Sunday, September 5, 2021

ULLADHU NAARPADHU

 உள்ளது நாற்பது -- நங்கநல்லூர் J K SIVAN

'அஞ்ஞானமும் ஸ்வரூப பக்தியும்''

''உருவந்தா னாயி னுலகுபர மற்றா
முருவந்தா னன்றே லுவற்றி – னுருவத்தைக்
கண்னுறுதல் யாவனெவன் கண்ணலாற் காட்சியுண்டோ
கண்ணதுதா னந்தமிலாக் கண்ணாமே – யெண்ணில் 4''

ஒன்று நன்றாக புரிந்து கொள்வோம். ''நான் '' என்று உள்ளே இருப்பது இந்த தேகம் தான் என்றால் அது சதை, தசை, எலும்பு மாமிசத்தால் ஆனது என்றால் அதை மனதில் உருவகப்படுத்தி நாம் காணும் ஈஸ்வரன், உலகம் எல்லாமே உருவத்தால் அப்படி ஆனது மாதிரி தோன்றும்.

அப்படி இல்லை, '' நான்'' உருவமற்றது என்றால் உலகம், ஈஸ்வரன், எதையுமே உருவத்தோடு காணமுடியாது. கிடையாது. இருப்பதாக கண்டால் அது வெறும் மாய தோற்றம். உண்மையை அறிய வேண்டுமானால் கோடி சூர்ய பிரகாசமான ஆத்ம ஒளி வேண்டும். ஞானக் கண் இல்லாமல் அதை காணமுடியாது. ஈஸ்வரன், அவன் படைத்த உலகம், ஜீவன் , எல்லாமே திருஷ்டியில் பட ஒளி படைத்த கண் வேண்டும். காண்கின்ற அந்த கண் இன்றி உண்மைப் பொருளை காண முடியாது.
கண் ஒரு கருவி. அது பார்க்கிறது என்றால் அது மனத்தின் இயக்கத்தால், செயலால் தான் முடியும். கண், காது, புலன்களை இயக்குவது மனம், புத்தி.
ஒரு தடவை ஸ்ரீ ரமணாஸ்ரமத்துக்குச் சில முஸ்லிம்கள் வந்தார்கள். அவர்கள் ஸ்ரீ ரமணரிடம்பேசியதன் குறிப்பு இது தான்:

''ஐயா, நீங்கள் சொல்லும் ஈஸ்வரனுக்கு உருவம் உண்டா?''
ரமணர்: '' இருக்கு என்று யார் சொன்னது?'''
அப்படியென்றால் உருவ ஆராதனை தப்பில்லையா?'''
அதிருக்கட்டும். கேள்வி கேட்ட உங்களுக்கு உருவம் உண்டா?''
''ஓ, உண்டே, இதோ உங்கள் முன்னால் நிற்கிறேன்''
''இந்த கரிய, உருக்கொண்ட, ஐந்தரை அடி உயர தாடி மீசை ஆசாமி தான் நீங்களா?"''
'ஆமாம்'''
'நீங்கள் அசந்து தூங்கும்போதும் இந்த உருவம் தானா?''
''தூக்கத்தில் தெரியாது. தூங்கி எழுந்ததும் நான் இந்த உருவம் தான் என்று தெரியும்'
''இந்த சரீரம் ஒருநாள் இறந்து போகும் இல்லையா. அப்படி இறந்த பின்னாலும் இதே உருவம் தான் நீங்களோ''
''ஆமாம் என்று தான் சொல்வேன்'''
'உடல் இறந்தால், மற்றவர்கள் தூக்கிச் செல்வார்களே , அப்போது ''நோ நோ'' அதெல்லாம் இல்லை. இது என் வீடு, என் மக்கள், என் சொத்து, நான் இங்கேயே தான் இருப்பேன். எடுத்துச் சென்று எல்லாம் புதைக்க விடமாட்டேன்'' என்று இந்த உருவம் தான் சொல் லுமோ ?'
'அந்த முஸ்லிமுக்கு பொட்டில் அறைந்தது போல் இருந்தது இந்த கேள்வி.'

'சாமி நீங்கள் சொல்வது புரிகிறது. நான் இந்த தாடி மீசை ஆசாமி இல்லை. இந்த தேகம் இல்லை. இதற்குள் இருப்பவன். உள்ளே இருக்கும் உயிர் தான் நான் ''
''ஐயா இதுவரை நீங்கள் இந்த தேகம் தான் நீங்கள் என்று நம்பிக் கொண்டிருந்தீர்கள், இது தான் அடிப்படை அஞ்ஞானம் என்பது. இது தான் தாய் அஞ்ஞானம். இதிலிருந்து தான் மற்றதெல்லாம் குட்டி குட்டியாக பிறக்கிறது. இந்த மூல ''அவித்யா '' நாசமாகும், அழியும் வரை, அஞ்ஞான பரம்பரை தொடர்ந்து கொண்டே இருக்கும். அவித்யா அழிந்தால் அஞ்ஞானம் மறைந்து ஞானம் பிறக்கும்''
தனது உருவத்தையும், மற்ற உருவங்களையும் பற்றி எப்போதும் எண்ணிக் கொண்டிருக்கும் போது மனதை ஈஸ்ரன் மேல் செலுத்த முயன்று, அவனது நாமத்தில் நிறுத்தி, ஒருமுகப்படுத்தினால் ஸ்வரூப பக்தி சித்திக்கும். சித்தம் சுத்தமானால் தனக்கு உருவமும் தேகமும் இல்லை என்று தெளிவாகும்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...