Friday, July 7, 2017

At the request of some friends I am repeating an earlier story I wrote in this group which was received by you all:

மாமியா வீடு'' J.K. SIVAN

நான் ஆறாம் படிவம் படிக்கும்போது ஒரு ஆங்கில பாடம். ஏனோ அது இத்தனை வருஷம் ஆகியும் ஆணி அடித்தது மாதிரி இன்னும் மனசிலே பதிந்திருக்கிறது. அந்த வயதில் தாகூர் என்றால் தாடி வைத்துக்கொண்டிருந்த ஒரு தாத்தா என்ற அளவுக்கு தெரியும். பாடத்தில் வரும் கேள்விகளுக்கு பதிலை மனப்பாடம் செய்தேன். தாகூர் கீதாஞ்சலி எழுதி நோபல் பரிசு பெற்றார். ஜனகணமன எழுதிய வங்காளி கவிஞர். சாந்தி நிகேதன் என்ற ஒரு ஆஸ்ரமம் நடத்தியவர் இவ்வளவு தான் தெரியும். தாகூரை அதற்கு மேல் ரசிக்கதெரியாத வயதிலும் இந்த கதை அர்த்தம் புரியாமல் ஏனோ பிடித்தது. இது தான் கதை:

ஒரு பணக்கார வங்காளிக்கு ஒரே பெண் குழந்தை மினி. ஐந்து வயது. பொட்டுக் கூடை பேச்சு. துரு துரு வேண்டு ஏதாவது கேள்வி கேட்பவள். பதில் சொல்லி வாய் வலிக்கும். துளைத்துக்கொண்டே இருக்கும் பரபரப்பான குழந்தை. அம்மா அலுத்துப் போய் பதிலே பேசாள். அப்பாவான நான் தான் அவளிடம் மாட்டிக்கொள்வேன். அவள் கேள்வி அம்புகளுக்கு ஏதேதோ பதில் சொல்வேன்.

ஒரு நாள். நான் மும்முரமாக ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தபோது, ராக்ஷசி வந்து விட்டாள். "அப்பா, அப்பா, நம்ப காவல்காரன் ராமுடு காக்கா வை காகம் என்கிறான் பா, காக்கா '' என்கிற பேர் கூட தெரியலை அவனுக்கு இல்லைப்பா? அவன் சொல்றது தப்பு தானே? '' கொச்சை, இலக்கண சுத்த வார்த்தைகளை எப்படி சொல்லிக்கொடுக்கலாம் என்று யோசிப்பதற்குள் அடுத்த அஸ்த்ரம்.

கையில் ஒரு கயிறைச் சுற்றிக்கொண்டு ஸ்கிப்பிங் ஆட முயற்சி செய்து கீழே விழுந்துகொண்டே ''அப்பா, நம்ப பக்கத்து வீட்டு பையன் பலராம் ''மானத்துலே ஒரு பெரிய கருப்பு யானை இருக்கு. அது . நிறைய தண்ணி குடிச்சுட்டு தும்பிக்கை வழியா தண்ணியை கீழே தெளிக்குமாம். அது தான் மழை'' என்று சொல்றான் பா. நிஜம் தானே அது ?"

தொண்டையை கனைத்துக்கொண்டு என்ன பதில் சொல்லலாம் என்று முயற்சிப்பதற்குள் ''அப்பா, நம்ப அம்மா உனக்கு என்ன உறவு?"'

அவளை அகற்றுவது ஒன்றுதான் வழி. பதில் சொல்லி கட்டுப்பிடியாகாது. '' மினி, அதோ பார் பலராம் வாசலிலே உன்னை கூப்பிடறான் பார். போய் விளையாடு. நான் கொஞ்சம் படிக்கணும்''

''எதுக்கு படிக்கணும்?'' . கேள்வி வந்தது. ஆனால் பதிலுக்கு காத்திருக்காமல் பலராமைத் தேடி ஓடிவிட்டாள் . ஐந்து ஆறு வயது பலராம் எனக்கு கடவுள். மினியிடமிருந்து அடிக்கடி என்னை காப்பாற்றும் கண்கண்ட தெய்வம்.

