Thursday, September 16, 2021

thiruppudai maruthur

 


பார்க்காத ஒரு பூக்கோவில். --  நங்கநல்லூர்  J K SIVAN   

நான் திருநெல்வேலி சென்றிருக்கிறேன்.  ஆனால்  வீரவநல்லூர் போக வாய்ப்பு கிடைக்க வில்லை.  அம்பாசமுத்திரம் தாலுகாவில்  வீரவநல்லூரிலிருந்து  7 கி.மீ. தூரத்தில் ஒரு அற்புத கிராமம் இருக்கிறது. அதன் பெயர் திருப்புடை மருதூர்.    தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம் அருகே  திருவிடை மருதூர்  மத்யார்ஜுனம் என்ற புகழ் பெற்ற  சிவாலயம் இருப்பது   எல்லோரும் அறிந்தது.  திருவிடை மருதூர் வேறு, திருப்புடை மருதூர் வேறு    இங்கே  சிவன் பெயர் நாறும்பூநாதர்.  அம்பாள் பெயர்  கோமதி அம்மன்.  1500 வருஷ பழைய சிவாலயம். 

 வடக்கே  காசிக்கு சமமாக  மூன்று    ஆலயங்கள் தெற்கே உண்டு.  ஒன்று   உத்தர காசியாகிய மல்லிகார்ஜூனம். நிறைய குரங்குகள் என்னை  துரத்தியது ஞாபகம் இருக்கிறது.  ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம்  தான் மல்லிகார்ஜுனம்.  ரெண்டாவது  மத்ய காசி எனப்படும்  திருவிடைமருதூர்.  இது தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர்.  இதற்கு மத்யார்ஜுனம் என்று பெயர். அற்புதமான கோவில். பல முறை சென்றிருக்கிறேன். 
மூன்றாவது தக்ஷிண  காசி எனப்படும் புடார்ஜூனம்  எனப்படும் திருப்புடைமருதூர்.  இன்னும் போக பாக்யமில்லை.   இந்த  மூன்று  சிவாலயங்களிலும் உள்ள   ஒரே  மகத்தான ஒற்றுமை  ஸ்தல விருக்ஷம்.  மூன்றிலும் மருத மரம் தான் புனித விருக்ஷம். 

ஆற்றின்  கிழக்கு கரையோர இந்த  சிவாலயத்தில் ராஜகோபுரம் ஐந்து நிலை,  பதினோரு கலசங்கள் கொண்டது. பாண்டிய ராஜாக்கள்,   விஜய நகர சாம்ராஜ்ய நாயக்கர்கள் கட்டி பராமரித்த ஆலயம்.  திருப்புடைமருதூருக்கு வேறே பெயர்களும்  உண்டு.   மருத புரம், சுந்தரவனம், புடார்ஜூனம் , தக்ஷிணகாசி, சுரேந்திரபுரி என்று மற்ற பெயர்கள்.   அங்கேபோனால்  இந்த பெயர்களை சொல்லி எங்கே இருக்கிறது என்று எவரையும் கேட்காதீர்கள். அந்த மாதிரி ஊர் இங்கே இல்லை என்று திருப்பி விடுவார்கள். திருப்புடை மருதூர், பூக்கோவில்,  என்றால் மட்டுமே தெரியும். 

பிரம்மாவின் பிள்ளை ஸ்வயம்பு மனு   பூலோகத்தில் பல  ஸ்வயம்பு  லிங்கங்கள் உள்ள  சிவ ஸ்தலங்களுக்கு சென்றான்.  வழியில் அகஸ்தியரைப் பார்த்தபோது 

 ''டேய் , மனு,  நீ எப்படி திருப்புடை மருதூர் போகாமல் வேறெங்கெல்லாமோ சென்றாய். என்று இங்கே வருவதற்கு வழி சொன்னார்.    மனு இங்கே அப்போது  மருத மரத்தின் அடியில் லிங்கமாய் நின்ற  நாறும்பூ நாதரைப்பார்த்தான்.  அவன் வரும்போது தூரத்திலிருந்தே  பார்வதி, லக்ஷ்மி  சிவனை வணங்குவதை பார்த்துவிட்டு ஓடிவந்தான். அதற்குள்  காட்சி மறையவே,  மனம் வருந்தி தனது சிரத்தை வெட்டிக்கொள்ள அருகில் இருந்த மருதமரத்தில் வாளை செருகி தலையை அதன் மேல் வைத்து துண்டித்துக் கொள்ள முயன்றான்.    வாள்  மருத மரத்தில் செருகப்பட்டவுடனே, மரத்திலிருந்து  ரத்தம் கசிய ஆரம்பித்துவிட்டதால் அதிர்ச்சி அடைந்தான்.   ‘நிறுத்து’ என்று அசரீரி  சப்தம் கேட்டது.  உடனே மருத மரத்தின் பொந்தில் இருந்து  சிவன் தோன்றி  ஸ்வயம்பு மனுவுக்கு  தரிசனம் தந்தார்.  

