Thursday, September 9, 2021

pollap pillaiyar

 


பொல்லாப்பிள்ளையார் பரிசு  --  நங்கநல்லூர்  J K SIVAN

இன்று  விநாயக சதுர்த்தி . நமக்கு பிள்ளையாரை கொள்ளை கொள்ளையாக பிடிக்கும். அவருக்கு  ரொம்ப பிடித்த ஒருவரை நாம் கட்டாயம்  இன்று  நினைக்கவேண்டும்.

திருநாறையூர்   என்கிற ஊர்  கும்பகோணத் திற்கு அருகே  உள்ள  ஒரு க்ஷேத்ரம்.  இங்கு  வாழ்ந்த ஒரு  மஹா  புண்ய புருஷரால்  தான்  சம்பந்தர், அப்பர், சுந்தரர்  இயற்றிய  தேவார  பாடல்கள்  நமக்கு  கிடைத்தன  என்ற போது நாம்   அவரைப்  பற்றி  கொஞ்சமாவது  தெரிந்து கொள்ள வேண்டாமா?. அவர்    63 நாயன்மார் களைப்  பற்றியும் சுந்தரரின் திருத் தொண்டத் தொகையில் வரும்  63  சிவ பக்த நாயன்மார் களைப் பற்றியும்   மிக அருமையாக  நமக்கு  அளித்தவர். இந்த குறிப்பை வைத்துக் கொண்டு தான்   பிற்காலத்தில் சேக்கிழார்  தமது  திருத்தொண்டர் புராணம்   இயற்றினார் என்பார்கள்.   இந்த  புண்ய  புருஷர்  இயற்றிய  பதிகங்கள்  11வது திருமுறையில்  இடம் பெற்றுள் ளன. அந்த  மேதை இளம்  வயதிலேயே  சிவன்  கோவில்களில் சிவாசார்யராக இருந்தவர்.   முறையாக வேதம்  பயின்று,  சாஸ்திரங்களில்  தேர்ச்சி பெற்றவர்.  அவர்   பெயர் தான்  நம்பி யாண்டார்  நம்பி.

 சிறுவயதில் ஒரு   பிள்ளையார்  சதுர்த்தி  அன்று  அவரது  அப்பா  வேறு ஒரு  ஊருக்கு  அவசர ஜோலியாகச்  செல்ல வேண்டியிருந்தது.  அவர் வீட்டுக்கு அருகே   சௌந்தர்யேஸ்வரர் எனும் சிவன் கோவில்.  அதில் ஒரு பிள்ளையார். பொல்லாப் பிள்ளையார் என்று பெயர் அவருக்கு. ரொம்ப நல்ல பிள்ளையார் அவர். எனோ அவருக்கு  பொல்லாப்பிள்ளையார் என்று பெயர் என்று நினைக்கவேண்டாம்.  பொள்ளாபப்பிள்ளையார் என்றால்  உளியினால்  கல்லில் உருவம் செய்யப்படாத, பொள்ளப்படாத  ( ''அம்மி கல்லுரல்  பொளியலியோ''  என்று கத்திக்கொண்டு ஒருவர்  எங்கள் தெருவில் வருவார்.   இந்த சத்தம் கேட்டு  ஐம்பது வருஷம் ஆகிவிட்டது)  பிள்ளையார்  என்றால் ஸ்வயம்பு என்று பொருள். சுற்றி வளைத்து மூக்கை தொடும் அழகு 

பொள்ளா பிள்ளையாருக்கு  தினமும்  நம்பியாண்டார் நம்பியின் அப்பா தான் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை,  பூஜை செய்து  நைவேத்யம்  அர்பணிப்பார்.    

''டேய் பயலே,  இன்னிக்கு  விநாயகசதுர்த்தி, அவன் பிறந்தநாள், நான் வெளியூர் சீக்கிரமே  கிளம்பறதாலே  நீ  பிள்ளையாருக்கு பூஜை  செய்''  

