்கு தான் தெரியுமே. அவை அழியக்கூடியவை என்று. இருந்தும் ஏற்பாள்.   அழியும்  அழியா  எல்லாமே  அவளிடமிருந்து  உற்பத்தியாகின்றவை அல்லவா.  அவள் கவனிப்பது  பக்தியை மட்டும். 

*816* முனி மானஸ ஹம்ஸிகா |   मुनि-मानस-हंसिका       பரம ஹம்சர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.   ஹம்சம் என்பது  அன்னத்தை குறித்தாலும்  சிறந்த உயர்ந்த யோகிகள், முனிவர்கள் மனதில் அம்சமாக  அவள் வீற்றிருப்பவள்.  முனிவர்கள் என்றால் மௌனத்தில் ப்ரம்ம ஞானம் பெற்றவர்கள். 

*817* ஸத்யவ்ரதா,  सत्य-व्रता    உண்மை, சத்தியத்தை  மட்டுமே  பேசும் விரதம் கொண்டவர்களுக்கு  அருள்பவள்.  அவளே  சத்திய ஸ்வரூபி அல்லவா.  சத்யம் என்பது  ப்ரம்ம ஞானத்தையும் குறிக்கிறது. 

*818* ஸத்யரூபா, सत्य रूपा      சத்தியத்தின் ஸ்வரூபம்  அம்பாள். சத்யம்  எல்லைக்குட் படாதது.  கடந்த, நிகழ், எதிர் காலங்களை  கடந்தது.  சத்யம்  ஆன்மீகத்துக்கு  சொந்த மானது.  அம்பாள் உண்மை பேசுபவர்களை  விரும்புகிறாள்.  பிரம்மத்துக்கு  சத்  அசத்  இரண்டு தான்  சம்பந்தம்.  சத் தை ஏற்கும்.   அசத்தை ஒதுக்கி விடும். .  

*819* ஸர்வாந்தர்யாமினீ, ī सर्वान्तर्यामिणी )    எல்லாஆத்மாவிலும்   உறைந்து,  உள்  நின்று ஒளிர்பவள்,  நித்தியமானவள் . உள்ளே  நோக்கி மனசை செலுத்தினால் மட்டுமே  தெரிபவள். அறியப்படுபவள்.   நாம்  அவளை எங்கெங் கெல்லாமோ தேடுகிறோம். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைகிறோம்.  

820* ஸதீ  सती     தக்ஷ பிரஜாபதியின் மகளாக பிறந்தவள்.  சிவனின் சங்கல்பத்திலிருந்து உருவானவள்.  தனது தந்தை தக்ஷன் தன் கணவனை யாகத்திற்கு அழைக்காததால்  சதி அவனோடு வாதாடுகிறாள். கோபத்தில்  யாக அக்னியில் கலக்கிறாள் . ''ஸ்ரீமத்  பாகவதம் இதை காட்சியாக்குகிறது: IV.4.15-18). ''நீ  என் கணவன்  பிரபஞ்சமே வணங்கும்  ஸ்ரீ  பரமேஸ்வரனை வெறுக்கிறாய்.  அவன் சொல்  மீறக்கூடாதது.  ''சி வ'' எனும் அக்ஷரங்களை ஒரே  ஒரு தரம் சாதாரணமாக உச்சரித்தாலே  பாபங்கள் விலகும்.  நீ  பாபி. உலகமே  நேசத்தோடு பாசத்தோடு நட்போடு  பழகும் சிவனை நீ விரோதியாக பார்ப்பது அதிசயம்.  எண்ணற்ற ரிஷிகள் முனிகள், தேவாதி தேவர்கள் அவன் தாமரை திருவடிகளை போற்றி பயன்பெறுபவர்கள். ப்ரம்ம ஞானம்  பெற வேண்டுகிறார்கள்.  அவன் அருள் பெற  காலம் காலமாக தவமிருக்கிறார்கள்''  தகாத செயல் புரிந்த உன் மகளாக இனி ஒரு கணமும் உயிரோடு இருக்கமாட்டேன்'' என்று சொல்லிய  சதி  யாகத்தை நிறுத்தி அதன் தீயில் கலக்கி றாள். பிறகு ஹிமவான் புதல்வி உமாவாக  பிறக்கிறாள்''  என்கிறது. 


