Sunday, July 16, 2017

பள்ளி கொண்ட ஈஸ்வரன் -







பள்ளி கொண்ட ஈஸ்வரன் - J.K. SIVAN

நான் திருப்பதியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்தேன். வழியில் நாராயண வனம் , நாகலாபுரம் பார்த்தேன். விவரமாக எழுதியுமிருக்கிறேனே.

அடுத்து நாங்கள் சென்றடைந்தது தான் சுருட்டப்பள்ளி. தமிழ்நாட்டின் ஆந்திர எல்லை அருகே. சென்னையில் இருந்து சுமார் 56 கி.மீ. திருப்பதியில் இருந்து 75 கி.மீ .

சிவ பெருமான் என்றாலே நமக்கு மனதில் தோன்றும் உருவம் ரெண்டு தான். ஒன்று லிங்க வடிவில். மற்றொன்று ஜடாமுடி, திரிசூல தாரி, தலையில் கங்கை பிறைச்சந்திரன் கொண்ட புலித்தோல் காரரோ அவரே காலைத்தூக்கி நடமாடும் நடராஜராகவோ தானே. இதில்லாமல், நீளமாக படுத்துக்கொண்டு எங்கேயும் காணமுடியாத சிவனை பள்ளி கொண்ட ஈஸ்வரனாக சென்னைக்கு அருகே காணலாம்.

புராணம் என்ன சொல்கிறது? அமுதம் உண்டால் தான் துர்வாச முனி சாபம் விலகும். அமுதம் எப்படி கிடைக்கும்? பாற்கடலை கடையவேண்டுமே எப்படி? எப்படியோ ஏற்பாடாகி, வாசுகி கயிறாக, மந்திரமலை மத்தாக தேவர்கள் ஒருபுறம் அசுரர்கள் ஒருபுறம் பாற்கடலை கடைகிறார்கள்.

அமுதம் வருமுன் வாசுகி அவஸ்தைப்பட்டு விஷத்தை கக்குகிறது. அது பாற்கடலில் கலந்தால் அவ்வளவுதான் எல்லாமே விஷமாகிவிடுமே, என்ன செய்வது? எல்லோரையும் காக்க பரம சிவனால் மட்டுமே அதை தடுக்க முடியும் என அறிந்து வேண்ட, அத்தனை ஆலகால விஷத்தையும் ஒரு உருண்டையாக சிவன் விழுங்க, பார்வதி அவர் தொண்டையில் அது இறங்கி அவருள் அடங்கிய சகல ஜீவராசிகளையும் அழியாமல் காக்க தடுத்து விஷம் கண்டத்தில் தங்கி அவர் நீல கண்டனாகிறார்.

உள்ளே தங்கிய கொடிய ஆலகால விஷம் சிரமப்படுத்த, மயங்கியவாறு சிவன் அப்படியே சாய்கிறார். பார்வதி சர்வ மங்களாம்பிகையாக அவரை தனது மடியில் தாங்குகிறாள். அதன் கடுமையை அமைதியாக சமனப் படுத்துகிறார். இரண்டரை உயர பீடம். பதினாறு அடி நீளமாக படுத்தபடியாக ஈஸ்வரன். ஈசனின் தலைமாட்டில் அன்னை சர்வமங்களாம்பிகை. ஈசனின் திருமேனியை மடியில் வைத்த மாதிரி அம்பாள்

அந்த அற்புத பெரிய விக்ரஹம் பள்ளிகொண்ட ஈஸ்வரனாக தத்ரூபமாக அமைந்த உலகில் ஒரே இடம் தான் சுருட்ட பள்ளி என்ற ஆந்திர தேச க்ஷேத்ரம். விஜயநகரை ஆண்ட ஹரிஹர புக்கர்களால் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான வருஷ கோவில். மஹா பெரியவா தரிசிக்காத சிவன் கோவில் உண்டா. 1976-77 ல் இங்கே பத்து நாள் தங்கி அவர் தரிசனம் கொடுத்த நினைவாக ஒரு தியான மண்டபம் உள்ளது. ''இந்த பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம். எல்லோரும் தரிசனம் பண்ணவேண்டியது '' என்கிறார்.

