Monday, September 20, 2021

ORU ARPUTHA GNANI

 ஒரு அற்புத ஞானி -  நங்கநல்லூர்  J K SIVAN 

- ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்-

அம்மாவின் மூன்று தட்டுகள்...

ஒவ்வொரு  தாய்க்கும்  தந்தைக்கும் தங்கள் பிள்ளைகள் பெண்களைப்பற்றி  கலர் கலராக கனவுகள். எல்லாம் சுயநலம் அல்ல. அவர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும். எல்லா கஷ்டங்களும் நம்மோடு போகட்டும் என்ற பரந்த தியாக மனப்பான்மை.

இவ்வாறு  மனித மனம் எத்தனையோ எதிர்பார்ப்புகளை அடைய முடியாமல்  வாடி வதங்குகிறது.  துன்புறுகிறது. விவேகம் அதை டாக்டர் போல் சாமாதானமடைய செய்யும் வரை இந்த துன்ப நோய், ஏமாற்றத்தால் அதிகமாகி வாட்டுகிறது. இதில் படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே கிடையாது. ஆண் பெண் பேதமே கிடையாது. மேலும் மேலும் இந்த பாதிப்பு தொடர்ந்து கொண்டே போனால் அது மனிதனின் வாழ்க்கையையே தின்று விடுகிறது.

சொந்தத்தில் சேஷாத்ரிக்கு என்று மனதில் நினைத்திருந்த  காகினிக்கு  வேறொரு பையனோடு கல்யாணம் நிச்சயமாகி விட்டது. காரணம்,   சேஷாத்திரியின் ஜாதக பலன்.  அவன் கிரஹஸ்தன் ஆகமாட்டான், சன்யாசியாவான் என்ற கணிப்பு.  காமினியின்  கல்யாணத்துக்கு  அழைப்பு வந்தது, சேஷாத்ரியின் அம்மா மரகதம் கல்யாணத்துக்கு  சென்று பெண்ணை வாழ்த்தி விட்டு  வந்தாள். அதன் பின்  மரகதம் முற்றிலும் துறந்த சன்யாசினியானாள்.   தேகத்தை லக்ஷியம் செய்யவில்லை. மெலிந்தாள் . உணவை வெறுத்தாள். உபவாசங்களால் இளைத்தாள் . ''மரணமே வா'' என்று வரவேற்றாள். நோய் வலுத்தது. அவள் சகோதரன் நரசிம்ம சாஸ்திரி காலமானார் என்ற சேதி வந்தது. அது எரியும் தீயில் எண்ணையை வார்த்தது. நாட்கள் மரகதத்துக்கு வேகமாகவே நகர்ந்தன. கார்த்திகை மாதம் வந்தது. சுக்ல பக்ஷ தசமியும் நெருங்கியது.

ஒரு நாள்  அன்ன ஆகாரம் இல்லாமல்  வெறும் கற்சிலையாக  எங்கோ வெட்டவெளியைப் பார்த்தபடி   விரக்தியாக மரகதம் அமர்ந்திருந்த  போது வெளியே சென்றிருந்த  சேஷாத்ரி வீடு திரும்பினான். 
''சேஷு இங்கே வாடா ''
''அம்மா! கூப்டியா. இதோ இருக்கிறேன் அம்மா. சொல். என்னம்மா  வேணும் '' - தெய்வம் கேட்டது.
''நீ தாண்டா கண்ணே வேணும். எனக்கு  வேறெதுவும் வேண்டாம். நாளை சாயங்காலம் நான் இருக்க மாட்டேன். அதுவரை எங்கும் வெளியே போகாமல் என்னோடேயே இருக்கிறாயா?''
''சரிம்மா''
மறுநாள் ஏகாதசி. மரகதம் எழுந்து உட்கார்ந்தாள். மெதுவாக நகர்ந்தாள் விளக்கேற்றினாள் . கண்களை மூடினாள்.
''சத் சங்கத்வே நிஸ்ஸங்கத்வம். நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம், நீர்மோஹத்வே நிஸ்சல தத்வம், நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:'' 

ஆதி சங்கரரின் ஸ்லோகத்தை மெதுவாக முடியாமல் முனகினாள். எவ்வளவு சிறந்த பாடகி. கந்தர்வ கானம் பண்ணி பெயரெடுத்தவள்.  அற்புதமான சாரீரம் படைத்தவள்,  இப்போது எல்லாம் அடங்கி ஒடுங்கி விட்டதால்  முனகலாகிவிட்டது. 

