Tuesday, February 11, 2020

PESUM DEIVAM




பேசும் தெய்வம்  3ம் பாகம். J K SIVAN

                 கனவில் வந்த பாதுகை                          

பெரியவா  பற்றி  எழுதும்போது  சொந்தமான கற்பனை கூடாது.  எல்லாமே நமது அனுபவத்தில் நடந்ததாகாது.   சில மஹானுபாவர்கள்   வாழ்க்கையில நடந்த உண்மையான சம்பவங்களை எங்கோ குறிப்பிட்டிருப்பார்கள்  படித்திருப்போம். அவர்கள் யாரென்று கூட நினைவில் இருக்காது.  நல்ல  விருந்தை சாப்பிட்டது நினைவில் இருக்கும் அதை அளித்த  தட்டு வாழை இலை, அதை பரிமாறியவர்களை  மறந்து போகிறோம்.    எங்கே படித்தோம்  குமுதத்திலா,  கல்கியிலா  வேறு ஏதாவதொரு ஆன்மீக புத்தகத்திலா  என்று ஞாபகம்  இருப்பதில்லை.  பெரியவாளோடு  சம்பந்தப்பட்ட  அதிசயவிஷயம்  தான்   முக்கியம், அது மட்டுமே நினைவில் நிற்கிறது.   இப்படியெல்லாம் நமக்கு  வழங்கிய  அந்த  மஹாநுபாவர்கள்  எந்தரோ அந்திரிக்கி  சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.  


ஒரு  பக்தர் காஞ்சி மடத்தில்  பெரியவா தரிசனத்துக்காக  வரிசையில் நின்று கொண்டிருந்தாராம் . அவர் கையில் ஒரு படம். அதில் யாரோ ஒரு  துறவியின் படம் இருந்தது.   அந்த பக்தருக்கு  இன்னொரு துறவியை பற்றி  யாரோ சொல்லி  அந்த துறவியின் படம் ஒன்றை பெற்று கொண்டுவந்திருந்தார்.   பக்தர்  அடிக்கடி காஞ்சிமடம் சென்று  மஹா பெரியவாளை மட்டும் தரிசனம் செய்பவர். அவருக்கு  இந்த மற்றொரு துறவியின் படத்தை  பெரியவாளுக்கு காட்டவேண்டும் என்று தோன்றியிருக்கிறது.  இன்னொரு  சந்தேகமும்  மனதில் உறுத்தியது.  இந்த மற்றொரு துறவியின் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாமா என்று.  சிலருக்கு இந்தமாதிரி சந்தேகங்கள் ஏற்படுவது உண்டு.  என்னிடம் கீதாசாரம் படம் வீட்டில் வைத்துக்கொள்ளலாமா. வீட்டில் சண்டை சச்சரவு  மஹாபாரதத்தில் வந்தது போல் வருமா? என்று ஒரு சிலர் கேட்டதுண்டு. சிரித்துக் கொண்டே   நீங்கள்  சகுனியாகவோ, துரியோதனனாகவோ செயல்பட்டால்  கீதாசாரம் படம் இல்லாமல் கூட சண்டை சச்சரவு  வீட்டில் வரலாம் என்று பதில் சொல்வேன். 
கிருஷ்ணனை புல்லாங்குழல் ஊதுவது போல் வைத்துக் கொள்ளலாமா என்றும் கேட்பவர்களிடம் என்ன சொல்வது. கிருஷ்ணனை  புல்லாங்குழலின்றி நினைத்துக்கூட  பார்க்கமுடியாதே!
 
மேற்கண்ட  பக்தர்  பெரியவாளை அணுகியபோது  ''பெரியவா இந்த துறவி படம் எனக்கு கிடைத்தது. இவரை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா ?''  என கேட்டு  படத்தை நீட்டினார்.   பெரியவாளின் பார்வை அந்த படத்தில் விழுந்தது. 

ஒரு புன்னகை பெரியவா  வதனத்தில்.  லக்ஷத்துக்கும் மேல் அர்த்தம் அந்த புன்னகைக்கு.    அதை அவரை அடிக்கடி சந்தித்த  பக்தர்கள்  அனுபவித்திருக்கிறார்கள்.  

''இது  யாரு?  உனக்கு  அது யாருன்னு தெரியுமா?   ''அந்த கோயிலிலேயே  பெரியவாளுக்கு  அந்த  படத்திலிருப்பது யார் என்று தெரிந்துவிட்டது 

பக்தர் விழித்தார். அவருக்கு  அது யார் என்று தெரியவில்லையே.  
பெரியவா சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் .

