Monday, October 26, 2020

PESUM DEIVAM


 


பேசும் தெய்வம்:         J K  SIVAN

                                                                              10.  ஞானமும்  விஞ்ஞானமும்  

ஸ்ரீ  D. சுந்தரராமன் பெரியவாளின் கண்காணிப்பில் வளர்ந்தவர். படித்து முன்னேறியவர். அவர்  மஹா பெரியவாளோடு வாழ்ந்த காலத்தை எண்ணிப்பார்த்து  ''கடவுளோடு வாழ்ந்தேன்'' என்று எழுதிய ஆங்கில பதிவை தான் என் வழியில்  உங்களுக்கு இது வரை 10 பாகங்களாக அளித்து வருகிறேன். இன்னும் ஒன்றிரண்டு பாகங்களோடு நிறைவு பெறுகிறது.  இதை சரியாக படிக்காத அன்பர்கள்  நான் தான் பெரியவாளோடு நெருங்கி அவரால் வளர்க்கப்பட்டதைப்போல் என் ஆசியை வாழ்த்தை  கோருவது என்னை நெளிய வைக்கிறது.  நான் அவ்வளவு பாக்கியசாலி அல்ல. நான் பெரியவாளோடு  பேசி இருக்கிறேன். அவரை பல முறை தரிசித்து இருக்கிறேன். அவரோடு தொடர்பு  50 வருஷங்களுக்கு மேல்.  நான் ஒரு அடிமட்ட தொண்டன்.   இனி  சுந்தரராமன் சொல்வதைக் கேட்போம்:


''நான் கிணற்றங்கரையில்  பெரியவா அருகே போனேன்.  அரைக்கண்  மூடி இருந்தது  அந்த வயதில் எனக்கு  யோகமாக  தியானமாக இருப்பது  தெரியாது.   ஏதோ அரைத்தூக்கம் போல இருக்கிறது என்று நினைத்தேன். பாவம் தூங்கப்  போகிறவரை நான் தொந்தரவு செய்கிறோனோ?  என்று  கூட  தோன்றியது.  அப்பா அவரை நமஸ்கரிடா என்று சொல்லி இருக்காரே.  கிணற்றங்கரையில்  நான் நின்ற இடத்தில்  சேறும்  நீருமாக இருந்தது.  நான் நமஸ்கரிக்க வேண்டுமே.  என் சட்டையை சுருட்டி   கிணத்தருகே இருந்த  தோய்க்கிற கல் மேல் வைத்து விட்டு  வெள்ளை வேஷ்டியை மடித்துக் கட்டி சொருகி,  நுனி கால் கை  விரல்களால்  காய்ந்த தரையில் ஊன்றி சேறு,   வேஷ்டியில்  சேறு, ஈரம் படாமல்  குனிந்து  நமஸ்கரித்தேன்.   இந்தமாதிரி நான்கு தடவை  செய்தேன்.  நான் செய்தது  கிட்டத்தட்ட  பஸ்கி  தண்டால் தான் அது.  சாஷ்டாங்க நமஸ்கார வகையில் சேராது.  

கலகலவென்று  பெரியவா சிரிப்பொலி கேட்டது.  ''என்னடா பண்றே  நீ?''

''பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணேன்''

''எனக்கு எங்கேடா நமஸ்காரம் பண்ணினே, உன்  வெள்ளை வேஷ்டிக்கும் சட்டைக்கும்  தான் பண்ணினேன்னு தான் எனக்கு தோணித்து'' .

என்னை கையும்  களவுமாக பிடிச்சுட்டார் என்று எனக்கு தெரிந்தது. அவர்  கொஞ்சம் கோபமாக இருப்பதும் தெரிந்தது.

''எதுக்கு  இந்த  ஏமாத்தல் எல்லாம் எங்கிட்ட.   நீ  எனக்கு நமஸ்காரம் பண்ணுன்னு நான் சொன்னேனா?'' கேட்டேனா?''

