Friday, February 7, 2020

ARUPATHTHU MOOVAR



அறுபத்து மூவர்          J K  SIVAN 
திருநீலநக்க நாயனார் 

   




                     படுக்க  வசதியாக ஒரு இடம் 

நமது  பாரத தேசத்தில்  தமிழகத்தில்  பாயும்  காவிரி கங்கையை விட புனிதமாயது  என்று பாடல்கள் சொல்லும்  உண்மை.  இந்த காவிரியின் வடகரை  தென்கரையில் எண்ணற்ற க்ஷேத்ரங்கள் உண்டு. அவற்றில் ஒன்று  சாத்தமங்கை. திருச்சாத்தமங்கை என்பதை விட  சீயாத்தமங்கை  
செய்யாத்தமங்கை என்றெல்லாம் மக்கள் வைத்த பெயர் தான் இப்போது  நிலைத்து விட்டது.  நன்னிலம் தாலூக்காவில்  திருமருகல்  எனும்  ஊரிலிருந்து நாகூர் செல்லும் பாதையில் 1 கி.மீ. சென்றால் சாலை  பிரியும். எதிர்புறமாக மீண்டும் பிரிந்து செல்லும் சாலையில், எதிர்ப்புறமாக 1 கி.மீ மீண்டும்  சென்றால்   இந்த க்ஷேத்ரம் வரும். நடுவே  முடிகொண்டான் ஆறு.  

இந்த ஊர்   சிவனுக்கு அயவந்தீஸ்வரர்,  பிரம்ம புரீஸ்வரர்  என்று பெயர்.  ஸ்வயம்பு.    அம்பாள்  புஷ்ப விலோசனி. இரு மலர்க்கண்ணி என்று பெயர் கொண்டவர்கள். பிரம்மா  பூஜை செய்த  ஸ்தலம். இன்னொரு முக்கிய  விசேஷம் . திருநீலநக்க நாயனார்  என்ற  சிவனடியார்  அறுபத்து மூவரில்  ஒருவர் பிறந்த ஊர்  சம்பந்தர் பாடிய தலம்   மேற்கு பார்த்த ஐந்து நிலை கோவில்.  அம்பாளுக்கும்  சிவனுக்கு தனித்தனி வாசல். சந்நிதி.   நல்லவேளை. கோவிலை சுற்றி  பெரிய  சுற்று சுவர்.  பராமரிக்க நகரத்தார்கள்.   இல்லையென்றால்  எனக்கு எழுத கோவில் இருந்திருக்காது.

தாராளமாக இடம் உள்ள கோவில்.   பிராகாரத்தில்  சந்திரன், சனிபகவான் (காகத்தின் மீது ஒரு காலூன்றியபடி  , சப்தமாதர்கள், பைரவர், நவக்கிரகங்கள், மகாலிங்கம், விசுவநாதர் விசாலாட்சி, விநாயகர் ஆகியோர்  சந்நிதி கொண்டு இருக்கிறார்கள். 

கோவில் வாசல்  உள்ளே  முன் மண்டபத்தில்  வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர்கள் .அடுத்து திரு நீலநக்க நாயனார், அவருடைய மனைவி உருவச்சிலைகள்.   இன்னும் உள்ளே சென்றால் நடன சுந்தரர் நடராஜ சபை, மணிவாசகர் காட்சி தருகிறார்கள் .

மூலவர் சந்நிதி கோஷ்டத்தில்  தட்சிணாமூர்த்தி, நர்த்தனகணபதி,  லிங்கோத்பவர்,  பிரம்மா, பிட்சாடனர், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர்  அருள் பாலிக்கிறார்கள்.  ஒரு ஆச்சர்யமான சிலா ரூபத்தில்
 அர்த்த நாரீஸ்வரர் ரிஷபத்தின் தலைமீது ஒரு கரத்தை வைத்திருக்கிறார்.  அகத்தியரும் இருக்கிறார்.
உயரமான நந்தி.  அம்பாள்  சதுர்புஜம் கொண்டவள்.  '
ருத்ர வியாமள தந்திர' ஆகம முறை  பின்பற்றப்பட்டு    தினமும் நாலு கால  பூஜை.

திருஞான சம்பந்தர் நிறைய பாடியிருந்தாலும்  மாதிரிக்கு ஒன்று கீழே தருகிறேன்:

"வேதமாய் வேள்வியாகி விளங்கும் பொருள் வீடதாகிச்
சோதியாய் மங்கை பாகன் நிலைதான் சொல்லலாவதொன்றே
சாதியான் மிகக் சீரார் தகுவார் தொழும் சாத்தமங்கை
ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே."