வெராண்டா ஜன்னல் வழியாக வாசலில் வருவோர் போவோர் தெரிவார்கள். சற்று தள்ளி வாசலில் மினி கீழே உட்கார்ந்து என்னவோ விளையாடுகிறாள். வாய் ஏதோ பாடுகிறது. தொடையில் தாளம் வேறு. பலராம் ஆடுகிறான்.

என் கையில் உள்ள புத்தகத்தில் ''விக்ரமன் தனது காதலி ராஜகுமாரி லதாவை மூன்றாவது உப்பரி கையி லிருந்து அவள் பெற்றோர் கண்ணில் மண்ணைத் தூவி அடுத்தத பாராவில் கடத்தப் போகிறான்.''

திடீரென்று மினி கத்துவது கேட்டுவது. 'ஹே, பட்டாணிக்காரன், பட்டாணிக்காரன்''. வாசலில் ஒரு ஆப்கானிஸ்தான் பதான் மெதுவாக நடந்து போகிறான். கால்வரையில் தொள தொள அழுக்கு ஜிப்பா. சிகப்பு துணி முண்டாசு, பின்னால் அதன் வால் முதுகு வரை. தோளில் பெரிய ஜோல்னா பை. கையில் திராக்ஷை கூடை. மினியைப் பார்த்து விட்டான். வாசலிலேயே நின்றான்.

மினி என்ன நினைத்தாள்?? கூப்பிட்டு விட்டாள் . அவனும் வீட்டுக்குள் நுழைகிறான்.

''விக்ரமன் - லதாவை மூணாவது உப்பரிகையில் விட்டுவிட்டேன்.'' காபுல்காரன் உள்ளே சிரித்துக்கொண்டே வந்து மினியை பார்க்கிறான். அவனைப் பார்த்து கண்களில் மிரட்சி. பயம். உள்ளே அம்மாவிடம் ஓடிவிட்டாள் அவனிடம் இருந்த பெரிய பையில் சில குழந்தைகளை பிடித்து வைத்திருக்கிறானோ? கடவுளே இந்த காபூல் காரனிடம் பிடிபடாமல், அவன் பைக்குள் அழுதுகொண்டு தவிக்கும் குழந்தைகளோடு நாமும் சேரக்கூடாது. பலராம் வாடா காப்பாற்று. அம்மா எப்படியும் காப்பாற்றிவிடுவாள். மெதுவாக திரும்பி பார்த்தால் வீ ட்டுக்கு
ள்ளே வந்துவிட்டான் காபுல்காரன்''. மினி நடுங்கினாள்.

காபூல்காரன் இருகரம் தூக்கி என்னை வணங்கி சிரித்தான். இடைஞ்சல் எந்த ரூபத்திலும் வருமோ? ஏதோ விற்கிறான். தெருவில் போனவனை மினி வா என்று அழைத்துவிட்டாள்.அவனிடம் எதையாவது வாங்கி விட்டு முதலில் அனுப்ப வேண்டும். கூப்பிட்டு விட்டாளே பாதகி.

கொஞ்சம் திராக்ஷை, முந்திரி, பேரிச்சை எல்லாம் வாங்கிக்கொண்டே '' உன் பேர் என்னப்பா?''
''அப்துல் ரஹ்மானுங்க''
அவன் ஊரில் ரஷ்யாகாரன், வெள்ளைக்காரன் வருகை. ஆக்ரமிப்பு. எல்லை சண்டைகள் எல்லாம் பற்றியும் ஏதேதோ அவனுக்கு தெரிந்தவைகளை அவன் பேச்சில் தெரிந்து கொண்டேன். படிப்பறிவில்லாத கிராமத்தான். என் மனம் அதிலெல்லாம் செல்லவில்லை. '' விக்ரமன் என்ன ஆனான்?லதாவின் கதி என்ன? தப்பித்து ஓடினார்களா, மாட்டிக்கொண்டார்களா?''

காசை வாங்கி கொண்ட காபுல்காரன் பை தோளில் ஏறியது. கையில் திராக்ஷை கூடையோடு கிளம்பினான்.
'அய்யா, அந்த குட்டி பொண்ணு எங்கே ?''

