Thursday, July 6, 2017

ஹரி ஹரன் - J.KRISHNA SIVAN

நமது ஹிந்து சமய பிரதான பிரிவுகள் சைவமும் வைணவமும். இவை ஒன்றோடொன்று இணைந்தே பண்டைக்காலத்தில் வழிபடப்பட்டன. பழைய கால கோவில்களில் சிவனும் விஷ்ணுவும் சேர்ந்தே காணப்பட்டனர். இன்றும் சேர்ந்தே அவற்றில் உள்ளார்கள். பிரிக்க முடியாதவர்களை ஏன் பிரிக்க வேண்டும்?

எனவே தான் இன்றும் உலகத்தில் நிறைய கிருஷ்ணன் (விஷ்ணு) சிவன் கோவில்கள் உள்ளன. தீவிர உபாசகர்கள் அவர்களை பிரித்தே வழிபடுகிறார்கள். இருந்து விட்டு போகட்டுமே. ஒருவர் மற்றவரை இகழாமல் இருந்தால் அது போதும்.
சைவர்கள் சிவன், அம்பிகை, சுப்பிரமணியன், விநாயகன்வீரபத்திரன், கால பைரவன், பைரவன் என்று குறிப்பிட்ட தெய்வங்களை வழிபடுவதும் வைஷ்ணவர்கள் விஷ்ணு அம்சமான ராமன், கிருஷ்ணன், பாண்டுரங்கன், விட்டலன், நரசிம்ஹன், என்று பல அவதார மூர்த்திகளையும் மூலமான நாராயணனையும் வழிபடும் தெரிந்ததே.

ரெண்டும் ஒன்றே என்று கொள்வோர்களும், இல்லை வேறு வேறு என்போர்களும் இருந்து விட்டு போகட்டும். அவரவர் போக்கு அவரவர் நம்பிக்கையைப் பொருத்தது. இவர்கள் இருவருமே கிட்டத்தட்ட ஒன்றே அல்லது ஒரே மாதிரியே என்று புலப்பட்டால் ஆச்சர்யமில்லை. கொஞ்சம் அலசுவோமா?

கிருஷ்ணன் - ஹரி சிவன் - ஹரன்
துளசி மாலை வில்வமாலை தரிப்பவர்
சுதர்சன சக்ரம் திரிசூலம் ஆயுதம்
லக்ஷ்மி மார்பில் பார்வதி பாதி உடம்பில்
யுத்தகள உபதேசம் மௌன உபதேசம்
அவதார அற்புதங்கள் திரு விளையாடல்கள்
பாற்கடலில் பள்ளி பனிமலையில் வாசம்
வைகுண்டம் இவரது இடம் கைலாசம்
அர்ஜுனு சாரதி அர்ஜுனனுக்கு பாசுபதம்
வேணுகானம் செய்பவர் சாமகானப்ரியர்
பாற்கடலில் அம்ருதம் ஆலகால விஷம்
பசுக்களுடன் நேசம் ரிஷபமே வாகனம்
விஸ்வரூபன் 3வது அடி? அடி முடி காணா தாணு
அலங்காரப் பிரியர் அபிஷேகப்ரியர்
பெயர் கண்ணன் பெயர் முக்கண்ணன்
யமுனைநதி வாசம் கங்கையையே சூடியவர்
சந்தனம் சூடுபவர் சாம்பலைப் பூசுபவர்
கௌஸ்துப மாலை ருத்ராக்ஷமாலை உடலில்
சர்ப்பம் படுக்கை நாகாபரணம்
இன்னும் எத்தனை எத்தனையோ இருக்கு அடுக்கிக் கொண்டே போவதற்கு. நேரமோ, இடமோ தான் போதாது. இதைச் சொல்ல ஏன் தோன்றியது என்றால் இன்று சிங்கப்பூர் சிவ கிருஷ்ணன் ஆலயத்தின் படங்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு அழகான கோயில் சிவ கிருஷ்ண ஆலயம். அற்புத அலங்காரத்துடன் இருவரும் ஒன்றாக, ரெண்டும் ஒருவரே என்று நமக்கு விளக்க, பப்பாதியாக காட்சியளிப்பதை இணைத்துள்ள படத்தில் பாருங்களேன். அனுப்பிய நண்பர் சகோதரி உமா குருராஜன் நீடூழி வாழ்க.

பின் குறிப்பு: சிவனையும் க்ரிஷ்ணனையும் ஒன்றாக சிந்தித்து எழுதியது இந்த கிருஷ்ணன் சிவன் தான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...