Monday, September 27, 2021

pesum deivam




 பேசும் தெய்வம்   -  நங்கநல்லூர்  J K  SIVAN  --


81. சென்னை விஜயம் முடிவுறுகிறது. 

ஹரிஜன நலவாழ்வுக்கு காஞ்சி மடத்தின்  சார்பாக ஐநூறு ரூபாய் நன்கொடையும்  அதன் பொறுப்பாளர்களுக்கு  வழங்கினார். மஹா  என்றும் எப்போதும்  பகவானின் குழந்தைகளாகிய மனிதர்களிடத்தில் வேற்றுமையை காணவில்லை. அன்பால் எல்லோரையும் அரவணைத்தவர். அருளாசி எல்லோருக்கும் சுகமாக இருக்க  தாராளமாக வழங்கியவர்.

மெட்ராஸ் எனும் அப்போதைய சென்னையிலிருந்து மஹா பெரியவா கிளம்பும் நேரம் வந்தது.  அதற்கு முன்  முக்கியமான சிலரை நினைவு கூர்ந்து அவர்களை சந்தித்து  கௌரவிக்க எண்ணம் கொண்டார். சென்னையில்  ஸமஸ்க்ரித கல்லூரி பேராசிரியர்  மஹாமஹோபாத்யாய   வித்யா வாசஸ்பதி குப்புஸ்வாமி சாஸ்திரிகளை(1880-1943) அழைத்து  ''தர்ஷன கலாநிதி'' எனும் விருது அளித்தார்.  சாஸ்திரிகள்  வேதாந்த, நியாயம், மீமாம்ஸம் , வ்யாகரணம், சாஹித்யம் அனைத்திலும்  தேர்ந்தவர்.  
சென்னை சமஸ்க்ரித கல்லூரியின் முதலாவது தலைவர். 

ராவ் பஹதூர், வக்கீல்,  ஸ்ரீ  T  R  ராமச்சந்திர ஐயரை கௌரவித்து  ''தார்மிக துரந்தரர்'' என்ற விருதை அளித்தார். 1899ல்  ஒரு  ராமர் கோயில் கட்டியவர் இவர். திருசூர்,   கோழிக்கோடு  ஊர்களில் கல்வி கற்று,  சென்னை சட்டக் கல்லூரியில்  வக்கீல்  பட்டம் பெற்றவர். ராம பக்தர். தினமும் திருசூர் வடக்குநாதர் ஆலயம் சென்றவர். பூங்குன்னம் கிராமத்தில்  நிலம் வாங்கி அக்ராஹாரம் அமைத்தவர். ராமர்  ஆலயம் நிறுவியவர். பூங்குன்னம் கிராமத்தில் ஒரு  நெசவாலை  நிறுவி  அநேகருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தவர். 

கே. பாலசுப்பிரமணிய ஐயருக்கு  மஹா பெரியவா அடுத்து  ''தர்மம் ரக்ஷாமணி'' என்ற விருதை வழங்கினார்.  மஹாபெரியவாளின்  சென்னை விஜயத்தில்  அவருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தவர்.  மஹா பெரியவா  சென்னை விஜயத்தின் பொது அவரோடு கூடவே இருந்து சேவை செய்தவர்களில் ஒருவர்  ஒய்வு பெற்ற போலீஸ் கமிஷனர் ராவ் பஹதூர்  A. கிருஷ்ணஸ்வாமி ஐயர். பாரபக்ஷமின்றி காவல் துறையில்  நேர்மை தவறாது  சேவை செய்து ஏழைகள்  பணக்காரர் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.  மெட்ராஸ்  ஸமஸ்க்ரித கலாசாலை,  வெங்கட்ரமணா  ஆயுர்வேத  சாலை இரண்டையும்  நிறுவியவர்  ஸ்ரீ  வி. கிருஷ்ணஸ்வாமி ஐயர்.  அவர் காலத்திற்கு பின்னர் அவரது பிள்ளைகள்  K. பாலசுப்பிரமணிய  அய்யரும், K. சந்திரசேகர அய்யரும் இந்த இரு நிறுவனங்களின் பராமரிப்பை  ஸ்ரீ  A  கிருஷ்ணஸ்வாமி அய்யரிடம் ஒப்படைத்தனர்.  மஹா பெரியவா ஸ்ரீ  கிருஷ்ணஸ்வாமி ஐயருக்கு   ''பரோபகார சிந்தாமணி'' விருது அளித்து கௌரவித்தார்.  ஒரு ஸ்படிக மணி மாலையை அவருக்கு அணிவிக்க செய்தார். 

1932 சென்னை விஜயத்தின் போது  மஹா பெரியவா மைலாப்பூரில் நவம்பர் மாதம் dஒரு ப்ராமண சமூகத்துக்கு வழங்கினார். அந்த  உபன்யாசங்களை தனிப் பதிவுகளாக ஏற்கனவே  வெளியிட்டிருக் கிறேன்.