''பரமேஸ்வரா, உனக்கு கோவில் இல்லையே , இங்கே ஒரு கோவில் கட்ட  உத்தரவு தரவேண்டும் ''
''மனு,  இந்த மருத மரத்தின் கிழக்கே   சற்று தூரத்தில் ஒரு ஸ்வயம்பு லிங்கம் இருக்கிறது. அதற்கு கோவில் கட்டு ''
இங்கே  அப்போது மனு கட்டியகோயில் காணோம். 
களக்காடு ராஜ்யத்தின்  ராஜா  வீரமார்த்தாண்டன்  ஒரு சமயம் இங்கே  வேட்டைக்கு வந்தான். ஒரு மானைக்  கண்டு தனது அம்பை எய்தான். அப்போது மான் மறைந்து விட்டது. ஆனால் ராஜா எய்த அம்பு மருத மரத்தின் பொந்தில் குத்தி நிற்க, அங்கே சிவலிங்கம்  இருப்பதை  ராஜா  பார்த்துவிட்டு  உடனே  இந்த இடத்தில் பெரிய ஆலயம் எழுப்பினான்.

இது வரை  திருப்புடை மருதூர்   சிவனுக்கு ஏன்  ''நாறும்பூ நாதர்''  என்று  பெயர் என  சொல்லாமல் விட்டுவிட்டேனே.   அடிக்கடி  மறதி வந்துவிடுகிறது.  நல்லவேளை இப்போது சொல்கிறேன். 

ஒருநாள்  கருவூர் சித்தர்  பல  ஆலயங்களுக்கு சென்றுவிட்டு  நடந்தவர்    தாமிரபரணியின் வடகரை வழியாக இந்த பக்கம் வந்தார்.  அவர் கண்ணில் ஆற்றின் அக்கரையில்  இந்த சிவாலயம் பட்டது.  எப்படி ஆற்றைக் கடப்பது? பெரும் வெள்ளம் ஓடுகிறதே.   சிவனின் பெயர்  என்னவாக இருக்கும்? தெரியவில்லையே, அழைக்க முடியவில்லையே,.   காற்றில்  கம்மென்று  நறுமணம் வீசிக்கொண்டே இருந்தது.    யோசித்துக்கொண்டே நின்றார்.  தமிழ் சித்தர் அல்லவா?    சிவனே,  ‘நாறும்பூநாதா’ என சத்தம் போட்டு அழைத்தார்.   

''பரமேஸ்வரா, உன்னை காண முடியாமல் ஆற்றிலே வெள்ளம் போகிறதே, நான் சொல்வது உனக்கு கேட்கிறதா?” என்று  உரக்க கத்தினார்  சித்தர்.

அக்கரையில், சிவனின் காதில் ஆற்று  வெள்ளத்தின் ஓ   வென்ற சப்தம் பறவைகளின் சப்தஜாலம் தவிர கருவூர் சித்தர் கத்தினதும் கேட்டது.  உடம்பை இடது பக்கம் சாய்த்து, செவிமடுத்து  சித்தர் குரலைக்  கேட்டான் சிவ பெருமான். வெள்ளம்  வடியவைத்தான்.  ஆற்றில் இறங்கி அக்கரைக்கு நடந்தார் சித்தர். சிவனுக்கும்  ''நாறும்பூ நாதர் ''என்ற பெயர் நிலைத்தது. நமக்கும் ஒரு ஸ்வாரஸ்ய மான கதை கிடைத்தது.    சிவன் இன்றும்  இடது பக்கம் சாய்ந்த சிவலிங்கமாக , புடார்ஜூனனாக  காட்சி தருகிறார்.  கோமதி அம்பாள் அபூர்வமான நீலக்கல் திருமேனி கொண்டவள். அருள் ஸ்வரூபமானவள். பெண்களின் நோய்களை தீர்ப்பதில் சிறந்த  லேடி டாக்டர் என்று ஊரெல்லாம் புகழ் பெற்றவள். இன்றும்  இங்கே   பேய், பிசாசு தொந்தரவு,  கெட்ட ஆவிகள்   பிடித்த பெண்கள், மனநலம் சரியில்லாதவர்கள் அம்பாள் சன்னிதியில் இருந்து தினமும் வழிபட்டால் 21 நாட்களில் குணமாகும் என   எண்ணற்ற பக்தர்கள் வருகிறார்கள்.  நோய்கள் நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் பாயசம்  செய்து ஆற்றங்கரையில் நீராடி படித்துறையை கழுவி அதில் வைத்து சாப்பிடுவார்கள். இதை  ''படி பாயசம்'' என்று  அம்பாள் பிரசாதமாக தருகிறார்கள்.

