Tuesday, August 31, 2021

PESUM DEIVAM




 பேசும் தெய்வம்:    நங்கநல்லூர்  J K  SIVAN  -


69.    கோவிந்தராஜ  வெங்கடேச  பெருமாள் தரிசனம் 

மஹா பெரியவா காளஹஸ்தியில் இருந்த  ஒருவார காலம் முழுதும் தினமும் காளஹஸ்தீஸ்வரர், ஞானகுசம்பாள்  சந்நிதியில் தியானம் செய்ய தவறவேயில்லை.  தியானம்  பல மணிநேரங்கள் கூட ஆகும். யாரும் கிட்டே வரமாட்டார்கள். அவராக தியானம் கலைந்து எழுந்திருப்பார்.  நாள் தவறாமல், பாரத்வாஜ தீர்த்தம், மயூர தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பனசகோணா , சஹஸ்ரலிங்கேஸ்வர கோணா  என்று பல   புண்ய தீர்த்தங்களில்  விடாமல்  ஸ்னானம். 
மஹா சிவராத்திரி  அமாவாசை அன்று  கைலாசகிரி போகவேண்டும் என்று முடிவு செய்தார். பலருக்கு பெரியவாளை எப்படி தடுப்பது என்று கவலையும்  சங்கடமும்.  அந்த காட்டுப்பாதை, கரடுமுரடானது,  முப்பது மைல்  நடக்கவேண்டும். கொடிய  வனவிலங்குகள் மலிந்த இடம். இருட்டு. மஹா பெரியவா துணிந்துவிட்டார் என்றால் எந்த சக்தியும் அவரை தடுக்க முடியாது.   கைலாச கிரி ப்ரதக்ஷணத்துக்கு   நடக்க கிளம்பிவிட்டார்.  பெரிய கிரி பிரதக்ஷணம்,    பல  மைல்கள் நீளமானது. 

மஹா  பெரியவா காலை 9மணிக்கே  தீர்மானித்தபடி  கிளம்பிவிட்டார். கொளுத்தும் வெயிலை லக்ஷியம் பண்ணவில்லை. கிரி பிரதக்ஷணம்   ராத்திரி நள்ளிரவு தான் முடிந்தது. அங்கிருந்து  மடத்துக்கு நடந்து வந்தார். மஹா பெரியவா நடப்பதை பார்த்திருக்கிறீர்களா?  ஓட்டமும் நடையு மாக இருக்கும். அவரோடு சேர்ந்து நடக்க முடியாது.  கூட வந்த இருபது பேர் களைத்துவிட்டார்கள். மேல் மூச்சு  கீழ்மூச்சு வாங்கியது. கண்களில் ஆயாசம்.  நொந்து போய்விட்டார்கள்.  மஹா பெரியவா எந்த ஸ்ரமத்தையும்  காட்டவில்லை.  மஹா பெரியவா காலில் நிறைய கொப்புளங்கள்  வெயிலினால்,  காட்டுப்பாதையில்  நீண்ட நடை காரணமாக  இந்த  கொப்புளங்கள்.  அப்படியும் அவர்  அதைப் பற்றிய  கவனம் சிறிதும் இல்லாமல் இருந்தார். 
மறுநாள் காலை  காளஹஸ்தி ராஜா வந்துவிட்டார்.  பாத பூஜை செய்ய அனுமதி கேட்டு ஏற்பாடுகள் நடந்தது.  காளஹஸ்தி அரண்மனையில் ஒரு பழைய  ஸிம்ஹாஸனம் இருந்தது..  பல  ராஜாக்கள் முன்னோர்கள் அமர்ந்து ஆட்சி செய்தது. அதில்  மஹா பெரியவாளை அமர்த்தினார். அதில் யாரும் அமராமல்  பூஜிக்கப்பட்டு வந்த ஸிம்ஹாஸனம்  அது.  இன்னொரு விஷயம் சொல்கிறேன்  கேளுங்கள். ஆச்சரியப்படுவீர்கள். மஹா பெரியவா அமர்ந்த அந்த சிம்மாசனத்தில் அதற்கு முன்  யார் எப்போது அமர்ந்தார் தெரியுமா?  1887ம் வருஷம்,  முந்தைய  காமகோடி பீட 65வது ஜகத்குரு   ஸ்ரீ மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தான் கடைசியாக அதில் அமர்ந்தவர்.   இது கப்ஸா இல்லை.  காளஹஸ்தி ராஜா சமஸ்தானத்து தஸ்தாவேஜிகள், ஆவணங்கள்   சொல்லிய  ஆதார பூர்வ  விஷயம்.

