Monday, August 30, 2021

KRISHNA IS BORN


 ஸ்வாகதம் கிருஷ்ணா  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

இன்று  கிருஷ்ண ஜெயந்தி. ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்தநாள்.  உலகமெங்கும் தெரிந்தவன் கிருஷ்ணன்.  முழு முதற் கடவுள். கிருஷ்ணன் அபூர்வன்.   இந்த பெரிய  உலகத்திலே பிறந்ததும்  கொல்லப்படுவதற்காக  தயாரான  ஒரே குழந்தை அவன் தான்.  பிறப்பதற்கு முன்பே,  அவனது தாயும் தந்தையும்   அவன்  பிறந்ததும்  கொல்வதற்கு கொடுத்துவிடுவதாக வாக்கு  தந்துவிட்டார்கள்.   கொலைகாரன் வேறு யாருமில்லை அவன் மாமன் தான்.  உலகத்தில்  தனக்கு குழந்தை பிறந்ததும்  அது சாகப்போகிறது என்று தெரிந்த  ஒரே தாய் தேவகி தான்.    அப்படி அவன் பிறக்கப்போவதும் சிறையிலே தான்  என்பது போனஸ் செய்தி.   ஆனால்  அப்படி அதிசயமாக பிறந்த  கிருஷ்ணன்  தான்  பிறந்தவுடன்  இறந்தவனாகக்   கூடாது, சிறந்தவனாக திகழவேண்டும் என்று திட்டமிட்டவன். ஆகவே பிறந்தவுடன்  தன்னை  இடப்பெயர்ச்சி  செய்ய சொன்னவனும் அந்த  மாய கிருஷ்ணன் தான். 
ஆகவே பிறந்தான்,  நடுநிசியில், ஆற்றைக் கடந்து கொட்டும் மழையில் அக்கரையில் ஒரு ஆயர்  வீட்டில் வளர்ந்தான்.  அவன் வளரும்போது ஒவ்வொரு  நாளும்  அவனைக் கொல்வதற்கு  அனுப்பப் பட்ட ஆபத்துகளை, அரக்கர்களை சந்தித்து  தான் உயிர் தப்பி அவர்கள் உயிரை போக்கினான்.   ஒவ் வொரு  நாளும் மரணத்தை  எதிர்பார்த்து 125 வயது வாழ கிருஷ்ணனால் மட்டுமே  முடியும்.   இதற்கு காரணம் கிருஷ்ணன்  நம்மைப்  போல்  சாதாரணன்  அல்ல.  இப்படி தான்  அவதரிக்க வேண்டும் என்று முன்னேற்பாடுடன் பிறந்தவன்.  கவலைகளை மறந்து  எதிர்ப்புகளை துறந்து சந்தோஷமாக வாழ்வது எப்படி என்று  கீதையாக  நமக்கு சொல்லித் தந்த  உதாரண புருஷன். 
பூமியின்  பாரம் குறைக்க , ராக்ஷச ர்களின்  கொடுமையை  ஒடுக்க, நல்லவர்களைக் காக்க  ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி  அன்று  ரோஹிணி  நக்ஷத்திரத்தில்   உதித்த ஸ்ரீ கிருஷ்ணனின்  ஜனனம் தான் நம்மால்  ஜன்மாஷ்டமி  என்று  உலகமுழுதும் ஹிந்துக்களால்  பல பெயர்களில் , அதாவது, கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி  கிருஷ்ணஜெயந்தி,  என்றெல்லாம்  கொண்டாடப்படுகிறது.    தஹி அண்டி,  தயிர் சட்டி,  என்று வடக்கே அவன் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள்.  குஜராத்தில் வெண்ணை சட்டி விழா. நம் ஊரில் மாட்டு பொங்கலின் போது  மாடுகளுக்கு கொம்பில் வர்ணம், அலங்காரம் செய்வோமே அதுபோல்  நிறைய பசுக்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு மாலைகள் அணிந்து ஊர்வலம் ஜம்மென்று வரும்.நம் ஊர்களில் வெண்ணைத் தாழி  உற்சவம்.