கடைசியாக ஒரு விஷயம்.   தாமிரபரணி, கடனா நதி, ராமநதி  என்ற மற்ற ரெண்டு ஆறுகள்  சங்கமித்து வடக்கு நோக்கி உத்தரவாஹினியாக ஓடுகிறது   ரொம்ப விசேஷம்.   சிவ சக்தி ரூபிணி யான   தாமிரபரணி   பரமேஸ்வரன் பார்வதி அம்சம்.  இதை  தாமிரபரணி மகாத்மியம்  விவரிக்கிறது. திருப்புடை மருதூரை சுற்றி  தாமிரபரணியில்  பதினோரு தீர்த்தங்கள் இருப்பதாக  சொல்லப்பட்டிருக்கிறது. 

இன்னொரு  ஐதீகம்:    விஷ்ணு, ப்ரம்ம  இந்திராதி தேவர்கள்  ராக்ஷசர்களிடம் தோற்று  மறைய இடம் தேடினார்கள்.   ஈஸ்வரா,  காசிக்கு ஒப்பான ஒரு இடம் காட்டு ?  என்றபோது சிவன்  ''ப்ரம்மா, இதோ எனது தண்டம், இதை கங்கையில் இடுகிறேன், இது எங்கே நிற்கிறதோ அங்கே  சென்று   வழிபடுங்கள்'' என்கிறார்.  கங்கையில்  தண்டம் மிதந்து சென்றது.  அது எங்கே போகிறது என்று பின் தொடர்ந்து விஷ்ணு கருடன்மேல் பறந்தார்.  பிரம்மன் ஹம்சத்தின் மேல் தொடர்ந்தான். கங்கை கடலில் கலந்தது. சிவனின்   தண்டம்   கடலில் கரையோரம் மிதந்து பாரத பூமியை சுற்றியது.  தாமிரபரணி கடலில் சங்கமமாகும் இடம் வந்தது.  க நதியில் புகுந்து எதிர்திசை சென்றது.  திருப்புடை மருதூர் கோவிலுக்கு  மேற்கு புறம் வந்து நின்றது.  அந்த ப்ரம்ம தண்டம் அங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு எல்லா தேவர்களும்  சிவனை வணங்கினார்கள்.  அங்கே தான் இப்போது நாறும்பூ நாதர் இருக்கிறார். போதுமா? 

திருப்புடை மருதூரை  தைப்பூச தீர்த்தவாரி உற்சவம்  சிறப்பாக நடப்பதால் தைப்பூச தீர்த்தவாரி ஊர் என்று அடையாளம் காட்டுவார்கள். நாறும்பூ நாதர் ஆலயம்,  என்பதால்   ''பூக்கோவில்'' என்றும் உள்ளூரில் பெயர். 

ஒரு காலத்தில் ஜேஜே  என்று  களை  கட்டிய  அக்ராஹாரம் இப்போது தூங்கும் சந்து ஆகிவிட்டது காலத்தின் கொடுமை. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு  மாற்றங்களால் மனம் கலங்காது தெளிந்த நீராக தாமிரபரணி ஓடிக்கொண்டு இருக்கிறாள்.

இது மாதிரி கோவில்களுக்கு  கொரோனா முடிந்தபிறகு எல்லோரும் செல்லவேண்டும்.  அர்ச்சகர் களுக்கும் உதவி செய்யவேண்டும். ஆலயத்திற்கு பூஜை தீபம் ஜெகஜோதியாக எரிய நிறைய பொருள்கள் காணிக்கையாக வழங்கவேண்டும். 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...