''தர்சன தப்ரஸ்தஸி ஜனநாத் கமலாலயே, காச்யாந்து மரணான் முக்தி ஸ்மரணாத் அருணாச்சலே ''
அருணாசலத்தை நினைத்தாலே, ஸ்மரணம் பண்ணினாலேயே, முக்தி. 

இந்த ரெண்டு ஸ்லோகங்களையும் ரெண்டு மூணு தடவை திருப்பி திருப்பி சொன்னாள் . அருகே இருந்த சேஷாத்திரி மார்பில் தனது குச்சி போன்ற கைகளால் தட்டி தட்டி சொன்னாள். மூன்று தடவை அடித்து சொன்னாள் .

''சேஷா, நீ அந்த ''அம்பா சிவே'' என்ற கீர்த்தனத்தை ஒரு தடவை பாடேன். முடிஞ்சா நானும் சேர்ந்து உன்னோடு பாடறேண்டா''

சேஷாத்ரி அர்த்தம் உணர்ந்து அழகாக பாடினான். முக்கி முனகி தானும் சேஷாத்ரியோடு சேர்ந்து மரகதமும் பாடியது அந்த ஏழைக் குடிசையில் நான்கு மண் சுவர்களையும் தாண்டி எல்லா லோகங்களையும் தரிசித்து விண்ணில் எதிரொலித்தது. சிவன் பார்வதி காதிலும் விழுந்தது. மகிழ்ந்தார்கள்.

பாட்டு முடிந்தது. மெதுவாக ஈனஸ்வரத்தில் மரகதம் ''அருணாசலா . அருணாசலா, அருணாசலா என்று மூன்று தடவை உச்சரித்தாள் . நாபியிலிருந்து ப்ராணவாயுவுடன் கலந்து வார்த்தை வெளியே தெறித்தது. சேஷாத்திரியின் மடியில் இருந்த தலை சாய்ந்தது. சேஷாத்ரியின் கண்களில் கண்ணீர் பெருகி அவள் முகத்தில் சூடான வெந்நீர் போல் விழுந்தது. சூடோ குளிர்ச்சியோ  இனி அவளுக்கு இல்லை. எல்லாம் ஒன்றே.   சேஷாத்ரியின் தலையும் பின்னால் சாய்ந்தது. தாய் மரணத்தை தழுவ மகன் மூர்ச்சை அடைய இரு உடல்களும் அசைவற்று சிறிது நேரம் அந்த சிறு குடிசையில் இருந்ததை எவரும் அறியவில்லை.  உலகம் தன்னுடைய  காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

சூரியன் பயணித்துக் கொண்டிருந்தான். சேஷாத்ரி மூர்ச்சை தெளிந்தான். முகத்தில் என்ன உணர்ச்சி என்று சொல்லவே முடியாத உறைந்த முகமாக இப்போது நாம் சொல்கிறோமே அந்த ''ரோபோ'' மாதிரி ஆனான். அண்டை அசல் தெரிந்தவர் தெரியாதவர் எல்லாருக்கும் விஷயம் பரவியது. கூடவே தம்பியும் வந்து சேர்ந்தான். ரெண்டு பேருமாக மற்றவர் உதவியோடு அம்மா மரகதத்தை, இனி அவள் உடல் தானே, அதை அக்னியிடம் சேர்ப்பித்தனர்.