சக்தி பீடம்          மஹா மாயீ,  அமர்நாத் 

12756 அடி  உயரத்தில்  பனி படர்ந்த  மலையின் குகையில் இருப்பவள்  மகாமாயீ சக்தி.  லக்ஷோப   லக்ஷம் ஹிந்து பக்தர்கள் விரும்பி  கடினமான பயணம் செய்து தரிசிக்கும் அமர்நாத்  ஆலயம்  அமர்நாத் மலை சிகரத்தில்  காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது.  ஐந்தாயிரம் வருஷங்களுக்கும்  முன்னர்  தோன்றிய  ஆலயம். 

தான் தோன்றியாக  பரமேஸ்வரன்   பெரிய லிங்க ஸ்வரூபத்தில்  பனி லிங்கமாக காட்சி அளிக்கும் அதிசயம்.   பனி லிங்கத்தின்  அருகே தான்  மகாமாயீ  சக்தி பீடம். பார்வதி பீடம் என்று பெயர்.  எண்ணற்றோர்  பனிமலையில் நடந்தும்  குதிரைகள் மேல்  ஆரோகணித்தும்  இங்கே  வருகிறார்கள்.  பனியும்  கல்லும் காலுக்கு மெத்தை.   தக்ஷனின் யாகத்தில் தன்னை தீயில் மாய்த்துக் கண்ட  சதியை  கோபத்தோடு அங்கே தோன்றி தன்னை அவமதித்த தக்ஷனை கொன்றுவிட்டு  சதியின்  உடலை சுமந்தவாறு  சிவன்  கோர தாண்டவம் ஆடியபோது  சதியின் உடலின் பல பாகங்கள், அவளது ஆபரணங்கள்  பாரத தேசத்தின் பல பகுதிகளில் விழுந்து அவை சக்தி பீடங்களாக  வழிபடப்பட்டு வருகிறது.  அமர்நாத் மஹா மாயீ பீடம் அப்படி ஒரு சக்தி பீடம். அங்கே தான்  சக்தியின் தொண்டை பகுதி பூமியில்  விழுந்த இடமாம்.  இந்த குகை லிங்கத்தில் முதலில் கண்டவர்  பிருகு முனிவர்.

அமர்நாத் சிகர  மலை குகை  130 அடி  உயரம். குகையின் உச்சியிலிருந்து  சொட்டும் நீர்  பனியாக  உறைந்து லிங்கமாக காட்சி தருகிறது.   அமர்நாத் சிவலிங்கம்  மஹாபாரதம் மற்றும் புராணங்களில்  இடம் பெற்றது. 




ராஜ தரங்கிணி எனும் பழைய நூல்  11ம் நூற்றாண்டில் ராணி சூர்யமதி இங்கே  திரிசூலங்கள், பாண லிங்கங்களை பிரதிஷ்டை செய்யவைத்தாள்  என்று சொல்கிறது.
சிவபெருமான் தனது வாகனமாகிய   நந்தியை  பஹல்காம் ஊரில் விட்டுவிட்டு, சந்தன் வாடியில் தலையில் இருந்த சந்திரனை விட்டுவிட்டு, சேஷநாக்  நதிக்கரையில் தன்னுடலில் இருந்த  நாகங்களை விட்டுவிட்டு  மஹாகணேஷ் பர்வதத்தில் பிள்ளையாரை விட்டுவிட்டு,  பஞ்சதரணி என்னும் இடத்தில் பஞ்சபூதங்களை விட்டுவிட்டு  எல்லாம் துறந்து, தாண்டவம் ஆடுகிறார். கடைசியில் அமர்நாத் குகையில் தியானம் இருக்கிறார். அங்கே தான் மாதா  பார்வதி தேவிக்கு உபதேசம் புரிகிறார் என்பது ஐதீகம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...