Thursday, September 9, 2021

ULLADHU NARPADHU


 உள்ளது நாற்பது --   நங்கநல்லூர்  J K  SIVAN --

பகவான் ஸ்ரீ ரமணர்

7.    ஆழ் உறக்கமும் அகண்ட உலகமும் 

உலகறிவு மொன்றா யுதித்தொடுங்கு மேனு
முலகறிவு தன்னா லொளிரு – முலகறிவு
தோன்றிமறை தற்கிடனாய்த் தோன்றிமறை யாதொளிரும்
பூன்றமா மஃதே பொருளாமா – லேன்றதாம் 7

நம்  கண்ணுக்கு  உலகம் புலப்படுகிறது.  அதைக் காண  அனுபவிக்க மனம்  உதவுகிறது.  உலகமும் மனமும் ரெட்டையர்கள்.   மனம்  எப்படி  காண  விழைகிறதோ அப்படி காட்சியளிப்பது உலகம்.  உலகம் தெரிவது  மனதின் வெளிச்சத்தாலேயே.    இந்த ரெண்டுமே  தோன்றாமலும் மறையாமலும் இருக்க செய்வது  ஆத்ம ஞானம்.  ஆத்ம ஸ்வரூபம். அது ஒன்று தான்  வாஸ்தவமானது. நிரந்தரமானது. அழிவற்றது.

நன்றாக  உறங்கியபோது , ஆழ்ந்த தூக்கத்தில் இந்த உலகம், மனம் ரெண்டும் எங்கே காணாமல் போனது? கண் விழித்ததும், எங்கிருந்து  திடுதிப் என்று  உலகமும் மனமும்  உயிர்த்தெழுகிறது?
தூக்கத்தில் காணாமல்  விழித்ததும் இவற்றை காண்பவன் யார்?  

உலகம் எப்படி ஸ்ருஷ்டிக்கப்பட்டது என்று கேள்வி கேட்பவர்களே,  முதலில் பதில் சொல்ளுங்கள், தூக்கத்தில் காணாத அதை  விழித்ததும் காண்பவன் யார்? 

''நான் ''என்பது ஆழ்ந்த தூக்கத்தில் தெரியவில்லை, விழித்ததும் அது தான் உலகத்தை காண்கிறது. அது தான் மனத்தை  இயக்குகிறது. ''அஹம்'' எனும்  உணர்வு அடங்கினால் நிரஹம்காரமான  ப்ரம்மம் பிரகாசிக்கும்.

விடியற்காலை  ப்ரம்ம முஹூர்த்தம் என்கிறோம். ஏன் என்றால் அந்த நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் மனதை அப்புறப் படுத்துகிறது.  அப்போது விழித்தவுடன்  ''சிறிது நேரம் முன்பு ''  நான் எங்கிருந் தேன்?  ஆழ்ந்த  உறக்கத்தில் என் தனித்தன்மை,   ''நான்'',  எங்கே போயிற்று?  என்னவாக  இருந்தது?  இந்த ''நான் '' மனதையும் உலகத்தையும்  சேர்த்து  என்னிடமிருந்து பிரித்ததால் தான்  சுகமான தூக்க அனுபவமா?  அது தான்  ஒருவித  சமாதி நிலை சுகமா?

ஒரு சம்பவம் சொல்கிறேன்.  சுவாமி ஸ்ரீ  ராம தீர்த்தர் (ராதா சுவாமி என்ற பெயரும் உண்டு)  பஞ்சாபி தேசத்து பிராமணர். (1873 – 1906) வேதாந்த தத்வ பேராசிரியர்.  அமெரிக்காவில் ஹிந்துமதம் பற்றி விவேகானந்தர் காலத்தில் பிரசாரம் செய்தவர்.  ராம தீர்த்தர்  அமெரிக்க ஜனாதிபதி தீயடோர் ரூஸ்வெல்ட்டை சந்திக்க நேர்ந்தது.

''நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்''  
''நான்  ராம தீர்த்தன்  எனும் சக்ரவர்த்தி''
''நீங்கள்  எந்த  சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி?  
'ஸ்ரீ ராமன் இந்த  நிரந்தர சக்ரவர்த்தி. என்றும் அழியாதது அவன் சாம்ராஜ்யம் ''

இது எதை குறிக்கிறது?  பூரண ஆத்ம  த்யானம், பகவான் மீது விடாத  சிந்தனை, உலகம் மனம் இரண்டையுமே தாண்டிய ஒரு பூர்ண ஆத்ம ஞான விசாரம். 

இந்த உலகம்  தனது  இருப்பு நிலையை  ஸ்வயமாக அறிவதில்லை.  அதற்கு  மனித மனம் தேவைப்படுகிறது. அதே போல்  ஸ்வயம் பிரகாசமான  ஆத்மாவும்  இந்த உலகத்தை உலகமாக அறிவதில்லை.  ஆகவே  ஜடத்திற்கு தனது இருப்பு  அறியமுடியாது.  சைதன்யமான ஆத்மாவுக்கு தன்னைத் தவிர வேறொன்றும் இல்லை என்ற உணர்வு உலகத்தை  இல்லாமல் போக்கிவிட்டது 
அதன் தோற்றத்தை உணரவில்லை.
தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...