எப்படியாவது மினியின் பயத்தை போக்க வேண்டுமே . ''மினி, அங்கே வாம்மா '' தயங்கியவாறு அவனை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே மெதுவாக வந்து என்னை கெட்டியாக பிடித்துக்கொண்டு ஒட்டி நின்றாள்.

பார்வை அவன் தோளில் இருந்த பெரிய பை மேல். ''உள்ளே எத்தனை குழந்தைகள்?''

அவன் அந்த பையை கீழே இறக்கி திறந்தான். உள்ளே நிறைய முந்திரி, பேரிச்சை பொட்டலங்கள்.

''அட ஆச்சரியமாக இருக்கிறதே. பைக்குள்ளே குழந்தைகள் அழுதுகொண்டு இல்லையே? '' மினி வியந்தாள். பயம் போனது.

திராட்சை, முந்திரி, பாதம், அக்ரூட், கை நிறைய எடுத்து அவளிடம் நீட்டினான். பயம் தீர்ந்தது. ஆனாலும் கை நீளவில்லை. அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவள் எதிரே வைத்துவிட்டு அவன் சிரித்துக் கொண்டே போய் விட்டான். முதல் சந்திப்பு இவ்வாறு.

சிலநாள் கழிந்து ஒரு காலை வேளை. வெளியே சைக்கிளில் புறப்படும் சமயம். வாசலில் பெஞ்சில் மினி. அவள் கால் கீழே தரையில் காபுல்காரன். இருவரும்உற்சாகமாக ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குள் நட்பா? இதுவரை அவள் பேச்சை பொறுமையாக, கேட்டவன் என்னைத்தவிர உலகில் வேறு யாரும் இல்லை என்பது சரித்திரம். அஞ்சு நிஷம் தாங்க முடியாது. எப்படி காபூல்காரன் சந்தோஷமாக உன்னிப்பாக அவள் சொல்வதை கேட்டுக்கொண்டு தலை ஆட்டிக்கொண்டு ரசிக்கிறான். அவள் மடியில் நிறைய பேரிச்சை, திராக்ஷை, முந்திரி, பாதம்,

''ரஹ்மான் எதற்கு அப்பா இதை எல்லாம் அவளிடம் கொடுத்தாய்?'' . எனக்கு பயம். பில் கட்டவேண்டுமே?'' ஒரு எட்டணா காசு எடுத்து கொடுத்தேன். மறுவார்த்தை பேசாமல் மெஷின் மாதிரி வாங்கி ஜிப்பாவில் போட்டுக்கொண்டான். .

ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்குள் நுழைந்தபோது நான் கொடுத்த எட்டணா பண்ணிய ரகளை. அம்மாவும் பெண்ணும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்துல் ரஹ்மான் நான் கொடுத்த எட்டணா காசை மினிக்கு அன்பளிப்பாக தந்திருக்கிறான்.

'ஏதுடி உனக்கு எட்டணா?' கோபமாக அம்மா.

"காபுல்காரன் தந்தான்''சந்தோஷமாக மினியின் பதில்.

"காபுல்காரனா? "ஓ, எதுக்கு நீ வாங்கிண்டே ? எப்படி இன்னொருத்தர் கொடுத்தா காசு வாங்கலாம்?''

இந்த விசாரணையின் போது தான் நான் பிரசன்னமாகியிருக்கிறேன். விசாரணையை நான் மேற்கொண்டதில் தெரிந்த விபரம். முதல் சந்திப்பிற்கு பிறகு அப்துல் ரஹ்மான் அடிக்கடி மினியை சந்திக்கி றான். பயம் முற்றிலும் போய் விட்டதே முக்ய காரணம். பேரிச்சை, பாதம், முந்திரி திராக்ஷை. இதையெல்லாம் விட அவர்களின் பேச்சு இருவரையும் கவர்ந்திருக்கிறது. சிறந்த நண்பர்கள் இப்போது. ஐந்து வயது மினி. ஐம்பத்தொன்பது வயது காபூல்காரன்.

வேடிக்கையான பேச்சு. கேட்டால் சிரிப்பு வரும் அவன் பதிலும் அவள் கேள்வியும். எப்போதும் அவன் தான் கீழே. அவள் பெஞ்ச் மேலே. அவன் நெடிய உருவத்தை பார்த்துக்கொண்டு பெஞ்சில் காலை ஆட்டிக்கொண்டு பேசுவாள். அவள் முகத்தில் அவனைக் கண்டாலே கோடி சூரியன்.