 அப்பா நம்பியிடம்  சொல்லி விட்டுப்  போய்விட்டார்.    ஆறு  ஏழு வயது  குழந்தை நம்பிக்கு  பிள்ளை யார் நைவேத்யம் உண்ண  மாட்டார்  அவருக்கு  படைத்து விட்டு  அந்த உணவை  பிரசாதமாக நாம்  தான் வீட்டுக்கு  எடுத்துச் செல்லவேண்டும் என்பது தெரியாது.  கொழுக்கட்டையை  (மோதகம்)  தட்டில் வைத்துவிட்டு  பிள்ளையார் உண்பதற்காக  வெகு நேரம்  காத்திருந்தார்  நம்பி.  நேரமாகிக் கொண்டே போனது.  பிள்ளையார்  கொழுக்கட்டையை சாப்பிட லையே?. நான் ஏதோ  தப்பு  செய்துவிட்டேனோ , கோபித்துக்கொண்டு அதனால்  பிள்ளையார்  சாப்பிட வில்லையோ  என்று பயந்து   அழ ஆரம்பித்தார்.  கோவில் சுவற்றில்   பிள்ளையார் சாப்பிடும் வரை  தலையை மோதிக்கொள் வோம்  என்று  சுவற்றில் தலையை  மோத துவங்கினான் சிறுவன் நம்பி. .

 ' நம்பி,  நீ  ஏன்  தலையை  மோத வேண்டும் . மோதகத்தை நான் உனக்காக   சாப்பிடுகி றேன்''  என்று  பிள்ளையார் வந்து   நம்பியைத் தடுத்தார்.  திருப்தியாக மோதகம்  உண்ட விநாயகர்  '' நம்பி உனக்கு   என்ன வேண்டும்  சொல்''  என்று  கேட்க,

''நான்   இன்று பள்ளிக்கூடம்  போக நேரமாகி விட்டதே.  பாடம்  போய்வி ட்டதே உன்னாலே,  ஆசிரியர்  அடிப்பாரே '  நம்பி  அழுதுகொண்டே  சொல்ல

 'அவ்வளவு தானே, ' சரி உனக்கு  நானே   பாடம்  சொல்லித்தருகிறேன்''  என்று   சகல கலா   ஞானமும்  தந்தார்  பிள்ளையார் '

 இது தினமும்  தொடர்ந்ததால்  விஷயம்   காற்றில் பரவி  அப்போதைய  சோழ  மன்னன்  ராஜ ராஜ  சோழன்  காதுக்கும் எட்டியது.  மந்திரி சேனாபதி,  ராஜாங்க பிரமுகர்கள்  புடை சூழ ஒரு   பெரிய ஊர்வலமாக    நிறைய  மா,  பலா, வாழைப்  பழங்கள், தேன்,  அவல் பொரி, இனிப்பு வகைகளுடன் பிள்ளையாருக்கு  நைவேத்யம்  பண்ண  சோழ ராஜா  வந்துவிட்டான்.  நேரே  திருநாறையூர் வந்து    நம்பியின் காலடியில்  விழுந்து வணங்கினான்.

 ''எங்கள்  தெய்வமே,  இதையெல்லாம்   உங்கள்  அருள்  மூலமாக பிள்ளையாரை  உண்ணும் படியாக செய்ய வேண்டும் ''    என  தங்கள் தாள் பணிந்து  வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்  என்று  சொன்னான்   சிறுவன்  நம்பியும்  

''பிள்ளையாரே,  வந்து  இதையெல்லாம்  வழக்கம்   போல சாப்பிட  வேண்டும்''  என்று  கேட்க,  விநாயகனும்  அத்தனை  ஆகாராதி களையும்  தும்பிக்கையின்  ஒரே வீச்சில்  எடுத்து  சுழற்றி வாயில்  போட்டுக் கொண்டான்.

கண்களில்   பக்தியும்  ஆச்சரியமும்  நீராக  வழிய  ராஜ ராஜன்  சாஷ்டா ங்கமாக நம்பியின்  காலில் விழுந்தான்.   ''என்  தெய்வமே,  எனக்கு  ஒரு  நீண்ட  கால ஆசை.   சைவ சமய  குரவர்  மூவர் எழுதிய தேவார  பதிகங்களை  முழுமையாகப்   பெற வேண்டும்.  இதுவரை  அவை  கிடைக்க வில்லையே   என்கிற குறை.  அதை  நீங்கள்  தான்  நிறைவேற்றி வைக்கவேண்டும். பிள்ளையாரப்பன் மீது  இருந்த  நம்பிக்கையில்  நம்பியும்  அவ்வாறே செய்வதாக  ஒப்புக்கொண்டார்.

''விநாயகா,   நீ  தான்  எனக்கு  இதைச்   செய்ய வேண்டும்.  எங்கே  இருக்கின்றன  அந்த  தேவார பதிகங்கள். உதவுகிறாயா,  ராஜா  எவ்வளவு  ஆசையாக  அதெல்லாம்  கேட்கிறான்?''