ஆச்சர்யமாக பெரியவா அப்போது ஏதோ ஒரு இடத்தை காட்டி ''இங்கே தோண்டு '' என்று சொல்ல அங்கே கால்தடங்களுடன் ஒரு கல். ''இது யாருடையது என்று தெரியுமா? ராமபிரானின் இரட்டை குழந்தைகள் லவ-குசாவினுடைய கால் தடங்கள் '' என்று அதை விளக்கினார். ''இங்கே இருக்கிற ஈஸ்வரன் சன்னதி போலவே காசியிலேயும் ஒரு கர்பகிரஹம் இருக்கு.காசிக்கு போகணும்னு விரும்புகிறவர்கள் இங்கே சுருட்டப்பள்ளிக்கு வந்து தரிசனம் செயதாலே காசிக்குப்போன புண்ணியம்'' என்று பெரியவா எல்லோருக்கும் எடுத்து சொன்னார்.

கைலாயத்தில் வைகுண்டத்தில் பிரம லோகத்தில் இருந்தெல்லாம் தேவர்கள் ரிஷிகள் முனிவர்கள் சிவ பக்தர்கள் விஷயம் கேட்டு சிவனை தரிசிக்க ஓடி வருகிறார்கள். நந்தி தேவர் ''கொஞ்சம் இருங்கள்.சற்று மயக்கம் தெளியட்டும் . பிறகு தரிசிக்கலாம் என்று தடுத்து நிறுத்துகிறார். எல்லார் முகத்தில் கவலை தெரிகிறது. சிலை வீடியோ காமிராவில் எடுத்தது போல் காட்டுகிறது. சற்று நேரம் கழித்து தேவர்களை எல்லாம் சிவதரிசனம் செய்ய அனுமதிக்கிறார். மகாவிஷ்ணு, பிரம்மதேவர், தேவாதி தேவர்கள், சந்திரன், சூர்யர், நாரதர், தும்புரு, குபேரன், சப்த ரிஷிக்கள் சேர்ந்து தரிசித்து பரமனை வணங்குகிறார்கள். எல்லோரையும் கண்டு சிவபெருமான் தான் ஆனந்தத்துடன் வழக்கம்போல் இருப்பதை நிரூபிக்க அன்று மாலை கூத்தாடுவது தான் ஆனந்த தாண்டவம்.

அனைவரும் இப்படி தரிசித்தது கிருஷ்ணபட்ச திரியோதசி ஸ்திரவாரம் (சனிக்கிழமை) இதுதான் மகாபிரதோஷம். அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷம் கொண்டாடுவதற்கு இதுவே காரணம். (ஸ்கந்த புராணம் உத்திரகாண்டம் சொல்லும் ரகசியம் இது ).


கிழக்கு பார்த்த சின்ன கோபுரம். மூன்று நிலை. ஐந்து கலசங்கள் கொண்ட வாயில். ஐந்து கலசங்கள் தான் ஓம் நமசிவாய எனும் பஞ்சாக்ஷரம்.

உள்ளே முதலில் தரிசிக்க மரகதாம்பிகை சன்னதி வால்மீகேஸ்வரர் சந்நிதி வலது பக்கத்தில் பள்ளிகொண்டேஸ்வரர் சன்னதி. ஈஸ்வரனும், அம்பிகையும், தனித்தனியான சன்னதிகளில். பள்ளிகொண்ட ஈஸ்வரரின் சன்னதி தான் இங்கே விசேஷம்.

அம்பிகையின் சன்னதிக்கு முன் முகப்பு மண்டபத்தில் குபேரனின் செல்வங்களான சங்க நிதியும், பதும நிதியும் துவார பாலகர்கள். அம்பிகை சிவனுக்கு வலது புறத்தில் இந்த கோவிலில் இருப்பது சிறப்பு. எனவே இது கல்யாண க்ஷேத்திரம்ண் மணமாகாத பெண்கள் வந்து வணங்கினால் விரைவில் திருமணம் ஆகும்.

அம்பிகையின் கருவறைக்குள் காமதேனுவும், கற்பக விருட்சமும் வேண்டியதை வாரி கொடுக்கின்றது.

