Tuesday, September 7, 2021

PESUM DHEIVAM

  பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்   J  K  SIVAN --


73. மறக்கமுடியாத மதராஸ்  விஜயம்.

அப்போதைய  மதராஸ்  எனும் சென்னையில்  ஸமஸ்க்ரித  கல்லூரி வளாகத்தில் வருஷத்திற்கு ரெண்டு முறை  நவராத்ரி விழா ஜோராக நடத்துவார்கள்.   முதல் நவராத்ரி விழா  வசந்த காலத்தில், ராமநவமியை  ஒட்டி  முடியும்  அதற்கு வசந்த நவராத்ரி என்று பெயர். 

 ரெண்டாவது நவராத்ரி வழக்கம் போல்   செப்டம்பர் மாதம் வரும்.  ஸரஸ்வதி பூஜை ,  விஜய தசமி யோடு நிறைவு பெறும் . இதற்கு  சரத்  நவராத்ரி  என்று பெயர். சரத்காலத்தில் நடைபெறுவதால் இந்த பெயர். ரெண்டு நவராத்ரிகளும் மடத்தில் நடைபெறும்.  

1932 ம் வருஷம்  அக்டோபர் 1ம் தேதி சரத் நவராத்ரி மெட்ராஸில்  துவங்கியது.  நவராத்ரி ஆரம்பத்தில் இருந்தே  மஹா பெரியவா  ஒன்பது நாளும்  மௌன வ்ரதம். விஜய தசமி அன்று தான் மௌனம் கலைந்தது.  அப்போதெல்லாம்  பூஜை காலை  மாலை  இரு  வேளைகளிலும் நடந்தது.  மஹா பெரியவா தரிசனம் பெறவும் , பூஜையைக்  காண்பதற்கும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.   அவரவர் சக்திக்கேற்ப  பூஜை சாமான்கள்,  மடத்துக்கு தேவையான பொருள்களை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்துவார்கள்.

நவராத்ரி சமயம் பெண்களுக்கு விசேஷ அந்தஸ்து உண்டு.  எல்லோரும் தேவி அவதாரம் அல்லவா?   வருவோர் போவோர்   அத்தனை  ஸ்த்ரீகளுக்கும் ம் மஞ்சள்,  குங்குமம், புஷ்பம்,  வஸ்திரம், திருமாங்கல்ய கயிறு  அளிக்கப்பட்டது.   தினமும்  பெண்களுக்கு தனி பந்தி  போஜனம். அவர்கள் சாப்பிட்ட பிறகு தான் மற்றவர்களுக்கு.   தினமும் சின்ன குழந்தைகளுக்கு  கன்யா பூஜை  ரெண்டு வயசு முதல் 10வயசு வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு பூஜை  வேதோக்தமாக நடந்தது.   பக்தர்கள் இந்த கன்யா பூஜையைப் பார்க்க  ஏராளமாக காத்திருப்பார்கள். 


பத்துநாளும்  காலை  மாலை என்று  வித்வான்கள், சாஸ்திரிகள், பண்டிதர்கள் எல்லோரும் குழுவாக அமர்ந்து  தேவி பாகவதம், ராமாயணம், கீதை, ப்ரம்ம சூத்ர  பாஷ்யம்  பாராயணம் செய்வார்கள்.  தினமும் ஸ்ரீ வித்யா ஹோமம் நடக்கும்.   மடத்தில்  விசேஷமாக  சண்டி  ஹோமம் நடத்துவார்கள். இதெல்லாம் இதற்கு முன்  பக்தர்கள் மெட்றாஸில்  பார்த்ததில்லை. ஆச்சர்யம் எல்லோருக்கும். எவ்வளவு  விமரிசையாக பெரியவா நடத்துகிறார் என்று ஆயிரக்  கணக்கானோர் வந்து தரிசித்து கண் கொள்ளாக்காட்சியாக  ஆனந்தம் அடைந்தார்கள்.   மைலாப்பூர் முழுதுமே  இந்த பத்து நாட்களும்  ஸரஸ்வதி பூஜை வரை விழாக்கோலம் பூண்டிருந்தது. 