இஸ்கான் கோவில்களில் வெகு வெகு விமரிசையாக இந்த ஜென்மாஷ்டமி விழாக்கள் நடைபெறும்.
வ்ரஜ பூமி என்று கிருஷ்ணன் பிறந்த இடத்தையும், அவன் வளர்ந்த பிரிந்தாவனத்தையும் அவன் கம்சனை தேடிச்சென்று அவனைக் கொன்ற மதுராவையும் தரிசிக்க  இந்தியாவின் பல பாகங்களி லிருந்து பக்தர்கள் வருவார்கள்.  எங்கும் ஜெகஜோதியாக விளக்கொளிகள், வண்ண வண்ண தோரணங்கள், சந்தோஷம். கோலாகலம்,  பக்தர்களின் பரவசம்  எல்லாம் பற்றி எழுத முடியாது.  நினைத்து பார்த்து ரசிக்க வேண்டியது தான் ஒரே வழி.

வடக்கே ஜன்மாஷ்டமி சமயம்  பருவக்காற்று காலம் தீர்ந்து  பயிர்கள் வளர்ந்து அறுவடை காலமாக இருக்கும். எனவே விவசாயிகள், விளை நிலங்களில் அதிக வேலையின்றி கேளிக்கைகளில் ஈடுபட நேரம் கிடைக்குமே. ராஸலீலா வைபவத்திற்கு கேட்கவா வேண்டும். கோவர்தன கிரி நன்றி இன்னும் நம்  ரத்தத்தில் ஓடுகிறதே.

ஜென்மாஷ்டமி அன்று  ஜம்மு காஷ்மீரில்  காற்றாடி விடுகிறார்கள். ஒவ்வொரு வீட்டு மொட்டை மாடியிலிருந்தும்  பட்டம் பறக்கும்.  இந்த  வருஷமும்  இனி  வரும் காலத்திலும்  கேட்கவே வேண்டாம்.  இதுவல்லவோ  சிறப்பு  அந்தஸ்து.!  மணிப்பூரில் அஸ்ஸாமில்  ராஸ் லீலா கேளிக்கைகள் பிரபலம்.

  கோகுலாஷ்டமி தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனை வரவேற்பது வழக்கம். வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், பாதச்சுவடுகளை மாக்கோலமாக இடுவர். பாத சுவடு கோலமிடுவதில்  தான் எத்தனை ரகம். குழந்தைகளின்  கால்களை மாவில் தோய்த்து  ரப்பர் ஸ்டாம்பாக   rubber stamp ஆக  சில வீடுகளில்.   பெரிய முன்பாகம், சின்ன பின்பாதம்,   விரல்களுக்கு மேல், அல்லது குறைவாக, பாதங்களும் ஒன்றன் பின் மற்றொன்றாக,  சேர்ந்து, 8 வரைந்து மேலே குச்சி குச்சிகளாக விரல்களை  நீட்டி  எத்தனையோ வீடுகளில் வேடிக்கையாக  பார்க்கலாம்.  குழந்தைகளை பாலகிருஷ்ணர்களாவும், ராதைகளாகவும் கோபியர்களாகவும் அலங்கரித்து அவர்களை கண் குளிர,  பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  நம்  குழந்தைகளுக்கு கண்ணன் போல் வேடமிட்டும் அவர்களின் பாதச்சுவடுகளை மாக்கோலமாக வரையும்  பழக்கத்தை வளர்ந்துவரும்  நாகரிகம்   இதுவரை  மாற்றவில்லை. இப்படி பாதம் வரைவதற்கு அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது. கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வேண்டியது இறைவனின் திருவடியைத் தான்.  ஆச்சார்யனின் பாதத்தை  கண்ணனின் திருவடியோடு சேர்த்து  நாம்  வழிபடுபவர்கள்.  நம் வீட்டிலும் பாதச்சுவடுகளை வரைந்து வைத்தால் குழந்தைக்கண்ணன் தன் பிஞ்சு பாதங்களை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நம் வீட்டுக்கு வருவதைப் போல ஒரு தோற்றத்தைத் தரும்.

தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும்  குட்டி குட்டியாக  கிருஷ்ணன் பாதங்கள் அரிசி மாவில் வரைந்து கண்ணை பறிக்கும். உப்பு சீடை, வெல்ல சீடைக்கு ஒரு தனி ருசி. இரவெல்லாம் பஜனை. ஹரே கிருஷ்ணா நாம சங்கீர்த்தனம். வடக்கே கீத கோவிந்தம் படிப்பார்கள், பாடுவார்கள். 
கண்ணனுக்கு பட்சணங்கள் என்றால் கொள்ளை பிரியம். அவல், பொரி, சுகியன், அப்பம்,தட்டை, வெல்லச் சீடை,உப்புச் சீடை,முறுக்கு, அதிரசம் ஆகியவைகளை படையல் இட்டு வணங்கி குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கின்றனர். 
போன வருஷமும்  கொண்டாட முடியாமல்  கொரோனா  தடுத்தது. இந்தவருஷமும் அதே கதை.   அதற்கு முந்தைய வருஷங்களில்  குட்டி குட்டியாக குழந்தைகளோடு -- இல்லை  பிஞ்சு ராதைகள்   குட்டி  கிருஷ்ணன்களோடு குலாவினேன். இந்த வருஷம் உடல் நலம் வெளியே  போக அனுமதியில்லை.  பாகிஸ்தான்  பங்களா தேஷ் தேசங்களிலும் கிருஷ்ணனை இவ்வாறு கொண்டாடினார்கள், அரசியல்,   பிரிவினை என்பவை அவற்றை அழித்து விட்டது. எனினும் அங்கங்கே  வெளியே அதிகம் அரசல் புரசல் இல்லாமல் ஸ்ரீ ஜெயந்தி கொண்டாடி தான் வருகிறார் கள் சில பக்தர்கள். மனம் வேறு மதம் வேறு.
இஸ்கான்  பக்தர்கள்  அமெரிக்காவிலும் மற்ற சில வெள்ளைக்கார தேசங்களிலும் கிருஷ்ண ஜெயந்தியை ஊர்வலமாக, ஆடல் பாடலோடு மேள  தாளங்களோடு  நெற்றியில் நாமம், தலையில் முழு, அரை, சிண்டு,   குடுமிகளோடு,  பஞ்சகச்சம், கோலத்தோடு பெண்களும் புடவையோடு தெருவெல்லாம்  ஆடிப்பாடிக் கொண்டு, கோலாட்டம், கைத்தாளங்களுடன்  நெற்றியில் கோபி சந்தனமிட்ட  வண்ண வண்ண குழந்தைகளோடு கொண்டாடுவதைக்  காண  நிச்சயம் ரெண்டு கண்கள் போதாது.

கோகுலாஷ்டமி விழாவை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வர  கேட்கவா வேண்டும்.  மனிதர்களுக்கு பிறந்தநாள் என்றாலே வீடுகளை அலங்கரித்து தோரணங்கள் கட்டி உற்சாகமாக கொண்டாடுவார்கள். கோகுலாஷ்டமி,  அதுவும் எல்லோருக்கும் பிடித்த  பகவான் கண்ணன் அவதரித்த நாள் என்றால் உற்சாகத்துக்கு என்ன குறைவு?  இந்த  கடவுள் தானே  மனிதராக அவதரித்து அழியாக கீதையை  நமக்கு பரிசளித்ததற்காகவே  நாம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடவேண்டும்.கண்ணன் பிறந்த ஆலயங்களில் அலங்காரம்,தோரணங்கள் எங்கும் கண்ணை பறித்து  களைகட்டும் .

எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலை நாட்டு வதற்காகவும் யுகம்தோறும் அவதரிப்பேன், என்பது கீதைநாயகன் கிருஷ்ணரின் அருள்வாக்கு. தர்மநெறி தவறி நடந்த கொடிய அரசர்களிடம் இருந்து உலகைக் காப்பதற்காக குருசேக்ஷத்திர யுத்தத்தை நடத்தினார். 

கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை இன்றும் உள்ளது.நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம். தஹிகலா என்றால், பல திண்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலையும் வெண்ணையையும் கலப்பது என்பர்.
வரஜபூமியில் கோபியர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன. மக்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணை பால் போன்ற பலவிதமான பண்டங்களை உண்ணுவார்கள்.
பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் வ்ரஜபூமியில் ஸ்ரீகிருஷ்ணன் தனது உணவுடன் தன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் நம் ஊரில் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்

கிருஷ்ணன் தனது லீலைகளின் மூலம் எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டவன். தனது பிறப்பு முதல் வாழ்நாள் முழுவதும் லீலைகள் புரிந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டி யவன்.  இந்து மக்களால் வழிபாடு செய்யப்படும் கடவுள்களில் கிருஷ்ணனின் குழந்தைப் பருவமே எல்லோராலும் முதன்மை யானதாக நினைவு கூறப்படுகிறது.