"காபுல் மாமா, உன் பையிலே இன்னிக்கு என்ன ?

''யானை''

ஏதேதோ தினமும் தோன்றியதை சொல்வான். கலகலவென்று சிரிப்பு. எப்படி ஒரு குழந்தைக்கு இந்த மனிதன் ஈடு கொடுக்கிறான். எனக்கு கொள்ளை ஆச்சர்யம். கொள்ளை கொள்ளையாக பேச்சு. அவனும் சளைத்தவன் இல்லை.

''மினி, ஏ குட்டி, எப்போ நீ மாமியா வீட்டுக்கு போகப் போறே?'' கல கல சிரிப்பு இருவருக்கும்!!

வங்காள பெண்களுக்கு மாமியார் வீடு ஒரு கற்பனை சுரங்கம். எத்தனையோ எதிர் பார்ப்புகள். பயம், ஆச்சர்யம், மகிழ்சி, பொறுப்பு. அதிகாரம், வேலை, கணவன் அவன் பெற்றோர் குணம் ஆதரவு, எதிர்ப்பு என்னென்னவோ கலந்து கட்டியாக எண்ணங்கள் கொண்ட காலம் அது. அதையெல்லாம் நாங்கள் சிறு குழந்தைகளிடம் பேசுவதில்லை. மினிக்கு இந்த கேள்வி புரியவில்லை, என்ன சொல்வது என்றா அவளுக்கு தெரியாது அந்த ராக்ஷசிக்கு?

''நீயும் உன் மாமியார் வீட்டுக்கு போறியா?''

பெரியவர்கள் வழக்கில் ''மாமியார் வீடு'' ரெட்டை அர்த்தம் கொண்டதாயிற்றே. உண்மையான ராஜ உபசாரம் தந்து கவனிக்கும் மனைவியின் பிறந்த வீடு.'' மற்றொன்று செலவில்லாமல் ''கவனித்து'' போலிஸ் காரன் தந்த உதை தின்கிற ஜெயில்''.

அப்துல் ரஹ்மான் மாமியார் வீட்டை ரெண்டாவது அர்த்தத்தில் எடுத்துகொண்டு ''ஆ, கையை மடக்கி முஷ்டியை காட்டி ''விடுவேனா அந்த டாணா க்காரனை, என் மாமனாரை. பிச்சு உதறிடுவேன் அவனை '' என்று நடித்து காட்டுவான். அடிக்கடி இதே கேள்வி இதே நடிப்பு. எத்தனை தரம் கேட்டாலும் பதில் சொன்னாலும் அவர்களுக்கு போதாது.

மினி ''அந்த கற்பனை மாமனாரை'' சாதாரண சாது கிழவராக பாவித்து காபுல் காரன் கையில் அவஸ்தை படுவதை மானசீகமாக ரசித்து கைகொட்டி சிரிப்பாள். அவள் சந்தோஷத்தை இம்மி அளவும் வீணாகாமல் அவனும் சேர்ந்து ரசித்து சிரிப்பான்.

அப்போது வெளி நாட்டவர் நம் தேசத்தில் இருந்த காலம். வித வித மனிதர். அவர்கள் தேசம் எங்கெங்கோ, மலைகள், மடுக்கள், பாலைவனம், வெயில். மழை, காடு, நாடு. காபுல்காரன் ஊரும் இப்படித்தானே, மலை, குளிர், பலம் மிக்க மக்கள், புரியாத பாஷை. கோவேறு கழுதை, ஒட்டக வாகனம். ஆயுதம் தாங்கிகள்.

என் மனைவிக்கு கவலை. அடிக்கடி ''இதோ பாருங்கோ. குழந்தை அந்த காபுல்காரன் கிட்டே ரொம்ப ஈஷிண்டு விளையாடறது. ஜாக்ரதையாக இருக்கணும். அவன் ஈட்டிக்காரன். கண்காணிக்கணும்''.