நான் சேறு  என்று கூட  பார்க்காமல் அடுத்த நிமிஷம்  அப்படியே உருண்டு  அங்கப்ரதக்ஷிணம் பண்ணினேன் அவருக்கு.

''நிறுத்து நிறுத்து, போறும் இதெல்லாம். என்னாலே உன்  வெள்ளை வேஷ்டி பாழாயிடுத்து. சேறாயிடுத்தே.  மாத்து வேஷ்டி வச்சிருக்கியா?  ஆத்துக்கு போய் குளிச்சிட்டு  டிரஸ் பண்ணிண்டு  ரயிலடிக்கு போய்  உன் ட்ரெயினை பிடிச்சு  சிதம்பரம்  போய்ச் சேர்''  என்று ஆசிர்வதித்தார்.

நான் ஒரு வார்த்தை பேசவில்லை. நாக்குலே  வேல் குத்திண்ட மாதிரி இருந்தேன். 'என்   ஏமாற்று வித்தையை  கண்டுபிடிச்சு, என்னை  நாலு பேர் மத்தியிலே சவுக்கால  அடிச்ச மாதிரி ஆயிட்டது.  என்ன நடக்கப் போறதுன்னு முன்னாலேயே தெரிஞ்சமாதிரி தான் அப்பா சொல்லி இருக்கா.
''நமஸ்காரம்  இன்னொரு தரம் பண்ணா  ஒண்ணும்  குடி முழுகிபோயிடாது. ''
நான் மடத்தை வெளியே வந்தபோது என்னிடமிருந்த திருட்டுத்தனம், ஏமாத்தல் எல்லாம் என்னை விட்டு போயிருந்ததை உணர்ந்தேன்.

மஹா பெரியவாளோடு  நெருங்கிப்  பழகினவர்களுக்கு  அவர்  எத்தனையோ வேலைகளுக்கு, பொறுப்பு களுக்கு மத்தியிலே, உலகத்திலே நம்மை சுத்தி என்ன நடக்கிறதுன்னும் தெரிஞ்சிக்க கொஞ்சம் டைம் வச்சிருப்பார்னு தெரியும்.     உலக விவகாரங்களை  பக்தர்கள் மூலமாக, தமிழ்  இங்கிலிஷ்  பத்திரிகைகள் மூலமாக தெரிந்து கொள்வார். ஒவ்வொண்ணையும்  ஆழ்ந்து சிந்தித்து தனக்குள் தானே  ஒரு அபிப்ராயம் உண்டு பண்ணிக்கொள்வார்.

ஒருநாள்   பிக்ஷைக்கு அப்புறம்   ஸ்வதேச மித்ரன் பத்திரிகையைப்  பிரித்தார்.  ஜப்பானிலே   அமெரிக்க  அணுகுண்டு  வீசினதுக்கு  அப்புறம்  பல வருஷங்கள் ஆகியும்,   விஷ அணுக்களின்  ரேடியேஷன்  கதிர்வீச்சு மக்களை  பாதிப்பதை பற்றி போட்டிருந்தது.   ஹிரோஷீமா, நாகசாகி  ரெண்டு நகரங்களில்  அணுகுண்டு வெடித்து பதினைந்து வருஷம் ஆகியும்  மக்கள் வாழ்வில்  அதன் விளைவு  பற்றி விவரித்திருந்தது.  முதல் பக்கத்தில் பெரிசாக  ஒரு கட்டம் கட்டி செய்தி  போட்டு  அதன் தொடர்ச்சி  பத்திரிகையின் நாலாம் பக்கத்தில்  என்று போட்டிருந்தது.  என்ன தவறு நடந்ததோ ஸ்வதேச மித்ரன்  ஆபிசில், அச்சகத்தில் தெரியவில்லை.  நாலாம் பக்கத்தில்  எங்கும் முதல் பக்க  செய்தி  ஏனோ  தொடரவில்லை.   பெரியவா கண்ணில் இது பட்டுடுத்து.  

