Wednesday, July 19, 2017

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
J.K. SIVAN

நான் கொஞ்சநாளாக எழுத ஆரம்பித்ததிலிருந்தே எனக்கு நண்பர்கள் பெருகி விட்டனர். எனக்கு நேரம் போவதே தெரியவில்லை. ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் நண்பர்களோடு அளவளாவுவது ஆனந்த மான கடைசி நேர வாழ்க்கையின் இந்த இனிய நேரத்திலேயே என் வாழ்க்கை ஓட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே.

ஆரம்பத்தில் ஏன் இப்படி புத்தி போகிறது? நான் எழுத ஆரம்பித்தால் அதை படிக்க நேரிட்டு, இருக்கும் ஒன்றிரண்டு நண்பர்களும் குறைந்து விடுவார்களோ என்று ஒரு அச்சம் இருந்தது. ஒரு அசட்டு தைர்யம் . பரவாயில்லை. அப்படி இறைவன் விதித்தால் இருக்கவே இருக்கிறது புத்தகங்கள் அவற்றை ''படிக்கலாம்''- ''படிக்கலாம்'' என்றால் என் போன்ற 79+க்கு தூக்க சாதனம் என்று பொருள். ஏன் என்றால் எந்த புத்தகத்தை கையில் எடுத்தாலும் ஐந்து நிமிஷம் படித்தபிறகு கண்ணில் பட்டாம் பூச்சி பறக்கும். கண் படிக்காது. ஓடும் எழுத்துக்களை பார்க்கும். ஆனால் அர்த்தம், அதாவது என்ன படிக்கிறோம் என்பது உள்ளே செல்லாது. கண் லேசாக மூடும். புத்தகம் தொப்பென்று மார்பின் மீதிருந்து தரையில் கீழே விழும். நித்ராதேவி ஆட்கொள்வாள் . ''ஆமாவா இல்லையா'' இப்படி தூங்காமல் தூங்கி சுகம் பெற்ற நண்பர்களே ?

அப்போது என்ன செய்யலாம். வேறு வழி ஏதாவது இருக்கிறதா?

''ஆஹா இருக்கிறதே மற்றொன்று. பாட்டு. கர்நாடக சங்கீதம் இனிய மெல்லிசை கேட்கலாம். ரசிக்க முடியும் ராகத்தை, பாவத்தை தாளத்தை. பாட்டின் அர்த்தத்தை. பாடகரின் கற்பனா வளத்தை. ஸ்வர்ப்ரஸ்தாரத்தை. அழகிய ஆலாபனையை, ஆரோகண அவரோகண சர்க்கஸை. ஆனால் எவ்வளவு நேரம்? ஒன்று ரெண்டு கீர்த்தனைக்கு மேல் தாண்டாது. பிறகு தூக்கம்.

சிலரது பாடல்களை கேட்கவே முடியாது. ஞானம் இருக்கும் அளவுக்கு சாரீரம் இல்லையென்றால் ரம்பம் தான். நிறைய பலகை அறுக்கலாம். ஜன்னல் செய்ய உதவும். சிலரின் குரல் இனிமை இருக்கும் அளவிற்கு சங்கீத ஞானம் இருக்காது. ''தாயே யசோதா உந்தன் ''நாயர்'' குலத்தில்.''.......பதங்களை பிய்த்து பிய்த்து சுக்குமி ளகுதி புலி என்று புரியாத தெலுங்கை, சமஸ்க்ரித, கன்னட, கிருதிகளை குதறும் கிராதகம்.. பாதி வார்த்தையை முழுங்கி பாடுபவர்கள்...என்ன வார்த்தை என்றே புரியாமல் பாடும் சாமர்த்தியக்காரர்கள்....ரொம்ப ஸ்வரம் போடக்கூடாது. நமக்கு தெரியாது ரசிக்க. ராகம் பாவம் போதும். .

தூங்கிக்கொண்டே பாட்டுக்கேட்க முடியுமா? பாட்டே தூக்கம் வரச்செய்யும் வகையில் இருந்தால் முடிகிறது. களைப்பினால் உண்டாகும் தூக்கம் அல்ல. மயிலிறகினால் வருடி தூங்கப் பண்ணும் மென்மையான குரலாக இருந்தால். மனத்தை தழுவும் அணைக்கும் .அந்த சுகமே சுகம். அதற்கு கர்நாடக சங்கீதம் மட்டுமேவா அவசியம் ? தேனில் பலா அது. ஜேசுதாஸ், பாலமுரளி, MSS , A .M . ராஜா, PB ஸ்ரீனிவாஸ், குரல்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

குரல் பிடிக்கும். பாடும் விதம் பிடிக்கும். பாட்டு பிடிக்கும். அர்த்தம் தெரியாவிட்டால் பரவில்லை. எங்கோ நடுவில் கிருஷ்ணா, ராமா ''தய சேசி' நீவே கதி, மா சூடு பாரோ கிருஷ்ணய்யா ' , இந்த வார்த்தைகள் எல்லாம் புரியுமே. போதும்.

