Thursday, September 2, 2021

ULLADHU NARPADHU - RAMANA MAHARISHI


 உள்ளது நாற்பது --   நங்கநல்லூர்   J K   SIVAN 


உலகமும்  ஞானமும் 

உலகு மெய்  பொய்த் தோற்றம்  உலகு அறிவாம் அன்று என்று 
உலகு சுகம்  அன்று என்று கொன்னே உரைத்து என் – உலகு விட்டுத்
தன்னை ஓர்ந்து  ஒன்று இரண்டு தான் அற்று நான் அற்ற 
அந்நிலை  எல்லார்க்கும் ஒப்பாம்  3


ஒருத்தர்  உலகம்  நிஜம் என்கிறார், மற்றவர் பொய்  என்கிறார் சிலர்  சித்து, அறிவு மயம்  என்று சொல்லும்போது சிலர் இல்லை இல்லை அது  அறிவற்ற  ஜடம் உலகம் ஸார்  என்கிறார்கள், சிலர் உலகம் என்பது சுகம் தான் சார், சுகமயம்,  என்றும்  சிலர்  சே சே  இந்த உலகமே  துக்கமயம்,  --இந்த விவாதங்களால் என்ன பயன்?   இதற்கு செலவிடும் நேரத்தை உள்முகமாக  ஆராய்வதில் செலவிட்டால்,  ஆத்ம ஸ்வரூபத்தில்  கவனம் இருக்க செய்தல்,  எந்த வாதம், விவாதமும் இல்லை.  நான் என்பதே இல்லையே அப்புறம் தானே அதன் மூலம் விளையும் சர்வ சமாச்சாரங்களும் விளைவுகளும்.  பூரண சத்யம் ஒன்று தான் புலப்படும். அதனால் உலகமுழுதும் எல்லோருக்கும் க்ஷேமம்.  இது தான் மேலே சொன்ன  பாடலின் அர்த்தம். எவ்வளவு அற்புதமாக இயற்றியிருக்கிறார்  ஸ்ரீ ரமண பகவான். 
ஒருமுறை  ஆஸ்ரமத்தில் பகவானை ஒரு பக்தர் ஒரு கேள்வி கேட்டார்.  அத் வைதத்தை பற்றி  பகவான் சொல்லிக்கொண்டிருந்தார்.  ''சுவாமி  நீங்கள் சொல்வது,  வேதாந்தமா,  சித்தாந்தமா?''என்று கேட்டார் அவர்.

''ரெண்டும் இல்லை, இது அனுபவம்''.  என்கிறார்  மகரிஷி.  நம் எல்லோருக்குமே அடிப்படையில்  இயல்பாக உள்ள  அனுபவம்  தான் ஆத்மா.   நாம் அதை கொஞ்சம் கூட  உணர்வதில்லை.  மனம் அதை விழுங்கிவிடுகிறது. குரங்காக  அலைக்கழிக்கப்பட்டு  துன்பப்படுகிறோம்.  நமக்குள் சுயமாக இருக்கும்  ஆத்மானந்தம், புலன்களால், மனதால் தடைபட்டு, சுக துக்க சமாச்சாரங்கள் பிடியில் சிக்கி தவிக்கிறோம்.
சுபபலக்ஷ்மி என்று ஒரு பக்தர், கணவனை இழந்து மனம் வாடி, அத்வைத நூல்களில் மனதை செலுத்தினார். தீர்த்த யாத்திரை பல க்ஷேத்திரங்களுக்கு சென்றார். விரூபாக்ஷ குகையில் பகவான் ரமணர் இருந்தபோது வந்து தரிசித்தார். அப்போது ''ஸ்வாமி, ஆத்மா என்கிறோமே  அது போத மயமானதா அல்லது ஜோதி ஸ்வரூபமா? அதை எப்படி தியானம் செய்வது? '' என்று கேட்டார்.

''அம்மா,   இது தான், அதுதான்,   இப்படிதான்  அப்படிதான்   என்று எந்த  பாவனையும் செய்யாமல் இருப்பது தான்  ஆத்மஸ்வரூபம்'' என்று உபதேசித்தார் பகவான். இப்படிப்பட்ட பாவனைகள் மனோமய மானவை.  மனம் எப்போது சலனம் இல்லாமல் இருக்கிறதோ அப்போது தான் ஆத்மானுபவம் புரியும். கிடைக்கும். ''நிஸ்சல தத்வே  ஜீவன் முக்தி''என்று   ஆதி  சங்கரர் சொன்னது கவனம் வருகிறதா?

