Sunday, September 5, 2021

PESUM DEIVAM

 பேசும் தெய்வம் - நங்கநல்லூர்  J K  SIVAN --


72.  இந்து மதத்தின்  பொதுவான  கொள்கை:

1932ல்  மஹா பெரியவா சென்னை மைலாப்பூர் சமஸ்க்ரித கல்லூரி வளாகத்தில் தங்கி தினமும் பிரசங்கம் செய்தார்.  செப்டம்பர்  29ம் தேதி அன்று மாலை அவர் செய்த பிரசாங்கத்தின் தலைப்பு  
நமது   அநாதி மதம்.  

நமது ஹிந்து மதத்தில்  எத்தனையோ  உட்பிரிவுகள், சைவம், வைணவம், மத்வம் ,என்று பல சித்தாந்தங்கள். ஒவ்வொன்றையும் பின் பற்றுபவர்கள் அவற்றுக்குள் இருக்கும்  வித்தியாசங்களை பற்றி  பேசுகிறார்கள் . தமது  பிரிவு உயர்ந்தது என்று சொல்கிறார்களே தவிர . பொதுவாக ஏதோ ஒன்று  எல்லா பிரிவுகளையும்  இணைக்கிறது  என்று சொல்வதில்லை.  இது பற்றி மஹா பெரியவா  ரொம்ப  யோசித்து 1932ம் வருஷம் சென்னையில்  சமஸ்க்ரித கல்லூரியில்  செய்த ஒரு அற்புத பிரசங்கத்தின் சாரம் இது. ஹிந்து மதத்தில் வித்தியாசமின்றி அனைத்து பிரிவுகளும் ஏற்றுக் கொள்ளும் பொதுவான கொள்கை பசுக்களும் பிராமணர்களும் ரக்ஷிக்க படவேண்டும் என்பது.
பல வித்யாசங்கள் பல கோட்பாடுகள், சித்தாந்தங்கள் இருந்தாலும் பொதுவாக எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு சில விஷயங்கள் இந்து மதத்தை ஒன்றாக சேர்ந்து காக்கிறது.  உதாரணமாக ஒரு   ஸ்லோகம்  

''ஸ்வஸ்தி பிரஜாப்ய: பரிபாலயந்தாம்
ந்யாய்யேன மார்க்கேண மஹீம் மஹீசா!
கோப்ராம்ணேப்ய: ஸுபமஸ்து நித்யம்
லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து!!

இதன் அர்த்தம்: உலகத்தில் ஜனங்கள் சௌக்யமாக வாழ  வேண்டும்.  பூமியை ராஜாக்கள் நியாயம் நேர்மையோடு ஆளட்டும்.  பசுக்களும் ப்ராம்மணர்களும் மங்களகரமாக வாழட்டும். எல்லோரும் சுகமாக  ஜீவிக்கட்டும்.''  

''எல்லோரும்'' என்று சொன்னால் பிராமணர்களும் அதில் உண்டே. ஏன் தனியாக சொல்லணும்? பசுக்கள் எல்லோருக்கும் பொது தானே? ஏன் அதை தனியாக சொல்லணும்?  இதில் பக்ஷபாதம் எதுவும் இல்லை. ஒரு கதை சொன்னால் இன்னும் புரியும்?

