Tuesday, July 4, 2017

நமஸ்காரம் சிவ வாக்கியரே! - 5 - J.K. SIVAN
ராமம் நல்ல நாமம்
சிவ வாக்கியரைப்போல தமிழை கையாள்பவர்கள் வெகு சிலர் தான். நினைத்ததை எழுத்தில் நிறுத்தி அதற்கு வலிமையான என்னச்சுவர்கள் எழுப்ப எத்தனை பேரால் முடியும்? அந்த எண்ணங்களை பற்றி சொல்வதானால், உயர்ந்த தத்துவங்களை உமியைப் போல் ஊதித்தள்ளுபவர். எவ்வளவு அழகாக சொல்கிறார் பாருங்கள்
எனக்கு நினைவில் இருப்பது நீ மட்டும் தான். அதுவே கண் முன் எங்கும் தெரிவது. நீயில்லாமல் வேறு எதையும் நான் பார்க்கமுடியவில்லையே. எங்கும் நீ எதிலும் நீ. அதை மாயை என்கிறார்களே. நீதானே அந்த நினைப்பும், மறப்புமான சத்யம் மாயை இரண்டுமே. ஆதி அந்தமில்லா அகண்ட ஜோதியே, அது எப்படியாப்பா எனக்குள் நீ உனக்குள் நான் என்று அமைந்துவிட்டது?? ஆச்சர்யமாக இருக்கிறதே!
''நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள் நான் இருக்குமாற தெங்ஙனே.
இந்த பரந்த பூ மண்டலம் நீ தான். வேறு யாரோ எதுவோ இல்லை. ஏழு சமுத்திரம் சப்த சாகரம் என்னும் அதுவும் நீ தான். எண்ணும் எழுத்தும் தான் இந்த உலகம் என்கிறார்கள் ஆனால் அதுவும் நீயே தான். அசையும் அசையா பொருளில் இசையும் நீயே. என் கண்ணில் ஒளி தரும் மணியே நீ தான். பாப்பா என்று சொல்வோமே அந்த கண்ணில் ஆடும் அழகும் நீ. உன் பாதம் சிக்கென பிடித்தேன். நான் அதை விடாமல் பிடித்துகைக்கொண்டு உய்வதற்கு உன் அருள் ஒன்றே போதும்.
''மண்ணும்நீ விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும் நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவை நீ
நண்ணுநீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்''
யார் சொன்னது அவன் சிவன் என்று? அங்கே யாரப்பா கூச்சல் போடுகிறீர்கள் இல்லை இல்லை அவன் ஹரி எனும் நாராயணன் தான் என்று உரக்க கத்துகிறீர்களே. ரெண்டு பேருமே தப்பு. அவன் இரண்டுமல்ல. அப்பாலுக்கு அப்பால் மிளிரும் கருப்பு சிவப்பு, வெள்ளை என்று நிறங்களை எல்லாம் கடந்த நிறமற்றவன். ஆனால் பூரண ஒளி வீசுபவன். சிறியதில் சிறியவன். பெரியதில் பெரியவன். விடாதீர்கள் அவனை தொடர்ந்து பணிந்து பிடியுங்கள். பிடிபடாதவன். எங்கோ காணாமல் காணார்க்கும் கண்டவர்க்கும் புரிபடாதவன்.
அரியுமல்ல அயனுமல்ல அப்புறத்தில்அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.
என்ன செயகிறீர்கள் சுவாமி நீங்கள்?
நானா. பார்த்தால் தெரியவில்லையா உமக்கு? அந்தி வேளை ஆகிவிட்டது, காலையில் பண்ணவேண்டியது மத்யான்ஹிகம் முடித்தாகிவிட்டது. சந்தியாவந்தனம் செயகிறேன்.
ஓஹோ. மூன்று வேளை ஜெபமோ, அமாவாசை மாச தர்பணங்களோ, தவமோ, இதெல்லாம் செயகிறீர்களே இதையெல்லாம் விட உயர்ந்த ஒரு மந்திரம் இருக்கிறதே தெரியுமோ? சுலப வழி! மனத்தை ஒடுக்கி, பூரா அதில் செலுத்தி சொல்லவேண்டிய சின்ன மந்திரம் எது சொல்லட்டுமா? '' ராம ராம ராம''. இதைத்தான் ஐயா நவ வியாகரண பண்டிதன் சர்வமும் அறிந்த ஞான சிகரம் ஆஞ்சநேயன் விடாமல் செய்கிறான் சொல்கிறான்.
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராம என்னும் நாமமே.
பஞ்ச மஹா பாதகம் எனும் பாபங்களை எல்லாமோ அதில் ஏதோவையோ செய்துவிட்டு தவிக்கும் பேர்வழிகளே ! வாழ்நாள் பூரா எதையெல்லாமோ இது தான் இது தான் என தேடியும், கடைசியில் சீ இது இல்லை இது இல்லை என்று அறிந்து ஏமாந்தும் வருந்தி அலைந்து துக்கத்தில் உழலும் ஏழைகளே. ஒரு உபாயம் சொல்கிறேன் கேளுங்களேன். இரவும் பகலும் இடைவிடாமல் சொல்ல ஒரு அருமையான மந்திரம் இருக்கிறதே அது இது தான் இதுதான் என்று உணர்ந்து கொள்ளுங்கள் அது தான் '' ராம ராம ராம '' எனும் அவன் திவ்ய நாமம்.
''கதாவுபஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாம்இதாம் இதல்லவென்று வைத்துழலும் ஏழைகளாள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் இராம ராம ராமஎன்னும் நாமமே.''
கொஞ்சம் வேதாந்தம் சொல்கிறேன் கேளேன்.
நான் யார், நான் எது, நான் ஏது? நீ யார், எது ஏது? நம்மிருவருக்கும் இடையே என்னடா இருக்கிறது. ராஜா யார் மந்திரி யார் ? குரு யார், அவன் சிஷ்யன் யார் ? எதையெதையோ நம்பி அலையும் சாதாரணர்களே! எது உண்டாகிறது, எது அழிகிறது? யாரால், எப்படி ஏன்? எங்கோ புரிபடாமல் அப்பாலுக்கு அப்பால் எது நிற்கிறது? அது எது தெரியுமா? நமக்கு எளிதில் தெரிந்தாலும், எதிரே இருந்தாலும் நாம் கண்டு கொள்ளாதது!
ராம ராம ராம எனும் அவன் திவ்ய நாமமே. அது தானய்யா தாரக மந்திரம். பவசாகரத்தில் மூழ்கித்தவிக்கும் நம்மை அக்கறையோடு அக்கரை கொண்டு சேர்க்கும் ஒரே வழி. சாதனம்.
''நானதேது நீயதேது நடுவில் நின்றது ஏதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராமஎன்ற நாமமே.''
LikeShow more reactions

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...