வாசலில் யாராவது சத்தமாக பேசினாலே '' திருடனோ, கொள்ளக்காரனோ, போலிசோ , குடித்துவிட்டு யாரோ கொலைகாரனோ, பிள்ளை பிடிக்கிறவனோ'' என்று பயம். காபுல்காரன் ரஹ்மான் இந்த லிஸ்டில் ஒருவன் அவளைப் பொருத்தவரை. என் மனைவி சந்தேகப் பேர்வழி, அத்தனை பயந்தாங்கொள்ளி. என்னை மட்டுமே விரட்டுவாள்.

''ஈட்டிக்காரர்கள்'' எங்கள் அகராதியில் பணம் லேவா தேவி செய்து வட்டி சற்று அதிகமாக வசூலிப்பவர்கள். பணம் தாமதமானால் ஆயுதத்தால் தாக்குவார்கள். பயம் வேண்டாமா கடன் வாங்கினவனுக்கு? இப்போது ஈட்டிக்காரர்கள் யார் என்றால் கடன் பெற்றவர்கள். கெஞ்சி கூத்தாடி தானே பணம் கொடுத்தவர்கள் தவித்து வசூலிக்க வேண்டியிருக்கிறது. சட்டம் அப்படி.

நான் அப்படியெல்லாம் ரஹ்மான் இல்லை. ரொம்ப நல்லவன் என்று சொன்னால் ஷார்ப்பாக கேட்பாள் ''ஏன்
காபூல்கு காரன் இதுவரை பிள்ளைகளை பிடித்துக்கொண்டு போனதில்லையா, தெரியாதா உங்களுக்கு? காபுல்லே குழந்தைகளை பிடித்து வித்துவிடுவார்களாமே ? இந்த காபுல்காரன் நம்ம மினியை தூக்கிக்கொண்டு ஓட எத்தனை நேரம் ஆகும்?''

''சே சே, அதெல்லாம் நடக்காது. சும்மா இரு. நான் விட்டுவிடுவேனா'' இத்துடன் முற்றுப் புள்ளி இல்லை. மீண்டும் இந்த தர்க்கம் அவ்வப்போது தலை தூக்கும். அவன் சகவாசம் வேண்டாம் என்று அவள் நினைக்க நினைக்க மினி-காபுல்காரன் நட்பு நாளொரு த்ராக்ஷையும் பொழுதொரு கதையுமாக வளர்ந்தது.

கல்கத்தாவிலிருந்து ரஹ்மான் வருஷத்துக்கொரு தரம் காபுல் போவான். அப்போது ரொம்ப பிசி. மும்முரமாக பாக்கி வசூல் வேட்டையாடும் நேரம் அது. அப்படியும் ஒவ்வொருநாளும் மினியை சந்திக்காமல் போகமாட்டான். காலையில் வரமுடியாவிட்டால் கட்டாயம் சாயந்திரம் அவனை அவளோடு பார்க்கலாம்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமே. ''எதுக்கு கண்ட கண்ட நேரத்தில் இந்த அழுக்கு காபுல்காரன் என் பெண்ணோடு வந்து விளையாடுகிறான். இதை நிறுத்த வேண்டும் சீக்கிரமே. ஆனால் அவளை அவனிட மிருந்து பிரிப்பதே இயலாத காரியமாக இருக்கிறதே. என்னன்னவோ வேடிக்கை பேச்சு அவர்களு க்குள்ளே. அவன் வருவதை வழிமேல் விழிவைத்து பார்த்துக்கொண்டிருக்கிறாளே'' .