''என்னவோ தெரியல,  முதல் பக்க நியூஸ்  நாலாம் பக்கம்  ஏன் தொடரலே. வேறே எங்கயாவது போட்ட்ருக்கானு பார்த்து சொல்லுங்கோ ''  என்று  பொதுவாக   எங்கள் எல்லோரிடமும் சொன்னார்.  நாங்கள் ஒவ்வொருவராக ஐந்தைந்து நிமிஷம் , பேப்பரை வாங்கி புரட்டினோம்.  தேடினோம். என் முறை வந்தது. நான் முதல் பக்க  நியூஸ் உன்னிப்பா படிச்சேன்.  அதில் போட்டிருந்தபடியே,   நாலாம் பக்கத்திலேயே  ஒரு ஓரமாக ஒரு பத்தியில் முதல் பக்க  செய்தி தொடர்ச்சி இருந்தது.   என் நண்பர்கள்  முதல் பக்கம் போட்டிருந்த தலைப்பைப்பார்த்து விட்டு  அதையே  நாலாம் பக்கத்திலும் தேடி  காணாததால் அவர்களால்  தொடர்ச்சியை கண்டுபிடிக்க முடியவில்லை.   எங்கோ ஒரு மூலையில் சின்னதாக  தலைப்பு இல்லாமல்  முதல் பக்க  தொடர்ச்சி என்று ஒரு லைன் போட்டு ஒரு பத்தியில்  அந்த   செய்தி தொடர்ந்து இருந்தது.

''போட்டிருக்கு பெரியவா  கண்டுபிடிச்சுட்டேன்.'' என்றேன்.  அந்த நாலாம் பக்கத்திலே ஒரு பத்திலே தானே தலைப்பு   இல்லாம போட்டிருக்கா''  என்றார்.  அவர்  சொன்ன  அந்த   வார்த்தையே  ''நீ ஒண்ணும்  பெரிசா கண்டுபிடிச்சுடலே''

என்று அவர்  ஏற்கனவே  செய்தி  முழுவதையும்  படித்திருந்ததை சுட்டிக்காட்டியது. எங்களையெல்லாம்   சோதித்திருக்கிறார்.   என் கண்டுபிடிப்பை மற்றவர்களிடம்    
''சுந்தரராமன் அமேரிக்கா காரன் மாதிரி  ஆட்டம் பாம்''  ATOM BOMB ஐயே  கண்டுபிடிச்சுட்டான்'' என்றார்.
இந்தச்  சம்பவம் என் மனதில் ஆழ தைத்தது.    அப்புறம் பெரியவா கேட்டது:

நீங்கள் எல்லாம் யோசிச்சு பதில் சொல்லுங்கோ:  
அணு குண்டு  ஆட்டம்பாம் என்றால் என்ன?
ஏன்  அமெரிக்க  விஞ்ஞானி அதைக்  கண்டு பிடித்ததை  உலக  விஞ்ஞானிகள்    மிகச்சிறந்த  விஞ்ஞான வெற்றி என்று  கை தட்டுகிறார்கள்?  
இதன் பிரதி பலிப்பு என்ன?
இதுமாதிரி அணு குண்டுகள் எல்லோர் வசமும் இருந்தால்  எத்தனை உயிர்களை   இழக்க வேண்டி யிருக்கும்? மனிதாபிமானமற்ற விஞ்ஞான வளர்ச் ச்சியால் என்ன பிரயோஜனம்?''
இது போல  நிறைய  கேள்விகள் கேட்டார்.

நான் அவரை அருகில் இருந்து பார்த்தவரையில்  பெரியவாளுக்கு  விஞ்ஞான அபிவிருத்தி  பிடிக்கும்  ஆனால்
 அது  அழிவுக்கு பாதையமைத்தால் அது பிடிக்காது.  இந்தியா  விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறவேண்டும். அதனால்  சமூகத்துக்கு, மக்களுக்கு, நாட்டுக்கு, மற்ற தேசங்களுக்கு, உலகளவில் உபயோகப்பட வேண்டும். ஆன்மீக வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உறுதுணையாக அமையவேண்டும்  என்று அவரது விருப்பம்.

சுந்தரராமன் இன்னும் சொல்வார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...