சேஷாத்ரியின் மனம் வெறுப்பு கோபம், நிர்க்கதி, போன்ற நெருப்புகளால் எரிந்தது. ஞானம், சாந்தம் என்ற இரு தீயணைக்கும் கருவிகளால் அதை சமனப் படுத்தினார். ஆம் இனி நாம் சேஷாத்ரியை அவன் இவன் என்று சொல்லமாட்டோம்.  சொல்லக்கூடாது. அந்த  ஸ்டேஜ் தாண்டியாச்சு.  அந்த நிலை கடந்த மஹான்  அவர். தாயின் சடங்குகள் முடிந்தன.

சித்தப்பா ராமஸ்வாமி ஜோசியர் வீட்டுக்கு சேஷாத்ரி அழைக்கப் பட்டார். பூர்வீக நில புலன் கொஞ்சம். அதோடு ஜோசிய வருமானம் போதும் என்கிற அளவுக்கு இருந்தது.குடும்பத்தில் வசதியோ வறுமையோ தலை தூக்கும் பிரச்சனையாக இல்லை.

பந்து பூமியில் பட்டு எழும்புமே அது போல் தனது தாய் மரகதம் சொன்ன, இல்லை மார்பில் அடித்து, தட்டி, சொன்ன, வார்த்தைகள் மூன்று ஆசைகளையும் தட்டி வெளியே கொண்டு தள்ளி விட்டது. மண், பெண் பொன் . ஒரு மனிதனின் வாழ்விலேயே இது மூன்றும் தானே மிகப் பெரிய பிரச்னை. அதற்கு வழியும் அவளே சொல்லித் தந்தாளே . சும்மாவா? அடித்து அல்லவோ சொன்னாள் . ''அருணாசலா, அருணாசலா அருணாசலா....... சேஷாத்திரியால் குடும்பத்தில் இருக்க முடியவில்லை. வைராக்
யத்தை உள்ளிருந்து பூதாகாரமாக உருவெடுக்க வைத்தது.எங்கே இருக்கிறது அருணாசலம்? கேள்விப்பட்டதோடு சரி. இதுவரை போனதில்லை, எங்கிருக்கிறது திருவண்ணாமலை என்றே தெரியாது.

கால் போன போக்கிலே நடந்தார்.  என்ன அதிசயம் பாருங்கள்.  ஒரு அட்டை கீழே எங்கேயோ கிடந்தது. அதை கையில் எடுத்தார். ஒரு கரித்துண்டால் ஒரு மலையின் வடிவத்தை வரைந்தார். அது என்ன ஐந்து சிகரங்கள்? என்னவோ தெரியவில்லை. மனதில் தேங்கி கொப்புளித்த பக்தியாலோ வேதனையாலோ, வேறு ஏதோ என்னால் சொல்லமுடியாத சக்தியாலோ, அந்த மலை உருவம் அப்படியே திருவண்ணாமலையை நேரில் படமெடுத்தால் போல் அமைந்து விட்டது. அவர் பார்த்ததே இல்லை. எங்கே இருக்கிறதென்றே தெரியாதே!. தகடுகள் கலர் கலராக சேகரித்து அதை பூஜித்தார். அதுதான் அவர் தெய்வம்.

ராமஸ்வாமி ஜோசியர் வீட்டில் பூஜை அன்றாடம் நடக்கும். சேஷாத்ரி எங்கோ அந்த வீட்டின் ஒரு மூலையில் ஒரு சிறு அறையில். அம்மாவிடமிருந்த காமாக்ஷி படம், ஸ்ரீ ராமர் படம், தான் வரைந்த அண்ணாமலை படம் இதெற்கெல்லாம் பூஜை நைவேத்யம் பண்ணி காலை விடிந்தது முதல் பகல் பன்னிரண்டு தாண்டியும் பூஜை.கதவை சார்த்திக் கொண்டு உள்ளேயே. பாதிநாள் உபவாசம். தாத்தா காமகோடி சாஸ்திரி உபதேசித்த மஹா ஷோடசி மந்திர உச்சாடனம். அப்பப்போ ''அருணாச்சலேசா, சோணாத்ரிநாதா'' என்ற குரல் வெளியே கேட்கும். இரவு தூக்கம் இல்லை. '' 'ஜாதவேதஸே ''-- துர்கா சூக்தம் ஜபம். காலை நாலுமணிக்கே ஸ்நானம்.