மஹா பெரியவா வருவதற்கு முன்பே  ஸமஸ்க்ரித  கல்லூரி வளாகத்தில் இருந்த கிணற்றை ஸ்ரீ  K    பால சுப்பிரமணிய ஐயர்  ஏற்பாட்டில்  அகலப்படுத்தினார்கள்.  ஒரு சிறு  தொட்டி,  குளம் மாதிரி,   மஹா பெரியவா ஸ்னானத்திற்காக  அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் மஹா பெரியவா ஸ்னானம் அங்கே நடந்தது.  மஹா பெரியவா நினைவாக அந்த தொட்டி, கிணறு,   ஸ்ரீ சந்திரசேகரேந் திர  ஸரஸ்வதி தீர்த்தம் என்று பெயர் பெற்றது. 

ஸமஸ்க்ரித  கல்லூரியில்  மஹா பெரியவா  தினமும்  பண்டிதர்கள், வித்வான்களை  சந்தித்து சம்பாஷணை நடத்த ஒரு மண்டபம் தயார் செய்திருந்தார்கள்.  நாட்டின் பல பாகங்களிலிருந்து ஸாஸ்த்ர விற்பன்னர்கள் வந்திருந்தார்கள். விஜய தசமி அன்று ஒரு பெரிய ஸதஸ் நடந்தது. மஹா பெரியவா  அன்று  மௌன வ்ரதம்  முடித்திருந்ததால் அவரும் கலந்து கொண்டார்.  அன்று விவாதம் தலைப்பு ''ப்ரம்ம சூத்ர  பாஷ்யம்''.   அந்த மண்டபத்திற்கு அன்றுமுதல் ''பாஷ்ய மண்டபம்'' என்ற பெயர் நிலைத்து விட்டது. 

சமஸ்க்ரித  கல்லூரியில் தங்கியிருந்தபோது  மஹா பெரியவா  அருகே இருந்த  ஸ்ரீ   ராமகிருஷ்ண மிஷன் பள்ளிக்கு ஒரு முறை சென்றார். தலைமை ஆசிரியர்  ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் பெரியவாளை பூர்ண கும்ப மரியாதையோடு பள்ளிக்கூடவளாகத்தின் வாயில் வரவேற்றார். 
பள்ளிக்கூட  வகுப்பு அறைகளைச்  சுற்றிப்  பார்த்த மஹா பெரியவாளுக்கு  மாணவர்களின் அன்றாட வழிபாட்டு முறை பற்றி விளக்கினார்.  ராமகிருஷ்ண மடத்தின் சீடர்களின்  உழைப்பை பாராட்டிய மஹா பெரியவா  அவர்கள் எப்போதும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்களை நினைவில் கொண்டு மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும்  எடுத்துச் சொல்ல வேண்டும் என்று  கேட்டுக்
கொண்டார். 

அன்று விசேஷமான ஒரு நிகழ்ச்சியாக  மஹா பெரியவா முன்பு  சங்கீத வித்வான்  ஸ்ரீ  G N பால சுப்பிரமணிய ஐயர்   கர்நாடக சங்கீத கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்கள்.   மஹா பெரியவா  சங்கீதப்ரியர் என்பதால் நன்றாக ரசித்தார்.    

மஹா பெரியவா எல்லோருக்கும்  அக்ஷதை விபூதி பிரசாதம் வழங்கினார்.  செட்டி நாட்டிலிருந்து வந்த ஒரு மஹா பெரியவா பக்தர்,   மஹா பெரியவா விஜய நினைவாக , மஹாபெரியவாளின் பெரிய  திருவுருவப்  படம் ஒன்றை பள்ளிக்கூடத்திற்கு  அன்பளிப்பாக  கொடுத்தார்.  

