Tuesday, February 25, 2020

KALA BAIRAVASHTAKAM



கால பைரவாஷ்டகம். 2  J K   SIVAN  


        பைரவர்களும்  சக்தி அம்சமும் 

ஆதி சங்கரரின் கால பைரவாஷ்டகம் படிக்கும்போது நமக்கு பல பைரவர்களை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவரை வைரவர் என்பார்கள். நகரத்தாரில் வைரவன் செட்டியார் என்பது பொதுவாக பலரின் பெயர். நகரத்தார் பெரும்பாலும் சிவ பக்தர்கள். பைரவரின் வாகனம்  நாய். நாம் நாய்களை பைரவன் என்று சொல்வதுண்டு.

பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் வணங்குகிறோம்.

கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபம். சிவன் கோவில்களில் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர். அநேகமாக பைரவரை ஆடைகள் இன்றி, பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிய நிர்வாண ரூபமாக தரிசிக்கலாம். கால பைரவர் சனியின் குரு.      பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவர் கால பைரவர். பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி.

மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும்  பக்தர்களுக்கு  பிடித்தமானவை.

மொத்தம் எட்டு திசைகளில், திசைக்கொன்றாக எட்டு பைரவர்கள், அஷ்ட பைரவர்கள் என்று நாம் வணங்குபவர்கள் சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் அருள் பாலிக் கிறார்கள். அசிதாங்க பைரவர், ருரு பைரவர்,சண்ட பைரவர்,குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷண பைரவர், சம்ஹார பைரவர்  ஆகியோர்  அந்த அஷ்ட பைரவர்கள்.

அசிதாங்க பைரவர்:     அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர்.காசியில் விருத்தகாலர் கோவிலில்  விசேஷ தரிசனம் தருபவர்.   இந்த பைரவரின் வாகனம் அன்னப்  பறவை. நவகிரக குரு தோஷம் ஏதாவது இருந்தால் இவரைத்தான் வழிபடுவது வழக்கம். இவருடைய சக்தி வடிவம் சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி.

ருரு பைரவர்:     அஷ்ட பைரவர்களில் இரண்டாவது பைரவர். இவரும் காசியில் காமாட்சி கோவிலில் சந்நிதி கொண்டவர். சுக்கிர தோஷத்திற்கு பரிகாரமாக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவம் தான் சப்தகன்னிகைகளில் ஒருவளான காமாட்சி.

சண்ட பைரவர்:    இவர் மூன்றாவது பைரவர். காசியில் துர்க்கை கோவிலில் அருள்பாலிப்பவர். மயில் வாகனம். செவ்வாய் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை சைவர்கள்  வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி  விளங்குகிறாள்.

குரோத பைரவர்:    நான்காவது பைரவர். காசி காமாட்சி கோவிலில் உள்ளவர். கருடன் வாஹனம். சனி தோஷ நிவர்த்திக்கு வணங்க ஏற்றவர். சப்த கன்னிகளில் வைஷ்ணவி இவரது சக்தி வடிவம்..

உன்மத்த பைரவர்;   ஐந்தாவது பைரவர்.    காசி பீம சண்டி ஆலயத்தில் அருள் பாலிப்பவர். குதிரை தான் இவரது வாஹனம். புதன் தோஷ நிவர்த்திக்கு வணங்கப்படுபவர். இவருடைய சக்தி வடிவம் வராஹி.

கபால பைரவர்:   ஆறாவது பைரவர். காசி லாட் பசார் கோவிலில் சந்நிதி. கருட வாஹனர். சந்திர தோஷம் போக இவரை வழிபடுவார்கள். சப்தகன்னிகைகளில் ஒருவளான இந்திராணி தான் இவரது  சக்தி தெய்வம்.

பீக்ஷண பைரவர்:    ஏழாவது பைரவர். காசியில் பூத பைரவ கோவிலில் சந்நிதி கொண்டவர் . சிங்கம் இவரது வாஹனம்.  கேது கிரக தோஷம் விலக இவரைத்  தான் தேடி  வேண்டுவார்கள். சாமுண்டி இவரது சக்தி அம்சம்.

சம்ஹார பைரவர்:  எட்டாவது பைரவர். காசியில் த்ரிலோசன சங்கம் ஆலயத்தில் இருப்பவர். இவருக்கு தான் நாய் வாஹனம். ராகு தோஷ நிவர்த்திக்கு இவரிடம் வரவேண்டும். சப்த  கன்னிகைகளில் சண்டிகை இவரது சக்தி வடிவம்.

ஒரு கதையோடு வழக்கம்போல் நிறுத்திக் கொள்கிறேன்:
அந்தகாசுரன் சிவபெருமானிடம் வரம் பெற்று, வழக்கமாக அசுரர்கள் செய்வது போல் ஆணவத்தால் தேவர்களை, முனிவர்களை,  ரிஷிகளை துன்புறுத்தினான். கட்டளை  இட்டான், இட்ட ஏவலை செய்ய பணித்தான். வரத்தின் சக்தியால், உலகை இருட்டாக்கினான். அதனால் தான் அவனுக்கு அந்தகாசுரன் என பெயர். ஒரு நிலையில் அவனை தண்டிக்க எண்ணம் கொண்ட சிவ பெருமான், தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக மாற்றி, எல்லா திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்களை தனது அம்சத்தில் உருவாக்கினார் என்று புராணம் சொல்கிறது.

பைரவருக்கு பிரம்ம சிரேச்சிதர், உக்ர பைரவர், க்ஷேத்ரபாலகர், வடுகர், ஆபத்துத் தாரணர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று பல பெயர்கள் உண்டு. அதன் பின்னால் கதைகளும் உண்டு. சொல்ல நேரமில்லை. அவ்வப்போது தோன்றியது, நேரம் கிடைத்தபோது அத்தனை கதைகளும் தெரிந்தாகவேண்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...