காளஹஸ்தி முகாமுக்கு பிறகு  மஹா பெரியவா  திருப்பதிக்கு  விஜயம் செய்தார்.  1932ம் வருஷம் மார்ச் மாதம் 13ம் தேதி திருப்பதிக்கு விஜயம் செய்தார்.  திருமலை   ஏறும் முன்பு கீழே  திருப்பதியில்  அநேக பக்தர்கள்,  திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள், பணியாளர்கள்,  இதர மற்ற  இடத்திலிருந்து வந்தவர்கள் என்று பெரிய கூட்டம் சேர்ந்து விட்டது.   திருப்பதிக்குத் தெற்கு எல்லையில் அங்காளம்மன் ஆலயம் உள்ளது. அங்கே  எல்லோரும் ஒன்றுகூடி  பெரியவா வருகைக்கு காத்திருந்தார்கள்.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட  ஒரு பல்லக்கில் மஹாபெரியவா ஆரோகணித்து அனைவருக்கும்  தரிசனம் தந்தார்.  ஊர்வலம் அங்கிருந்து  தொடர்ந்தது.   ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டார்கள்  வேத பாராயணம்  ஒலித்தது.   பஜனை குழுக்களின் ஏகோபித்த  குரல் இனிமையாக எங்கும் கேட்டது. பக்க வாத்யங்கள் இனிமை கூட்டியது.  
திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ ஸ்வாமிகள் சந்நிதி, தேவஸ்தானம்  வரை ஊர்வலம்  களைகட்டியது. மஹா பெரியவா ஆலயத்தின் அருகே  பல்லக்கை விட்டு இறங்கினார்.

ஒரு விஷயம்.  திருப்பதி செல்லும் அநேகர்,  நேராக  நூல் பிடித்த மாதிரி திருமலை சென்று வெங்கடேசனை தரிசித்து லட்டு சாப்பிட்டுவிட்டு  வீடு திரும்புகிறோம் .  அநேகருக்கு   ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவில் மலையடிவாரத்தில் இருப்பதும் தெரியாது, தெரிந்தாலும் பலர்  அங்கே சென்று தரிசிப்பதில்லை.   இது காலத்தின் கோளாறு.

சிவனும்  விஷ்ணுவும் சேர்ந்து  பிரதான தெய்வங்களாக உள்ள கோவில்கள் ரொம்ப அரிதானவை.  இத்தகைய ஆலயங்களில் சைவ வைணவ சம்பிரதாயங்கள் விடாமல் கடை பிடிக்கப்படும்.  பாரத தேசத்தில் ரெண்டு  கோவில்கள் இப்படி பிரபலமானவை.  சிதம்பரம் நடராஜர் சந்நிதிக்கு அருகே  ஸ்ரீ கோவிந்தராஜ  பெருமாள் இருக்கிறார்.  வைணவர்களின் திவ்ய தேசம் அது.  திருச்சித்ர கூடம் என்று பெயர். ஆனந்தமாக  சயன கோலம்.  இந்த பக்கம் ஆனந்த   நடராஜன். .  காஞ்சிபுரத்தில் இதே  போல் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்.  அந்த ஆலயத்தில்  மூலவருக்கு அருகிலேயே  ஒரு பெருமாள் சந்நிதி உள்ளது. அதுவும் வைணவர்களின் முக்கிய திவ்யதேச ஆலயங்களில் ஒன்று. அங்கே  மஹா விஷ்ணுவுக்கு பெயர் நிலாத்திங்கள்  துண்டத்தான்.  உண்மையில்  ஹரி ஹர  வேறுபாடு கிடையாது.  வித்யாசம் எல்லாம் நமது மனதில் தான்.   சிவனின் மனைவி பார்வதி தேவி, விஷ்ணுவின் சகோதரி.   விமானம்  புருஷ சுக்தம்.பெருமாள்  நின்ற திருக்கோலம்.  தாயார் பெயர்   நேர் ஒருவரில்லா  வள்ளித்  தாயார்.  தீர்த்தம் சந்திர புஷ்கரணி.  
  திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த போது வெப்பம் மூண்டது.  ஸ்ரீ மஹா விஷ்ணுவும்  மற்ற தேவர்களும்  பிரம்மனைப்  பிரார்த்தனை செய்தார்கள்.  அமிர்த கடல் வெப்பம் நீங்க வேண்டு மானால் காஞ்சியிலுள்ள சிவ பெருமான் குடிகொண்டிருக்கும் ஏகாம்பரநாதன் திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை  வணங்கினால் போதும் என்று பிரம்மன்  வழிகாட்டியதால்  மஹா விஷ்ணு  காஞ்சிபுரம் வந்து இங்கே  தவம் செய்தார் என்று ஒரு  ஸ்தலபுராணம். 