''நான் இருக்கிறேன் என்று உணர மனமோ புலன்களோ அவசியமே இல்லை .அதை புத்தியாலோ, மனதாலோ  அறிய முடியாது.  ஆத்மா  என்பது நமது மனம், புலன்கள் சகலத்தையும்  பேசாமல்  பார்த்துக்கொண்டே இருக்கிறது.  அந்த அனுபவத்தில்  ஈடுபடுவதில்லை, இதை தான் ஆத்ம   சாக்ஷாத் கார அனுபவம். வார்த்தைகளால் விளக்க இயலாதது. இதைத்தான்  ''கண்டவர்  விண்டிலர், விண்டவர் கண்டிலர்'' என்று அற்புதமாக சொன்னது. இப்போது விளங்கும்.

புத்தியின் வழி செல்பவனுக்கு சாந்தி கிடைக்காது. (யாரோ பெண் அல்ல,  பேரமைதி) .மனம் அடங்கிய போது தான் அதை அனுபவிக்க முடியும். அதற்கு தான்  ஓம் சாந்தி என்று சொல்வது. 

நமது சிந்தனைகளை இந்திரியங்கள் மூலமாக வெளி முகமாகும்போது  உடல், உலகம்  இவை வெளியேயும், சித்தம், நான், என்பன  உள்ளேயும் பிறக்கிறது.   சிந்தனைகள்  ஒன்றுகூடி  ஹ்ருதயத்தில் ஒடுங்கும்போது வெளியே காணப்படும் உடல், உலகம்  அதைத் தவிர   உள்ளே  காணப்படும் மனம், புத்தி,  அகங்கார சித்தம்   இவை எல்லாமே  மறைந்து போகிறது. அப்போது ''சித்'' பிரகாசிக்கிறது. அது ஒன்றே  உண்மையான வஸ்து.   இதை  சித் தரிசனம் என்பார்கள். 

சிந்தனைகளை வெளிமுகமாக  இயங்க செய்வதற்கு பெயர்  ''ப்ரவ்ருத்தி''  உள்முகமாக செலுத்துவது  ''நிவ்ருத்தி''.இதை தான் ஞான மார்க்கம் என்கிறோம். இதில் ஈடுபடுவான் தான் சந்நியாசி, ஞானி.  தாடி, மீசை, காவி  சந்யாசியோ, ஞானியோ அல்ல.  ஆத்ம ஞானமும் ஆத்ம தியானமும் தான்  சன்யாசம்.  ''ஞானம்  சன்யாச லக்ஷணம்''.  இதற்கு வரைமுறை இல்லை. ஒருவன்  எந்த விதத்தில் வாழ்ந்தால் அவனால் உலகத்தை கவனிக்காமல் ஆத்ம விசாரத்தில் மூழ்கமுடியுமோ அது தான் அவனது ஸன்யாஸம்.   அவரவர் சௌகர்யம். விடா முயற்சி நல்ல பயனைத்தரும்.  இந்த பயிற்சிக்கு ஞானம் வைராக்கியம் ஆகியவை  பறவையின் ரெண்டு ரெக்கை மாதிரி ஆத்ம அனுபவம் பெற  அவசியம். ஒரு நல்ல குரு,  சத்சங்கம் இந்த தேடலை எளிமைப் படுத்தும். 

''ஸ்வாமி  ஸ்ருஷ்டி  எப்படி உண்டாகிறது?  சிலர்  கர்மத்தால்  என்றும்  சிலர்  ஈஸ்வரனின் லீலை'' என்றும் சொல்கிறார்களே, எது சத்யம்??''  என்று  ஒரு பக்தர் கேட்டார். 

''ஸ்ருஷ்டி பற்றி  சாஸ்திரத்தில் எவ்வளவோ விவரங்கள் வர்ணனைகள் இருந்தாலும் அப்படி நடந்ததா, நடக்குமா? ஸ்ருஷ்டி என்பது நடந்தால் தானே , அது புரிந்தால் தானே  அதைப் பற்றி எப்படி என்று சொல்ல முடியும்.   நாம் இருக்கிறோம் என்பது நமக்கு நிச்சயமாக தெரிகிறது.  நான் என்பது அதற்கு சித்தமாக இருக்கிறது. நிகழ்காலம் புரிகிறது.  இதை புரிந்து கொண்டபின்  பிறகு ஸ்ருஷ்டி நடந்திருக்கிறதா என்று யோசிப்போம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...