Saturday, August 28, 2021

ulladhu naarpadhu


 உள்ளது நாற்பது --   நங்கநல்லூர்   J K   SIVAN

 பகவான் ரமண மகரிஷி 


2.   பவ  பயம் வீண்.

'' உள்ளே  மரணபயம்    மிக்கு  உள   அம் மக்கள்   
அ ணாக மரணபவ மில்லா  மகேசன் – சரணமே
சார்வர்  தம் சார்வொடு தாம்  சாவுற்றார் சாவு  எண்ணம்  சார்வரோ சாவாதவர்  நித்தர்'' 

நம்முடைய மனசு பூரா  என்ன எண்ணம் ஓடுகிறது?  ஐயோ  சாவு வந்துவிடுமோ? எப்போது வருமோ? எப்படி வருமோ? அதிலிருந்து தப்பித்துக்கொண்டு  நீண்ட நாள் இங்கேயே வாழ்வது எப்படி? என்ற பயம் தான்.  உலகத்தில் எதுவும் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியாது.  மகேஸ்வரனை சரணடைவது ஒன்று தான் வழி. பற்றுக்களை, பிடிப்புகளை அகற்றி,  அகந்தையை அழித்து ஜெயித்தவன் தான் மரணம் பற்றி  துளியும்  கவலைப்  படமாட்டான்.  சாவின் மறுபெயர் தான் சரீரம் எனும் நம் உடல்.  உடல் நினைவு ஒழிந்தால் மரணபயம் நெருங்காது. ரமணர் சொன்னது காதில் விழுகிறதா?

''16 வயதில்  என் சித்தப்பா வீட்டு  மாடியில் தனியாக இருந்தபோது ஏனோ திடீரென்று மரணபயம் தோன்றியது. எப்படி இந்த உணர்வு வந்தது?  இதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?  யாரிடமும் சொல்லாமல் நானே கண்டுபிடிக்க முயன்றேன். உள்  நோக்கி  பயணம் செய்தால்  தான் அது முடியும்.  மரணம் என்றால் என்ன? இந்த உடல் இறப்பதை மனதில் யோசித்து பார்த்தேன். கை கால் நீட்டி படுத்தேன்.  மூச்சை அடக்கினேன்.  கண் முன் காட்சி தொடர்ந்தது. என் உடல் இறந்து விட்டது.  உடலை  எடுத்துப் போய் எரித்தார்கள்.  உடல் போனதும் நான் இல்லையா?  உடலுக்கு அப்பால் ஏதோ ஒன்று இருக்கிறது. அது சாவதில்லை. அது தான் ஆத்மா.   அதுதான் உண்மையில் நான். இந்த உடம்பு இல்லை. இதை உணர்ந்ததும் மரண பயம் நீங்கிவிட்டது.

என்னன்னவோ ராகங்கள்  ஸ்வரங்கள்,  ஆலாபனைகள், பாடினாலும் ஆதார சுருதி ஒன்று தானே. அது தான் எண்ணங்கள் நிறைந்த மனமும்  ஆத்மாவும்.  என் உடல்  எண்ணம் யாவும் எந்த  காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் என் உணர்வு அந்தராத்மா வாகிய  ''நான் '' என்பதன்  மேலே தான்.   சட்டி சுட்டால்  பிடி விடுகிறது போல  ஆசைகள் நீங்கினால் துன்பம், கஷ்டம், பயம் எல்லாம் நீங்கும்.  பற்றுதல் விட்டால் வைராக்கியம் கூடும்.  
ஒரு கப்பலில் நடுக்கடலில்  அதை நம்பிப்  பயணம் செய்யும்போது, அதுஓட்டை, எந்த நேரமும்  முழுகும் என்றால்  ப்ராண பயம் உண்டாவது போல் இந்த  உடலை நம்பி உலகில் வாழ்வது.  கப்பல் ஓட்டை என்று தெரிந்து அதில் ஏறியவனுக்கு   மரண பயம் இல்லை.  எப்போதும் கடலில் குதித்து அதைத்  தாண்டும் நம்பிக்கை இருக்கிறது. அது தான் வாழ்க்கையில் வைராக்கியம். 

ஒரு பக்தன்  ரமணரின் பாதங்களை பிடித்துக்கொண்டு  ''குரு சரணம்''   என்றான். அப்பா, குரு சரணம்  என் காலில் இல்லை.  உன் உள்ளேயே இருக்கிறது.  பிரகாசித்துக்  கொண்டிருக்கும் அதை எண்ணத் திரைகள்  மறைத்திருக்கிறது. அதை விலக்கி,   பிடித்துக் கொள்'' என்றார்  பகவான்.

ஏழு நாளில் சாகப்போகும் பரீக்ஷித் சுகப்பிரம்ம ரிஷி எதிரே அமர்ந்து  பாகவதம் கேட்கிறான்.

''ராஜா,  இறந்து போவேன் என்று நீங்கள் சொல்வது உங்கள் தேகத்தின் மேல் உள்ள அபிமானத் தால்''.  சலனமற்ற, நிரந்தர ஆகாசத்தில்  ஒதுங்கி இருக்கும் மண் குடம் தான் உடல்.  இருந்தாலும் உடைந்தாலும்  அதால்  ஆகாசத்துக்கு என்ன? ஆத்மா நிரந்தரம் அவ்வாறு.   அழியும்  இந்த சரீரத்தில் சரீரமற்ற அசரீரி தான் ஆத்மா.  கானல் நீரில் நீர் இருப்பது போல் தோன்றி னாலும் நீர் இல்லை.  தேஹத்தோடு    சேர்ந்திருப்பது போல் தோன்றினாலும்  ஆத்மா  தனி,  விதேஹி.   

கண்ணாடி  எதிரே  நான்  நல்ல உடை, நிறைய ஆபரணங்களோடு நின்றால்  கண்ணாடியில் நான் தெரிந்தாலும், கண்ணாடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது போல் தான் ஆத்மா-  தேஹ  உறவு.   ஆதி அந்தமில்லா மஹேசன் தான் பாதுகாக்கும் கோட்டை.   அண்ணாமலை, அருணாசலம் எனும்   மகேஸ்வரனை ரமணர் அவ்வாறு பிடித்துக் கொண்டார். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...