Monday, August 16, 2021

SUDDEN DEVOTION

 திடீர் பக்தி.  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


25  வருஷங்களுக்கு முன் பவான்ஸ்  ஜர்னல் என்ற ஒரு அருமையான புத்தகத்தில் படித்து  ஒரு நோட்  புத்தகத்தில்  நான்  குறித்து வைத்திருந்தது இப்போது   கண்ணில் பட்டது.  அது ஒரு வழக்கு சம்பந்தமான சுவாரஸ்ய சமாச்சாரம்.  ஆஞ்சநேயர் பற்றியது.

''நூறு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்  ஜநக் சேத்  என்ற பணக்கார  ஜமீன்தார் தன்னுடைய தோட்டத்தின் மூலையில்  ஒரு சிறு வீட்டை ராம சர்மா எனும்  பிராமணருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.  ராம சர்மா  அந்த வீட்டின் முன் பகுதியை ஒரு சின்ன  ஆஞ்சநேயர் கோவிலாக மாற்றி விட்டு சிறிய  பின் பகுதியில்  வசித்தார். ஜநக் சேத்  ராமசர்மாவுக்கு  இது விஷயமாக ஒரு  ஒப்பந்த  பத்திரம்  எழுதிக் கொடுத்திருந்தார்.  

 ரெண்டு தலைமுறைக்கு  பிறகு  ஜனக் சேத் பேரன் மோகன் சேத், இப்போது  அந்த  கோவிலை இடித்து விட்டு  ஒரு பெரிய  வணிக வளாகம் கட்டவேண்டும்.  ஆகவே  இடத்தை காலி செய்யுங்கள் என்று  ராம சர்மா  பேரன்  அனந்த சர்மாவுக்கு  வக்கீல் நோட்டீஸ்  விட்டான். 

ஹனுமார் கோவில் ஒன்றும் பிரபலம் இல்லை. ஆனால்  அந்த பகுதி மக்கள் பலபேர்  ஹனுமார் 
கோவிலுக்கு  வந்து தினமும் வழிபடுவார்கள். தினமும் பூஜை, அலங்காரம், அர்ச்சனை உண்டு.  வக்கீல் நோட்டிஸ் வந்ததும்  ராம் சர்மா  பேரன்  அனந்த சர்மா  மயக்கம் அடைந்தான்.  

''ஆஞ்சநேயா  உன்னை எங்கே  கொண்டு போவேன்?  பரம  ஏழை நான் எப்படி  இன்னொரு கோவில் கட்டுவேன்?  நூறு வருஷங்களாக  நீ இருக்கும்  இடம். நானும்  இங்கேயே  உன் காலடியில்  பிறந்த இந்த இடத்தை விட்டு  எங்கே போவது?''

 அனந்த சர்மா  மோகன் சேத்துடன்  நேரில் சென்று பல முறை கெஞ்சியும்  மோகன் சேத் இம்மியும்   மசியவில்லை.   ''எனக்கு இந்த குரங்கு  மேல்  பக்தி இல்லை.   இந்த குரங்கு  கோவில் எனக்கு  வேண்டாம்.''  என்றான்

அனந்த சர்மா  ஒரு முடிவுக்கு வந்தான்.  ''ஆஞ்சநேயா, உனக்கில்லாத சக்தியா?  உனக்கு இங்கிருந்து  போக வேண்டும் என்று தோன்றினால் நீ போ.  நான் இனிமேல் அவனிடம் உனக்காக கெஞ்சப் போவதில்லை. சட்டமன்றமோ, போலீசோ, ஒரு துரும்புக்கு  சமானம் உனக்கு, உன் வீரத்திற்கு முன்பு.  நான் உன் பக்தன். என்னை ரக்ஷிப்பது உன் கடமை.   என்ன செய்வது என்பதை நீயே முடிவு செய்'' 

வழக்கு நீதி மன்றத்தில்  விசாரணைக்கு வந்து  ''மோகன் சேத், அனந்த சர்மா'' என்று டவாலி  கத்தியபோது  அனந்தசர்மா வரவில்லை.   அவரது  பெண்  சர்மாவுக்காக ஆஜரானாள் .  பள்ளி மாணவி . 

''யார் நீ.  எங்கே அனந்த சர்மா, அவன் வக்கீல் யார் ?''