ஆயர் பாடியில் கோபியர்களையும், இடையர்களையும் துன்பங்களில் இருந்து பாதுகாத்ததால் கிருஷ்ணனின்  பிறப்பானது எளியோர்களாலும் கொண்டாடப்படுகிறது.  அன்றைய தினம் பகல் முழுவதும் விரதம் இருக்கின்றனர்.  மாலை நேரத்தில் வீடுகள் அலங்கரிக்கப்படுகின்றன. வீட்டின் வாயிற்படி முதல் வழிபாட்டிடம் வரையிலும் மாவினைக் கொண்டு குழந்தையின் காலடித்தடங்கள் வரையப்படுகின்றன.

ஆயர்பாடியில் கண்ணன் குழந்தையாக இருந்த போது உயரத்தில் கட்டப்பட்டிருந்த பானைகளில் உள்ள வெண்ணையை எடுத்து யாரும் அறியாத வண்ணம் உண்ணும் போது சிதறிய வெண்ணை யில் கால் வைத்து நடந்ததால் உண்டான காலடித் தடங்களை நினைவு கூறும் வகையில் வீடுகளில் குழந்தைக் கண்ணனின் காலடித் தடங்கள் வரையப்படுகின்றன.  இவ்வாறு செய்வதால் குழந்தைக் கண்ணன் வாயிற்படி வழியே வந்து வழிபாட்டு அறையினுள் நுழைந்து தங்களின் வழிபாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் நம்பப்படுகிறது.

வழிபாட்டு அறையில் கிருஷ்ணருடைய உருவப்படமோ, சிலையோ இடம் பெறுகின்றது. குழந்தை கிருஷ்ணருக்குப் பிரியமான தட்டை, உப்பு சீடை, இனிப்பு சீடை, அதிரசம், தேன்குழல், இனிப்பு வகைகள், பால், வெண்ணெய், திரட்டுப்பால் போன்றவை படைக்கப்படுகின்றன.

கிருஷ்ணர் முல்லை, மல்லிகை, துளசி ஆகியவை கொண்டு அலங்கரிக்கப்படுகிறார். விளக்கு ஏற்றப்பட்டு தீபதூபங்கள் காண்பிக்கப்படுகின்றன. பகவத்கீதை, கிருஷ்ணர் பற்றிய பாடல்கள் பாடப்படுகின்றன. பின் அருகிலிருப்போர் மற்றும் உறவினர்களுக்கு பிரசாத விநியோகம்.   வீட்டில் வழிபாடு முடிந்தபின் அருகிலிருக்கும் கிருஷ்ணர் கோவிலுக்கு வழிபாடு செய்யச் செல்கின்றனர். கோவில்களில் நடு இரவு சிறப்பு வழிபாடுகள். கிருஷ்ணர் நள்ளிரவு பிறந்ததால் அதனை நினைவு கூறும் விதமாக நள்ளிரவு வழிபாடு நடைபெறுகிறது. அதன்பின்னரே விரதம் இருப்போர் உணவு உண்டு விரதத்தினை முடிக்கின்றனர். குழந்தைகள் கண்ணன் மற்றும் ராதை வேடங்கள் இட்டு வழிபாடுகளில் கலந்து கொள்கின்றனர்.

இவ்விரத முறையைப் பின்பற்றவதால் குழந்தை இல்லாதவர்களுக்கு அழகான, புத்திகூர்மையான குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும், குழந்தைகள் உள்ளவர்களுக்கு குழந்தைகளின் அறிவு மேம்படு வதோடு நற்சிந்தனையும் கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.

 மராத்தி தேச   தெருக்களில் உயரமான இடங்களில் பானைகளில் தயிர் நிரப்பப்பட்டு கட்டப்படுகிறது. இதனுடன் பணமுடிப்பும் கட்டப்படுகிறது.   இப்போட்டியில் கலந்து கொள்பவர்களை  ''கோவிந்தாக்கள்'' என்று  கூப்பிடுவார்கள்.  இவர்கள் பிரமிடுகள் அமைத்து மேலேறி தயிர் கலசத்தை உடைத்து பணமுடிப்பினைப் பெறுகின்றனர். கோவிந்தாக்கள் குழுக்களை அமைத்து இரண்டு, மூன்று தஹி அண்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதுண்டு. மஹாராஷ்டிரா வில் ஒட்டு மொத்தமாக  ஜென்மாஷ்டமி விழாவன்று உறியடி கோலாகலமாக நடக்கிறது. எண்ணற்ற பெண்களும் ஆண்களும் இதில் குழந்தைகளோடு பங்கேற்கிறார்கள். உறியடி களில் பானைகளை உடைத்தவர்களுக்கு தாராளமாக பணப் பரிசு புதையலாக கிடைக்கிறது.     ஆயர்பாடியில் கண்ணன் தனது நண்பர்களோடு சேர்ந்து   அவர்களையே மனித பிரமிடு  ஆக்கி   அவர்கள் மேல் ஏறி  உயரே  கட்டப்பட்டு இருந்த பானைகளில் உள்ள தயிர் மற்றும் வெண்ணெயை எடுத்தார் என்பதால்  இந்த கொண்டாட்டம்.
 ராசலீலா என்பது கண்ணன் கோகுலத்தில் கோபியர்களுடன் இணைந்து விளையாடிய லீலைகளை நடனமாடி நடிப்பதாகும். இந்நிகழ்வு வடமாநிலங்களில் நிகழ்த்தப்படுகிறது.  ஜெயதேவர்  கீத கோவிந்தத்தில் எத்தனை பாட்டுகள்  அஷ்டபதியாக  பாடி த் தள்ளி இருக்கிறார்.  நிறைய அதெல்லாம் .எழுதி இருக்கிறேனே