குளிர்ந்த காற்று வீசும் ஒருநாள் காலையில் சூரியன் லேட். ஜன்னலை மெதுவாக கொஞ்சம் திறந்தேன் . காலை எட்டாகிவிட்டதே. அப்போது தெருவில் ஏதோ பலத்த சப்தம். என்ன கூச்சல் ? '' ஐயோ இதென்ன அக்கிரமம். காபுல்காரன் ரஹ்மானை சில போலிஸ் காரர்கள் இழுத்து சென்று கொண்டிருந்தனர். அவன் மேல் ரத்தக்கரை. அவனைப் பிடித்துக்கொண்டிருந்த போலிஸ் காரன் கையில் ரத்தம் தோய்ந்த கத்தி.
வெளியே வந்த என்னை ரஹ்மான் பரிதாபமாக பார்த்தான். வணங்க முடியவில்லை. கைகளில் விலங்கு. தலை குனிந்தவன் கண்களில் நீர். போலிஸ் காரனை நிறுத்தி ''என்னப்பா விஷயம்?'' என விசாரித்தேன். இங்கொன்றும் அங்கொன்றுமாக பராபரியாக செய்தி. ரஹ்மான் யாருக்கோ அதிக பணம் கடனாக கொடுத்து, அந்த ஆசாமி அசலும் தரவில்லை, வட்டியும் தராமல் ஏமாற்றி, அலைக்கழித்து, ''கடனே வாங்கவில்லை'' என்று பொய் சத்தியம் செயது, வாய் சண்டை கைச்சண்டையாக மாறி, கோபம் வந்து ரஹ்மான் அவனை கத்தியால் குத்திவிட்டான். அந்த ஆள் குற்றுயிரும் குலையுயிருமாக ஆஸ்பத்திரியில். . ரஹமானுக்கு வாயை வயிற்றை கட்டி சேர்த்த பணமும் போய் கொலைக் குற்றம் வேறு.

பேசிக்கொண்டிருந்த போது மினி வெளியே ஓடி வந்தாள். காபுல் காரனைக் கண்ட மகிழ்ச்சி. குழந்தைக்கு கத்தி, ரத்தம் கொலை குற்றம் எதுவும் தெரியாதே!. வழக்கமான கேலி பேச்சு அவனோடு.

''காபுல்காரா உன்னை காணோமே என்று பார்த்தேன், ஒரே கூட்டம் ஊர்வலமாக உன்னோடு. நடுவில் நிற்கிறாய். நீ இப்போ மாமியா வீடு போறியா"

காபுல்காரன் கண்ணில் நீரோடு, முகத்தில் மகிழ்ச்சியோடு அந்த குழந்தை மினிக்கு பதில் சொன்னான். வழக்கமாக கொடுக்கும் முந்திரி திராக்ஷை பை இன்று அவனிடம் இல்லையே. கையில் விலங்கு. விரக்தியோடு சிரித்தான். 'ஆமாம் குழந்தை. நன் மாமியா வீடு தான் இப்போ போறேன். ரொம்ப நாள் விருந்தாளி. தானாக்காரனை பிச்சுடுவேன். ஆனால் கையை கட்டி போட்டுருக்கே''

பல வருஷங்கள் சிறை தண்டனை. காலம் ஓடி விட்டது. மினி பெரிய பெண் இப்போது. காபுல் காரனை மறந்துவிட்டாள். எங்கள் யாருக்குமே அவன் நினைப்பு இல்லை. அவள் நாணம் அச்சம் மடம் பயிர்ப்பு கொண்ட பெண். பேச்சு சொல்பம். முற்றிலும் வேறாக மாறி விட்ட வளர்ந்த பெண் மினிக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. கல்கத்தா நவராத்திரி தான் பிரசித்தியாயிற்றே. பூஜைகள் முடிந்து துர்கா கைலாச மலைக்கு திரும்புகிறாள். என் குல விளக்கு மினியும் கணவன் வீடு செல்லும் நேரம் வந்தது.

அன்று திருமணம் அவளுக்கு. பன்னீர் தெளித்தது போல சில்லறை மழை. சுகமான வெயில். சூரியனின் தங்க கிரணங்கள் எல்லாவற்றையும் தங்க முலாம் பூசியிருந்தது. நாதஸ்வரத்தில் பைரவி ராகம் காற்றில் இழைந்து ஆலாபனை விருந்தாக காற்றில் நுழைகிறது. பெண்கள் கூட்டம். வாசலில் பெரிய வண்ணக் கோலம்.. தோரணங்கள், வாழைமரம். வரிசையாக வண்டிகள். ஜேஜே என்று விருந்தாளி கூட்டம். இன்னும் சிறிது நேரத்தில் என் செல்லப்பெண் மினி இன்னொருத்தன் மனைவியாக என்னை விட்டு பிரிவாளே .