'' உனக்காகச்  செய்கிறேன்  நம்பி.   ராஜாவிடம் சொல்லு,  அவையெல்லாம்   சிதம்பரத்தில்  நடராஜா ஆலயத்தில்  நடராஜாவின்  பின்னால்  ஒரு  இடத்தில்   ஜாக்ரதையாக  வைக்கப்பட்டு இருக்கிறது.   அது எங்கே  என்று  ஒரு  கை  காட்டும்.  அந்த  இடத்தில்  பார்த்தால்  அத்தனை  ஓலைச்சுவடிகளும்  இருப்பது  தெரியும்.

''எத்தனை  பதிகங்கள்  அவ்வாறு  எழுதியிருக்கிறார்கள் ?''

''அதுவா,   ஞான  சம்பந்தன்  எழுதியது  16000,  திருநாவுக்கரசர் எழுதியது அதிகம்.  அவை  49000. அடுத்ததாக  சுந்தரர் இயற்றியது 39000'' என்று பிள்ளையார்  லிஸ்ட்  கொடுத்தார்.

நம்பி   இந்த விஷயத்தை  ராஜராஜனிடம்  சொல்ல  ராஜா  நம்பியாண்டார்  நம்பியை  அழைத்துக் கொண்டு சிதம்பரம் சென்று அங்கே  பிள்ளையார்   சொன்ன இடத்தில்  தேட,  அங்கு  கரையான்  தின்றது   போக ஒரு  சில  மட்டுமே  காணப்பட்டது. வருத்தத்தோடு  ராஜராஜன் கண்ணீர் விட,  நம்பியாண்டார்  நம்பி,   நடராஜரை பணிந்து  வேண்ட,  ''நம்பி,  எது வேண்டுமோ  அது  அங்கே  உள்ளது. எடுத்துச் செல்''  என  இறைவன்  அசரீரீயாக  உரைத்தான்.  ஆர்வத்தோடு  அரசன்   உடனே அந்த  ஓலைச்சுவடிகளை  படி எடுக்க  (நகல்  எடுக்க) ஏற்பாடு செய்தான்.  இன்றைய  தமிழ்  கூறும் நல்லுலகம்  இந்த  சீரிய தொண்டு  புரிந்த நம்பியாண்டார்   நம்பிக்கும் சோழன்  ராஜராஜனுக்கும்  என்றும்  தலைவணங்க  கடன் பட்டிருக்கிறது.  நமக்கு  கிடைத்திருப்பது   மொத்தத்தில் பத்தில்  ஒரு  பங்கு  கூட இல்லை.   நம்பியாண்டார்  நம்பி  இத் தேவார  பதிகங்களோடு, மணி வாசகரின்  திருவாசகம்,  திருமூலரின்  திருமந்திரம், எல்லாமும்  சேர்த்து அளித்திருக்கிறார்.   நீலகண்ட  யாழ்ப்பாணர் வம்சத்தில்  வந்த ஒரு  பெண் உதவியோடு  தேவாரப்  பண் (melody )களை  சீர் படுத்தினார்.   தான்  வணங்கும்  பொள்ளாப்பிள்ளையார் அருளால்  சுந்தரரின்  திருத்தொண்டத் திருவந்தாதி மூலம்  63 நாயன்மாரின்  சரிதம்  நமக்கு  கிடைத்திருக்கிறது.  சம்பந்தர்  வாழ்க்கை வரலாறும்  நமக்களித்தவர்  நம்பியாண்டார்  நம்பியே. நம்பியாண்டார்  நம்பியை  நன்றாக
அனுபவிக்க  படிக்க  வேண்டிய  அவர் இயற்றிய  நூல்களின்  விபரம்  :    

 திருநாரையூர் விநாயகர்   இரட்டை மணி மாலை.
கோயில் திருப் பண் இயல்விருத்தம்
திருத்தொண்டர்  திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார்  திருவந்தாதி.
ஆளுடைய  பிள்ளையார்  திருச்சபை விருத்தம்
ஆளுடைய பிள்ளையார்  திருமணிக் கோவை
ஆளுடைய  பிள்ளையார்  திருவுள்ள மாலை
ஆளுடைய பிள்ளையார்  திருக்கலம்பகம்
ஆளுடைய பிள்ளையார்  திருத் தொகை
திருநாவுக்கரசு தேவர்  திரு ஏகாதச மாலை


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...