1932ம் வருஷம்  செப்டம்பர் மாதம் ரெண்டாவது வாரம்  மஹாத்மா காந்தி ஒரு உண்ணாவிரதம் மேற் கொண்டார்.  உயர் ஜாதி ஹிந்துக்கள்,  தாழ்ந்த ஜாதி ஹிந்துக்கள்,  ஹரிஜன் எனப்படுவோருக்கும் சமரசம் ஏற்படவேண்டும். அதுவரை சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்திருந்தார்.  மஹாத்மா உடல்நிலை பற்றி கவலை கொண்டு பண்டிட் மதன் மோகன் மாளவியாவும் ராஜாஜியும்  பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.   உண்ணாவிரதம் துவங்கி எட்டே நாளில்  24.9.1932 அன்று பூனாவில் ஒரு தீர்மானம் நிறைவேறியது.   ஆகவே  மஹாத்மா காந்தி தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தினார்.

ஹரிஜனங்களும் ஆலயத்தில் பிரவேசிக்க அனுமதிக்கப்பட  வேண்டும் என்று காந்திஜி  கேட்டுக்  கொண்டதற்கு   தீவிர  சனாதன தர்ம வாதிகள்  எதிர்ப்பு தெரிவித்தனர்.  தீர்மானத்தில் இது பற்றி ஒரு கோரிக்கையும் இல்லை.  தவிர  இது  வேத ஆகம சாஸ்த்ரத்துக்கு விரோதமானது என்றார்கள்.  சில  ஹரிஜன் மக்கள் அமைப்புகளும்  ஆலயப்  பிரவேசத்தால் தங்களுக்கு எந்த வித லாபமும் இல்லை என்று அறிவித்தார்கள்.  காந்தியின் வேண்டுகோள் நாடெங்கும் பரப்பப்பட்டது.  குருவாயூர்  கிருஷ்ணன் கோவில் இதை ஆதரிக்க வில்லை.  

மஹா பெரியவா ஆசிர்வாதத்தோடு ஒரு குழு  10.12.1932 அன்று கேரளா சென்றது.  அந்த குழுவில் பங்கேற்ற சிலர் பெயர்கள் நீங்கள் அறிந்த பிரபலங்கள் தான்.   ஸ்ரீ  T  R   ராமச்சந்திர ஐயர் , திருப்புகழ் மணி T M  கிருஷ்ணஸ்வாமி ஐயர்,  சிவராமகிருஷ்ணன், ராஜகோபால ஐயர் , S.சுப்ரமணிய ஐயர் , M K ஆச்சார்யா, V சோமதேவ சர்மா ஆகியோர்.  பாலக்காடு  முனிசிபல் தலைவர் ஸ்ரீ S K  ராமஸ்வாமி ஐயர்  இந்த குழுவை வரவேற்றார்.  டிசம்பர் 10  அன்று ஒரு பொதுக்கூட்டம்   பாலக்காட்டிலும்,   அடுத்த  நாள்  குருவாயூரிலும்  நடைபெற்றது.  குருவாயூர்  கூட்டத்திற்கு கோட்டக்கல் ராஜா தலைமை வகித்தார்.   பாலக்காடு டாக்டர்  சங்கர ஐயர், தேக்கடி கோவிந்த மேனன் ஆகியோர் பிரசங்கம் செய்தார்கள்.   ஹரிஜன  ஆலயப்  பிரவேசத்தை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  எதிர்ப்பு போராட்டத்தில் பல கேரள  பெண்கள் பங்கேற்றனர்.  காந்திஜி ஆலோசனைப்படி  பாபு ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, K  பாஷ்யம்,  வரதாச்சாரி,  ஆகியோர் மைலாப்பூர் வந்து மஹா பெரியவாளை சந்தித்தாலும்  இந்த சந்திப்பால் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. 

மஹா பெரியவா மெட்ராஸில்  இருந்த நான்கு மாத காலமும் அற்புதமாக தினமும் பிரசங்கங்கள் நிகழ்த்தினார்.  12.10.1932 அன்று  மஹா பெரியவா நிகழ்த்திய  ''நமது மதம்'' என்ற தலைப்பு  பிரசங்கத்தை படித்தேன் அற்புதமாக இருந்தது. அந்த  பிரசங்க  சாராம்சத்தை  சுருக்கமாக அடுத்த பிரதியில் அளிக்கிறேன்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...