மதுரை கூன் பாண்டிய ராஜா  சைவனாக இருந்தவன்  சமணமதததுக்கு தாவி, சைவர்களை வெறுத்தான். விபூதி தரித்தவன் எதிரே கண்ணில் பட்டால் அவ்வளவு தான் அவன் கதி. இப்படி ஏன் ராஜா மாறிவிட்டான் என்று வருந்தி அவன் மனைவி மங்கையற்கரசியும், மந்திரி குலச்சிறையாரும்  சிவனை வேண்டினார்கள்.  அப்போது ஞானசம்பந்தர்  தென்னாட்டில் விஜயம் செய்தார்.  அவரைச்  சென்று வணங்கி மதுரைக்கு அழைத்து,  ராஜாவை மாற்றவேண்டும் என்று வேண்டுகிறார்கள்.  அவர் மதுரை வந்தபோது சமணர்கள்  ஞானசம்பந்தர் தங்கி  இருந்த மடத்திற்கு தீ மூட்டினார்கள்.  சம்பந்தர்  அந்த '' தீ பாண்டியனிடம் செல்லட்டும்''  என்று வேண்ட  கூன் பாண்டியனுக்கு  கடும் ஜுரம்.   தவிக்கிறான். சமணர்கள்  மந்திரம், ஒளஷதம் என்று  எதிலும்  குணப்படுத்தமுடியாமல் போக,  ராணியும் மந்திரியும் மெதுவாக  பாண்டியனிடம்  சம்பந்தர்  மதுரை வந்திருப்பதை அறிவித்து அவரால் குணப்படுத்த முடியும் என்று அவரை வரவழைக்க ராஜா அரை மனதாக ஒப்புக் கொள்கிறான்.   சம்பந்தர்  சமணர்களை நீங்கள்  நம்புவதால்   உங்கள் உடம்பில் ஒரு பாதியை  அவர்கள்  ஜூரமின்றி குணப்படுத்தட்டும்,      சிவனருளால் நான் இடது பாதி உடம்பில் ஜுரம் நீங்க வேண்டுகிறேன் என்கிறார். 

 இடது பாதி சிவனருளால் ஜுரம் நீங்கி விட்டது.  சமணர்கள் அடாவடி செய்து இடது பாதி எங்களுக்கு வலது பாதியை  நீங்கள் குணப்படுத்துங்கள் என்கிறார்கள்.அதற்கும் சம்பந்தர் ஒப்புக்கொண்டு வலது பக்க உடம்பில் ஜுரம் நீங்கி அங்கிருந்த ஜுரம்  இடது பக்கம் கடுமையாக வந்துவிட்டது. சமணர்கள் அப்போதும் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.  சம்பந்தர்  ராஜா இதற்கு  நடுவே படும் கஷ்டத்தை கவனித்து ஜுரம் முழுதும்  அவன் உடம்பை விட்டு நீங்க  மதுரை சொக்கநாதரை வேண்டி  அப்போது பாடியது தான் ''மந்திரமாவது நீறு '' என்ற 10 தேவார பதிகம்.  அதை பாடி வேண்டிக்கொண்டு ராஜாவுக்கு  விபூதி  பூசினார் .  ஜுரம் முழுதும் நீங்கியது.  அப்போதும் சமணர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.  புனல் வாதம் தயாராகியது. ராஜாவும் சமணர் பக்கம் தான். சமணர்கள்  தமது  கொள்கையை  ஒரு  ஓலையிலும்   சம்பந்தர் தேவார பதிகம் ஒன்றை  ஒரு  ஓலையிலும்  எழுதி  இரு  ஓலைகளும்  வைகையில் போடப்பட்டு,  சமணர்கள் எழுதிய ஓலை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டது. சம்பந்தர் எழுதிய ஓலை எதிர்நோக்கி வந்தது.  அப்போதும் சமணர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அடுத்து அனல்வாதம் நடந்தது.   சமணர்கள் ஓலை சம்பந்தர் ஓலை ரெண்டும்  தீயில் போடப்பட்டது.  சம்பந்தர் எழுதிய ஓலை தீ பற்றாமல் வெளிவர  சமணர்கள் ஓலை எரிந்து கருகிவிட்டது. ராஜா திருந்திவிட்டான். பழையபடி சைவமதம் திரும்பினான்.

இந்த கதை எதற்காக சொன்னேன் என்றால்   சம்பந்தர் எழுதிய  நெருப்பிலிட்ட   ஓலையில்  என்ன எழுதினார் ?

வாழ்க அந்தணர்  வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல்  வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்  லாம்அரன் நாமமே
சூழ்க வையக  முந்துயர் தீர்கவே.   என்ற பதிகம்.  10 தேவார பாடல்கள். 

மேலே சொன்ன சுலோகம் போலவே இதிலும் ப்ராமணர்கள் , பசு, தேவர்கள் சுபிக்ஷமாக இருக்க வேண்டும். ராஜா நேர்மையாக ஆளவேண்டும். ஹரன்  நாமம் எங்கும் ஒலி க்க வேண்டும். உலகில் எல்லோரும் துயரம் இன்றி சுகமாக வாழவேண்டும்.   அது சரி  இதிலும்  ஏன் பிராமணர்களும் பசுவும் முக்கியம்? சம்பந்தரும் சொல்கிறாரே.

