Tuesday, September 21, 2021

AN OLD WEDDING INVITATION.





 


ஒரு பம்பாய் கல்யாணம். ---     நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒரு அன்பர்  பம்பாயில் வாழ்பவர் என்று ஞாபகம்.   வெகு நாட்களுக்கு முன்பு எனக்கு  ஒரு கல்யாண பத்திரிகை, கல்யாணம் நடந்த வீடு  படம்  அனுப்பி இருந்தார்.  அதைப்  பார்த்தவுடனேயே  எனக்கு ஆனந்தமாக இருந்தது.  அதை பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்று மனதில் ஒரு எண்ணம் இன்று அதைப் பார்த்தபின் தோன்றியது.   இந்த கல்யாணம்  அவர் வீட்டிலோ, அவருக்கு தெரிந்தவர் யார் வீட்டிலோ நடந்திருக்கிறது, எப்போது தெரியுமா ?

 83 வருஷங்களுக்கு முன்னே. எங்கே?  பம்பாயில்? ஆஹா? அப்போது  மும்பை இல்லை. பம்பாய். இப்போது மாதிரி  நெருப்பு பறக்கும் அவசரம் இல்லை.  எங்கும் எதிலும் இடநெருக்கடி, ஓட்டம் இல்லை. ஏதோ தஞ்சாவூர் பக்கத்தில் கிராமம் மாதிரி மாதுங்கா.   கல்யாண  விபரங்கள் சொல்ல வேண்டாமா?
மணி அய்யர்  எதனாலோ, தன்னனுடைய  மைத்துனன்  சிரஞ்சீவி சிவராமக்ரிஷ்ணனுக்கு தனது முன்னிலையில்  கல்யாணம் ஏற்பாடு செய்து அற்புதமாக அந்த கல்யாணம் நடந்தது.   சம்பந்தி வேறு யாருமில்லை, ஸ்ரீமான்   T A  ராமஸ்வாமி ஐயர்.  எங்கே உத்யோகம் இந்த ராமஸ்வாமி  ஐயருக்கு என்று பத்திரிகை சொல்கிறது.

 அந்தக்காலத்தில் ஜிகு புகு என்று  புகை மண்டலமாக, கோ வென்று கத்திக்கொண்டு மெதுவாக பெருமூச்சு விட்டுக்கொண்டு ஓடிய  ரயில்கள் கொண்ட  வெள்ளைக்காரன் அரசாங்கத்தில் இயங்கிய ஒரு ரயில்வே  கம்பனியில் . அந்த கம்பெனி பெயர் தெரியவேண்டாமா?  பம்பாய் பரோடா  அண்ட்  சென்ட்ரல் இந்தியா  ரயில்வே கம்பனியில். அவர்  இன்ஜினீயரா,  அல்லது   தலைமை இன்ஜினீயர்  ஆபிசில் ஏதோ ஒரு உத்யோகமா என்று இப்போது கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால்  கல்யாணம் நடந்த போது  நான்  பிறந்து ஒரு மாதம்  தான் ஆகி இருந்தது.  கல்யாணம். 15ம் தேதி மே  மாதம் 1939  திங்கட்கிழமை அன்று தனுர் லக்கினத்தில் முஹூர்த்தம்.  

 ராமஸ்வாமி  ஐயருக்கு சௌபாக்யவதி அலமேலு ஜேஷ்ட குமாரியா , கனிஷ்டகுமாரியா என்று சந்தேகமே வராதபடி ஒரே பெண்ணோ ?  எனது மகளுக்கு என்று தான் கல்யாண பத்திரிகை யில் போட்டிருக்கிறார். கல்யாணம் நடந்தது எங்கே என்றால் பெண் வீட்டிலேயே. இப்போது யாராவது பம்பாயில் தனது வீட்டில் கல்யாணம் நடத்த எண்ணிப்பார்க்க முடியுமா? இருக்கவே இடம் போதாதே. அந்த வீட்டின் படத்தையும்  எனக்கு நண்பர் அனுப்பியிருந்ததால் ஆனந்தமாக அதை ரசித்தேன்.  அந்த வீட்டின் பெயர்  கோஸ்லா நிவாஸ். ஒரு காலத்தில்  சென்னையில் இருந்தது போல் தனித்தனி  பிளாட்கள் அப்போது இருந்தன என்று தெரிகிறது. பழைய  PLOT டுகள் எல்லாம்  இப்போது பல அடுக்கு மாடி  FLATகள்  ஆக அல்லவோ மாறிவிட்டன. 

