Saturday, September 4, 2021

pesum deivam

 பேசும் தெய்வம்:    நங்கநல்லூர்  J K  SIVAN  -


71.  மஹா பெரியவா மதராஸ் விஜயம்.

இந்த தொடரை படிப்பவர்களுக்கு இது என்ன புக்கா  புக்கா (BUGGA ) என்று இந்த மனிதன் எழுதுகிறானே, அப்படியென்றால் அது என்ன, எங்கே இருக்கிறது  என்று தோன்றலாம். அது ஒரு ஊர். நகருக்கு வெளிப்புறத்தில்  சித்தூர் ஜில்லாவில், ஆந்திர தேசத்தில் உள்ள அக்ராஹாரம்.  குசஸ்தல ஆற்றங்கரையில் உள்ளது. திருப்பதியிலிருந்து 56 கி.மீ. இப்போதும் உள்ளது. அங்குள்ள ஆலயத்தில் காசி விஸ்வநாதர், அன்னபூரணி, காமாக்ஷி தேவி, பிரயாகை மாதவ சுவாமி ஆகியோர் உள்ளார்கள்.
குசஸ்தல  ஆற்றங்கரையில் உள்ளது.  ஐந்து நீரூற்றுக்கள்  அங்கிருந்து உற்பத்தியாகிறது. இயற்கை கொஞ்சும் ரம்யமான இந்த இடத்தில் மஹா பெரியவா  1932ம் வருஷம்  ஜூலை 17ம் தேதி சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார்.   அந்த அக்ராஹாரத்தில் பெரியவா தங்கியிருந்தபோது அருகே ஒரு கிணறு. அதை பக்தர்கள் வ்யாஸ தீர்த்தம் என்று நாமகரணமிட்டார்கள்.  பெரியவா இங்கு தங்கியிருந்தபோது புராதனமான காசி விஸ்வநாதர் ஆலயத்தையும்,ப்ரயாக் மாதவன் ஆலயத்தையும் புனருத்தாரணம் செய்து 11.9.1932 அன்று சிறப்பாக  கும்பாபிஷேகம் நடந்தது.  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.   வெள்ளைக்கார  அரசாங்கம்    MSM   சிறப்பு ரயில்களை  விட்டு போக்குவரத்துக்கு உதவியது.  முன்பே சொன்னபடி  இந்த கும்பாபிஷேகம்  பெரியவா விஜயம், நித்ய  பாதபூஜை, பிக்ஷாவந்தனம் சகலத்துக்கும்  ஏற்பாடு செய்தவர்  ஆனால்  குப்புஸ்வாமி நாயுடு, P .மாணிக்கவேலு, குண்ட ரெட்டி, ரெங்கையா ரெட்டி, P. கிருஷ்ணஸ்வாமி ஐயர்  ஆகியோர்.  வெகுகாலமாக காத்திருந்த சென்னை பக்தர்கள் மஹா பெரியவா சென்னை விஜயம் செய்யவேண்டும் என்று திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டதால், மஹா பெரியவா புக்கா
விலிருந்து  சென்னைக்கு கிளம்பினார்.  வரும் வழியில் திருத்தணியில் சுப்ரமணிய சுவாமி தரிசனம். 

மஹா பெரியவாளுக்கு எப்போதுமே  நெரிசலான  பெரிய பட்டணங்களில் தங்குவது பிடிக்காது.  பூஜை செய்வதற்கோ, சொந்தமாக நித்யானுஷ்டங்கள் செய்யவோ தோதுப்படாது. இதன் காரணமாக  சென்ற முறை சென்னை பக்கம் விஜயம் செய்தபோது கோயம்பேடு அருகேயே  தங்கி திரும்பிவிட்டார்.  1930 டிசம்பரில் அது நடந்தது.  இந்த தடவை சென்னை மாநகரில் குறைந்தது சில மாதங்களாவது தங்கி  பிரசங்கங்கள் நடத்தவேண்டும், அருளாசி வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். 