கீதையில் ஒரு ஸ்லோகம். கிருஷ்ணன் பிராமணர்கள், தேவர்கள், பசுக்களை ரக்ஷிக்கின் றவன்.இதனால்  உலகை பாதுக்காக்கிறவன்  என்பதால் அவனை வணங்குகிறோம்.

''நமோ ப்ரம்மண்ய தேவாய கோ பிராம்மணே ஹிதாய
ஜகத் ஹிதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம:!!.நமோ ப்ரம்மண்ய தேவாய

கீதையில்  சந்திபர்வத்தில் ஒரு ஸ்லோகமும் (46-12-2) இங்கே பொருந்தும்:
''சர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபால நந்தன: |
பார்த்தோ வத்ஸ: ஸுதிர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ||

உபநிஷதங்கள்  எல்லாம் பசுக்கள். கிருஷ்ணன்  அவற்றை மேய்ப்பவன். அர்ஜுனன் கன்றுக்குட்டி. பசுவின் பால் அவனுக்கும் மற்ற பண்டிதர்களுக்கும்  வித்வான்களுக்கும்   ஆகாரம்..

 என்ன சொல்கிறது இந்த ஸ்லோகம்? பசு கன்றுக்குட்டி இல்லாமல் தன்னை மேய்க்கும் இடையனின்றி பால் சுரக்காது,  கறக்காது. உலகத்துக்கு  உயிரினத்துக்கு ஆகாரமாவது பால்.   கிருஷ்ணனின் கீதை உலகத்தில் எந்த  துக்கத்துக்கும் கஷ்டத்துக்கும் மருந்து.  அந்த கீதை மந்திரங்களை நன்றாக கற்ற பண்டிதர்கள் மக்களுக்கு அவற்றை எடுத்து சொல்வதற்காக  அவசியம் தேவை. உபநிஷத்துக்கள் மந்திரங்கள் சாஸ்திரங்கள் அவசியம் . ஆகவே   பசுக்களும் பிராமணர்களும் எவ்வளவு முக்கியம் என்று  இதனால் புரிகிறது.  அவர்கள் காக்கப்படவேண்டும். 

 ஒரு ஊரில் ஒரு சாமான் இல்லையென்றால் மற்றொரு ஊரிலிருந்து அதை பண்டமாற்று முறையில் பகிர்ந்து கொள்வது போல் வேத பிராமணர்கள் பல இடங்களுக்கு சென்று நீதி நேர்மை  பக்தி ஆகியவற்றை போதிக்க தேவைப்பட்டார்கள். பசுக்கள் பால் தரும். அவற்றுக்கு  தீவனம் புல் ஆகியவை வளர மழை அவசியம். மழை பெய்யும்போது  நீரை நிறைத்து வைத்துக்கொள்ள  குளம் ஏரி அவசியம். அவற்றை ராஜ்ய பரிபாலனம் செய்யும் ராஜா வெட்டி பராமரிக்க நாம் அவனுக்கு  வரி கொடுக்கிறோம். யாகங்களை வளர்த்து மந்திரங்கள் உச்சரித்து தேவர்களை திருப்தி செய்து  மழை காலா காலத்தில் பெய்தது. இதற்கும் பிராமணர்கள் தேவைப்பட்டார்கள்.  இப்படி  ஒரு அமைப்பு வழக்கத்தில் இருந்து எல்லோரும் சுபிக்ஷமாக வாழ்ந்தார்கள் என்று போதிப்பது நமது ஹிந்து மதம். 

இது ஒரு அனாதி மதம். ஆதி , ஆரம்பம் அறியமுடியாமல் வளர்ந்து வரும் மதம். அநாதி மதம் என்று அதனால் சொல்கிறோம். இதை எவராலும் அழிக்க முடியாது. இது ஒருவரால் உண்டானது இல்லையே. பலரின் நல்ல எண்ணங்களால் வளர்ந்தது.''

 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...