Friday, July 14, 2017

பாம்பாட்டிச் சித்தர் - J.K. SIVAN

யாக்கை நிலையாமை

எத்தகைய கொடிய விஷமுள்ள பாம்பும் இவர் கண் பார்வைக்கும், கைப்பிடிக்கும் தப்ப முடியாது.

''ஐயா பாம்பு பிடிக்கிறவரே, பக்கத்து காட்டிலே நவரத்தினப் பாம்பு இருக்குதாமே , பிடிக்கக்கூடாதா?

கேள்விப்பட்டவுடன் பாம்பாட்டி கிளம்பிவிட்டார்.அவருக்கு இரவு எது பகல் எது? இருட்டில் பாதை தெரியாமல் தட்டுத் தடுமாறி நடந்த பாம்பாட்டியின் எதிரே பிரகாசமான ஒளியுடைய பாம்பொன்று மெல்ல ஊர்ந்து கொண்டு சென்றது. அதன் அழகில், அதன் ஒளியில் ஆட்பட்டு அதனைப் பிடிக்கவும் செய்யாமல்
பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தார்.

தேடிப்போன புதையல் கண்ணெதிரே இருந்தும் மனம் அதை சொந்தம் கொண்டாட விடவில்லை. வராகி ஏதோ சிந்தைனை. ஆடாமல் அசையாமல் நின்ற கொஞ்ச நேரத்தில் அந்தப் பாம்பு தவயோகி ஒருவராக
வடிவெடுத்தது . பாம்பு தான் சட்டைமுனி சித்தர். பாம்பாட்டியின் குரு. உலக நிலையாமையைக் கூறி தீட்சையளித்தவர். பாம்பாட்டி இனி பாம்பை பிடிப்பவர் இல்லை. நம் மனமாகிய குரங்கை பிடித்தவர்.

பாம்பு பிடிக்க போய் பரம ஞானம் பெற்று திரும்பியபோது அந்த ஊர் ராஜா மரணமடைந்து எல்லோரும் துக்கத்தில் இருந்தனர். பாம்பாட்டி அவர்கள் துக்கம் போக்கும் தனது ஞான சித்தி சக்தியால் இறந்த ராஜாவின் உடலில் புகுந்தார்.

''ஆஹா இதென்ன ஆச்சர்யம், இறந்த ராஜா மீண்டும் உயிர் பெற்று மிரள மிரள விழிக்கிறாரே!'' காட்டுத்தீ போல் விஷயம் பரவி எழுந்து உட்கார்ந்த ராஜா அருகில் கிடந்த ஒரு செத்த பாம்பை பார்க்கிறார்.

''பாம்பே! நான் எழுந்து விட்டேன். நீயும் எழுந்திரு'' என்றவுடன் செத்த பாம்பு நெளிந்தது. அனைவரும் தங்களை கிள்ளிப்பார்த்துக் கொண்டார்கள். அதிசயத்துக்கு மேல் அதிசயம் இங்கு நடக்கிறதே. பாம்பு, நகர்ந்து போக முயற்சித்தது.

ராஜா உடலில் இருந்த சித்தர் பாம்பைப் பார்த்து '' பாம்பே எங்கே போகிறாய். இறந்துபோன நீ இப்பொழுது எழுந்து விட்டாய். இன்னுமா உலக ஆசை உனக்கு விடவில்லை? உலக வாழ்வில் ஏமாந்து போகாதே. புரிந்து கொண்டு ‘ஆடு பாம்பே’'' என சொல்ல மகுடி வாசிக்காமலேயே பாம்பு ஆடத் தொடங்கியது.

பாம்பை ஆடச் சொல்வது போல நிறைய விஷயங்களை சதா சர்வ காலம் ஆடுகின்ற நமது மனதுக்கு நல்ல விஷயங்களை சொல்கிறார் பாம்பாட்டி சித்தர். அற்புதமான தத்துவப் பாடல்களை எளிய தமிழில் பாப்போம். ராணிக்கு நிச்சயம் இறந்து பிழைத்தவன் தன் கணவன் இல்லை என்று புரிந்து விட்டது. ஏதோ மாயம் நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது. தனது கணவன் சாதாரணமாணவன் இவ்வளவு தத்துவம் எப்படி பெற்றான் . முரட்டுப் பிடிவாதமும், பெண்கள் சுகமும் மட்டுமே அவனது சொத்து ஆயிற்றே.