 சிவபெருமான் தலையில் இருக்கும் சந்திர ஒளி திருமால் மீது பட்டதும்  திருமாலுக்கு வெப்பம் நீங்கியது.  இதனால் பெருமாளுக்கு நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் என்று பெயர்.

 ஒரு மாமரத்தின் கீழே பார்வதி தேவி தவம் செய்யும் பொழுது,  அவளது  ஜெபத்தை சோதிக்க சிவன் அந்த  மாமரத்தை எரித்ததாகவும் அப்பொழுது பெருமாள் தனது அம்ருத கிரகணங்களை கொண்டு எரிந்து போன மாமரத்தை தழைக்கச் செய்து குளிர்ச்சியை உண்டு  பண்ணியதாகவும் வேறொரு ஸ்தலபுராணம். பார்வதியின் அருகே வாமனர் சிலை உள்ளது.   இந்த வாமனர் தான் மாமரத்தை தொலைக்க வைத்த பெருமாள் என்று புராணச் செய்தி.  சைவ ராஜா  ரெண்டாம் குலோத்துங்க சோழன் கோவிந்தராஜ பெருமாளை சிதம்பரம் ஆலயத்திலிருந்து  எடுத்து  கடலில் எறிந்தான். 1130ல்  வைணவ பக்தர்கள்  கோவிந்தராஜ ஆலய உத்ஸவ மூர்த்திகளை  திருப்பதிக்கு எடுத்து சென்றார்கள். ஸ்ரீ ராமானுஜர் பிரதிஷ்டை செய்தார்.  1235ல்   ரெண்டாம் ராஜராஜன் காலத்தில் தான் இந்த திருப்பதி கோவிந்தராஜர் ஆலயம் பற்றி அதிகம் வெளியில் தெரிந்தது.  அதன் மஹாத்மியம் தெரிந்தது. முன்னூறு வருஷங்கள் கழித்து அப்புறம் விஜயநகர நாயக்கர்கள் காலத்தில்  ஆலயம் புனருத்தாரண  கும்பாபிஷேகம் பெற்றது.  சித்ர  வேலைப்பாடுகள் நிறைந்த  ஆலயம். 11 கலசம் கண்ட 7 நிலை ராஜகோபுரம். 
கோவிந்தராஜ பெருமாள்   திருமலை வேங்கடேச பெருமாளுக்கு மூத்தவர். வெங்கடேசன் பத்மாவதி கல்யாணத்தில் முக்கிய பங்கு வகித்தவர். கோவிந்தராஜன் தான் குபேர சம்பத்தை நிர்வகித்து பாதுகாத்தவர். அவர் தான் செல்வ நாயகன்.  ஆரம்பகாலத்தில் ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் என்று பெயர். கோவிந்தராஜ பெருமாள் யோகநித்ரா சயன  கோலத்தில்  உள்ளவர்.  பலராமர் தான் கோவிந்தராஜனாக அவதரித்தவர் என்று ஒரு ஐதீகம்.