வாசல் பந்தலுக்கு அருகே நின்று கொண்டிருந்தேன். யாரோ வந்து வணங்கினார்கள். உற்று பார்த்தேன். காபுல்காரன் ரஹ்மான். முகம் நிறையவே மாறியிருந்தது. வயோதிகம் பத்து வருஷத்தில் அதிகமாகவே முகத்தில் கோடிட்டு இருந்தது. அடையாளம் தெரியவில்லை. கையில் பை இல்லை. திராக்ஷை கூடை இல்லாத ரஹ்மான். ஆனால் அதே சிரிப்பு. கண்களில் அதே ஒளி .

'' அடேடே, ரஹ்மானா. என்னப்பா? எப்போது வெளியே வந்தாய்?

"நேத்து சாயந்திரம் ஐயா''

நான் மறந்தாலும் இந்த மனிதன் என்னையோ என் வீட்டையோ மறக்கவில்லையே. இன்று எதற்காக வந்து தொலைத்தான்?'.

''வீட்டில் விசேஷம் ரஹ்மான். முக்யமான வேலையாக இருக்கிறேன். நீ இன்னொரு நாள் வாயேன்''

போவதற்கு தயங்கினான். திரும்பினான். வாசல் கதவு வரை போனவன் ''ஐயா, நான் குழந்தையை ஒரு நிமிஷம் பார்க்கலாமா? ''

''குழந்தையா?!''. இன்னும் மினியை அப்படியேவா நினைத்துகொண்டிருக்கிறான்?" அவனைப் பொருத்தவரை காலம் ஓடவில்லையோ? . அவளது ''காபுல்காரா'' குரல் இன்னும் அப்படியே மழலையாகத் தான் காதில் ஒலித்ததோ? சிரிப்பும் வேடிக்கையும் எதிர்பார்க்கிறானோ? மெதுவாக தோளிலிருந்து ஜோல்னா பையிலிருந்து ஒரு பொட்டலம் எடுத்து பிரித்தான். கொஞ்சம் முந்திரி, திராக்ஷை, பாதம், பேரிச்சை...

''ரஹ்மான், இன்னிக்கு இங்கே விசேஷம் என்று சொன்னேனே. நீ இங்கே யாரையும் பார்க்க முடியாது."

அப்படியே இடிந்து விழுந்தான். கெஞ்சும் பார்வை கண்களில். கண்ணீரோடு கலந்து சோகமாக தெரிந்தது. நமஸ்காரம் சார்.''

திரும்பி மெதுவாக நடந்தான்.

அது என்னை திருகியது. கூப்பிடலாமா என்று ஒருமனம். அட, அவனே எதற்கோ திரும்பினான். என்னருகே வந்து அந்த பொட்டலத்தை என் கையில் வைத்து ''குழந்தைக்கு ஆசையா வாங்கிக் கொண்டு வந்தேன். இதை அவளுக்கு கொடுக்கிறீங்களா சார்?'' . அந்தக் குரலின் பாசம் என்னை கலக்கியது.

காசு கொடுக்க பைக்குள் கையை விட்டேன். என் கையை பிடித்தான். ''ஐயா நீங்கள் தர்மப்ரபு. என்னை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருப்பது போல் எனக்கும் ஒரு பெண் குழந்தை காபுலில். என் பாசத்துக்கு காசு கொடுக்காதீர்கள் . உங்கள் குழந்தையை பார்த்தபோதெல்லாம் என் குழந்தை கவனம் எனக்கு வரும். மினி யோடு ஆசையாக பாசமாக சிரித்து விளையாடி மகிழ்ந்தேன். இதற்கு தயவு செய்து விலை பேசாதிர்கள்''

அவன் கை மீண்டும் அவன் சட்டைக்குள் சென்றது. ஒரு கசங்கிய காகிதம் வெளியே வந்தது. மடித்து மடித்து அதை ஜாக்ரதையாக பல வருஷம் வைத்திருந்தான் போலிருக்கிறது. பிரித்தான். மேசையில் வைத்தேன். அதில் ஒரு குழந்தையின் கை விரல்கள் மையினால் நிரப்பப்பட்டு அழுத்தப்பட்ட பதிவு. கை ரேகை. படிக்காத அவனுக்கு, அவன் இருந்த மலைப் பிரதேசத்தில் போட்டோ எங்கே கிடைக்கும். தனது செல்லக் குழந்தை நினைவு, அந்த மை பதிவு இத்தனை காலம் அவன் மனதை நிரப்பியிருக்கிறது. பிழைக்க கல்கத்தா வந்திருக்கிறான். பழங்கள் விற்று ஜீவனம். சம்பாதித்ததை சேர்த்து ஊருக்கு குடும்பத்துக்கு கொண்டு செல்லமுடியாமல் பணமும் போய் ஏமாந்து கொலை குற்றம். ஜெயில். பத்து வருஷம் ஓடிவிட்டதே.