1932 செப்டம்பர் மாதம்   வியாச பூஜை புக்கா அக்ரஹாரத்தில் முடித்து, திருத்தணி தரிசனம் செய்த்துவிட்டு  28ம் தேதி மஹா பெரியவா சென்னை வந்தார்.  அடேயப்பா  மைலாப்பூர்  லஸ்  அருகே  அவ்வளவு பக்தர்கள் கூட்டம் இதுவரை அப்படி சேர்ந்ததே இல்லை.  லஸ் சர்ச் ரோடு, மௌபிரேஸ்  ரோடு  பகுதிகளில் பூர்ண கும்பத்தோடு வரிசையாக  பக்தர்கள் நின்ற காட்சி கண்கொள்ளா அபூர்வ  நிகழ்ச்சி.   இந்த பெயர்கள் இப்போது இல்லை, எல்லாம் மாறிவிட்டது.  லஸ்  சர்ச் ரோட்டில் T R ராமச்சந்திர ஐயர்  வீட்டில்  மஹா பெரியவாளுக்கு வரவேற்பு.  மாலை 6.30க்கு  பெரியவா வந்தார்.   அங்கே  சாயங்கால  அனுஷ்டானங்களை செய்து முடித்தார்.  மேயர்  T S  ராமஸ்வாமி அய்யர்,  K  பாலசுப்பிரமணிய ஐயர்  ஆகியோர் நிறைந்த  வரவேற்பு குழு  மஹா பெரியவாளுக்கு பூர்ண கும்பம் அளித்தது.  நகர்வலம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  மஹா பெரியவாளை முதல் தடவை பார்த்த  பக்தர்கள்  ஆனந்த பரவசமானார்கள்.  பெரியவா  அமர்ந்திருந்த பல்லக்கு நகரவே இடம் இல்லை.   ஹரஹர சங்கர, ஜயஜய சங்கர கோஷம் வானைப்  பிளந்தது.  பல்லக்கை தொடர்ந்து வேத மந்த்ர கோஷம்.  அப்புறம்  இசைக்கருவிகளின்  நாத உபாசனை. பஜனை கோஷ்டிகள்  ஒலி . ஸமஸ்க்ரித கல்லூரி வரை  ஊர்வலம் தொடர்ந்தது.  அங்கே மஹா பெரியவா  தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.  பெரிய பந்தல்  காட்சி அளித்தது. அதில் கஞ்சி மட பரிவாரம் தங்கியது.   ஸமஸ்க்ரிதம் , தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என்று பல  வரவேற்பு உபசார வார்த்தைகள் பலர் பேசினார்கள். அன்றிரவு மஹா பெரியவா  அற்புதமாக  பேசினார். சிவ பக்தி பற்றி அற்புதமான  பிரசங்கம். அதில் மைலாப்பூர்  கபாலீஸ்வரர் மஹிமை  பற்றி விளக்கினார். 

அடுத்தநாள், A.K  ரங்கநாதய்யர் எனும் பக்தர், அனைவருக்கும் அன்னதானம், வஸ்திர தானம் அனைவருக்கும் அளித்தார். ஆயிரக்கணக்கானோர்  மகிழ்ச்சியோடு அவற்றை பெற்றார்கள் .

மஹா பெரியவா  அப்போது பேசிய  பிரசங்கத்தை  ஆறு அணாவிற்கு  ஒரு புத்தககமாக வெளியிட்டிருந்தார்கள். அதன் நகலை இணைத்திருக்கிறேன். அறுபது பக்கங்களையும் இங்கே வெளியிட்டால் படிப்பதற்கு வாசகர்களுக்கு சிரமமாக இருக்கலாம். நேரம் கிடைத்தபோது கொஞ்சம் கொஞ்சமாக படித்து அனுபவிக்க இந்த இணைப்பு.  

காமகோடி கோசஸ்தானம்  அவரது நான்கு சொற்பொழிவுகளை ''நமது அநாதி மதம் '' என்கிற தலைப்பில்  புத்தகமாக்கி இருந்தது.  நான்கு தலைப்புகள் 1.நமது மதத்தின் பொதுக்  கொள்கை.  2.நமது மதம்   3.  அத்வைதம்,  4. ஜீவன் முக்தி நிலை.  https://mahaperiyavaa.blog/2019/07/26/mahaperiyavas-speech-from-1932/  மஹா பெரியவா  பேசியதை சுருக்கமாக ஒவ்வொன்றாக தர உத்தேசம்.தருகிறேன்.
ஒரு சங்கதி. மஹா பெரியவா சென்னை வருகைக்கு முன்பே  சென்னை  நகராட்சி கழகம் வெள்ளைக்காரன் ஆட்சியில் ஒரு தீர்மானம் போட்டது. அதில்  சென்னை நகர மக்கள் சார்பாக ஒரு வரவேற்பு தாம்பாளம்  கொடுக்க முடிவெடுத்திருந்தார்கள்.  அதற்காக  முன்னூறு ரூபாய் ஒதுக்கி இருந்தார்கள்,  நூறு வருஷங்களுக்கு முன்பு ரொம்ப பெரிய  மதிப்புள்ள பணம்.  இதை முன் மொழிந்தவர்  சர்  A.  ராமஸ்வாமி முதலியார்  நகராட்சி சார்பாக ஒரு மதத்தலைவருக்கு வரவேற்பு விழா நடத்துவது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டார்.   மஹா பெரியவா ஹிந்துக்களால் மட்டுமல்ல, பிற மதத்தினராலும் மரியாதையாக போற்றப்பட்ட ஒரு சிறந்த ஆன்மீக வாதி என்று வெள்ளைக்கார அரசாங்கம் நன்றாக அறியும். அவர் வித்யாசம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் கருணையோடு அன்போடு  உதவுபவர் என்பது உலகறிந்த உண்மையாயிற்றே.

மஹா பெரியவா மிகவும் பணிவோடு,  மடத்தின் சம்பிரதாயங்கள் காரணமாக  தன்னால் நகராட்சி மன்ற  அலுவலக, கட்டிடத்துக்கு வந்து அவர்கள் அளிக்கும்  பரிசைப் பெற  இயலாது என்று தெரிவித்து விட்டார். மடத்தில் சிலரை அனுப்ப இயலும் என்றும் உணர்த்தினார்.

தொடரும் 





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...