கல்யாணம் எங்கே என்று கேட்கிறீர்களே சொல்லாமல் இருப்பேனா?  மேற்படி கோஸ்லா நிவாஸ் இருந்த இடம்  ப்ளாட் எண். 135. தெலங் ரோடு,  மட்டுங்கா , பம்பாய்.   

இந்த  BB &CI  ரயில் கம்பெனி தோன்றுமுன்பு  இன்னொரு நிறுவனம் இருந்தது. அதற்கு  GIPR  என்று பெயர்.  Great Indian Peninsula Railway .  அதன் தலைமை அலுவலகம் போரி பந்தரில் பம்பாயில் இருந்தது.  இந்த  கல்யாணத்தில் இன்னொரு உள்ளடங்கிய முக்கியமான ரஹஸ்யம்.  தாலிகட்டிய முஹூர்த்தம்.  திங்கட்கிழமை தனுர் லக்னம்.   ராத்திரி 9.30மணிக்கு இருக்கமுடியாதே.  ஒருவேளை  அச்சில் பிழையோ?   காலையை   இரவு என்று போட்டதை எவரும் கவனிக்கவில்லையா?    ராத்திரி கல்யாணம் என்றால்  எத்தனை  பேர்  முஹூர்த்தத்துக்கு வந்திருப்பார்கள்?.  தூக்கமில்லாதவர்கள், முணுக் முணுக் என்ற  தெருவிளக்கின் ஒளியில் எப்படி எங்கிருந்தெல்லாம் வந்தார்கள்? அப்புறம் எப்போது சாப்பிட்டார்கள்?  சூரியன் உதயாதி நாழிகை காலை  5.50லிருந்தே நல்ல நேரம் அன்று. ஆகவே  இது காலை 9.30AM ஆகதன் இருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.  

இப்போது கோஸ்லா நிவாஸ் இருக்கிறதா என்று தெரியவில்லை?  1935ல் கட்டப்பட்ட பங்களா.  என்ன ஒரு கம்பீர தோரணை? அழகு.    தனி காம்பௌண்ட்.  இரும்பு க்ராதி கேட்.  உள்ளே ஓபன் ஸ்பேஸ். 

விசாலமான காற்றோட்டமாக  ''பே '' என்று பால்கனி.  கம்பி போட்டு  காபந்து பண்ணி இருக்கி றார்கள். அடுத்த கட்டிடமும் இது போல் பழசாக  தள்ளி நிற்கிறது.  நிச்சயம்  100-200 பேர்கள் கொள்ளும் போல் இருக்கிறது இந்த இடம்.  முன்னால்   பந்தல் போட இடம் இருக்கிறதே!   சம்பந்தி மணி அய்யர் உத்யோகம் போடவில்லை என்பதால்  ரெண்டு சம்பந்திகளுமே  மேலே சொன்ன ரயில் கம்பெனி ஸ்நேகிதர்களோ? பிள்ளை பெண் கொடுக்கல் வாங்கலோ?  இருக்கலாம்.  நல்ல சம்பந்தம் இப்படி  கிடைப்பது அபூர்வம்.  நாதஸ்வரம், ஜான் வாசாவுக்கு  குதிரை  GAS  லைட்க்கு  பம்பாயில்  அப்போது பஞ்சம் இருந்திருக்காது.   தெருவில்  ரொம்ப ஜன நடமாட்டம் இல்லை போல் இருக்கிறதே.  மாப்பிள்ளை  அழைப்பு ஊர்வலம்  நடந்ததா? ஓடியதா?   தரையில் பந்தி பாய் விரித்து வாழை யிலையில் கம கம வென்று ,பருப்பு, நெய் , சாம்பார், மைசூர் ரசம் , பாயசம் பச்சடி, யானையடி அப்பளம் டைப்  சாப்பாடோ?    மே மாதம் பம்பாயில் மழை பெய்யுமோ?

அதெல்லாம் சரி,  அப்போது பம்பாயில் நமது ஊர்  நாதஸ்வர, தவில் வித்வான்கள்  கிடைத்தார்களா, இறக்குமதியா?   ஒருவேளை  நாதஸ்வரத்துக்கு பதில் BAND  வாசித்தார்களா?  டேப்,  வீடியோ, கிடையாதே?.

ஒன்று நிச்சயம்,   எது எப்படியோ நமக்கு தெரியாது,  அந்த  கல்யாண பெண்ணும் பிள்ளையும் இப்போது தாத்தா பாட்டியாக பேரன் பேத்திகளுடன் சௌபாக்யமாக கொரோனா  தொந்தரவு இல்லாமல் சுகமாக  வாழ்ந்து எல்லோரையும் வாழ்த்தவேண்டும் என்று உங்கள் சார்பாக என்  கிருஷ்ணனை பிரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...