தமிழ் தெரிந்து, தமிழில் பல இசை மேதைகள் பாடி கேட்டது இன்னும் நினைவில் இருக்கிறது.

சூளைமேட்டில் இருந்து ஆர்க்காடு ரோடு கலக்கும் இடத்தில் மசூதிக்கு அருகே கேசவன் நாயர் டீ கடை வைத்திருந்தார். அப்போதெல்லாம் கோடம்பாக்கம் ஓவர் பிரிட்ஜ் இல்லையே. ரயில் கேட் மணி அடித்துக்கொண்டே இருக்கும். ரெண்டு பெரிய கதவுகளை காக்கி சட்டை ஆசாமி ஒவ்வொன்றாக இழுத்து சாத்தும்போது அவனையே நசுக்குவது போல் வாகனங்கள் கிழக்கு மேற்காக ஓடிக்கொண்டே இருக்கும். அவனை கேட் சாத்த விட்டால் குறைந்தது அரைமணி நேரமாவது வண்டிகள் ரெண்டு பக்கமும் நிற்கவேண்டும். இது குறைவான நேரம். நிறைய கூட்டம் சேரும். ஆர்காட் ரோடில் அப்போதெல்லாம் நிறைய கூட்டம் மூன்று இடத்தில் தான். ஒன்று ரயில்வே கேட்டில். மற்றொன்று சீதாராம விலாஸ் எதிரே வேப்ப மரத்தடியில். அங்கு தான் 25 என்கிற பஸ் எப்பவாவது நீல கலரில் வரும். வடபழனியில் ஆரம்பித்து திருவல்லிக்கேணி யில் போய் நிற்கும். முழு தூரத்துக்கு ரெண்டு அணா . பொறுமை யாக வெகுநேரம் நின்றுகொண்டு இருந்தால் அது திருவல்லிக்கேணி வரை உட்கார வைத்து கொண்டு போய் ஊர் சுற்றி காட்டும். அதில் ஏற தவமிருப்பவர்கள் ஒரு கூட்டம்..

மூன்றாம் கூட்டம் கேசவ நாயர் கடையில். அங்கு டீ குடிக்க வருபவர்களை விட அவர் வாங்கிப்போடும் தமிழ் பத்திரிகை படிக்க ஒரு வழக்கமாக வரும் கூடம்.. நாயருக்கு தமிழ் படிக்க தெரியாது. பேசுவார். தங்க நிற மேனி. வெள்ளை வெளேர் என்று மலையாள முண்டு. அதன் மேல் அரைக்கை காலரில்லாத ஜிப்பா மாதிரி ஒன்று. தலையில் கன்னங்கரேர் என்ற முடியை பின்னால் தள்ளி கழுத்துவரை அனுமதித்திருப்பார். தேங்கா எண்ணை (வெளிச்செண்ணெய்?) எளிமையாக இருப்பார். பள பளவென்ற வெண் பல் வரிசை சிரித்து ஆளை மயக்கும். நெற்றியில் கொஞ்சம் குருவாயூரப்பன் களபம். தனக்கு படிப்பதற்கு என்று ஜாங்கிரி ஜாங்கிரியாக ஒரு மலையாள பத்திரிக்கை மேஜையில் வைத்திருப்பார். என்றோ வந்த பத்திரிகை அவப்போது ஆர்வமாக கட்டம் கட்டிய செய்தி மட்டும் படிப்பார். . கல்லாவில் இல்லாத நேரம் டீ ஆத்துவார்.
மற்று மொரு மூன்றாவது கும்பல் எங்களைப் போன்றவர்கள். மர்பி AC DC கொ கொரா ரேடியோவில் சாயந்திரமானதும் நாங்கள் அவர் கடைக்கருகில், எதிரில், வெளியில் நின்றுகொண்டே அவர் பெரிதாக வைக்கும் . ரேடியோ சிலோன் கேட்க காத்து நிற்போம். கொர கொர வென்று அவரது AC DC வால்வ் ரேடியோ சத்தம் போட்டுக்கொண்டே பாடும். சிலோனிலிருந்து பாட்டு வருவதால் இடையிடையே இந்து மகா சமுத்ர அலை ஓசையும் சேர்ந்து வரும். மயில் வாகனன் லேசில் பாடு கேக்க விடமாட்டார். நிறைய பேர்களை சொல்வார். குட்டம்பட்டி கோபு , ஆலங்குடி ராமன், கோயமுத்தூர் கோபாலன், மனோஹரன், அதிராமபட்டணம் அன்பு சகோதரர்கள், மீனாக்ஷி, ராணி, வாஹினி இன்னும் அவரது நண்பர்கள் அனைவரும் ஆவலாக விரும்பிக்கேட்கும் இந்த பாடலை பாடியவர் A .M. ராஜா படம் ................. இதற்கே ஐந்து ஆறு நிமிஷங்கள் ஓடும். நகத்தைக் கடித்துக்கொண்டே காத்து கொண்டிருப்பேன்.

