Friday, September 24, 2021

ULLADHU NARPADHU


 உள்ளது நாற்பது -   நங்கநல்லூர்   J K  SIVAN  --

பகவான் ஸ்ரீ  ரமண மஹரிஷி -

14  ''நான் '' யார்  ''நீ '' யார்  தெரியுமா?

தன்மையுண்டேன் முன்னிலை படர்க்கைக டாமுளவாந்
தன்மையி னுண்மையைத் தானாய்ந்து – தன்மையறின்
முன்னிலைப படர்க்கை முடிவுற்றொன் றாயொளிருந்
தன்மையே தன்னிலைமை தானிதமு – மன்னும் 14

ஒரு சின்ன  விஷயம் அவசியம் புரிந்து கொள்ளவேண்டும். புரிந்து கொள்ள முடியும்.  இந்த உலகத் தில்  நீ,  அவன்,  அவள், அது, அவர்கள்,  என்று யாரையோ சுட்டிக்காட்டுகிறோமே, ஏன் ? எல்லாம் உடலை,   உயிருள்ள, உயிரில்லாத,  வேறு ஏதோ ஒன்றாக   மனதில்  ஏற்றுக்கொண்டு தானே?   ஆத்மாவைத் தவிர  வேறு ஒன்றுமே இல்லை, எல்லாம் மாயை  என்று உணர்ந்துவிட்டால் அதெல்லாம்  காணாமல் போகிறதல்லவா? எங்கும் எதுவும்  எல்லாமும் அந்த  ''நான் '' என்ற  நம்மிலிருக்கும்  ஆத்ம ஒளி ஒன்றாகவே தெரிந்துவிடும்.  ''நான் '' எனும் நம்முள் உள்ள ஆன்மா ஒன்றே  ஞானம். மற்றதெல்லாம் அஞ்ஞானம் என்று ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன்.

ஆழ்ந்த உறக்கத்தில்  இருப்பது  ஆன்மா மட்டுமே. மற்றது எதுவும் இல்லாததால்  தானே  ''நான் சுகமாக தூங்கினேன் '' என்கிறோம். வேறெதுவும் இல்லாதபோது   உறக்கத்தில் சுகத்தை தந்தது  யார்?  புரிகிறதா? ஆன்மா மட்டுமே  இருந்ததால், அது தானே சுகம் என உணர்ந்தோம். 

நான்  எனும்  ஆத்மாவே அனைத்துக்கும் மூலம். எங்கும் வியாபித்துள்ளது.  விழிப்பு நிலையிலும், கனவிலும் நான் எனும் ஆத்மா தேகத்தோடும், மனத்தோடும், ஈர்க்கப்பட்டு வேறு வேறாக எல்லாமே காட்சிப்பொருளாகிறது.  ஆழ்ந்த உறக்கத்தில்  ஆன்மா மட்டும் தானே. அது  இயற்கையாகவே  ஆனந்த ஸ்வரூபம் தானே. அதனால் தான் சுகம்.  

ஸ்ரீ ரமணரைத்தவிர வேறெவரும் உலகில் இவ்வளவு அற்புதமாக  சுய ஆராய்ச்சி செய்து விளக்கமாக ஆத்ம ஞானம் பற்றி சொன்னதில்லை. அநேகர் இன்னும் இதில் மனத்தை செலுத்தவில்லை. 

 மனம் தேஹத்தை  ''நான் '' எனும் அகந்தையாக கொண்டு ஆத்மாவிலிருந்து விலகி வெளி விஷயங்களில் ஈடுபடும்போது  தான் பல்  வேறு உருவங்கள், பெயர்கள், அடையாளங்கள்,  உணர்ச்சிகள்  ஐம்புலன்களின் உதவியோடு பெற்று  சகல துன்பங்கள், பயம், கோபம் என்று அனுபவித்து அவஸ்தைப் படுகிறோம்.  

ஒரு கதை சொல்லி நிறைவு செய்கிறேன்.
ரிபு  என்கிற மகரிஷிக்கு நிதாகன்  என்று ஒரு சிஷ்யன். வேதங்கள் கற்றான். பிரம்ம வித்தையை கற்கும் பக்குவம்  அவனிடம் இல்லை. ஆகவே  ''போய்  உலகில் சுகமாக இரு '' என்று அனுப்பிவிட்டார். அவன் ஒரு ராஜாவுக்கு குருவாகிவிட்டான். பல வருஷங்கள் கழித்து  ரிபு  சிஷ்யன் எவ்வாறு இருக்கிறான் பிரம்ம வித்யை அறியும்  பக்குவம் அவனிடம்  வந்துவிட்டதா என்று  கவனிக்க அவனைத் தேடி சென்றார்.  அப்போது ராஜா  யானைமேல் பவனி வந்து கொண்டிருந்தார்.  ராஜகுரு நிதாகன் ஒரு ஓரமாக நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.   ஒரு பட்டிக்காட்டான் உருவில் வந்த  ரிபு நிதாகனோடு பேசினார்: 
''அப்பனே, இங்கு என்ன கூட்டம், எதற்கு?''
''ஏன்  பார்த்தால் உனக்கு தெரியலையா, அதோ ராஜா வரார்''
''யார்  ராஜா,   எனக்கு தெரியவில்லையே? காட்டுகிறாயா?
'அதோ யானை மேலே பார்''
''எது யானை, எது ராஜா?''
''முட்டாளே, பெரிசா கீழே இருக்கே அது தான் யானை, மேலே உட்கார்ந்திருப்பது ராஜா''
''அப்பனே,  ''எது மேல், எது கீழ்?''
''குனிஞ்சுக்கோ காட்றேன். ரிபுவை குனியவைத்து அவர்மேல் ஏறிக்கொண்டான்  நிதாகன். 
''இப்போ பார்த்தியா, '' நான் மேலே, நீ கீழே''
''அப்பா, கோபித்துக் கொள்ளாமல் சொல்,   ''நான்'' என்றால் யார், நீ  என்றால் யார்?
சொரேர்  என்று ஈட்டி போல்  இந்த கேள்வி  நிதானனின் புத்தியில் பாய்ந்தது. ரிபுவின்  முதுகில் இருந்து குதித்தான். சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்தான். 
சுவாமி அஞ்ஞானத்தால் உண்மையை அறிய மறந்தேன். தங்கள் அருளால் என் புத்தியில் உண்மை ஸ்வரூபம் தெளிவித்தீர்கள்.  என்னை க்ஷமிக்கவேண்டும்.  அப்போது நிதாகனுக்கு  ரிபு  சொல்வதைத்தான்  ரிபு கீதை என்று படிக்கிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...