Wednesday, July 12, 2017

பத்திரகிரியார் புலம்பல்: J.K. SIVAN
ராஜாவின் குமுறல் 2
ஒரு மனிதன் எதிர்பார்த்தது, கனவு கண்டது , எல்லாம் கை வராமல் போனால் விரக்தி வருகிறது. பெருத்த ஏமாற்றம் அவனை உலுக்கி, உள்ளிருக்கும் அறிவை ஆட்டுவிக்கிறது. தான் செய்த குற்றம் தான் ஒருவனை கடைசிவரை முள்ளாய் குத்தி கொதறி அவனை அமைதி இழக்கச் செய்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம்? எது காரணம்? துன்பம் வரும்போது மட்டும் கடவுளை நினைக்கச் செய்கிறதே. அது எது?

ஞானம் பிறக்க தியாகம் தேவையாயிருக்கிறதே!

இதெல்லாம் ஒருவன் தன்னுள் தான் நோக்கி அலசுவதன் வெளிப்பாடு. . உள்ளே சுத்தமானால் வாயில் வார்த்தை ஞானமாய் புறப்படுகிறது. பார்வை சமமாகிறது . எண்ணம் தெளிவாகிறது.

விரக்தி அடைந்து வீட்டை விட்டு தெருவுக்கு வந்துவிட்ட பத்திரகிரி ராஜா இப்போது கொஞ்சம் சீர் பட்டு விட்டான்! புரிந்து கொண்டுவிட்டான் எது தேவை எது தேவையல்லாதது, எது நிரந்தரம், எது அழிவற்றது, எதைப் பிடிக்க வேண்டும்,. எதை விடவேண்டும், எதில் நாட்டம், எதில் நோக்கம், என்று. எல்லாம் தேடல் தான். அது உள்ளே ஆரம்பமாகிவிட்டதே

அதைத்தான் கீழே படித்து அனுவபிக்கிறோம்.

ஆறாத புண்ணி லழுந்திக் கிடவாமல்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவது மெக்காலம்.

என்றும் ஆறாத புண். அதைப்பற்றியே சிந்திக்காமல் சிந்தையைத் தெளிவுறச் செய்வது எப்போது?

தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தை தனிற்கண்டு சிக்கறுப்ப தெக்காலம்.

அப்பன், அன்னை, பிள்ளைகள், உடன் பிறந் தவர்கள் ஆகிய இவர்களெல்லாரும் பொய் என மனதினில் உறுதியாகக்கொண்டு அதை வெட்டி விடுவது எப்போது?

"மனைவி தாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றமென்னும் - வினையுளே விழுந்தழுந்தி வேதனைக் கிடமாகாதே" என்றும்

"எத்தாயார் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடுஞ் சும்மாடாம் எவர்நல்லார் - செத்தால்வந்து உதவுவார் ஒருவரில்லை" என்றும்,

"தந்தையார் தாயார் தாரமார் புத்திரரார் தரந்தா மாரே வந்தவா றெங்ஙனே போமாறேதோ மாயமாம் இதற்கேது மகிழவேண்டாம்" என்றுந் திருநாவுக்கரசு சுவாமிகள் சொன்னது நினைவுக்கு வருகிறது.

மன்னுயிரைக் கொன்று வதைத்துண் டுழலாமல்
தன்னுயிர்போ லெண்ணித் தவமுடிப்ப தெக்காலம்.

பிறவுயிர்களைக் கொன்று வதைத்து அவைகளைத் தின்று திரியாமல் அவைகளைத் தன்னுயிர்போல் எண்ணித் தவத்தைப் பூர்த்திசெய்து கொள்வது எந்தக்காலத்திலே?

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி - எல்லா உயிருந் தொழும்" - என்கிறார் வள்ளுவரும்.
திருக்குறள். "கொல்லா விரதங் குவலயமெல் லாம் ஓங்க - எல்லார்க்குஞ் சொல்லுவது என்னிச்சை பராபரமே"

"கொல்லா விரதங் கொண்டாரே நல்லோர்மற் - றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே"- தாயுமானார்.

பாவியென்றே பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்
ஆவிநின்ற சூத்திரத்தை யறிவதினி யெக்காலம்.

''இவன் பெயர் பத்திரகிரி. ஒரு பாவி. கொண்டு போய் போடு எண்ணெய்க் கொப்பரையில்'' என்ற பெயரைத் தாங்கிக் கொடிய நரகத்தில் வீழாமல் ஆன்மா நிற்கின்ற சூழ்ச்சியைத் தெரிந்து கொள்வது எந்தக்காலம்?

உளியிட்ட கல்லு முருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவ தெக்காலம்.

உளியால் செதுக்கப்பட்ட கல்லும், உருவாக அமைத்த செவ்விய சாந்தும், புளியினால் துலக்கப்பட்ட செம்பும் பொருளாகத் தோன்றுவது எந்தக்காலம்?

