Wednesday, September 1, 2021

ULLADHU NAARPADHU


உள்ளது நாற்பது --   நங்கநல்லூர்   J K   SIVAN -
பகவான் ரமண மகரிஷி 


''நான் கெட்டவன்''  

''உலகு கர்த்தன்  உயிர் மும்முதலை யெம்மதமும்  முற்கொள்ளும்  ஓர்  முதலே, மும்முதலாய் நிற்கும்  என்றும்  மும்முதலும்  – மும்முதலே
என்னல்   அலங்கார இருக்கும்  மட்டே யான் கெட்டு 
தன்னிலையில்  நிற்றல்  தலையாகும். -2''

உலகத்தில் அது எந்த மாதமாக இருந்தாலும் சரி,  ஆணித்தரமாக மூன்று விஷயங்களை  ஒப்புக் கொள்ளும். தனிமனிதன், ஜீவன்;  உலகம்,  ஜகத்:   ஈஸ்வரன்   அவரவருக்குண்டான கடவுள்.இந்த மூன்றும் வெவ்வேறு அல்ல. ஒன்றின் மாறுபட்ட தோற்றம். ஒன்றே தான் மூன்றும். மனிதர்களின்  புரிதல் வித்யாசப் படுவதால்,  ஒன்றையே  மூன்றாக பார்ப்பதும்,  மூன்றும்  தனியானவை, வெவ்வேறானவை என்பதும்  வாதமாகிறது. இப்படி மாறுபடுத்தி பார்ப்பது மனிதனின் புத்தியில் விளைவது. அஹங்காரம் எனும் அகந்தையால் விளைவது.  நிஷ்டையில் இருப்பவன்  கண்ணை மூடி தியானம் செய்த போதிலும்  நான் என்ற  அகந்தை உள்ள வரை  இந்த மூன்றும்  வித்தியாசமா கத்தான் தெரியும்.

ஆரம்பத்தில் ரமணர்  விரூபாக்ஷ குகையில் இருக்கும் போது அவரைப் பார்த்த ஒரு பக்தர்  பின்னர்  பல வருஷங்களுக்குப் பிறகு  ரமணாஸ்ரமத்தில்  பகவானை சந்தித்தார்.  அவர் மனதில் இருந்ததை வார்த்தையால் கொட்டி விட்டார்: 

''சுவாமி, அப்போ எல்லாம் விரூபாக்ஷ குகையில் மெளனமாக, கல்லிலும் மண்ணிலும்   இருந்த பெரிய மஹான்,   ஆகாரத்தை தேடாத  பகவான்,  இப்போது சோபாவில் உட்கார்ந்து,  எல்லா வசதிகளுடன் , எல்லோருடனும்  பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்   '' நீங்கள்  கெட்டுப்போய் விட்டீர்களே''   என்றார். 

பகவான்  சிரித்துக்கொண்டே   ஆமாம்  என்று தலையாட்டினார்.  

அப்புறம் அந்த பக்தர் போன பிறகு, மற்ற  சில பக்தர் கள்   ரமணரிடம்   ''சுவாமி, எங்களுக்கு  எல்லாம்  அதிர்ச்சி. அந்த  மனிதர்  சொன்னதை  ஆமாம் என்று ஆமோதித்தீர்களே''  என்றார்கள். 

 '' ஆமாம், அவர்  சொன்னது உண்மை தான்.
''யான் கெட்டு  தன்னிலையில் நிற்றல் தலை ''   
நீங்கள் கெட்டுபோய்விட்டீர்கள் என்று அவர் சொன்னது உண்மை. ''நான்'' கெட்டால் தான் ஒவ்வொருவரும் ஸ்வயமான  உண்மை ஸ்வரூபத்தில் அபேதமாக தனித்து நிற்க முடியும் '' என்றார் ஸ்ரீ ரமணர்.
 
அகங்காரம் உள்ளவரை,  த்ரிபுடி,  அதாவது  காண்பது, காண்பவன், காணும் செயல் மூன்றும் வேறாக தெரியும்.  இவை பிரம்ம  ஞானத்தை  மறைத்துவிடும். தேவையற்றவைகளை தேட வைக்கும். புலன்களுக்கு வேலை கொடுத்து அனுபவிக்க செய்யும்.  உண்மை யான ஸ்வரூபத்திலிருந்து நம்மை மாற்றி,  கற்பனை களுக்கு இடம் கொடுக்க வைக்கும். நான் எனும் அகந்தையை வாஸ்தவம் என்று அங்கீகரிக்கக்கூடாது.  அறியாமைக்கு  தான் அவித்யா என்று பெயர்.  குருவருள் ஒன்று தான் இதிலிருந்து மீள வழி.  

நாம்  எல்லோரும்  எப்போதுமே  ஆத்மா தான்   என்று   மறக்காமல் நினைவூட்டிக்கொண்டு வந்தால்  அகந்தை அழியும்.  தேகம் மறந்து போகும்.  ''தத் த்வம்  அஸி''  அது தான்.  ''நீ  அதுவாக இருக்கிறாய்'' ''அது''  என்பது உருவமற்ற, பேதமற்ற, கால, நிறமற்ற பூரணத்வ  ஆத்மா. சத்யம்,  ப்ரம்மம்''.

த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம்  எந்த கோட்பாடும்  அஹங்காரம்  உள்ளவரை ஞானமாகாது . காரணம் என்னவென்றால் இவை அனைத்துமே  மனத்தையும்  அதோடு ஒட்டிக்கொண்டிருக்கும்  அஹங்காரத்தோடும்  சேர்ந்தவை.  ''மனோ நாசம்''  என்று பகவான் அடிக்கடி சொல்வார்.  மனது, அஹங் காரம்  ஒழிய   ''நான் யார்''  என்ற விடாத  ஆத்ம விசாரம் அவசியம். அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக  ஆத்மா புலப்படும்.  மனமும் அதோடு சேர்ந்த  நான் எனும்  அஹங்காரமும் விலகும். அவித்யாவிலிருந்து  உயர்வோம்.   அப்புறம்  துக்கம் சுகம் எதுவும் இல்லை.  

ரமணரைப் பார்த்த  பக்தர்  ''நீங்கள் கெட்டு விட்டீர்கள்''  என்பது எவ்வளவு பெரிய  ஆசிர்வாதம்.  ''நான்'' கெட   எவ்வளவு பாடு பட்டிருக்கிறார்  பகவான்  சின்னவயது முதல்.!

தொடரும்    


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...