''டேய் வேண்டாம்டா, சேஷு, கடுமையான ஜபம் உனக்கு எதற்குடா?'' ஜோசியர் சொல்லிக்கொண்டே இருந்தார். யார் கேட்டார்கள்?

நண்பர் குன்னப்பாக்கம் ஸ்ரீநிவாஸாச்சாரியுடன் முன்பெல்லாம் பேசுவார், தர்க்கம், சர்ச்சைகள் நடக்கும். எல்லாம் நின்று போனது. அடிக்கடி ஸ்நானம். எப்போதும் கையில் தீர்த்த பாத்திரம்.  சக்ரத்தாழ்வார் சந்நிதியில் வடக்கு நோக்கி அமர்ந்து ஜபம். யார் வேண்டுமானாலும் காலையில் இருந்து பகல் பன்னிரண்டு மணி வரை அங்கேயும், மாலை ரெண்டு மணிமுதல் காமாக்ஷி சந்நிதியிலும் அவரை பார்க்கலாம். ஜபம் ஜபம் ஜபம். ப்ரதக்ஷிணம். த்யானம். ஸ்லோகம். நமஸ்காரம். நடு ராத்ரி வீடு திரும்புவார். உபவாசம். பட்டினி. காமாக்ஷி குங்குமம் நெத்தி நிறைந்து மறைத்திருக்கும். தனக்குத் தானே ஏதோ பேச்சு. சூரிய நமஸ்காரம். யாராவது ஏதாவது கேட்டால்     ஸம்ஸ்க்ரிதத்தில் ஒன்று ரெண்டு வார்த்தை. எந்த பெண்ணை தெருவில் பார்த்தாலும் நமஸ்காரம். தெரிந்தவர் யாரானாலும்,  பெரிசோ சிறிசோ,  அவர்கள் பாதங்களை தொட்டு வணங்குவது கண்ணில் ஒற்றிக் கொள்வது. ''ப்ராமண பாதமும் பகவான் பாதமும் ஒண்ணு '' என்று  அடிக்கடி சொல்வார்.

தெருவில் பெருமாள் வீதி ஊர்வலம் வரும். ஓடிப் போய் முன்னால் இருக்கும் கல், குப்பை, எச்சில் இலை எல்லாம் அப்புறப் படுத்துவார். சில சமயம் பின்னால் வித்வத் கோஷ்டி ஸ்லோகம், பாட்டு சொல்லிக் கொண்டு வரும். அதில் கலந்து கொள்வார். தானும் சொல்வார். பாடுவார்.
காஞ்சிபுரத்தில் கங்காபாய் சத்திரம் என்று ஒரு இடம். அங்கிருந்து ஜோசியர் வீடு நாலு மைல் . இரவும் பகலும் ஏதோ ஸ்லோகம் சொல்லிக்கொண்டே நடந்து வருவார். எங்கே தங்குகிறார் என்று அவருக்கே தெரியாது. க்ஷவரம் கிடையாது. யாராவது வீட்டிலிருந்து தேடி வந்து அழைத்து போனால் வீடு திரும்புவது என்ற நிலை வந்து விட்டது.

வாங்கீபுரம் ஸ்ரீனிவாச அய்யங்கார் வீட்டுக்கு அடிக்கடி போவார். அவர்களுக்கு சேஷாத்ரி ஒரு பிள்ளை போல. தோசை, காஞ்சிபுரம் இட்லி, வடை என்று பெருமாள்  கோவிலிலிருந்து ஏதாவது அங்கே கொண்டுவந்து  வைத்திருப்பார்கள். கொடுப்பார்கள். இல்லையென்றால் கேட்டு வாங்கி சாப்பிடுவார். பாதி அதில் காக்கைக்கும் நாய்க்கும் பங்கு உண்டு. 

''எதுக்குடா சேஷு இப்படி விடாமல் எப்போ பார்த்தாலும் ஜெபம் பண்றே'' சித்தப்பா கேட்டார்.
''கர்மம் தொலையணும் '' என சேஷாத்ரியின் பதில் வந்தது .

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...