Sunday, February 9, 2020

THENNAANGUR





              தெற்கிலும்  பந்தர்பூர்  J K  SIVAN 

நான்  பாண்டுரங்க விஸ்வாஸன். நிறைய  அவரைப்பற்றி  படித்தேன், ரசித்தேன், எழுதினேன், பாடினேன்.  பாட்டு எனும்போது தனைமறந்து, லயித்து பாடும்  மகான்களை கேட்கும்போது  பாட்டின் பொருளான அந்த பகவான் கண்முன்னே தோன்றுவான்.  பல மொழிகளில் அப்படி பாடி என்னை அடிமைப்படுத்திய ஒருவர்  ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள்.  வளமான குரல். காந்த சக்தி வாய்ந்த உச்சரிப்பு. 
பண்டைய காலத்தில் பிரயாணம் என்பது ரொம்ப கடினம்.  எங்கும்  நடை தான். பல நூறு மைல்கல்  நடந்தார்கள்.   இருட்டில், காட்டில், கள்ளர் பயத்தோடு, விலங்குகளின் வாய்க்குள் அகப்படாமல்  போய் தான்  புண்யக்ஷேத்ர தரிசனம் கிடைக்கும்.  இப்போது அரைமணிக்குள்  உத்தரமேரூரிலிருந்து  தென்னாங்கூர் அடையலாம்.  ஒன்றரை மணிநேரத்தில் சென்னையிலிருந்து கூட  காரில் பறக்கலாம்.  நடுவில் எத்தனையோ கிராமங்கள். ஒவ்வொன்றிலும் நுழைந்து  ஆலயம் தேட  விருப்பத்தை மூட்டை கட்டி  மனதில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு  தென்னாங்கூர் மட்டும்  செல்வோம் என்று முடிவெடுத்தேன். கைக்கடிகாரம்   நேரமாகி விட்ட தை  காட்டியதால்,  பாண்டுரங்கன்  கதவை மூடிக்கொண்டு  விட்டால் அவனை எப்படி தரிசிப்பது. வேகம் அதிகரித்தோம்.     என் நண்பர்  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனின் கார்  பறந்தது என்றே  சொல்வேன். விரைவில் பாண்டுரங்கன் ஆலய வாயிலில் நின்றேன்.

''உத்தவா, கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் ஒன்றால் தான் பக்தி பெருகமுடியும்.'' என்ற கிருஷ்ணன் வார்த்தையை மெய்ப் பித்தவர்  ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள். 

இந்த பூமியில் தான் எத்தனை பாகவத சிரோமணிகள் அவதரித்திருக்கிறார்கள்,  புரந்தரதாசர், ஜெயதேவர், துளசிதாசர்,  கபீர், ஞானேஸ்வர், துக்காராம், கோபாலக்ரிஷ்ண பாரதியார், பெரிய ஜாபிதா. சொல்ல எழுத நேரமில்லை.

பண்டரிபுரத்தில்  ஆடி ஏகாதசி  ஜேஜே என்று பக்தர் கூட்டம் வருஷாவருஷம் அலை மோதும்.  நங்கநல்லூர் அருகே  ஆதம்பாக்கத்தில்  பாண்டுரங்கனை அன்று ஆசையாக தொட்டு  ஆலிங்கனம் செய்திருக்கிறேன். அன்று ஒருநாள் தான் அவனை தொட முடியும். தொட விடுவார்கள்.

ஸ்ரீ பக்த விஜயத்தை  தமிழில்  நூறு கதைகளாக  பாண்டுரங்க மஹாத்மியத்தை   ''தெவிட்டாத விட்டலா'' என்று எழுதினேன்.  ஆங்கிலத்திலும்  எனது  ''VITOBA  THE NECTAR ''ஆக  அது பல பக்தர்கள் கையை அலங்கரித்தது.  அவற்றை எழுதியது நான் முற்பிறப்பில் செய்த நல்வினை என்று தான் சொல்ல வேண்டும்.


ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் ஒரு முறை பண்டரிநாதனை தரிசிக்க பண்டரிபுரம் சென்றபோது அங்குள்ள  அர்ச்சகர்கள் அவரிடம் பாண்டுரங்கன் ருக்மா பாய்  விகிரஹங்களை கொடுத்தார்கள் . திகைத்த ஸ்வாமிகள் ''என்ன இது, எதற்கு என்னிடம்?''   

''தெரியாது சுவாமி,  கனவில் பாண்டுரங்கன் உத்தரவு''

தெற்கே ஒரு பண்டரிபுரம் உருவாக பாண்டுரங்கன் சித்தம் போலும்.  ஸ்வாமிகள் முயற்சியில் இன்று நாம்  பாண்டுரங்கனை பல  விதமான அலங்காரங்களில் தரிசித்து மகிழ்கிறோம். பூரி ஜெகந்நாத ஆலயத்தில் நிற்பது போல் ஒரு தோற்றம் உண்டாகிறது.  சோழ கால ராஜகோபுரம். சிறு பாண்டுரங்க ருக்மாயி
 உருவம்  விஸ்வரூபமாகி நமக்கு  காட்சி அளிக்கிறது.  அருகே  ஹரிதாஸ் கிரி  ஸ்வாமிகளின்  குரு தபோவன ஞானானந்த ஸ்வாமிகள் ஆலயம். மஹா ஷோடசிக்கு  ஒரு ஆலயம் அற்புதமாக நமக்கு அவள் அருளை  வேண்டுவதற்காக  அமைத்திருக்கிறார்.

தக்ஷிண  ஹாலாஸ்யம்  என்ற மகா பெரியவா அளித்த  பெயரில் சிவன்  விஷ்ணு அருள் பாலிக்கிறார்கள்.  மீனாட்சி பிறந்த இடம் தக்ஷிண ஹாலாஸ்யம்.  ஒரு முறை கங்கையில் ஸ்னானம் செய்த போது  ஸ்வாமிகளுக்கு கிடைத்த பாண லிங்கம் தான் சுந்தரேஸ்வரராக இங்கே தரிசனம் தருகிறார்.   இது  ஒரு ஷடாரண்ய க்ஷேத்திரம்.  (ஆறு புனித வன  ஆலயங்களில்  ஒன்று ) வருஷா வருஷம் மீனாட்சி கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது.

அமைதியான சூழலில்  தென்னாங்கூர்  சென்னையிலிருந்து 115 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. திருவண்ணா
 மலை  ஜில்லா.  சனிக்கிழமைகளில் வெங்கடாசலபதி  அலமேலு மங்காவாக , ஞாயிறுகளில் துவாரகை மஹாராஜா கிருஷ்ணன் ருக்மணியாக.  அற்புத  அலங்காரங்கள். மற்ற விசேஷ நாட்களில் வெவேறு வித அலங்காரங்கள்.  அங்கிருந்து திரும்பவே மனம் வராது.


நாங்கள் சென்ற அன்று  அது ஒரு  ஞாயிற்று கிழமை.  ஏனோ அதிகம் பேர் இல்லை.  நூறு பேருக்கு அன்னதானம் நடந்தது.  எனக்கு தான் முதல் தட்டில் சுட சுட  சாம்பார் சாதம், கொஞ்சம் தயிர் சாதம்  கொடுத்தார்கள்.  சாப்பிட்டேன். வயிறு நிரம்பியது.   நேற்று தான் கட்டி முடித்தது போல்  சுத்தமாக  அழகான சிற்பங்களோடு,  ஏதோ ஒரு அழகிய கல்யாண மண்டபத்தில்  இருப்பது போல் ஒரு சுகானுபவம். 

ஒரு சினிமா பாட்டு பாண்டுரங்கன் மீது.  பாடியது  அருமையான இன்னிசை குரலோன் PB  ஸ்ரீனிவாஸ். கன்னட சூப்பர் ஸ்டார்   ராஜகுமாருக்காக  ஒரு கன்னட படத்தில் பாண்டுரங்கன் மீது பாடியது. அதை  நானும் பாட ஆசை மனதில் வந்தது.  பாடிப்பார்த்தேன். . click the link https://youtu.be/qiRwOoW4fT0

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...