Monday, August 16, 2021

RAMAKRISHNA PARAMA HAMSA

 அருட்புனல் -   நங்கநல்லூர்  J K SIVAN  ---

ராமகிருஷ்ண பரமஹம்சர் .

காசி யாத்திரை

'என்னைப்  பொறுத்தவரையில், பகவான் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் எத்தொழிலிலும் ஈடு படாத நிலையில் அவரை புருஷன், ப்ரம்மம் என்பேன். முத்தொழிலில் ஈடுபடும்போது ''சக்தி, மாயா, ப்ரக்ரிதி , இஷ்ட தெய்வம் '' என்பேன். ரெண்டுக்கும் ஒன்றும் வித்யாசம் இல்லை. பாலும் வெண்மை நிறமும் போல, வைரமும் ஒளியும் போல. ஒன்றில்லாமல் ஒன்றில்லை''  --  ராமகிருஷ்ணபரமஹம்ஸர் ..

தக்ஷிணேஸ்வரம் வந்திருந்த  யாத்ரி தோத்தாபுரி சென்று ஆறுமாதம் ஆகிவிட்டது.   ராமக்ரிஷ்ணர் மரக்கட்டையாக கிடந்தார்.  வாயில் மூக்கில் ஈ புகுந்து வெளியேறுவது கூட தெரியவில்லை. இரவா பகலா ஒன்றுமே தெரியவில்லை. மண் கலந்து தலை முடி சடையானது.

யாரோ ஒரு சந்நியாசி வந்து  அவ்வப்போது ராமகிருஷ்ணரை கவனித்துக் கொண்டார். நாள் செல்ல செல்ல நிறைய பக்தர்கள், யோகிகள், முனிவர்கள், சந்யாசிகள் , வேதாந்திகள் ராமகிருஷ்ணரைத்  தேடி தக்ஷிணேஸ்வரம் வந்தனர். அவருக்குள்ளே ஒரு அமைதி இப்போது குடிகொண்டுவிட்டது. முன்பு இருந்த தவிப்பு, திகுதிகு  வென கொதிந்தெழுந்த அக்னி உஷ்ணம் இப்போது இல்லை.

இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால்,  ராமகிருஷ்ணர் எந்த புத்தகத்தையும் தொட்டு படித்ததில்லை. சகல சாஸ்திர வேதாந்தங்கள் அவர் மனதில் எப்படி குடிபுகுந்தன?. வருவோர் போவோர் அவரிடம் சம்பாஷித்ததில் அவர்கள் மனதில் இருந்ததெல்லாம் அவரில் அடைக்கல மாயின.

பிற்காலத்தில் ஒரு சிஷ்யன் அவரை  என்ன கேட்டான்?
 '' குரு மஹாராஜ், உங்களுக்கு எப்படி இவ்வளவு ஞானம் கிடைத்தது?

''படித்து அல்ல, கேட்டு,   எண்ணற்ற மஹான்கள் ஞானிகள் இங்கே வருகிறார்களே, அவர்களது ஞானம் மாலையாக என் கழுத்தில் விழ. அதை நான் என் அன்னைக்கு காணிக்கையாக அவள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்''.

மலர்கள் மலர்ந்தால் யாரும் சொல்லாமலே வண்டுகள் தேடிவரும் அல்லவா?. 1870ல் சிறந்த சாஸ்திர நிபுணர் கௌரி வந்து தரிசித்தவர்   அடடா,  ஸ்ரீ   ராமகிருஷ்ணர் பகவானின் அவதாரம் என்றார். ஜெய்பூர் மஹாராஜா சமஸ்தானத்தில் பெரிய பதவியில் இருந்த ஹிந்து சாஸ்திரத்தில் கரைகண்ட நாராயண சாஸ்திரி தக்ஷிணேஸ்வரம் வந்து ராமகிருஷ்ணரை தரிசனம் செய்தார்.

பிற்காலத்தில் ராமகிருஷ்ணர் ''புத்தர் பேசிய பேச்சுக்கள் எல்லாமே உபநிஷதத்தில் இருக்கும் தத்துவங்கள் தானே. எனக்கு எம்மதமும் சம மதமே, சம்மதமே, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்கள் எல்லாமே  ஹிந்து மதத்தின் பிரதிபலிப்பே. நான் அவைகளைக்  கடைப்பிடித்து அனுபவித்தவன். எல்லாமே ஒரே ஊருக்கு செல்லும் வெவ்வேறு வழிகள். கையில் உள்ள பாத்திரத்தில் உள்ள தண்ணீர் ஒன்று ஆனால் அதன் பாத்திரங்கள் வேறு உருவங்கள், தவலை , சொம்பு , லோட்டா, அண்டா, குண்டா என்று வேறு பெயர்கள் கொண்டவை'' என்பார்.

1867ல் சொந்த ஊர் கமார்புக்கூர் சென்றார். பழகிய கிராம சூழ்நிலை, பழைய நண்பர்கள், எளிமை யான கிராமிய வாழ்வு மகிழ்ச்சி அளித்தது. அவரது 14 வயது மனைவி சாரதா அவரது ஆன்மீக வாழ்வை சிஷ்யையாக ஏற்று சேவை புரிந்தாள் .