கோவிலில் சென்று கல்லில் வடித்த, செஞ் சாந்தில் செம்பினால், பஞ்ச லோகத்தினால் செய்யப்பட்ட உருவங்களையே விகிரஹங்களையே ஆலயங்களில் வழிபடுகிறோம் . அவைகளைக் கல்லாகவுஞ் சாந்தாகவுஞ் செம்பாகவுங் கொண்டு வழிபடுவோர் மேலும் மேலும் அஞ்ஞானத் தழுந்துவர். கல், சாந்து, செம்பு என்னும் பாவனை இல்லாமல் அவைகளைச் சிவமாகப் பாவித்து வழிபடுவோர் விரைவில் ஞானம்பெற் றின்புறுவர். இதைத்தான் ராஜா பாடுகிறான்.

வேடிக்கை யுஞ்சொகுசு மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை யெல்லா மறந்திருப்ப தெக்காலம்.

உல்லாசத்திலும் அலங்காரத்திலும் பாட்டிலும் காலத்தைச் செலவழிக்கும் வழக்கங்களை யெல்லாம் மறந்திருப்பது எந்தக்காலம்?

நான்இன்று மாலைவரை எப்படி இருக்கிறேன் தெரியுமா? கமகம வென்று வாசனை தைலம். நல்ல டிரஸ், பட்டு வேஷ்டி. அங்கவஸ்திரம். பளபள வென்று மின்னும் தங்க ஆபரணம் கழுத்திலும் கையிலும். பகட்டு. .நல்ல கச்சேரி சபாவுக்கு செல்கிறேன். இடையே சூடான போண்டா. கேசரி. .... சரி , இதெல்லாம் விட்டு விட்டு சாஸ்வதமான உன் பாதத்தில் நாட்டம் வருவது எப்போதையா சிவனே!,

ஆமைவரு மாட்கண் டைந்தடக்கஞ் செய்தாற்போல்
ஊமை யுருக்கொண் டொடுங்குவது மெக்காலம்.

ஆமை மெதுவாக தான் செல்லும். எதிரே யாரையாவது பார்த்துவிட்டால் போதும். தன் ஐந்துறுப்புக்களையும் ஓட்டுக்குள் ஒடுக்கிக் கொள்வதுபோல மோனநிலையை யடைந்து ஐம்புலன்களையும் ஒடுக்கிக்கொள்வது எந்தக்காலம்?

தண்டிகையுஞ் சாவடியுஞ் சாளிகையு மாளிகையுங்
கண்டு களிக்குங் கருத்தொழிவ தெக்காலம்.

என்ப பிரயாணம் நாலு பேர் சொகுசாக தூக்க சுகமாக உள்ளே சாய்ந்து தாம்பூலம் போட்டுக்கொண்டு செல்வது. இந்த பல்லக்கு, எனக்கென அமைந்த உணவு சத்திரம், கனமான பணப்பை, வசதியான வீடு இவைகளைக் கண்டின்புற வேண்டுமென்னும் எண்ணம் ஒழிவது, இந்த சாக்கடையிலிருந்து மனம் மீள்வது எப்போது?
அத்த னிருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்துநிதஞ்
செத்த சவம்போற் றிரிவதினி யெக்காலம்.

தாயுமானவர் ''செத்தாரைப் போலே திரி'' என்கிறார். அதாவது செத்தவனுக்கு உலகில் பந்தமோ பாசமோ கிடையாது. பணம் வீடு வாசல், பசி தாகம் உடை, மற்றவர் பற்றிய பிரஞை கிடையாது. அதுபோல இந்த உலகில் நான் உலவ வேண்டும். என் மனம் பூரா நீ தான் சிவனே எழுந்தருளி இருக்கவேண்டும். அதையே நான் உணர்ந்து ஆனந்த நிலையில் இருக்க வேண்டும். யுள்ள ஸ்தானத்தை ஆராய்ச்சிசெய்து கண்டு நாடோறும் இறந்த பிணத்தைப் போலத் திரிவது எந்தக்காலம்?

பிணத்திற்கு எவர் என்ன செய்யினும் விருப்பு வெறுப்புத் தோன்ற மாட்டாது. அதுபோல உலகத்தார் இகழ்ச்சி புகழ்ச்சிகளை நாடாது தேகப்பற்றின்றி யிருக்கவேண்டுமென்பது. தேகப்பற்றி ல்லா ஞானிகள் பிணம்போன்று செய்கையின்றி உலவுபவர்கள் ஆயிற்றே

தூண்டு விளக்கணையத் தொடர்ந்திருள்முன் சூழ்ந்தாற்போல்
மாண்டு பிழைத்துவந்த வகைதெரிவ தெக்காலம்.

எலெட்ரிக் விளக்கு இல்லாத காலம். எண்ணெய் தீபம். திரியில் எரியும். அதை அவ்வப்போது தூண்டி விடாவிட்டால் ஒளி குறையும். அவிந்து இருள் சூழும்.

மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து வாழ்கிறேனே. நான் வந்த வழியைத் தெரிந்துகொள்வது எப்போது? இருளும் ஒளியும் போல் தான் பிறப்பும் இறப்பும்.

ஐயா பத்ரகிரி ராஜாவே. அபாரம் உங்கள் ஞானம். மேலே கேட்க காத்திருக்கிறேன்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...