Monday, October 19, 2020

ANDAL

 ஆண்டாளின்  கிளி   J K  SIVAN 





மனித மனது  எப்போதும்  புதிது புதிதாக ஏதாவது தெரிந்து கொள்ள  ரொம்ப ஆசைப்படுகிறது.  அது குழந்தைப் பருவத்திலிருந்து கதை கேட்கும் ஆர்வத்திலிருந்து வளர்கிறது.  மனதின் கொள்ளளவு பல உலகங்களை உள்ளே அடக்கிக் கொள்ளும் அளவு பெரியது. நாம் அதை வேண்டாத விஷயங்களை போட்டு திணிக்கிறோம். தடுமாறுகிறோம்.    

இன்று  ஒரு  சின்ன விஷயம்  முதல் முறையாக தெரிந்து கொண்டேன்.  அதைச்  சொல்கிறேன். எத்தனை பேருக்கு இதெல்லாம் தெரியும் என்று தெரியவில்லை.  நிறைய பேருக்கு தெரிந்து எனக்கு இன்று தான் தெரிந்ததென்றால்  நான் தெரிந்து கொள்ளவேண்டிய  விஷயங்களுக்கு  பல ஜென்மம் எடுக்க வேண்டியிருக்கும்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை  நேரில் தரிசித்ததுண்டா.  இல்லை படத்திலாவது  உன்னிப்பாக பார்த்ததுண்டா.  இதுவே  டவுட்.   ஆண்டாளின்  தோளில் கிளி இருக்குமே  தெரியுமா?  அந்த கிளி , கல் சிலை அல்ல. உலோகம் அல்ல, பிளாஸ்டிக் பொம்மை இல்லை, பஞ்சு  உருவம்  இல்லை. தினமும் ஒரு புது கிளி.  உயிரோடு அல்ல.   இலை ,நார் ,மூங்கில் மட்டுமே உபயோகித்து செய்வது.  

இதை  ராமர்  என்ற  ஒருவரின்  தலைமுறை  பல வருஷங்களாக தினமும் பண்ணி கொடுக்கிறார்களாம். எவ்வளவு பெரிய  கைங்கர்யம் இது. ஏன் ஒருவரும் எடுத்து சொல்லவில்லை. 

 இப்போது தினமும் செய்து கொடுப்பது  ராமருடைய  ஐந்தாவது தலைமுறையாம் ?  இனி அந்த   கிளி எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோமா?

முதலில் வாழையிலை சருகுகளை வச்சு கிளி உருவம் வர்ற மாதிரி நாரால் சுத்தி கட்டி, மரவள்ளிக்கிழங்கு செடியின் இலைகளை , சருகை  சுற்றி கட்டி,  கிளி உடல் நிறத்துக்கு பொருத்தமா தத்ரூபமாக  பண்ணுவார்
கள்.கிளியின் மூக்கு பண்ண மாதுளம்பூவைப்  பிரிச்சு மூக்கு மாதிரி செக்கசெவேல்ன்னு  வைப்பார்கள். கிளி கண்ணுக்கு  ஜிகினா,   ' காக்காப்பொன் ' (மைக்கா வை அப்படி சொல்வதுண்டு) வைப்பார் .அதை  எங்கேயும் கடையில்  வாங்குவது இல்லை.  கிணறு வெட்டும் இடத்தில் பூமியை தோண்டும்போது கிடைக்கும். தேடி எடுத்து வைத்துக்கொள்வார்கள். 

கிளிக்கு ரெக்கை தானே  அழகு. அதை எப்படி செய்வது?  இருக்கவே இருக்கிறது நந்தியாவட்டை  இலை. அதையும் செவ்வரளி இலையும்  வைத்து சேர்த்து காட்டுவார்கள்.  அப்போ  கிளியின் வாலுக்கு  என்ன வழி?
அதே இலை பனைஒலையை கொஞ்சம் சேர்த்து.   நம்மால் பண்ண முடியுமா?  இப்படிப் பண்ண தான்  தோணுமா?  அதுவும் தலை முறை தலைமுறையா, தினமும். 

இன்னும்  கிளி கதை சொல்லி முடிக்கலை .  கிளியின் கால் எப்படி செயகிறார்கள்?
2 மூங்கில் குச்சிகளை பென்சில் மாதிரி கூர்மையாக  சீவி கட்டுவார் . அதை குத்தி வைக்க நந்தியாவட்டைப் பூ
செவ்வரளிப்பூ ரெண்டையும் வச்சு செண்டு தயார் பண்ணி ,அதுலே மூங்கில் கால்களோடு இருக்கும்  கிளியை  குத்தி நிற்க வைப்பார்கள்.   இதுக்கெல்லாம் எவ்வளவு நேரம் ஆகும் என்று ஒரு ஐடியா இருக்கா?.

காலம்பர எட்டு மணிக்கு ஆரம்பித்தா ,மத்தியானம்  3 மணி ஆயிடும் ஒரு கிளி செய்து முடிக்க.  சாயந்திரம் ஆண்டாள்  பூஜைக்கு ரெடியாக.   என்ன  ஒரு பக்தி, என்ன  ஈடுபாடு,  இதுவும் ஒரு யாக யஞம் மாதிரி தான். குளித்து விட்டு  புத்தகத்தை ஒரு மணி பாராயணம் பண்ணுகிறேன் என்று மனதை எதிலோ செலுத்திக்கொண்டு வாய் மட்டும்  மொணமொண வென்று படிப்பதை விட இதில் ஸ்ரத்தை  ரொம்ப அவசியம். கொஞ்சம் தவறினாலும் கிளி தேறாது.  ஆண்டாள் கிளி இல்லாமல் நிக்க வேண்டி வரும்.  ஆண்டாளை  ஏமாற்றாமல்  எத்தனை தலைமுறையாக இந்த கைங்கர்யம் சத்தம் போடாமல் நடந்து வருகிறதே. இது அந்த வில்லிப்புத்தூர் காரர்களுக்கு தினமும் கோவிலுக்கு போகிறவர்களுக்கு தெரியுமாமே , ஏன் இதை பற்றி எடுத்து சொல்லவில்லை. அதுவும் ஆண்டாள் ரஹஸ்யம் தான். அவளுக்கு  பப்ளீசிடி  பிடிக்காதே. ஊர் உலகம் அறிஞ்ச குட்டி ஆண்டாளுக்கு விளம்பரம் எதற்கு? மனசிலே குடி கொண்டிருக்கிறாளே .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...