ராஜாவுக்கு பதிலாக கண்டசாலாவின் பாட்டு வரும். ''ஓ வெண்ணிலாவே'' என்ற அருமையான பாட்டு எங்கோ வானத்தில் வெண்ணிலாவிடம் என்னை கொண்டு சேர்க்கும். எதிரொலிக்கும் கம்பீர குரல். அவரது பாட்டுகளில் ஒரு தனி சுகம் காண முடியும்.இன்று வரை வேறெவர் குரலிலும் அதை காணமுடியவில்லை. அது முடிந்தபின் நேயர்களே இப்போது வெளியான பாடலை பாடியவர் கண்டசாலா . இனி நீங்கள் விரும்பிக்கேட்ட பாடல் தொடரும்.

'' சுசித்ராவின் குடும்பம்'' விளம்பரம் இதற்கிடையில் தங்கபஸ்பம் புகையிலையின் குணாதிசயங்கள் எல்லாம் கேட்டுவிட்டு ராஜாவின் குரல் ஒலிக்கும் ''பழகத் தெரியவேணும் பெண்கள் பார்த்து நடக்க வேணும்''' ஆரம்பத்தில் துல்லியமாக சிறிய மனோ ரஞ்சித மோகன ஆலாபனை.

என்ன இனிமையான குரல், பாடும் லாவகம். தேனை குடம் குடமாக ஒருவர் குடித்துவிட்டு துளித்துளியாக பாடலாக வெளிப்படுத்தும் சொகுசு. A M ராஜா பாட்டு கேக்க பாண்டிபஜார் ராஜகுமாரி தியேட்டர் க்யூலே மத்தியானம் வெய்யில்லே நின்னு 6 1/2 அணா டிக்கெட் வாங்கி கருப்பு வெளுப்பு ''மல்லிகா'' படம் பார்த்தேன். அதில் ''வருவேன் நான் உனது மாளிகைக்கு ''ன்னு ஒரு பாட்டு வரும். இன்னிக்கு கேட்டால் கூட ப்ளேன் மேலே போனாலும் பாதிலே இறங்கிடுவேன். அந்த குரல் காந்தம் போல் கவரும் தன்மை உள்ளது.

''துயிலாத பெண் என்று ஒரு பாட்டு. காலையும் நீயே, கலையே உன் வாழ்க்கை, மயக்கும் மாலை. இன்னும் எத்தனையோ பாட்டுக்கள். இதையெல்லாம் கேட்டு அப்படியே தூங்கிவிடுவேன். இந்த பாட்டெல்லாம் ஜெமினி கனேசனுக்காக நிறைய பாடினதாக இருக்கும். ஜெமினி கனவில் வந்து காதல் தொந்தரவு பண்ணாமல் இருந்தால் நல்லது. தாங்காது. ராஜாவின் குரல் மட்டும் தான் அல்லவுடு.

அப்புறம் PBS குரல் கேட்க ஆரம்பித்தேன். அவர் போல் பாட ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக ராஜாவின் இடத்தை பல்லி காத்திருந்து இரும்பை, பூச்சிகளை பிடித்து விழுங்குவது போல் ராஜா காணாமல் போய்விட்டார். PBS குரல் ஒரு தனி இடத்தை மனதில் பிடித்தது. ராஜாவின் இனிமையில் கொஞ்சம் கண்டசாலாவின் கம்பீரத்தில் கொஞ்சம். பாகற்காய் கசந்தாலும் பிட்லையின் ருசியே தனி அல்லவா. தெளுவான ரசத்தோடு அதை எடைபோடலாமா?

ஒருநாள் கேரளா பிரயாணம் செய்ய சென்ட்ரலில் ஓடும் வண்டியில் ஏறும்போது தவறி கீழே விழுந்து அவர்மேல் சக்கரம் ஏறியது. சக்கரம் ராஜாவை மட்டும் அரைக்கவில்லை கோடானுகோடி ராஜாவின் குரலின் அடிமைகளின் (என்னைப் போல ), மனங்களை அரைத்து பொடிப் பொடியாக்கியது.

பல வருஷங்களுக்கு பின் ஒரு நாள் அவர் மனைவி ஜிக்கி டிவியில் அழுது கொண்டே '' ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்'' என்று பாடும்போது டிவியில் அவரை என்னால் பார்க்க முடியவில்லை. என் கண்களை கண்ணீர் மறைத்து விட்டதே எப்படி பார்ப்பது ? அவரைப் போல் நானும் தேடிக்கொண்டு தான் வருகிறேன். இன்னும் கிடைக்க வில்லையே.

இன்று A .M . ராஜாவின் பாடல்களில் ஒரு சாம்பிள் மட்டும் தருகிறேன். https://www.youtube.com/watch?v=lYGub9YPDrw

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...