Tuesday, July 4, 2017

யார் ரெடி? கிருஷ்ணனிடம் போகலாமா?
J.K. SIVAN
நம் ஊரில் எண்ணற்ற சிதம்பரம், பழனி, மதுரை, போன்றவர் இருப்பது போல மலையாள தேசத்தில் தமது பூர்வீக வீட்டு பேரில் நிறைய பேர் இருக்கிறார்கள். மலப்புரம் அருகே கீழாத்தூர் என்கிற ஊரில் இப்படி பூந்தானம் என்ற வீட்டு பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் காணாமல் போய் விட்டது. பரம கிருஷ்ண பக்தர். பக்கம் பக்கமாக நிறைய கிருஷ்ணன்மீது இனிமையாக மலையாளத்தில் ஸ்லோகங்கள் எழுதியவர் பாவம் ஒரு குறை அவருக்கு வெகுநாளாக. மடியில் வைத்து கொஞ்ச ஒரு பிள்ளை இல்லையே?.கிருஷ்ணனிடம் முறையிட்டால் வீண் போகுமா? ஒரு பிள்ளை பிறந்தான். அவனுக்கு தக்க பிராயத்தில் அன்ன பிராசனம் ஏற்பாடு தடபுடலாக நடந்தது. சில நேரங்களில் நமது வாழ்க்கையில் கொஞ்சம் கூட எதிர் பாராத சில நிகழ்வுகள் ஏற்பட்டு நாம் நிலை குலைந்து போகிறோமல்லவா? இத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலை பூந்தானத்தையும் விடவில்லை.
சொந்தம், சுற்றம், அக்கம் பக்கம் எல்லாரையும் கூப்பிட்டு அனைவரும் அனைவருமே வந்தாயிற்று. ஜே ஜே என்று ஜனங்கள் எல்லாரும் கூடியிருக்க குழந்தைக்கு அன்ன பிராசனம் நடக்க வேண்டிய நேரத்துக்கு ஒரு மணி முன்பாக அந்தகுழந்தை இறந்து விட்டது. எவ்வளவு பேரிடி. எப்படி பட்ட சோகம்??
''என்னப்பனே கிருஷ்ணா என்னடா இது?'' கதறினார் பூந்தானம் கிருஷ்ணனிடம்.
குருவாயுரப்பன் என்ன செய்தான்?
“பூந்தானம் கவலையே வேண்டாம் நானே உங்கள் பிள்ளை. எங்கே உங்கள் மடி?” என்று அவர் மடியில் வந்து அமர்ந்து கொண்டான். கொஞ்சம் உன் மடியில் படுத்து கொள்ளட்டுமா?” என்றான். தன்னை மறந்து ஆனந்த பரவசத்தில் பூந்தானத்தின் உள்ளத்திலிருந்து தெள்ளிய எளிய மலையாள கவிதை பிறந்தது.
"நம் உள்ளத்தில் என்றும் வந்து நடமாட கிருஷ்ணன் இருக்கும் போது தனியாக நமக்கு என்று ஒரு பிள்ளை எதற்கு ?" கடல் மடையென்ன கவிதை பிறந்து அனைவரும் அந்த பக்த ரசத்தில் மூழ்க இது ஒருவருக்கு பிடிக்க வில்லை. பிரபல மேல்பத்தூர் நாராயண பட்டாத்ரி தான் அவர். குருவாயுரப்பன் மீது நாரயணீயம் எழுதியவர். அவர் பூந்தானத்தை இவனெல்லாம் ஒரு கவிஞனா? சம்ஸ்க்ரிதம் தெரியாதவன், இலக்கணம் தெரியாதவன் என்று இகழ்ந்தார். குருவாயூரில் குடிகொண்டுள்ள நமது கிருஷ்ணனுக்கு இது பிடிக்கவில்லை.
ஒருநாள் பட்டாத்ரி தன்னை காண வந்தபோது "பட்டாத்ரி நான் சொல்கிறேனே என்று வருத்தபடாதே எனக்கென்னமோ உன் ஸம்ஸ்க்ரித இலக்கணம் தோய்ந்த ஸ்லோகங்களை காட்டிலும் பூந்தானத்தின் மலையாள பாஷையில் உள்ள பக்தி பூர்வ ஸ்லோகங்கள் ரொம்ப பிடிக்கிறதே என்ன செய்ய? " என்றான் கிருஷ்ணன். அதற்கப்பறம் பட்டாத்ரி ஓடி சென்று பூந்தானத்தின் காலில் விழுந்து மன்னிக்க வேண்டினார் என்பது சாதாரண விஷயம்.
பாகவதத்திலும் கிருஷ்ண கானத்திலும் காலம் ஓட ஒருநாள் கிருஷ்ணன் பூந்தானத்தை இனி தன்னுடன் வைத்துகொள்ள ஆசை மேலிட ''என்னிடம் வா'' என்று அழைத்தான். பரம சந்தோஷம் அவருக்கு. யார் யார் எல்லாம் என்னோடு கிருஷ்ணனிடம் போவதற்கு வருகிறிர்கள் என்ற அவர் அழைப்பை கேட்ட அன்பர்கள் தலை தெறிக்க ஓடிவிட்டனர். அவர் வீட்டில் பணிபுரிந்த ஒரு பெண்மணி ''அய்யா என்னையும் கிருஷ்ணனிடம் அழைத்து செல்கிறீர்களா?'' என்று வேண்டினாள். குறித்த நேரத்தில் உடலோடு பூந்தானமும் அந்த பெண்மணியும் கிருஷ்ணனோடு ஒன்றற கலந்தனர்
பக்தியை வெளிப்படுத்த மொழியோ இலக்கணமோ தேவையில்லை. உள்ளத்தில் எண்ணம் ஒன்றே போதுமே.

LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...