“நாடுநகர் வீடுமாடு நற்பொருளெல்லாம்
நடுவன் வரும்பொழுது நாடிவருமோ
கூடுபோனபின்வற்றாற் கொள்பயனென்னோ
கூத்தன் பதங்குறித்துநின் றாடாய்பாம்பே”

''ராஜ்ஜியம், நாடு, வீடு, செல்வம் சேர்த்த சொத்து இதெல்லாம் எருமை மாட்டின் மேல் ஒருவன் கயிறோடு வருவானே அப்போது கூடவா வரும்? பட்டு பீதாம்பரம், கிரீடம், அணிந்த இந்த உடம்பு அசையாமல் கிடக்குமே அது வெறும் கூடு தானே. அதன் உள்ளே இருந்த கிளி பறந்து போய் இருக்குமே! அதை ஒரு கணமாவது உணர்ந்து அந்த ஆடலரசன் மேல் மனதை செலுத்து என்று நீ ஆடு பாம்பே!

“மாடகூட மாளிகைகள் வண்ண மண்டபம்
மதில்சூழ்ந்த வரண்மனை மற்றும் முள்ளவை
கூடவாரா வென்றந்தக் கொள்கை யறிந்தோர்
குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே”

எல்லா எஸ்டேட்டும் பெரிய பங்களாவுக்கு இருக்கும் வரை தான். அப்புறம் யார் யாரோ சொந்தம் கொண்டாடுவார்களே . ஆறு அடி இடம் கிடைத்தால் அது தான் சாஸ்வதம். புரிந்து தெரிந்து ஆடு பாம்பே.

“மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்
மறலி வருகையில் வாரிச்செல்வரோ
அலை யாமலகத்தினை யத்தன் பால்வைத்தோர்
அழியாரென்றே நீ துணிந்தாடாய் பாம்பே”

கோடி கோடி பணம் கணக்கில்லாமல் வங்கியிலும் கணக்கில் இல்லாமல் யார் யாராரிடமோ இருந்தாலும் ஒரு பைசாவும் அதிலிருந்து அவன் கூட வரப்போவதில்லை. மனத்தை அந்த சிவன் பால் வை. அது ஒன்றே உன்னை காக்கும் என்று ஆடேன் பாம்பே!


“பஞ்சணையும் பூவணையும் பாயலும் வெறும்
பாழ்சுடு காடதிலே பயன் பெறுமோ
மஞ்சள் மணம்போய் சுடு நாறு மணங்கள்
வருமென்று தெளிந்து நின்றாடாய் பாம்பே”

குளுகுளு அறையில் பத்து இஞ்சு மெத்தையில் படுப்பது எத்தனை நாளுக்கு. உன் உடலை தாங்க காத்திருப்பது கடைசியில் கட்டை விறகும், சாணியில் செய்த காய்ந்த விரட்டியும், இல்லையென்றால் இப்போது எலெக்ட்ரிக் கம்பி வைத்த பிளேட். கப் பென்று அப்பளம்போல் சுட்டு எரித்து சாம்பல் ஒரு டப்பாவில்.
போட்டுக்கொண்டிருந்த பட்டுச்சட்டை, சென்ட், வாசனை தைலங்கள், எங்கேயப்பா? என்று ஆடு பாம்பே!


“முக்கனியுஞ் சக்கரையு மோதகங்களும்
முதிர்சுவைப் பண்டங்களு முந்தியுண்டவாய்
மிக்கவுயிர் போனபின்பு மண்ணை விழுங்க
மெய்யாகக் கண்டோமென் றாடாய் பாம்பே”

பழமுதிர் சோலை அன்று வந்த பழங்கள் குளிர் சாதன பெட்டியில் நிறைப்பி ஜூஸ் செயது வயிற்றை நிறப்பினாயே, எத்தனை அல்வா துண்டங்கள் உள்ளே போயிற்று. உன் உடலை நிறைக்கப்போவது இனி மண் ஒன்றே. இது தான் மெய் எனும் உடலுக்கும் மெய்யாகவே கிடைக்கப்போவது என்று ஆடு பாம்பே!



ஆகா எத்தனை தத்துவார்த்தமான பாடல்கள். பெண்ணாசை விலக்கலைப் பற்றியும் பாடத் தொடங்குகிறார் சித்தர் எளிமையாக. அதை அப்புறம் பார்ப்போமே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...