ராவண வதம் முடிந்து சீதையோடு அயோத்தி செல்லு முன்பு ராமர் இங்கே வழிபட்டதால் சிவன் பெயர் ராமலிங்கேஸ்வரர். வாலமீகி தொழுத லிங்கம் என்பதால் வால்மீகேஸ்வரர். காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் பிறகு மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஆலயம் திறந்து இருக்கும். பிரதோஷ நாளில் நாள் முழுக்க திறந்து இருக்கும். அன்று சுமார் 20 ஆயிரதத்துக்கு குறைவில்லாமல் பக்தர்கள் வந்து வழிபாடு செய்வார்கள். மகாசிவராத்திரி அன்று கேட்கவே வேண்டாம். 50 ஆயிரம் பேர் நிச்சயம். ராமாயணம் எழுதும் முன்பு இங்கே தான் வால்மீகி சிவனை வழிபட்டார்.
இங்கு ஒரு அதிசயமும் உள்ளது. வால்மீகேஸ்வரன் சன்னதியின் தெற்கே கோஷ்டத்தில் அபூர்வமான தம்பதி சமேத தகிஷிணாமூர்த்தி. வேறே எங்கும் காணமுடியாத ஒரு காட்சி. சனகாதிகள் சூழ கல்லால மரத்தில் அடியில் இல்லை. பதஞ்சலி, வியாகர பாதர்களுடன், ரிஷபாரூடராய் தேவியை அணைத்த வண்ணம் சின்முத்திரையுடனும், ஞான சக்தியுடனும் அருள் பாலிக்கிறார். தேவியின் பெயர் கவுரி.

''தேவ்யாலிங்கித வாமாங்கம் பாதோதபஸ் மூர்திம் சிவம்! நந்தி வாஹன மீஸானம் ஸ்ரீதாம்பத்ய தட்சணாமூர்த்தியே நமஹ!!''

தாம்பத்ய தட்சிணாமூர்த்தியை தரிசிக்க வியாழக்கிழமைகளில் நிறைய பக்தர்கள் கூட்டம் வரும்.

ஒரு விஷயம். இங்கே பக்தர்களுக்கு விபூதிக்கு பதிலாக தீர்த்தம், தலையில் சடாரி.

பள்ளி கொண்ட ஈஸ்வரனுக்கு சாம்பிராணி தைலக்காப்பு மட்டும் தான். அபிஷேகம் இல்லை.

அம்பிகை சன்னதிக்கு வலதுபுறத்தில் சிவப்பு கல் கணபதியை காணலாம். உருவம் கிடையாது. சோனபத்திர விநாயகரை சாளக்கிராம விநாயகர் என்றும் கூறுவர். சன்னதிக்கு இடது புறத்தில் வள்ளி தெய்வானை சகிதம் சுப்பிரமணியர் காட்சி அளிக்கிறார்.

அன்னை ஸ்ரீசக்திநாயகி என்னும் உண்மைக்கேற்ப கருவறையை சுற்றிலும், மகாலட்சுமி, ஞானசரஸ்வதி, மாதங்கி, அன்னபூரணி ஆகிய சக்திகள் சூழ்ந்து இருக்கின்றனர். மரகதாம்பிகையின் தெற்கு சுவர் மாடத்தில் ராஜராஜேஸ்வரியின் நின்ற திருக்கோலம் உள்ளது. இந்த காட்சியைக் காண்பது மிக அரிது. அடுத்து `ஏகபாத திருமூர்த்தியின்’ அற்புத சிற்பத்தை காணலாம்.

இது போன்ற திருஉருவங்கள் திருவொற்றியூர், திருவானைக்கா கோவில்களிலும் உள்ளன. இச்சிற்பம் சிவவிஷ்ணு பேதமற்ற உண்மையை விளக்குகிறது. மூல கணபதியான சித்தி கணபதியையும், கபால ஹஸ்த மகாவிஷ்ணு ஆகியோர்களை காணலாம். வடமேற்கில் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. அடுத்துள்ள ராஜா மாதங்கியின் சிலை வெகு அழகாகவும், சிற்ப நுட்பங்களுடனும் உள்ளது.

இந்த மாதம் 21ம் தேதி ஒரு நாலு நாள் ஸ்ரீ ஸ்ரீனிவாசனுடன் சப்த விடங்க க்ஷேத்ரங்கள் செல்ல உத்தேசம். போய்வந்து சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...