Saturday, February 22, 2020

kalabairavashtakam



கால பைரவாஷ்டகம் - J.K. SIVAN

                                                        ருத்ராக்ஷ மஹிமை

மகா விஷ்ணு அலங்காரப்ரியர். பரமேஸ்வரன் அபிஷேகப்பிரியர். விபூதி , சந்தனம், பன்னீர், பழங்கள், தேன் இவற்றால் பஞ்சாமிர்தம், இளநீர், பால்;, தயிர் என்று சதா ஜலதாரையுடன் இருக்கும் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் , அவர் மூர்த்தி குளிர்ந்து மனம் நமக்கு குளிரும். வாரிக்கொடுக்கும் வள்ளல். வரம் தருவதில் அவருக்கு இணை எவரும் இல்லை. சிவனின் அம்சமான பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிஷேக த்தில் சேர்த்துக்கொள்வார்கள்.

எல்லா அஷ்டமிகளிலும் பைரவருக்காக விரதம் இருப்பார்கள். செவ்வாய்க்கிழமை அன்று வரும் அஷ்டமி விசேஷம்.

காசியில் காலபைரவருக்கு எட்டு இடங்களில் கோயில்கள் .காசிக்கு பைரவ க்ஷேத்ரம் என்று பெயர்.

குத்தாலம் – மயிலாடுதுறை வழியில் க்ஷேத்திரபாலக புரம் என்ற கிராமத்தில் காலபைரவுக்கு பிரத்யேகமாக ஒரு ஆலயம் இந்தியாவிலிலே ஒரே தனிக் கோவில். நாகப்பட்டினம் ஜில்லாவில் சீர்காழியில் சட்டநாதருடன் எட்டு பைரவர்கள் உண்டு. திருச்சி உறையூர் பாதையில் ஜெயகாளிகாம்பாள் கோயிலில் அஷ்ட பைரவர்கள் பைரவிகள் வாகனங்களோடு. மற்றும் வாகனங்களுடன் காட்சியளிக்கின்றனர்.

கோயம்புத்தூர் நஞசுண்டாபுரத்தில் காயாந்தஸ்தானம் மயானம் அருகே எட்டடி உயர காலபைரவர் வீற்றிருக்கிறாராம். சென்று தரிசிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..

காஞ்சிபுரம் திருமாகறல் எனும் கிராமத்தில் அர்த்தநாரி பைரவர் இருக்கிறார். .

சசமீபத்தில் நண்பர் ஒருவரோடு விழுப்புரம் ,சின்னசேலம் அருகில் ஆறகளுர் என்ற பழைய கிராமத்தில் ஒரு அருமையான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த ஆயிர வருஷ கோவில் ஒன்றில் பெரியநாயகி சமேத காமநாதீசுவரர் தரிசனம் செய்யும்போது அங்கே அற்புதமான அஷ்ட பைரவர்கள் அருள்பாலித்தனர் .

நமது முன்னோர்கள் எங்கு பயணம் போகும் போதும் இரவுப் பிரயாணம் செல்லும்போதும் நிறைய முந்திரிபருப்புகளை மாலையாக்கி காலை பைரவருக்கு அணிவித்து வணங்குவார்கள். ஜோதி விளக்குகள் ஏற்றுவார்கள். காலபைரவா எங்கள் பயணம் நிர்பயமாக நிறைவேற உன் அருள் வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.

சிவபக்தர்கள்  ருத்ராக்ஷம்  அணிபவர்கள். ருத்ராக்ஷம் பற்றிய  சில  விஷயங்கள்  அநேகருக்கு தெரியவில்லை.
ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்களைப்பற்றி  நிறைய விஷயங்கள் உள்ளதை  அறிந்து கொள்ள வேண்டும்.   ஹிந்துக்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் ருத்ராக்ஷம் எனலாம். முன்னோர்கள் கௌடி சரடு என்று கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். எங்கள் தாத்தா கழுத்தில் அதை பார்த்து ரசித்ததுண்டு.

ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்ற உபாதைகளுக்கு இது மிகவும் நல்லது. கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.

ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்ராட்சத்தை பொடியாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணம் ஆகும். ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது. ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும்.


வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம். ருத்ராட்சத்தைக் கழுத்தில் மாலையாக 32ம், கை மணிக்கட்டில் 12ம், மேல் கையில் 16ம், மார்பில் 108ம் ஆக தரிக்கலாம்.

ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.

மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.

ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.

ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும் கோபத்தீயும் விலகும்.

எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.

ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.

பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும்.

பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப் பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.

ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...