மஹா பெரியவா  திருப்பதியில் தங்கி தரிசனம் செய்ய சகல ஏற்பாடுகளும் செயதிருந்தார்கள்.  ஸ்ரீ ராமஸ்வாமி ஆலயத்தின் எதிரில்  தோட்டத்தில்  பந்தல், நிர்மாணித்து  அங்கே மஹா பெரியவா முகாமிட்டார். மஹா பெரியவா அமர்ந்திருந்த பல்லக்கு  ஆலயத்தின் வாசலுக்கு வந்து மஹா பெரியவா  இறங்கினார் அல்லவா. அப்போது ப்ரம்ம ஸ்ரீ வெங்கட்கேஸ தீக்ஷிதர் ஸமஸ்க்ரிதத்தில்  அவருக்கு வரவேற்புரை  வாசித்தார்.  நாகபுடி N  குப்புசாமி அய்யர்  தெலுங்கில்  அதே   போல் வரவேற்புரை வழங்கினார்.  சாயந்திரம்  மடத்திற்கு விஜயம் செய்து  மடாதிகாரி பிரம்மஸ்ரீ வேங்கடேச  தீக்ஷிதர் ஏற்பாடு செய்த  பாதபூஜையை ஏற்றார்.  கீழ் திருப்பதியில் இவ்வாறு  1932 வருஷம்  ஏப்ரல் மாதம் 21ம் தேதி வரை  மஹா பெரியவா  தங்கி இருந்தார்.  அந்த சமயத்தில் மூன்று நாள்  திருமலைக்கு சென்று  வெங்கடேச பெருமாள் தரிசனம் செய்தார்.  அங்கே  பாதபூஜை, பிக்ஷா வந்தன ஏற்பாடுகள் சிறப்பாக நடந்தன.  தங்கப்பூண் போட்ட குடை ஒன்றும் பீதாம்பர வஸ்திரமும் பெருமாள் பிரசாதமாக  மஹா பெரியவாளுக்கு தேவஸ்தான நிர்வாகம் அளித்தது.   காஞ்சி காமகோடி மட சார்பாக  மஹா பெரியவா நவரத்ன கல் பதித்த மகரகண்டி  பதக்கம் ஒன்றையும்  பீதாம்பர வஸ்திர ஜோடி ஒன்றும்  வேங்கடாசலபதி  பெருமாளுக்கு சாத்தினார்.   அப்போது தான்  சஹஸ்ரகலச அபிஷேகம், கருடோத்சவம் நிகழ்த்தினார்.  தேவஸ்தான நிர்வாகிகள்,  பணியாளர்களுக்கு பிரசாதம்   பரிசுகள் அளித்து ஆசி வழங்கினார்.  திருமலையில் தங்கி யிருந்த மூன்று நாட்களிலும்   பாபநாசம்   ஆகாச கங்கை  நீர் வீழ்ச்சியில் ஸ்னானம்.    மலையிலிருந்து நடந்து கீழே இறங்கி வரும் வரை வழியில் அமர்ந்திருந்த அநேக  ஏழைமக்களுக்கு   வஸ்திர, ஸ்வர்ண புஷ்ப  தானம்  செய்தார்.  திருப்பதி விஜயத்தின் பொது எண்ணற்ற பக்தர்கள்  எங்கிருந்திருந் தெல்லாமோ  வந்திருந்து  தரிசனம் பெற்று மகிழ்ந்தார்கள்.  பிராமணர்கள், வைசியர்கள், வைசியர்கள், பெரி வைஸ்யர்கள் , பலிஜாக்கள், ரெட்டிகள்,  கண்டல வகுப்பினர்  அனைவரும்  பாதபூஜை பிஷவந்தன வைபவத்தில் கலந்து கொண்டார்கள். மஹா பெரியவா சரளமாக  தெலுங்கில் அவர்களுக்கு பிரசங்கம் செய்தார். , மடத்துக்கு விஜயம் செய்த  வித்வான்களுக்கு , பண்டிதர்களுக்கு எல்லாம்  காஷ்மீர் சால்வை வழங்கி  கௌரவித்தார்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...