1868ல் மதுர பாபு மற்றும் 125 பேர் ராமகிருஷ்ணர் உள்பட யாத்திரை சென்றார்கள். பீஹாரில் வைத்யநாத் கிராமத்தில் பஞ்சத்தில் வாடும் பரம ஏழைகளை எலும்புக் கூடுகளாக கண்டபோது ராமகிருஷ்ணர் ''இவர்களுக்கு ஆளுக்கு ஒரு துணி கொஞ்சம் உணவு காசு கொடுக்கவேண்டும்'' என்கிறார். மாதுர் பாபுவுக்கு இதனால் அதிக செலவு ஆகும் என்று   தோன்றியதால்  ஒப்புக் கொள்ளவில்லை.

''நான் இங்கேயே இவர்களோடு இருக்கிறேன் நீங்கள் காசிக்கு சென்று வாருங்கள்''என்று ராம கிருஷ்ணர் சொன்ன  போது தான் மதுர்பாபு அவர்களுக்கு உதவினார்.

இரண்டு வருஷங்களுக்குப்  பிறகு இதேபோல் ஒரு சமயம் மாதுர் பாபுவோடு அவர் ஜமீனுக்கு சென்றபோது அங்கு மகசூல் இல்லை, வறட்சி, குடியானவர்கள்  சாகுபடி பணம் தரவில்லை. ராமகிருஷ்ணர் அவர்களுடைய  கடனை  ரத்து செய்யுங்கள், உணவு, பணம் கொடுங்கள் என்றபோது மாதுர் தயங்கினார். ''நீங்கள் அன்னையின் காவலாளி, அவர்கள் அவள் பிள்ளைகள், இது அவள் நிலம், அவள் பணம். அது அவர்களுக்கு போய் சேர ஏன் தடை?'' என்கிறார். மதுர்பாபு உடனே உதவுகிறார்.

ஒரு மயிர் கூச்செரியும் சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். 

ராமக்ருஷ்ணரும்  உடன் சென்றவர்களும்  காசிக்கு படகில் கங்கையை கடக்கிறார்கள்.  காசியின் விஸ்வநாத ஆலயம் தங்கமயமாக ராமகிருஷ்ணருக்கு ஜொலித்தது, காசியின் ஒவ்வொரு சிட்டிகை மண்ணும் அவருக்கு புனிதமாக தோன்றி தரையில் விழுந்து புரண்டார். மண்ணை உண்டார். உடலில் பூசிக் கொண்டார். மணிகர்ணிகா கட்டத்தில் மயான பூமியில் கங்காதரனை ஜடாதாரியாக வெண்ணிற சாம்பல் உடல் முழுதும் பூசியவாறு ஒவ்வொரு சிதையிலும் கண்ட உயிரற்ற சடலங்களை நெருங்கி அவற்றின் காதில் மோக்ஷ மந்திரத்தை உச்சரித்து ஓதுவதை கண்டார். கூடவே அவரோடு இருந்த உமையவள் அந்த ஜீவன்களின் கர்ம பந்தங்களை விலக்குவதையும் நேரில் கண்டார்.

காசியில் ராமகிருஷ்ணர் த்ரை லிங்க ஸ்வாமிகளைக்  கண்டார். இவரைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மீண்டும் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.முன்னூறு வயதிற்கும் மேற்பட்ட குழந்தை முகம் கொண்டவர் .  குழந்தையானந்த ஸ்வாமிகள், காசி கணபதி என்றும்  தெலுங்கு ஸ்வாமிகளை  அழைப்பார்கள்.

ராமகிருஷ்ணர் அங்கிருந்து திரிவேணி சங்கமம் சென்றார், பிறகு அங்கிருந்து பிருந்தாவன் மதுரா போன்ற கோபியர் கொஞ்சும் ரமணன் கோபால கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட க்ஷேத்ரங்களுக்கு  சென்றார். அங்கே கங்காமாயி என்ற வயதான பெண்மணியை சந்தித்தபோது அவள் ''நீங்கள் ராதையின் அவதாரம்'' என்றவள் ராமகிருஷ்ணரை பிரிய மறுத்தாள் . பிரிந்தாவனத்திலிருந்து கை நிறைய மண்ணைக்  கொண்டு  வந்து தக்ஷிணேஸ்வரத்தில் பஞ்சவடியில் மண்ணுடன் கலந்தார். கொஞ்சம் தனது ஆஸ்ரமத்தில் தெளித்தார். ''இனி இதுவே பிருந்தாவனம்''.

1870ல் சைதந்யர் பிறந்த நாதியா கிராமம் படகில் சென்றபோது ராமகிருஷ்ணர் கண்ணில் தங்கத்தில் வார்த்தது போல் சைதன்யரும் அவர் தோழர் நித்யானந்தாவும் காட்சியளித்தனர். ''அதோ அதோ வருகிறார்கள் '' என்றவர் சமாதி நிலை அடைந்தார்.

                                     

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...