தமிழ்நாட்டிலும் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் குழந்தைகளுக்கு கண்ணன், ராதா மற்றும் மகாபாரத கதா பாத்திரங்கள் மாறுவேடமிட்டு போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன.  இவ்விழாவின் போது உறியடி நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள்  வேறு. கோவில்களில் தேரோட்டம்  விசேஷம். கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் இவ்விழாவின் போது லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.   
கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலையில்  வாசல் தெளித்து,வாசற்படியிலிருந்து பூஜை அறை வரைக்கும் கண்ணனின்  பிஞ்சுக் கால்களை மாக்கோலங்களாக இடவேண்டும்.கிருஷ்ணன் தனது மென்பாதங்களை பதித்து ஒவ்வொருவருடைய வீடுகளிலும் எழுந்தருளிகிறார் என்பது ஐதீகம்.

கிருஷ்ணன்  வருகையால் ஆயர்பாடியில்  செல்வமும்   வளமும் பெருகியது போல், ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக கிருஷ்ணரது பாதத்தை அரிசி மாவினால் போடுகிறார்கள்.    அரிசி மாவினால் கோலம் போடுவது ஏன்?  கோ குலத்தில் கண்ணன் தந்து தோழர்களுடன் கோபியர் இல்லம்தோறும் சென்று வெண்ணெயைத் திருடி தின்னும்போது,வீடு முழுவதும் வெண்ணெய் இறைபடும்.அவனது கமல மலர்ப்பாதங்கள் அந்த வெண்ணெயிலே பதிந்து அந்த வீடு முழுவதும் கண்ணனின் பாதசுவடுகள் நிறைந்திருக்கும்.பண்டைகாலத்தில்  மக்கள்  கிருஷ்ண ஜெயந்தி அன்று வெண்ணையினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.அதன்  ஞாபகமாக தற்போது  மாக்கோலம்..

 கிருஷ்ணரது சிலையை  வைத்து முதலில் நெய்,பால்,தேன்,தயிர்,கடைசியாக  சுத்த   தண்ணீரால்  அபிஷேகம் செய்ய வேண்டும்.சுவாமிக்கு சந்தனம் குங்குமம் இட்டு,புஷ்பங்களால் அலங்கரிக்க வேண்டும்.வஸ்திரம் சாத்துவது விசேஷம். கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல்,வெண்ணெய் நாவற்பழம் ,சீடை,முறுக்கு,அப்பம் ,பாலால் செய்த பலகாரங்கள் போன்றவற்றை  நிவேத்தியமாக வைத்து,கிருஷ்ணாஷ்டகம்,ஸ்ரீமத் பாகவதம்,கிருஷ்ணன் கதைகள் சொல்லி கற்பூர ஆர்த்தி காட்ட வேண்டும்.

கிருஷ்ண  ஜெயந்தி விரதத்தை   கணவனும்,மனைவியும் சேர்ந்து அனுஷ்டிப்பது  மிகவும் உத்தமமாகும்.பகற் பொழுது உபவாஸம் இருந்து இரவில்,கண்ணனது திருநாமத்தை உச்சரித்து வழிபட வேண்டும். கோகுலாஷ்டமி அன்று இருக்கும் விரதமானது, பல்லாயிரம் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதற்கு சமம்.
நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம், பண்பாட்டை பேணிகாக்கும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையையும் சமர்ப்பிக்கிறோம் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...