 " அவன் என் தம்பி டா!"   ஆம்  அந்த படத்தில் இருந்த தாடிக்காரர்   ஸ்ரீ  சிவன் ஸார்.   ஸ்ரீ சதாசிவம் . இந்த படத்தை காட்டி கேள்வி கேட்டவர்  பாம்பே டையிங் கம்பெனி ரமணன் என்பவராம்.  அவருக்கு  இன்னொரு கேள்வி உதயமானது.  ''ஓஹோ பெரியவா இந்த படத்தை வைத்துக் கொள்ளலாம் என்று ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்று தோன்றியது. ஆகவே  தான் அடுத்த கேள்வி. இந்த படத்தை வீட்டில் எங்குவேண்டுமானாலும் வைத்துக் கொள்வதா. பூஜை அறையில் வைத்து வழிபடலாமா?
இந்த  கேள்வியை  ரமணன் கேட்பதற்கு முன்னாலேயே  பெரியவா  விடை சொல்லிவிட்டாராம்:

 "  நீ தாராளமா இந்த படத்தை  உன் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். என் போட்டோ எங்கே வைத்திருக்கிறாயோ, மாட்டி இருக்கிறாயோ, காதலுக்கு பக்கத்திலேயே  இதையும் வைக்கலாம்''     
இந்த பதிலை கேட்டதும் ரமணன் ஸார்  மனநிலை எப்படி இருந்திருக்கும்  அதற்குப்பிறகு அடிக்கடி  சிவன் ஸார்  தங்கி இருக்கும் இடம் சென்று அவரை தரிசித்தார்.   பெரியவாளை சந்திக்க போகும் முன்பு  சிவன் ஸாரின்   அனுகிரஹத்தை பெற்றுவிட்டு செல்வாராம்.  அனுக்கிரஹம் இவ்வாறு பெற்ற  நாட்களிலெல்லாம்  அவருக்கு   பெரியரின் அருமையான தரிசனம் கிடைத்தது.
ஒருநாள்  ரமணன்  சிவன் ஸாரிடம்    ''எனக்கு மஹா பெரியவா பாதுகை கிடைக்குமா?'' என கேட்டார்.சிரித்துக் கொண்டே  அவர் சொன்ன பதில் :  ''என்ன சந்தேகம் உனக்கு. தங்கத்தாலான  பாதுகையே உனக்கு கிடைக்கும் போ'' 

மஹான்கள் பாதுகை என்றால்  வழக்கமாக  மரத்தில் தான் பார்த்திருக்கிறோம். சிலரிடம்  வெள்ளி கவசமிட்ட, வெள்ளியாலான பாதுகை பூஜையில் இருக்கும்.    எப்படி  தங்கத்தால் ஆன பாதுகை கிடைக்கும்?  பெரியவாளின்   மர   பாதுகை கிடைப்பதற்கே  புண்யம் பண்ணி இருக்க வேண்டும். 

அடுத்த தடவை  பெரியவா தரிசனத்துக்கு சென்ற ரமணனுக்கு ஒரு  ஆச்சர்யம், அதிசயம்  காத்திருந்தது  அவருக்கு தெரியாது. 
அவர் சென்றபோது  தரிசனத்துக்கு வந்த பக்தர்களில் ஒரு பெண்மணி அங்கு இருந்தாள் . அவள்  கனவில் மஹா பெரியவா தோன்றி இருக்கிறார்.  ''எனக்கு ஒரு பாதுகை கொண்டுவா'' .
அந்த பெண் பக்தை பரம சந்தோஷத்தோடு  உடனே ஒரு பாதுகைக்கு  ஏற்பாடு பண்ணிவிட்டாள்.  அதை எடுத்துக்கொண்டு பெரியவருக்கு அதை சமர்ப்பிக்க  வந்திருக்கிறாள். அவள் கையில் ஒரு சின்ன பொட்டலம். ராமணனுக்கு முன்னால் அவள் நின்றாள். ஆகவே  அவள்   பெரியவாளை அணுகியபோது  அருகில் இருந்த  தொண்டர்களில் ஒருவர் அந்த  பொட்டலத்தை வாங்கி பிரித்து  தட்டில் பெரியவா  முன்னால்  வைத்தார்.    அது அழகான ஒரு தங்க  பாதுகை.  அதுமாதிரி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.  அவ்வளவு அழகு. பளிச்சென்று. 

''எனக்கு  என்ன சொல்றதுன்னே  தெரியல. என் கனவிலே  பெரியவா  வந்து  தங்க பாதுகை வேணும்னு கேட்டமாதிரி ஒரு  கனவு வந்தது.  உடனே  அதை பண்ணி கொண்டுவந்தேன்''  நமஸ்கரித்து விட்டு அந்த பெண் அகன்றாள் .

அடுத்து  ரமணன்  பெரியவா எதிரே நின்றார்.  அவர் கையில் அது கொடுக்கப்பட்டது.  பெரியவா  ஆசிர்வாதத்தோடு  சிவன் ஸார்  அனுகிரஹத்தோடு  அவருக்கு  ஒரு ஜோடி  தங்க பாதுகையே கிடைத்து விட்டது.   அவரை மனதார  பிரார்த்தனை செய்து கொண்டார்.  இருவருமே  பரப்பிரம்ம ஸ்வரூபங்கள்.   சிவன் ஸார்  பற்றி அநேக அற்புத  விஷயங்கள் இருக்கிறது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...