சோழன் கல்வெட்டு   சிவனை   'அயவந்தி உடையார்' என்கிறது.   இனி  இங்கே  பிறந்த  திருநீலநக்க நாயனார் பற்றி அறிவோம்.

இங்கே பிராமண குளத்தில்  பிறந்த நாயனாரும் அவர் மனைவி  மங்கையற்கரசியும்  சிவ பக்தர்கள். சிவனடியார்க்கு தொண்டு புரிந்து மகிழ்ந்தவர்கள்.   ஒரு  திருவாதிரை அன்று  நீலநக்கர் அவர் மனைவி இருவரும்  சிவனை தரிசிக்கும்போது  டொப்  என்று ஒரு சிலந்தி சிவலிங்கம் மீது விழுந்தது .  நாயனாரின் மனைவி  சிவலிங்கம் மீது பூச்சி லிருக்கிறதே என்று வாயால்  விரட்டினாள் .   நாயனாருக்கு மனைவி  வாயால் எச்சில் காற்றை சிவன் மீது ஓதியதில் படு  கோபம் வந்துவிட்டது. 

''சே. என்ன முட்டாள்த்தனம் பண்ணிவிட்டாய். புனிதமான சிவலிங்கத்தை திருவாதிரை அன்று உன் வாய் எச்சில் காற்றை ஊதிவிட்டாயே'' என்று கத்தினார்.  இனி என்னை நெருங்காதே என்று வீடு திரும்பிவிட்டார். பாவம்  அவள் என்ன செய்வாள்? பார்த்தாயா பரமசிவா? என்று கெஞ்சினாள். சிவன் அருள் மேல் கருணை கொண்டான்.  அன்று இரவு   நீலநக்கர்  கனவில் சிவன் காட்சி தந்தான்.  உடல் எல்லாம் கொப்புளங்கள்.  எங்கே மங்கையர்க்கரசி ஊதினாளோ அங்குமட்டும் கொப்புளம் இல்லை.   நாயனாருக்கு புரியாதா?    தான் தவறு செய்ததை   உணர்ந்தார். மனைவியின் பக்தி , பெருமை  புரிந்தது. அவளை வீட்டுக்கு அழைத்து வந்தார். 

இன்னொரு சமயம்   திருஞான சம்பந்தர்  சில  சிவனடியார்களோடு நாயனார் வீட்டுக்கு வருகை தரும்போது அவர்களை தக்க உபசாரங்களோடு வரவேற்கிறார்.  அன்று இரவு  எல்லோரும்  நாயனார் இல்லத்தில் தங்குகிறார்கள். 

''நீல நக்கரே,  இன்று என்னோடு   திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவரோடு மற்றும் சிலர்  வந்திருக்கிறார்கள்.   யாழ்ப்பாணருக்கு   படுக்க  வசதியாக ஒரு  இடம்  ஏற்பாடு செய்யுங்கள் என்று சம்பந்தர் கேட்கிறார்.  நீலநக்கருக்கு சங்கடமாகபோய்விட்டது.  அவர்கள் பிராமணர்கள் அல்லவே  எப்படி இடமளிப்பது என்று    நீலநக்கர் ஹோமகுண்டம் அருகே  அவர்  தூங்குவதற்கு  ஒரு  இடம் வசதி செய்து கொடுத்தார். யாழ்ப்பாணர் அருகே வந்ததும்  ஹோமகுண்டம்  தானாகவே  அக்னியோடு ஜ்வாலை வீசி  எரிய ஆரம்பித்தது.  நீலநக்கர் தனது தவறை உணர்ந்து அவரை வணங்குகிறார்.  ஜாதிமத பேதம் அவரை விட்டு அந்த கணமே எரிந்து சாம்பலானது.

மறுநாள்   சம்பந்தர்  சந்தோஷத்தோடு  ஆலயம் சென்று  அயவந்தீஸ் வரனை தரிசித்துவிட்டு  பதிகம் பாடினார்.  அதில்  நீல நக்க  நாயனாரை  போற்றி பாடினார். இந்த சம்பவத்திற்குப்  பிறகு  வெவ்வேறு சந்தர்ப்பங்களில்  அடிக்கடி  இருவரும்  சந்தித்தார்கள். நண்பர்க ளானார்கள்.  சம்பந்தருக்கு  திருமணம் என்ற சேதி நீல நக்கருக்கு காதில் விழுந்தது  திருமண நல்லூர் (இப்போது  ஆச்சாள்புரம்)  சென்றார். சம்பந்தர் இறைவனோடு ஜோதியில் கலந்த  போது  தானும்  இறைவனோடு  ஒளியில்  ஒன்றானார்.முக்தி  அடைந்தார்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...