என் கண்கள் குளமாகியது. என் எதிரே ஒரு ஏழை, அழுக்கு காபுல்காரன் இல்லை. என் மாதிரி ஒரு தந்தை. பிரிவால் வாடுபவன். நானும் அவனும் ஒரே நிலையில் தானே. அவன் குழந்தை பிரபாவதியும் என் குழந்தை மினியும் ஒன்றே.

உடனே மினியை அழைத்து வர சொன்னேன். கல்யாண கோலத்தில் சடங்குகளில் இருந்தவளை கூப்பிட்டதற்கு எதிர்ப்பு நிறைய எனக்கு. கவலையே படவில்லை நான். மகாலட்சுமியாக அலங்காரத்தோடு வாசலில் மினி லஜ்ஜையோடு வந்து நின்றாள் .

காபுல்காரன் ரஹ்மான் அவளை கண்களால் விழுங்கினான். ''தேவதையா? என் எதிரிலா? 'அவனால் அவளை மினி என்று நம்பவே முடியவில்லை. பழைய புன்னகையோடு, சந்தோஷத்தோடு பூரிப்புடன் வழக்கமாக அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ளும் கேள்வி அவனிடமிருந்து வந்தது:

"மினி நீ உன் மாமியா வீடு போறியா''

அதன் அர்த்தம் இப்போது ' இப்போது'' மினிக்கு சரியாகவே புரிந்தது. வழக்கமான சிரிப்பு கலகலவென்று பதில் வரவில்லை. தலை குனிந்தது. வெட்கத்தில் முகம் சிவந்தது. இதழோரம் முகம் சிவந்த ஒரு புன்னகை. வியர்வை முத்துக்கள். கேள்வி தான் புரிந்ததே?.

உள்ளே அழைத்து சென்றார்கள்.

எனக்கு முதல் முதலாக மினி-காபுல்காரன் சந்திப்பு மனத்திரையில் படமாக ஒடியது .சோகம் சூழ்ந்தது. ரஹ்மான் ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டான். அவன் மனதில் ஒரு கேள்வி பூதாகாரம் எடுத்தது. என் மகளுக்கும் கல்யாண வயதோ? அவளை பார்ப்பேனா? கல்யாணம்??

கெட்டி மேளம் வாசித்தது. வெயில் சுள் என்று முகத்தில் சுட்டது. ரஹ்மான் ஒரு கல்கத்தா சந்தில் இருக்கிறான். எங்கோ ஆப்கானிஸ் தானத்தில் காபுலில் அவன் பெண்! எப்படி இருக்கிறாளோ? .

கத்தையாக பணம் எடுத்தேன். அவன் கையில் திணித்தேன். "ரஹ்மான் உன் ஊருக்குப் போ. இந்தா '' என் '' பெண் பிரபாவதி கல்யாணத்தை நடத்து. பிரபாவதி கல்யாணம் மினிக்கு நல்வாழ்த்தாக அமையட்டும் !"

கல்யாண செலவில் கொஞ்சம் சிக்கனம் பிடித்தேன். பற்றாக்குறையை சரிக்கட்டி விட்டேன். விளக்கொளி அலங்காரம் நின்றது. வாத்யகோஷ்டி குறைத்து வாசித்தது. பெண்களுக்கு வீட்டில் என் மேல் அசாத்திய கோபம். வருத்தமும் கூட. ஆனால் காபுலில் எங்கோ ஒரு வீட்டில் தீபம் ஒளிவீசும். கலகலவென்று அங்கே மகிழ்ச்சி ஒலி வாத்தியத்தை விட இனிமையாக கேட்குமே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...