மற்றபடி  மஹா பெரியவாவின் பிரசங்கங்களை ஒன்று ஒன்றாக  பதிவிடுகிறேன். அற்புதமான எண்ணங்கள் அவருடையவை. முக்கியமான  அறிவுரைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்:

'' கிராமத்தை விட்டு பலர்  நகரங்களுக்கு குடியேறுகிறார்கள்.  அதற்காக  விவசாய நிலத்தை விற்ற பணத்தில் சென்னை போன்ற பெரிய நகரங்களில் வீடுகள் வாங்கி வசிக்கிறார்கள்.  படித்தால் மட்டும் போதாது. வேலை வாய்ப்பு நிச்சயமில்லை. வேலை வாய்ப்பு  ஜாதி அடிப்படையில் கிடைப்பதால்  பிராமணர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போனது.  பட்டணங்களில் குடியேற நிலங்களை முதலில் விற்றவர்கள் பிராமணர்கள் தான்.  அவர்களைத் தொடர்ந்து மற்ற வகுப்பினரும் கிராமங்களை விட்டு வெளியேறினார்கள்.  கிராமங்களில் வாழ்க்கை முறை அழிந்தது. எத்தனையோ  ஆலயங்கள், வீடுகள் எல்லாம் பாழாகிவிட்டன.  திருப்தியளித்த  வாழ்க்கை முறை மாறி  தேவைகள் அதிகரித்துவிட்டன.  பண வரவு போதாமல்  குடும்பம் நடத்தவே கவலை வந்துவிட்டது. செல்வம் நிறைந்த இந்த நாட்டில்  வறுமை வளர ஆரம்பித்தது.நிதானமான வாழ்க்கை வேகமான போட்டிநிறைந்த வாழ்க்கையாக மாறி விட்டது. தேவை அதிகரிக்க பணம் குதிரைக்கொம்பாக பலருக்கு ஆகிவிட்டது.   செலவைக் குறைக்க, பணத்த தட்டுப்பாட்டு  நிவர்த்திக்கு  நான் சில  வழிமுறைகள் சொன்னால் கேட்பீர்களா?  (சொல்வது மஹா பெரியவா, நான் இல்லை)

எல்லோரும்  விலை அதிகமில்லாத மலிவான ஆடைகளை உபயோகிக்கலாம். .
காப்பி  தேநீர் மற்ற பானங்களை விலக்கி  உடலுக்கு  புஷ்டியான கோதுமை  கஞ்சி  போன்றவற்றை காலையில் பருகி உடல் ஆரோக்யம் அடையலாம் . பசியைப் போக்கலாம். 
பிள்ளை பெற்றவர்கள்  வரதட்சிணை வாங்குவதில்லை என ஒரு  விரதம் மேற்கொள்ளவேண்டும். 
கல்யாணங்களை வீட்டிலோ, கோவில்களிலோ  சாஸ்த்ரோக்தமாக மட்டும் நடத்தில் ஆடம்பர செலவை கட்டுப்படுத்தலாம்.
நேரம் கிடைத்த  போது  அதை வீணாக்காமல், பொழுது போக்குக்காக  விரயம் செய்யாமல் நித்யம் அனுஷ்டானங்களுக்கு  நேரம் ஒதுக்கலாம்.  மன நிறைவும் ஏற்படும். வாழ்க்கையில் நல்லதே நடக்கும்.
ஆசிரியர்கள், உபாத்யாயர்கள், போன்றோர்  தாம்  கற்றதை வைத்து பிழைப்பவர்கள். மற்றவர்கள் வேலை செயகிறார்கள் எனும்போது அவர்கள் படிப்புக்கும் உத்யோகத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை.   ஆசிரியர் தாம் கரற்பிக்கும்  விஷயங்களை நன்றாக ஆராய்ந்து மனதில் தெளிவாக புரிந்து கொண்டால் தான்  மாணவர்களுக்கு கற்பிக்க முடியும்.  சந்தேக நிவர்த்தி செய்யமுடியும்.

ஒரு கதை சொல்கிறேன்.  ஒரு காலத்தில் ஒரு வித்வான் பாகவதம் உபன்யாசம், பிரசங்கம் செய்ய ஒரு ராஜாவிடம் சென்றான்.   
''மஹா ராஜா  நான்  பாகவதம் பிரசங்கம், உபன்யாசம் செய்பவன், உங்களுக்கும் அரண்மனையில் அனைவருக்கும்  சொல்லலாம் என்று வந்திருக்கிறேன்''
ராஜா  ஞானஸ்தன்.   ''ரொம்ப சந்தோஷம் பண்டிதரே , எதற்கும் இன்னொருமுறை  ஸ்ரீமத் பாகவதத்தை நன்றாக  படித்துவிட்டு வாருங்கள்'' என்று பதிலளித்தான். சிலநாள் கழித்து பண்டிதன் திரும்பி வந்தான்.  ''மறுமுறை படித்துவிட்டேன். எப்போது நான் பிரசங்கம் ஆரம்பிக்கலாம்?''
''இன்னொரு முறை ஆழ்ந்து படித்துவிட்டு வாருங்கள்''  ஒருமுறை இருமுறை அல்ல, இருபத்தியொரு முறை பண்டிதன் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டான்.  நாம் படித்ததில் எது விட்டுப்போய் விட்டது என்று  பண்டிதனுமும் விடாமல் நன்றாக கவனமாக பாகவதத்தை திரும்ப திரும்ப படித்து புரிந்துகொண்டான்.  அவனுக்கு  தான் என்பது மறந்து போய்,  ஆத்மா  என்றால் என்ன என்று புரிந்துவிட்டது,  நேராக  காட்டுக்கு தவமிருக்க போய்விட்டான்.  
எங்கே  பண்டிதன் வரவில்லையே என்று ராஜா அவனை தேடி சென்றான்.  அவன் தவமிருக்க காட்டுக்கு சென்றுவிட்டதை அறிந்து அங்கே சென்று அவனை வணங்கி ''இப்போது நீங்கள் பாகவதம் சொல்ல ரொம்ப பொருத்தமானவர். வந்து எங்களுக்கு உபதேசியுங்கள்'' என்று  வணங்கினான்.
ஆசிரியர்கள்  தாங்கள் கற்பிப்பதை நன்றாக உணர்ந்து கடைபிடித்தால் தான் மற்றவர்க்கு கற்பிக்க முடியும். 
 தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...