''நான் அவர் பெண். ஒன்பதாவது படிக்கிறேன். அவர்  பூஜை செய்து கொண்டிருக்கிறார். வர இயலவில்லை.   நான் பள்ளியில் ஆசிரியரிடம்  அனுமதி வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன்.    நான் எங்கள் குலதெய்வம் அனுமார் சார்பாகவும், என் தந்தை சார்பாகவும்  சொல்லவேண்டியதை சொல்கிறேன். எங்களுக்கு வக்கீல் வைக்க வசதி இல்லை. அனுமதிக்க வேண்டும் ''

ரொம்ப  ஸ்பெஷல் கேஸாக நீ சொல்வதை நான் அனுமதிக்கிறேன். என்ன சொல்ல  வந்திருக் கிறாய்?

''ஜட்ஜ் அவர்களே, நாங்கள் ஏழைகள். எங்களை எதற்காக நூறுவருஷமாக இருக்கும்  இந்த இடத்திலிருந்து வெளியேற்றவேண்டும்? மாதம் தவறாமல் எப்படியோ  கஷ்டப்பட்டு கொடுக்க
வேண்டிய  வாடகையை கொடுத்து வருகிறோம்.  ஹனுமார் கோவில் சின்னது தான்.  ஆனால் அநேக பக்தர்கள் வந்து போகிறார்கள். அதை எதற்கு தடுக்க வேண்டும்?.  நாங்கள் வேண்டுமானால் எங்காவது போகலாம். ஹனுமாரை எங்கே கொண்டு பிரதிஷ்டை பண்ணுவது?  நூறு வருஷங்களாக  அவரோடு வாழ்ந்த  எங்களால்  அவரைப் பிரிந்து ஒரு கணம்  கூட வாழமுடியாது.  எங்களை அங்கேயே  ஆஞ்சநேயரோடு வாழ அனுமதிக்கவேண்டும். '' என்றாள்  அந்த சிறுமி.

''நான் வேறு இடத்தில்  ஒரு சிறு வீடு தருகிறேன்  கோவிலுக்கு சின்ன இடமும் தருகிறேன். அந்த இடத்தை  காலி செய்து கொடுக்க வேண்டும் '' என்றான் மோகன் சேத்.  வழக்கு  15 நாளுக்கு பிறகு தீர்ப்பாகும் என  ஓத்தி வைக்கப் பட்டது.

எட்டாவது நாளே  மோகன் சேத் வக்கீல் ஆஜராகி  இந்த  வழக்கை வாபஸ் பெறுகிறேன் என்கிறார்.
அனந்த சர்மாவுக்கு தான்  வேறு இடம் தருவதாகவும், அனுமாருக்கு ஒரு சிறு கோவில் கட்ட இடம் தருவதாகவும் சொல்லி அதை சர்மாவை ஒப்புக்கொள்ள வைக்கமுடியும்.   பின்  எதற்கு கேஸ் வாபஸ்?  மோகன் சேத்  ஹனுமார் பக்தி கிடையாது என்று சொன்னவர்  மாறிவிட்டாரா? திடீர் ஆஞ்ச நேய பக்தியா? என்று ஜட்ஜ் கேட்டார். 

''மோகன் சேத் மாறவில்லை. அவருக்கு  ஆஞ்சநேய பக்தியும் கிடையாது.  கடந்த ஒரு பத்து பன்னிரண்டு  நாட்களாக  மோகன் சேத்  தூக்கமில்லாமல் தவிக்கிறார்.   கண்ணை மூடினால்   ஒரு பெரிய  ஆஜானுபாகுவான குரங்கு  கையில் கதையுடன் அவரை தாக்க வருவதாக  விடாமல் சொப்பனம் காண்கிறார்.   நாலு பேரிடம் சொன்னபோது  இது நீ செய்த வேலைக்காக  ஆஞ்சநேயர் உன்மேல் கோபம் கொண்டிருக்கிறார்  என்று தெரிகிறது.  இந்த குரங்கு பயம் உன்னை  ஆட்டு விக்கிறது. கோவிலை தொந்தரவு செய்யாதே'' என்று எல்லோரும் அறிவுரை சொல்லியதால்  வழக்கை வாபஸ் பெறுகிறார். ''

அப்புறம் என்ன.  ஆஞ்சநேயர் அங்கேயே  கோவில் கொண்டு  அனந்தசர்மா வின் பூஜையை பெற்று நைவேத்யத்தை ருசிக்கிறார்.   மோகன் சேத்  ஹனுமான் பயமின்றி தூங்குகிறான்.







No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...